Tuesday, 6 March 2018

குட்டீஸ் ஸ்பெஷல் ரெசிப்பி

கோகனட் - மில்க் லட்டு 


தேவை: 
தேங்காய்த் துருவல் – ஒரு கப்  கண்டன்ஸ்டு மில்க் – தேவையான அளவு  முந்திரி – 10 (ஒன்றிரண்டாக உடைக்கவும்)  நெய் – 2 டீஸ்பூன்  சுகர் பால்ஸ் (ரெடிமேடாக கடைகளில் கிடைக்கும்) – ஒரு பாக்கெட்.  
செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் நெய்விட்டு முந்திரி சேர்த்து வறுத்துத் தனியாக எடுத்து வைக்கவும். அதே பாத்திரத்தில் தேங்காய்த் துருவலைச் சேர்த்துப் பொன்னிறமாக வறுக்கவும். அதனுடன் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்துக் கிளறவும். பிறகு முந்திரி சேர்த்துக் கிளறி, பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது இறக்கவும். கைபொறுக்கும் சூட்டுக்கு வந்த பிறகு சிறிய உருண்டைகளாக்கவும். மேலே சுகர் பால்ஸ் தூவிப் பரிமாறவும்.

இது, குட்டீஸ்களின் பிறந்த நாள் விழாக்களில் பரிமாற ஏற்றது.

ஸ்பிரிங்கிள்ஸ் பிரெட் 

தேவை:
 பிரெட் ஸ்லைஸ்கள் – 4 (ஓரங்களை நீக்கவும்)  கலர் ஸ்பிரிங்கிள்ஸ், வெண்ணெய் – தேவையான அளவு  இதய வடிவ மோல்டு – ஒன்று.

செய்முறை: இரண்டு பிரெட் ஸ்லைஸ்களை இதய வடிவ மோல்டால் வெட்டி எடுக்கவும். சதுர வடிவ பிரெட் ஸ்லைஸ்மீது வெண்ணெய் தடவி, மேலே கலர் ஸ்பிரிங்கள்களைத் தூவவும். இதய வடிவ பிரெட் ஸ்லைஸ்மீது வெண்ணெய் தடவி, சதுர வடிவ பிரெட் ஸ்லைஸின் மீது வைத்துப் பரிமாறவும் (வெண்ணெய் தடவிய பக்கம் சதுர வடிவ பிரெட் ஸ்லைஸ் மேலே வருமாறு வைக்கவும்).

வெள்ளரி ரோல் 

தேவை: வெள்ளரிக்காய் – ஒன்று  மிளகுத்தூள், உப்பு – தேவையான அளவு  செர்ரி -10  டூத்பிக் - 10.

செய்முறை: வெள்ளரிக்காயைக் கழுவி ஓரங்களை நீக்கிவிட்டு, லேசாக தோல் சீவிவிட்டு, நீளவாக்கில் சீவவும் (பஜ்ஜிக்கு வாழைக்காய் சீவுவது போல). அதன்மீது உப்பு, மிளகுத்தூளைத் தூவி பாய் போல சுருட்டவும். அதன் மேல் பகுதியில் செர்ரியை வைத்து டூத்பிக்கால் குத்திப் பரிமாறவும்.

குறிப்பு: வெள்ளரிக்காயில் இரும்புச் சத்து, வைட்டமின்-பி உட்பட பல்வேறு சத்துகள் இருக்கின்றன. நாவறட்சியைப் போக்கும். மூளைக்குப் புத்துணர்ச்சி அளிக்கும்.  

பிரெட் ரோல் அப் 

தேவை: பிரெட் ஸ்லைஸ்கள் – 4  வெண்ணெய் – தேவையான அளவு  கோஸ் இலைகள் – 4  கேரட் துருவல் – கால் கப்  சீஸ் ஸ்லைஸ்கள் – 4  மிளகுத்தூள், உப்பு - சிறிதளவு.

செய்முறை: பிரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு அப்பளக் குழவியால் தேய்க்கவும். ஒரு பிரெட் ஸ்லைஸின் ஓரத்தில் மற்றொரு பிரெட்டை ஸ்லைஸ் வைத்து இணைத்துத் தேய்க்கவும். இதேபோல 4 பிரெட் ஸ்லைஸ்களையும் இணைக்கவும். அதன்மீது வெண்ணெய் தடவவும். பிறகு, அதன்மேல் கோஸ் இலைகள், சீஸ் ஸ்லைஸ்களை வரிசையாக வைக்கவும். அதன்மீது கேரட் துருவல், மிளகுத்தூள், உப்பு தூவி பாய் போல சுருட்டவும். இதை ஒரு பட்டர் ஷீட்டில் வைத்து பாய் போல சுருட்டவும். அரை மணி நேரம் கழித்து, பட்டர் ஷீட்டை நீக்கிவிட்டுத் துண்டுகளாக்கிப் பரிமாறவும்.

