முக்தி அருளும் மகா மயானம்
காசியில் இறப்போருக்கு மட்டும்தான் முக்தி என்பதில்லை. காசிக்கு வெளியே, தொலைவில் உள்ள ஊரில் இறந்திருந்தாலும் அன்னாரது எலும்பையோ அவரது நினைவான பிண்டங்களையோ காசியில் பிரவகித்து வரும் கங்கையில் இட்டு ஈமக் கிரியைகளைச் செய்தால் அவர்களுக்கு முக்தி கிடைக்கும். அதனாலேயே இத்தலம் மகா மசானம் (மகா மயானம்) என்று வழங்கப்படுகிறது.
உலகில் எந்த ஒரு மத வழக்கத்திலும் ஒரு புண்ணிய தலத்தைத் தரிசிப்பதாலும் வணங்குவதாலும் மட்டுமே புண்ணியம் கிடைக்கும், மோட்சம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
ஒரு புண்ணியத் தலத்தில் இறப்பதனால் கூட முக்தி கிடைக்கும் என்னும் போற்றுதலுக்குரிய தலமாக உலகில் விளங்குவது காசி மட்டுமே.
தமிழ் மக்களிடம் ஆதிகாலத்தில் இறந்தோரைப் புதைக்கும் வழக்கம் மட்டுமே இருந்தது. அதன் குறியீடுகளே முதுமக்கள் தாழி போன்றவை. ஆனால் சங்க காலத்துக்கு முன்பே தமிழர்களிடம், இறந்தோரை எரிக்கும் பழக்கம் வழக்கத்துக்கு வந்துவிட்டது.
புறநானூற்றில் ஒரு காட்சி. "மக்கள் போற்ற வாழ்ந்த மன்னன் இறந்தபின் புதைப்பதா, எரிப்பதா என்ற ஆராய்ச்சி ஏன் ? அவன் வாழ்ந்தபோது பெறாத பெருமையையா இறந்தபின் அடக்கம் செய்யும் முறையினால் பெற்றுவிடப் போகிறான் ?' என்று அழுது புலம்புகிறான் ஒரு புலவன்.
ஒரு உடலை எரித்தபின், மறுமுறை சென்று அவ்வுடலின் எலும்புகளை எடுத்து நீரில் விடுவது ஈமக்கிரியையின் போது தமிழர்கள் செய்யும் சடங்குமுறைகளில் ஒன்று. அதாவது எலும்புகளை நீரில் விடுவது என்பது கங்கையில் விடுவதற்குச் சமம் என்றே கருதப்பட்டு இவ்வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது.
யாகங்களில் தீ வளர்த்து அக்னி பகவானுக்கு யாகத்தை அர்ப்பணிப்பது போல, உடலை எரிப்பதும் இறைவன் தந்த பஞ்ச பூதங்களால் ஆன உடலை மீண்டும் பஞ்ச பூதங்களுடன் ஒன்றச் செய்யும்படி அக்னி பகவானுக்கே அர்ப்பணிப்பது ஆகும்.
வேதாந்த வைதிகச் சடங்குகள் உரு வான நாளிலிருந்தே அவற்றோடு காசியும் தனது மயானப் புகழால் பெயர் பரவிவிட்டது.
வழக்கமாக நம்மூர்களில் சுடுகாடு என்பது ஊருக்கு வெளியே இருக்கும். கோயில்களில் மயானமே கோயிலாகக் கொள்ளப்படுவதும் உண்டு. உதாரணம் தமிழ்நாட்டில் மயிலாடுதுறையை அடுத்த திருக்கடவூர் (திருக்கடையூர்) மயானக் கோயில்.
ஆனால் காசி அப்படியல்ல. அந்த ஊரின் நடுவிலேதான் சுடுகாடு. நதியில், நீராடும் துறைதான் சுடுகாடு. ஊர் முழுவதுமே சுடுகாடு.
நம் நாட்டில் சகுனம் பார்க்கும் வழக்கம் மிகப் பிரசித்தம். பிணம் எதிரே வருவது நல்ல சகுனம் என்று இருப்பதும் காசியை மனதில் கொண்டே !
காசியிலிருந்து சுமார் 50 கி.மீ. சுற்றள வில் உள்ள ஊர்களில் யாரேனும் இறந்தால்கூட அவர்கள் உடலைக் காசிக்குக் கொண்டுவந்து ஈமச் சடங்குகளைச் செய்வதைத்தான் விரும்புகிறார்கள்.
வண்டிகளிலும் சைக்கிள் ரிஷ்சாக்களிலும் கூட இங்கே பிணம் ஏற்றி வரப்படும் காட்சி யைச் சாதாரணமாகக் காணலாம். அப்படிச் சவம் ஏற்றிவரும் ஊர்தியைக் காண்போர் அதை அருவருப்பாகக் கருதுவதில்லை. மாறாக, எதிர்படும் சவத்தைக் கண்டு கும்பிட்டுச் செல்வர். இது இவ்வூரில் காணப்ப டும் அன்றாடக் காட்சி.
