Tuesday, 6 March 2018

சிவன் வடிவமைத்த காசி - 07

Image result for varanasi tourism


மணிகர்ணிகை:


காசிக்கு பகீரதனால் கங்கை வருவதற்கு முன்பு திருமால் தனது சக்கரத்தால் ஒரு திருக்குளத்தை உண்டாக்கினார். அதன் கரையில் சிவபெருமானை வேண்டி கடுந்தவம் புரிந்தார். விஸ்வேசுவரர் அவர் முன் தோன்றி அவருடைய தவத்தை மெச்சி தலை அசைத்தார். அவரது தலை அசைவினால் அவருடைய திருச்செவியில் உள்ள குண்டலத்தின் நாகமணி நழுவி அந்தக் குளத்தில் விழுந்தது. அதனால் அக்குளத்துக்கு ‘மணிகர்ணிகை’ என்ற பெயர் ஏற்பட்டது.

சக்கரத்தினால் உண்டாக்கிய காரணத்தால் 'சக்கர தீர்த்தம்’ எனவும் பேர் பெறும். பின்னர் இம்மணிகர்ணிகையில் கங்கையும் கலந்து அதன் மகிமை உயர்ந்தது.

 தினமும் உச்சிப்பொழுதில் முப்பத்து முக்கோடி தேவர்களும் இதில் நீராட வருவர். அதனால் உச்சிவேளையில் இதில் நீராடுவது உத்தமம். காசியிலுள்ள எல்லா தீர்த்தங்களிலும் இது சிறப்பு உடையது.

மிருகண்டேய முனிவர் இதில் மூழ்கி மகப் பேறு பெற்றார்.

மார்க்கண்டேயர் இந்த மணிகர்ணிகையில் நீராடி விசுவேச்வரருடைய திருவருளைப் பெற்று யமனை வெல்லும் திறனைப் பெற்றார்.

Related image

 கங்கா ரகசியம் ! 

உலகில் பவித்திரமானது, பரிசுத்தமானது என்று எதனைக் குறிப்பிட்டாலும், கங்கைதான் முதலில் நம் நினைவுக்கு வரும். அசுத்தமான இடத்தில் கூட கங்கையைத் தெளித்தால், அந்த இடம் பரிசுத்தமானதாகிவிடும் என்பது சாஸ்திர நம்பிக்கை. எந்த பூஜையிலும் முதலில் ஒரு கலசத்தில் நீர் எடுத்து, அதில் கங்கையை ஆவாகனம் செய்து, அந்தத் தீர்த்தத்தால் பூஜை செய்யும் இடத்தையும், பூஜா திரவியங்களையும் புனிதப்படுத்திக் கொள்வது சாஸ்திர முறை.

இந்துவாகப் பிறந்தவர்கள் இறக்கும்தறுவாயில், கங்கா ஜலத்தை வாயில் ஊற்றி, அவர்களது பாவங்களை நீக்கிப் புனிதர்களாக இறைவனடி சேர வழிவகுக்கும் சடங்கும் உள்ளது. இத்தகைய புனித கங்கை, பாவங்களைப் போக்கும் பவித்திரதேவி மட்டுமல்ல, ஞானத்தை தரவல்ல சக்தியும் அவள்தான் என்கின்றன சாஸ்திரங்கள் !

தீபாவளித் திருநாளில், உலகிலுள்ள எல்லா நீர் நிலைகளிலும் புனித கங்கை ஆவாஹித்து இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. நரகாசுரன் அழிந்த துலா மாத சதூர்த்தசியில் நரகாசுரனைப் புனிதப்படுத்தி அவனுக்கு மோட்சமளிக்க, பகவான் ஸ்ரீகிருஷ்ணன் தன் சங்கு தீர்த்தத்தில் கங்கையை வரவழைத்தார். அப்போது அவர் சங்கல்பப்படி உலகிலுள்ள எல்லா நீர்பரப்பிலும் கங்கை அந்தர்யாமியாக வியாபித்தாள். அதனால் நரக சதுர்த்தசியன்று ஸ்நானம் செய்வதை, 'கங்கா ஸ்நானம் ஆயிற்றா ?'' என்று சம்பிரதாயமாகக் கேட்கிறோம்.