கார்ன் சாலட் 

தேவை: வெங்காயம் - ஒன்று (தோலுரித்துப் பொடியாக நறுக்கவும்)  கேரட், வெள்ளரிக்காய் – தலா ஒன்று (தோல் சீவி பொடியாக நறுக்கவும்)  தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்)  வேகவைத்த ஸ்வீட் கார்ன் முத்துகள் – கால் கப்  கொத்தமல்லித்தழை, மிளகுத்தூள், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருள்கள் அனைத்தையும் அகலமான பாத்திரத்தில் ஒன்றாகச் சேர்த்துக் கலந்து இரும்புச் சத்துமிக்க இந்த சாலட்டைப் பரிமாறவும்.

லட்டு கீர் 

தேவை: லட்டு – 3 (உதிர்க்கவும்)  காய்ச்சாத பால் – அரை லிட்டர்  பொடித்த பாதாம், முந்திரி – தலா 4 டீஸ்பூன்  சர்க்கரை – 5 டீஸ்பூன். 

செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சவும். பால் பாதியாகச் சுண்டிய பிறகு சர்க்கரை, உதிர்த்த லட்டு சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். மேலே பொடித்த பாதாம், முந்திரி சேர்த்துப் பரிமாறவும்.

கேக் லாலிபாப்ஸ் 

தேவை: ஸ்பாஞ்ச் கேக் - கால் கிலோ  மில்க்மெய்ட் - தேவையான அளவு  சாக்லேட் சாஸ் - ஒரு கப்  சீரக மிட்டாய் - ஒரு பாக்கெட்  மூங்கில் குச்சிகள் – தேவையான அளவு. 

செய்முறை: ஸ்பாஞ்ச் கேக்கைச் சிறிய துண்டுகளாக்கி மிக்ஸியில் பொடிக்கவும். இதனுடன் மில்க்மெய்ட் சேர்த்து உருட்டும் பதத்துக்குப் பிசையவும். பிறகு, மாவை விரும்பிய வடிவில் உருட்டி லாலிபாப் ஸ்டிக்கை (மூங்கில் குச்சி) நடுவே குத்தவும். இதை சாக்லேட் சாஸில் முக்கி எடுத்து மேலே சீரக மிட்டாய் தூவி சுவைக்கலாம்.

பெப்பர் மில்க் 

தேவை:      காய்ச்சாத பால் - ஒரு கப்  மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை  மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்  பனங்கற்கண்டு – தேவையான அளவு. 

செய்முறை: பாலைக் காய்ச்சவும். சூடான பாலுடன் மஞ்சள்தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு சேர்த்துக் கலந்து பருகலாம்.

குறிப்பு: இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு பருக ஏற்றது. சளி, இருமலைக் கட்டுப்படுத்தும்.

ஸ்ட்ராபெர்ரி கேண்டி 

தேவை:      ஸ்ட்ராபெர்ரி - 10  சர்க்கரை – ஒரு கப்  மூங்கில் டிக்கா குச்சிகள் – 10.

செய்முறை:    ஸ்ட்ராபெர்ரியின் இலைகளை நீக்கி கழுவித் துடைக்கவும். பாத்திரத்தில் சர்க்கரையுடன் அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர்விட்டு ஒரு கம்பி பதத்தில் பாகு காய்ச்சி இறக்கவும். ஸ்ட்ராபெர்ரியின் அடிப்பகுதியில் டிக்கா குச்சிகளைக் குத்தி, சர்க்கரைப் பாகில் ஸ்ட்ராபெர்ரிகளை பத்து நிமிடங்கள் ஊறவிடவும். பிறகு, வெளியே எடுத்துப் பரிமாறவும்.

குறிப்பு:     ஸ்ட்ராபெரியில் வைட்டமின்-சி நிறைந்துள்ளது. வைட்டமின்-சி, இரும்புச் சத்தை உடல் கிரகித்துக்கொள்ள உதவும்..