கும்பிட்டுவிட்டு, ராம்நாத் சத்ஹை", "சம்போ மகாதேவா’, ‘போலே ஹரி’ என்று இறந்தவர் முக்தி அடைந்ததைக் குறிக்கும் மந்திரச் சொற்களை உரக்கச் சொல்லி விட்டுச் செல்வார்கள்.
தினம்தோறும் நூற்றுக்கணக்கான சவங்கள் இங்கே கொண்டு வரப்பட்டா லும் அதனுடன் வருவோர் அழுவதோ, புலம்புவதோ இல்லை. தாரை, தப்பட்டை போன்ற ஆர்ப்பாட்டங்களும் கிடையாது.
இறக்கும் நிலையில் முதுமை எய்திவிட்டவர்களுக்கு காது கேட்காது. அடைத்து விடும். ஆயினும் தேவாரம், திருவாசகம் போன்ற தெய்வப் பாக்களையோ, மோட்ச மந்திரங்களையோ, கடவுள் நாமாக்களையோ இறப்போரின் காதில் ஒதும் வழக்கம் இன்றும் உண்டு.
தமிழின் தொன்மை இலக்கியமான 'சீவக சிந்தாமணி’ ஒரு சமண சமயநூல். அதில் ஒரு காட்சி: அடிபட்டுக் கிடக்கும் ஒரு நாயின் காதில் சீவகன் மோட்சமந்திரம் சொல்கிறான். அந்த நாயின் ஆன்மா சுதீக் கணன் என்ற தேவகுமாரனாகிவிடுகிறது. பிறகு வேறொரு சூழ்நிலையில் சீவகன் சிறைபட்டுத் துன்புறும்போது, அந்த தேவ குமாரன் சீவகனைச் சிறையிலிருந்து மீட்டு வெளியே கொண்டு வருகிறான். - இக்கதை மூலம் அக்காலத்தில் சமணர்களிடமும் இந்தச் சடங்கு நம்பிக்கை இருந்தது நமக்குத் தெரிய வருகிறது.
காசியில் இறப்போரின் காதில் சிவபெருமானே தாரக மந்திரத்தை ஓதுவதாக ஐதீகம்.
ராமகிருஷ்ண பரமஹம்சர் தனது தெய்வீக அனுபவங்களைக் கூறும்போது, மோன நிலையில் தாம் இருந்த வேளையில், ஒரு காட்சி அவரது மன வெளியில் தெரிந்ததாம். அதாவது காசியில் சிவபெருமானே ராமகிருஷ்ணரின் காதில் மந்திரம் ஓதுவதுபோல் தெரிந்ததாம்.
இறந்தோர் காதில் சிவபிரான் மந்திரம் ஓதும் கருத்து பற்றி மேலும் சில விளக்கங்கள் கூறப்படுகின்றன. அதாவது, இறப்பவர் உடலை அன்னை பார்வதியாக அன்னபூரணியே தன் மடிமீது எடுத்துவைத்துக் கொள்கிறாளாம். 'ராம நாம’ மந்திரத்தை அப்போது சிவபெருமான் ஓதுகிறாராம்.
காசியில் உள்ள ’அனுமன் கட்டம்' என்னுமிடத்தில் உள்ள கோயிலில், உமையவளின் மடியில் சிவபெருமான் படுத்திருக்கும் காட்சியைச் சித்தரிக்கும் சிவசயன் அமைப்பைக் கண்டு வணங்குவோர் இந்த கருத்தை உணர்வர்.
இந்தக் காட்சியின் பின்னணிக் கதை என்ன ?
பாற்கடலைக் கடைந்தபோது ஆலகால் விஷம் எழுந்தது.
தேவர்கள் அதைத் தவறுதலாக உண்டு விடக்கூடாதே என்பதற்காக, தேவர்களைக் காப்பாற்ற வேண்டிய சிவபெருமான் அந்த ஆலகால விஷத்தை எடுத்து உண்டார் அதன் கடுமையால் மயக்கமுற்று அவர் அயர்ந்தபோது, அம்மையின் மடியில் தலைவைத்துப் படுத்தார். அந்தக் காட் சியே இது.
இதே காட்சியைச் சித்தரிக்கும் மூர்த்தி, சென்னையை அடுத்த ஊத்துக்கோட்டை அருகில் உள்ள சுருட்டப்பள்ளி என்ற தலத்துக் கோயிலிலும் உள்ளது. இங்கே சிவபிரான் பள்ளி கொண்டேஸ்வரர் என்ற பெயரில் உமையவள் மடியில் தலைசாய்த் துப் படுத்த நிலையில் உள்ளார்.