உலகில் வற்றாத ஜீவநதிகளில் புனிதத் துவம் பெற்ற நதி – கங்கை. காவிரியோடு கங்கையை இணைத்தால் உலகின் செழிப்பான பிரதேசமாக நமது பாரதமே விளங்கும் என்பது பூகோள ஆராய்ச்சியாளர்கள் வற்புறுத்தி வரும் கருத்து. இந்தியாவில் பாயும் ஆறுகளுக்கெல்லாம் மூலம் கங்கையே என்பது - நம்பப்படும் ஒரு மரபு.

ஸ்ரீமன் நாராயணனின் நாபியில் பிரம்மன் தோன்றினான். அவன் அண்ட சராசரங்களையும், சகல எல்லா ஜீவராசிகளையும் சிருஷ்டித்தான். அதன்பின்பு, தன்னைப் படைத்த நாராயணனுக்குப் பாத பூஜை செய்ய பவித்திரமான கலசம் ஒன்றைப் படைத்து, அதில் தன் தவ சக்தியால் உருவான பவித்ர நீரை நிரப்பினான். அதற்கு கங்கா எனப் பெயரிட்டு, அதனை பகவான் நாராயணனின் பாத கமலங்களில் சேர்த்தான். கங்காதேவி என்ற அந்தப் பவித்ர நீர்த்தாரை விஷ்ணு பாதத்தில் சேர்ந்து, அவரது பத்தினியானாள். அவள் பகவான் விஷ்ணுவின் சேவையிலேயே தன்னை அர்ப்பணித்துக் கொண்டாள். அவள் தோன்றிய இடம்தான் 'கங்கோத்ரி’.

 பஞ்ச பூதங்களில் ஒன்று நீர். அந்த நீருக்குத் தலைமை வகிப்பது கங்கை. இது பகீரதனால் பூமிக்குக் கொண்டு வரப்பட்ட புண்ணிய நதி என்கிறது இந்துமதம்.

தமிழக மக்கள் காவிரியையும் வைகையையும் கொண்டாடுவது போலவே, கங்கையையும் புகழ்ந்து கொண்டாடியுள்ளனர். சங்க இலக்கியங்கள் எங்கிலும் கங்கை போற்றப்படுகிறது. சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலை எடுக்க வட இந்திய அரசர் கனகவி ஜயர் தலைமீது இமயக் கல்லை ஏற்றி, கங் கையில் முழுக்காட்டி, தமிழகம் கொணர்ந் தான் என்று சிலப்பதிகாரம் உரைக்கிறது.

தமிழ் பக்தி இலக்கியங்கள் கங்கையைப் புராண காரணமாகவும் சிவபெருமான் தலையில் இருக்கும் பக்தி காரணமாகவும் அதைச் சிறப்பித்துப் பேசுகின்றன. மாமல்லபுரத்தில் உள்ள திருக்கோயில் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அங்கே, கங்கைக் கரைக் காட்சியொன்று தொடர் சிற்பமாகப் பெரிய அளவில் வடிக்கப்பட் டுள்ளது.

 ஏழாம் நூற்றாண்டில் திருச்சி மலைக் கோட்டையில் மகேந்திர பல்லவன் எடுத்த குகைக் கோயிலில் பகீரதனுக்குக் கங்கையை அளித்த சிவபெருமானின் இன்னொரு வகையான தோற்றம் பெரிய அளவில் உள்ளது.

ஒரு ஆற்று நீருக்கு அப்படி என்ன புனிதத் தன்மை ? 

எல்லா ஆற்றிலும் ஒரே நீர்தானே ? 

கங்கைக்கு மட்டும் புனிதம் கற்பிப்பானேன் ? 

அது முக்தி தரும்; பாவம் போக்கும் என்று சொல்வானேன் ? 

இப்படிக் கேட்போரும் இருக்கிறார்கள்.

ஆனால், செப்புக் கலசத்திற்குள் அடைக்கப்பட்ட கங்கை நீர் ஆண்டு பல ஆனாலும் சிறிதும் கெடாமல் இருப்பது எப்படி ? செப்புப் பாத்திரம் போகட்டும்; தகர டப்பாவிற்குள் அந்த நீரை அடைத்து வைத்திருந்தாலும் கெடுவதில்லை. இது எப்படி ? விடை சொல்லத் தெரியவில்லை - கேள்வி கேட்டோருக்கு ! இதுவே கூட கங்கையின் ஆன்மிகத் தன்மைக்கு மக்கள் ஏற்றுக் கொண்ட அடிநிலை ஆதாரமாகக் கொள்ளலாம்.