வெஜிடபிள் - தால் நக்கட்ஸ் 

தேவை: பட்டாணிப் பருப்பு (வடை பருப்பு) – அரை கப்  கேரட் துருவல் – சிறிதளவு  வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)  பச்சை மிளகாய் – 2  தோல் சீவிய இஞ்சி – சிறிதளவு  சோம்பு – கால் டீஸ்பூன்  கிராம்பு – 2  பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு  எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பட்டாணிப் பருப்பை அரை மணி நேரம் ஊறவைக்கவும். அதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய், சோம்பு, கிராம்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். பிறகு உப்பு, வெங்காயம், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, கேரட் துருவல் சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு மாவை விரும்பிய வடிவில் செய்து, எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

ஸ்பைஸி பொட்டேட்டோ கறி 

தேவை:  உருளைக்கிழங்கு – 4 (வேகவைத்து, தோல் நீக்கி துண்டுகளாக்கவும்)  பூண்டு – 6 பல்  ஏலக்காய், பட்டை, கிராம்பு – தலா ஒன்று  சோம்பு – சிறிதளவு  வெங்காயம், தக்காளி – தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)  மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்  மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்  மல்லித்தூள் (தனியாத்தூள்) – கால் டீஸ்பூன்  கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு  எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு ஏலக்காய், பட்டை, கிராம்பு, சோம்பு தாளிக்கவும். அதனுடன் பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து மேலும் வதக்கவும். அதனுடன் உருளைக்கிழங்கு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடிபோட்டு வேகவிடவும். பிறகு கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும். இதை சப்பாத்தியுடன் பரிமாறலாம். சாம்பார் சாதம், ரசம் சாதத்துக்கும் தொட்டுக்கொள்ளலாம்.

குறிப்பு: உருளைக்கிழங்கு, உடல் இயக்கத்துக்கு அவசியமான இரும்புச் சத்தைக் கொண்டுள்ளது.

சாக்கோ நட்ஸ் மோதக் 

தேவை: ஒன்றிரண்டாக உடைத்த பாதாம், முந்திரி, பிஸ்தா – தலா 5 டீஸ்பூன்  சாக்கோ சிப்ஸ் – கைப்பிடியளவு  வறுத்த வேர்க்கடலை, பொட்டுக்கடலை – தலா கால் கப்  வெல்லத்தூள் – அரை கப்.

செய்முறை: வேர்க்கடலை, பொட்டுக்கடலையுடன் வெல்லத்தூள் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அதனுடன் சாக்கோ சிப்ஸ், பாதாம், பிஸ்தா, முந்திரி சேர்த்து ஒரு சுற்றுவிட்டு எடுக்கவும். இந்தக் கலவையை மோதக மோல்டில் (பாத்திரக் கடைகளில் கிடைக்கிறது) நிரப்பி எடுக்கவும். சாக்கோ நட்ஸ் மோதக் ரெடி.

ஸ்ட்ராபெர்ரி மில்க்‌ஷேக் 

தேவை: ஸ்ட்ராபெர்ரி – 10  வெனிலா ஐஸ்க்ரீம் – ஒரு கப்  பால் – சிறிதளவு.

அலங்கரிக்க: ஸ்ட்ராபெர்ரி துண்டுகள், ஐஸ்க்ரீம் – தலா சிறிதளவு.

செய்முறை: ஸ்ட்ராபெர்ரியைச் சுத்தம் செய்து துண்டுகளாக்கவும். அதனுடன் பால், ஐஸ்க்ரீம் சேர்த்து நுரை வர அடித்து எடுக்கவும். இதைக் கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி மேலே ஸ்ட்ராபெர்ரி துண்டுகள், ஐஸ்க்ரீம் வைத்துப் பரிமாறவும்.

மில்க் பேடா 

தேவை: கண்டன்ஸ்டு மில்க் – அரை டின்  பால் பவுடர் – ஒரு கப்  ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை  உலர்திராட்சை – தேவையான அளவு.

செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் கண்டன்ஸ்டு மில்க், பால் பவுடர், ஏலக்காய்த்தூள் சேர்த்துச் சூடாக்கி கிளறி இறக்கவும். சற்று ஆறிய பிறகு சிறிய உருண்டைகளாக்கி வடை போல தட்டி நடுவே அழுத்தம் கொடுத்து திராட்சை வைத்துப் பரிமாறவும். 

நேந்திரம்பழ ஸ்வீட் 

தேவை: பழுத்த நேந்திரம்பழம் – ஒன்று (தோல் நீக்கி, பஜ்ஜிக்கு வாழைக்காய் சீவுவது போல நீளவாக்கில் சீவவும்)  தேங்காய்த் துருவல் – கால் கப்  முந்திரி, திராட்சை – தேவையான அளவு  நெய் – சிறிதளவு.