காசியில் தினம்தோறும் நடக்கும் நிகழ்ச்சியாக இது உள்ளது என்பதற்கு விளக்கமாகவே முன்னோர்கள் இப்படி ஒரு அமைப்பை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
ஆதியும் அந்தமும் அற்ற சோதியாகிய இறைவனுக்குப் பிறப்பு, மூப்பு, இறப்பு எதுவுமே இல்லை. ஆனாலும், அவர் உண்ட நஞ்சோ கொடிய ஆலகால விஷம். அது அவருக்கு மயக்கத்தை உண்டாக்கியது. அதை நீக்க அம்பிகை அருள் செய்தாள். அதனாலேயே அம்பிகைக்கு அமிர்தேஸ்வரி என்ற பெயர் உண்டு.
அமிர்தேஸ்வரியாகிய அன்னையின் மடியில் ஆண்டவன் சயனித்ததால் ஆலகால் நஞ்சின் கடுமை உடனே நீங்கியது.
இறப்போர்க்கு சாவு என்னும் எமவதை நேரிடும்போது காசிநகரின் அமிர்தேஸ்வரியான அன்னை, மோட்சத்துக்குக் காரணமான அமிர்த தொடர்பைத் தர, அவர்களைத் தன் மடியில் கிடத்திக் கொள்கிறாள் என்பதை உணர்க.
சிவபெருமான் ஏன் 'ராம ராம' என்று இராம நாமத்தை ஓதினார் ?
யோசிக்கத்தான் தோன்றும். உண்மையில் ராமன் என்பது ராமர் பூமியில் ராமாவதாரம் எடுப்பதற்கு முன்பே உள்ள ஒரு பெயர்தான்.
ராமன் பிறப்பதற்கு முன்பே ஏழு முனிவர் கள் ராம நாம ஜெபத்தை வால்மீகிக்குச் சொல்லித் தந்தார்கள்.
வால்மீகி வேடர் குலத்தைச் சேர்ந்தவர். அவரும் வேடுவத் தொழில் புரிந்து வந்தவர். அதனால் அவருக்கு 'ராம ராம' என்று சொல்ல வரவில்லை. அதனால் முனிவர்கள் அவருக்கு "மரா மரா' என்று மந்திரத்தைத் தலைகீழாகச் சொல்லித் தந்தார்கள். 'மரா மரா' என்றே உச்சரிக்கும்படி சொன்னார்கள்.
இப்படித் தொடர்ந்து உச்சரிக்கும்போது ராம ராம என்று வந்துவிடும். வால்மீகியும் இப்படியே “மரா மரா' என்று ராம நாமத்தை மெய் மறந்து சொல்லிக் கொண்டே போக, அவரைச் சுற்றி புற்று வளர்ந்து விட்டது. புற்று வளர்வது தெரியாமல் யோக நிலையில் தபஸ்வியாக அவர் அமர்ந்துவிட்டார்.
வேடுவர் தலைகீழாக மந்திரத்தை உச்சரித்ததற்கே இப்படி ஒரு மகத்தான பலனா என்று எல்லாரும் வியந்தனர்.
முனிவர்களும் ராம என்ற மந்திரத்தை ஜெபம் செய்து தவமிருந்து ராமனையே அவதாரமாகப் பெற்றனர்.
அதனாலேயே சிவபெருமான் அமிர்தேஸ்வரியின் மடியில் கிடந்து, அமிர்த மந்திரம் மொழியும் போது ராமநாமத்தை ஓதுகிறார்.
சைவமும் வைணவமும் வேறுவேறல்ல என்பது இதன் உட்பொருள்.
இதுவும் காசித்தலம் உலகுக்கு நல்கிய நன்மைகளுள் ஒன்று.
இம்மைக்கும் மறுமைக்கும் நடுவில் இருப்பது எது ?
மரணம்தான்.
அந்த மரணத்தை முக்தியாக ஆக்கும் சிறப்பு காசிக்குரியது.
மரணமே ஒரு வாழ்வின் இறுதியன்று. புதுவாழ்வின் தொடக்கமும் அதுவே - என்ற தெளிவைக் காசி உண்டாக்குகிறது.
வைணவ வியாக்கியானத்தில் ஒன்றைச் சொல்வார்கள்.
அதாவது தாயின் ஒரு மார்பின் பக்கம் பால் அருந்தும் குழந்தையைத் தடுத்து பால் மிகுந்த மறுபக்கத்துக்குத் தாய் மாற்றுவாள். குழந்தையோ, பால் குடிப்பதற்குத் தடை ஏற்பட்டுவிட்டதாகக் கருதி அழும். மேலும் குடிக்க வைக்க வேண்டும் என்பதே தாயின் நோக்கம். குழந்தையின் நிலையில் அது தெரியவராது. அதுபோல, இறைவன் இவ்வுலக வாழ்வை நீக்கி மறுஉலக வாழ்வு தருவதை மரணம் என்று அச்சிறுகுழந்தையைப் போலவே, வளர்ந் துவிட்ட மனிதனும் எண்ணுகிறான் - என்பதே அந்த வியாக்கியானம்.
காசித்தலமும் மனித குலத்துக்கு இப்படி ஒரு தாயாக இருந்து மரணத்தை முக்தி வயப்படுத்துகிறது.
- புனித பயணம் வ(ள)ரும்..
No comments:
Post a Comment