செய்முறை: அகலமான பாத்திரத்தில் கொஞ்சம் நெய்விட்டு பழத்துண்டுகளை வைத்து டோஸ்ட் செய்து எடுக்கவும். அதே பாத்திரத்தில் மேலும் கொஞ்சம் நெய்விட்டு தேங்காய்த் துருவல், முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து எடுக்கவும். பழத் துண்டுகளின் மீது தேங்காய்க் கலவை வைத்துச் சுருட்டிப் பரிமாறவும். 

கேரட் லட்டு 

தேவை:  
    கேரட் துருவல், சர்க்கரை – தலா ஒரு கப்  ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை  முந்திரி, திராட்சை, நெய் – தேவையான அளவு.

செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் நெய்விட்டு முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்துத் தனியாக எடுத்து வைக்கவும். அதே நெய்யில் கேரட் துருவல் சேர்த்து வதக்கி எடுக்கவும். பிறகு, அதே பாத்திரத்தில் சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்துப் பிசுக்குப் பதத்தில் பாகு காய்ச்சவும். இதனுடன் கேரட், முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும். சிறிது ஆறிய பின் உருண்டைகளாகப் பிடிக்கவும்.

குறிப்பு: கேரட்டில் உள்ள வைட்டமின் - ஏ கண்களைப் பாதுகாப்பதோடு சரும வறட்சியையும் தடுக்கும். இதில் உள்ள வைட்டமின் - சி எலும்புகளை உறுதியாக்கும்.

பறங்கிக்காய் சூப் 

தேவை: தோல் சீவி துண்டுகளாக்கிய பறங்கிக்காய் – ஒரு கப்  வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)  பூண்டு – 4 பல்  வெள்ளரி விதைகள், வெண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன்  மிளகுத்தூள், உப்பு – தேவையான அளவு. 

செய்முறை: வாணலியில் வெண்ணெய்விட்டு உருக்கி வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். அதனுடன் பறங்கித் துண்டுகள், உப்பு சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர்விட்டு மூடி வேகவிடவும். ஆறிய பிறகு மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். இதை மிதமாகச் சூடு செய்து மிளகுத்தூள் தூவி இறக்கவும். மேலே வெள்ளரி விதைகள் தூவிப் பரிமாறவும்.

குறிப்பு: பறங்கிக்காயில் வைட்டமின் - பி, வைட்டமின் - இ, இரும்புச் சத்து மற்றும் சில கனிமச் சத்துகள் உள்ளன. வெள்ளரி விதை, சரும வறட்சியைப் போக்கி, சருமத்தைப் பளபளபாக்கும். முடி வளர்ச்சிக்கும் உதவும். 

கிரிஸ்பி கோபி 65 

தேவை: ஆய்ந்த காலிஃப்ளவர் – ஒரு கப் (சூடான தண்ணீரில் போட்டு வடிகட்டவும்)  இஞ்சி - பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்  மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்  சிவப்பு ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை  கார்ன்ஃப்ளார் (சோள மாவு) – 4 டீஸ்பூன்  கடலை மாவு – 5 டீஸ்பூன்  அரிசி மாவு – 2 டீஸ்பூன்  எண்ணெய், உப்பு – தேவையான அளவு,  

செய்முறை: காலிஃப்ளவருடன் இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள், ஃபுட் கலர், கார்ன்ஃப்ளார், கடலை மாவு, அரிசி மாவு, உப்பு சேர்த்துப் பிசிறவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டுப் பூக்களை எடுத்து எண்ணெயில்போட்டு, அடுப்பை சிறு தீயில் வைத்து, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். 

பட்டன் மசால் வடை 

தேவை: பட்டாணிப் பருப்பு (வடை பருப்பு) – ஒரு கப்  பச்சை மிளகாய் – 3  சோம்பு – ஒரு டீஸ்பூன்  தோல் சீவி துருவிய இஞ்சி – அரை டீஸ்பூன்  அரிசி மாவு – 2 டீஸ்பூன்  நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு  எண்ணெய், உப்பு – தேவையான அளவு. 

செய்முறை: பட்டாணிப் பருப்பை அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, தண்ணீரை வடியவிட்டு சோம்பு, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்துச் சற்று கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். அதனுடன் அரிசி மாவு, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு மாவை மிகவும் சிறிய வடைகளாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: பருப்பில் புரொட்டீன், இரும்புச் சத்து உள்ளதால் உடல் இயக்கத்துக்கு உறுதுணை புரியும். குழந்தைகளின் வளர்ச்சிக்கு நல்லது.

ஃப்ரூட்ஸ் ட்ரீட் 

தேவை: கிவிப் பழம் - 2 (தோல் சீவி, பொடியாக நறுக்கவும்)  ஆரஞ்சு சுளைகள் - 10 (தோல், கொட்டைகள் நீக்கவும்)  பொடித்த சர்க்கரை - 5 டீஸ்பூன்  வாழைப்பழம் - 2 (பொடியாக நறுக்கவும்)  தேங்காய்த் துருவல் - 5 டீஸ்பூன்  தேன் - சிறிதளவு.

செய்முறை: கிவித் துண்டுகளுடன் 3 டீஸ்பூன் பொடித்த சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். வாழைப்பழத்துடன் மீதமுள்ள சர்க்கரை, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலக்கவும். ஆரஞ்சு சுளைகளைத் தேனில் ஐந்து நிமிடங்கள் ஊறவைக்கவும். கண்ணாடி கப்பில் கால் பங்கு அளவுக்கு கிவி கலவையைச் சமமாகப் பரப்பவும். அதன்மேல் கால் பங்கு அளவுக்கு வாழைப்பழக்கலவையை இரண்டாவது லேயராக சமமாகப் பரப்பவும். இதே போல் ஊறவைத்த ஆரஞ்சு சுளைகளை மூன்றாவது லேயராக பரப்பவும். ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். குளிர்ந்த பிறகு பரிமாறவும்.

குறிப்பு: கிவிப் பழம் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், ஜீரண சக்தியை அதிகரிக்கும். கிவி, ஆரஞ்சுப் பழங்கள் வைட்டமின் - சி சத்து கொண்டவை.

கேரட் - தேங்காய் தயிர் வடை 

தேவை: உளுத்தம்பருப்பு – ஒரு கப்  பச்சை மிளகாய் – 5  தோல் சீவி துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்  அரிசி மாவு – 2 டீஸ்பூன்  தயிர் – 2 கப்  கேரட் துருவல், தேங்காய்த் துருவல் – தலா 5 டீஸ்பூன்  நறுக்கிய கொத்தமல்லித்தழை – தேவையான அளவு  கறிவேப்பிலை - சிறிதளவு  எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: உளுத்தம்பருப்பை அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, தண்ணீரை வடியவிட்டு 3 பச்சை மிளகாய், அரை டீஸ்பூன் இஞ்சித் துருவல் சேர்த்துக் கெட்டியாக அரைத்து எடுக்கவும். அதனுடன் அரிசி மாவு, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு மாவை வடைகளாகத் தட்டிப் போட்டுப் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். மீதமுள்ள மிளகாயுடன் தேங்காய்த் துருவல், அரை டீஸ்பூன் இஞ்சித் துருவல், சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும். தயிருடன் உப்பு, அரைத்த தேங்காய் விழுது சேர்த்துக் கலக்கவும். அதனுடன் வடை சேர்த்து ஊறவைத்து, மேலே கேரட் துருவல், கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

பனீர் பிங்கர் ஃப்ரை 

தேவை: பனீர் – ஒரு பாக்கெட் (விரல் நீள துண்டுகளாக்கவும்)  மைதா மாவு, சோள மாவு – தலா ஒரு டீஸ்பூன்  மிளகுத்தூள், மிளகாய்த்தூள் – தலா அரை டீஸ்பூன்  எலுமிச்சைச் சாறு – சிறிதளவு  பிரெட் தூள், எண்ணெய், உப்பு – தேவையான அளவு. 

செய்முறை: மைதா மாவுடன் சோள மாவு, மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் எலுமிச்சைச் சாறு, சிறிதளவு தண்ணீர்விட்டு கெட்டியாகக் கரைக்கவும். பனீர் துண்டுகளை மைதா கலவையில் முக்கி எடுத்து பிரெட் தூளில் புரட்டி எடுக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு பனீர் துண்டுகளைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

மியாவ் தோசை 

தேவை: தோசை மாவு – ஒரு கப்  சாக்லேட் சிரப், நெய் – தேவையான அளவு  செர்ரிப் பழம் – 5 (இரண்டாக நறுக்கவும்).

செய்முறை: தோசைக்கல்லைக் காயவைத்துச் சிறிய குழிக்கரண்டியால் மாவை எடுத்து, சிறிய வட்டமாக ஊற்றவும். அதன் கீழ்ப்புறம் சற்று பெரிய வட்டமாக ஊற்றவும். பிறகு, சிறிதளவு மாவை எடுத்து வால், காது போல படத்தில் காட்டியுள்ளவாறு ஊற்றவும். சுற்றிலும் நெய்விட்டு ஒருபக்கம் வெந்தபிறகு உடையாமல் கவனமாகத் திருப்பிப்போட்டு மறுபுறமும் வேகவிட்டு எடுக்கவும். பிறகு, சிறிய வட்டத்தின் மீது சாக்லேட் சிரப்பால் கண் வரையவும். செர்ரி துண்டை வாய் போல அலங்கரித்துப் பரிமாறவும்.

இதை குட்டீஸ் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இரும்புச் சத்தும் கொண்டது.

பனீர் புர்ஜி 

தேவை: பனீர் துருவல் – ஒரு கப்  வெங்காயம், தக்காளி – தலா 2 (பொடியாக நறுக்கவும்)  குடமிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)  இஞ்சி - பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்  மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை  மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்  கொத்தமல்லித்தழை – சிறிதளவு  கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்  எண்ணெய், உப்பு – தேவையான அளவு. 

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு இஞ்சி - பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். அதனுடன் குடமிளகாய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து வேகவிடவும். பிறகு பனீர் துருவல், கொத்தமல்லித்தழை சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து, கிளறி இறக்கவும்.

மசாலா நட்ஸ் 

தேவை: வேர்க்கடலை, பாதாம், முந்திரி கலவை – ஒரு கப்  சாட் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்  வெண்ணெய் – ஒரு டீஸ்பூன்  மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்  உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் வெண்ணெய்விட்டு உருக்கி நட்ஸ் கலவையைச் சேர்த்து வறுக்கவும். அதனுடன் உப்பு, சாட் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துப் புரட்டி எடுக்கவும். காற்றுப்புகாத டப்பாவில் போட்டுவைத்துப் பயன்படுத்தலாம். இரும்புச் சத்து மிகுந்த இதை குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.

ன்றைய இல்லத்தரசிகளுக்கு இருக்கும் மிகப் பெரிய சவால்களில் ஒன்று... தங்கள் பிள்ளைகளைச் சாப்பிட வைப்பதுதான். பள்ளிப் பருவத்தில் இருக்கும் குழந்தைகள், டீன் ஏஜ் பிள்ளைகள் வழக்கமான சமையலை பல நேரங்களில் ரசித்துச் சாப்பிடுவதில்லை. `இன்னிக்கும் சாம்பாரா?’, `உப்புமாவைப் பத்தி `நெட்’ல கரிச்சுக் கொட்டுறாங்க... நீங்க என்னடான்னா அதையே அடிக்கடி பண்ணிட் டிருக்கீங்க’ என்பது போன்ற கமென்ட்டுகள் வீட்டுக்கு வீடு ஒலிக்கின்றன. உங்கள் வீட்டில் உள்ளவர்களைச் சமையலில்  திருப்திபடுத்த உதவிக்கரம் நீட்டுகிறார் சமையல் கலைஞர் தீபா பாலச்சந்தர்.

``எதிலுமே ரொட்டீன் என்பது சற்று சலிப்பு ஏற்படுத்தும் விஷயம்தான். நாமும் கற்பனையைப் பயன்படுத்தி... வித்தியாசமான ரெசிப்பிகளைச் சுவையாக, கலர்ஃபுல்லாக அவ்வப்போது செய்து பரிமாறினால், சாப்பிடும் அறையில் உற்சாகம் கரைபுரண்டு ஓடும்.  குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். இரும்புச் சத்துமிக்க வெள்ளரி ரோல், கார்ன் சாலட், ஸ்ட்ரா பெர்ரி கேண்டி, ஸ்பைஸி பொட்டேட்டோ கரி, பறங்கிக்காய் சூப், பட்டன் மசால் வடை, மியாவ் தோசை, மசாலா நட்ஸ்,   உள்பட வித்தியாசமான ரெசிப்பிகள் பலவற்றை அளித்துள்ளேன். இவற்றை எல்லாம் செய்து பரிமாறினால், `மம்மீ.. இட்ஸ் யம்மி!’  என்று உற்சாகக் குரல்கொடுப்பார்கள் உங்கள் வீட்டுக் குழந்தைகள்!’’ 

No comments:

Post a Comment