பஞ்ச பூதங்களுள் அக்னியாகிய தீக்கடவுள் பல தெய்வங்களுக்கும் பொதுவான ஊடகமாகவே விளங்குகிறார். ஆனால் நீரோ அதுவே தெய்வமாக விளங்குகிறது.

மழை - வான் கங்கை வழங்கும் அமுதமாகவே கொள்ளப்படுகிறது.

நீரில் அர்க்கியம் விடுதல், அஸ்தி கரைத்தல் போன்றவை செய்தால், இறந்தவர் சொர்க்கம் பெறுவர் என்றும், அவர்களுக்கு நைவேத்தியம் செய்யப்பட்டது அவர்களுக்கே சென்று சேரும் என்பதும் இந்துக்களின் நம்பிக்கை, மரபு.

Image result for கங்கை

வேள்வித் தீயின் மூலம் கடவுளர்க்கு அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றினாலும் நீரின் மூலம் பாவம் போக்குவதும், முன்னோர்களின் விருப்பத்தை நிறைவேற்றுதலும், சொர்க்கம் புகச் செய்தலுமான சடங்கு முறைகளால் தீயை விட நீரே சிறப்புக்குரியதாகப் போற்றப்படுகிறது. மற்ற கடவுளர்களுக்கு உரியதைக் கொண்டு செல்வதே அக்னியின் வேலை. ஆனால் நீரோ தானே தெய்வத்தன்மை கொண்டதாக விளங்குகிறது.

கங்கையின் புனிதத் தன்மையை எடுத்துக்காட்ட ஒரு கதை உண்டு. 

வாஹிகன் என்பவன் ஒரு பாவி. சூது, பசுக் கொலை, தாயை உதைத்தது போன்ற குற்றங்களுக்காக எமலோகத்தில் நரகத்தில் தள்ளப்பட்டு தண்டனை அளிக்கப்பட் டான். தண்டணையை நிறைவேற்ற அவன் மீது கழுகுகளை ஏவினர். அவனுடைய உடலைக் கழுகுகள் போட்டியிட்டுத்  தின்றபடி பறந்தன. பறவைகள் ஒன்றுக் கொன்று போட்டியிட்டுக் கொண்டதில் அவனுடைய கால் எலும்பு ஒன்று கங்கையில் விழுந்து விட்டது. அதே காரணத்தால் அப்போதே அவன் சொர்க்கத்துக்குப் போனான்.

பாவம் போக்கும் கங்கையின் பரம்பொருள் தன்மை அல்லவா ? இக்கதையால் விளங்குகிறது.

 சிவபிரானின் தலையில் உள்ளதால் , கங்கை பரம்பொருள் சார்பு பெற்றுள்ளதை அறியலாம்.

இமயமலை மீது 12,700 அடி உயரத்தில் பனிக்குன்றுகளின் ஊடே “கோமுகி' என்னும் சிகரத்தில் உள்ள ஒரு குகையில் தான் கங்கை உற்பத்தியாகிறாள் .

குகைக்கும் உள்ளே அவள் எவ்விதம் உருவாகிறாள் என்பது இன்றுவரை மனிதர்களால் அறியப்படாத ரகசியமாகவே உள்ளது. முயன்றும் மனிதர்களால் காண முடியவில்லை.

கங்கை கோமுகியில் தொடங்கி, வங்காளத்தில் சென்று கடலோடு கலப்பது ஏன் ? 

நேரே தென்திசை நோக்கி ஓடி வந்து இருக்கலாமே. வடக்கை விட தெற்கு தாழ் வானதுதானே ? 

பின் ஏன் கிழக்கு நோக்கி ஓடினாள் ? 

அதற்கும் ஒரு கதை உண்டு.


கபில முனிவர் தனது சாபத்தினால் சகர மன்னனின் 60 ஆயிரம் குழந்தைகளையும் சாம்பலாக்கி விட்டார். அந்த இடம் வங்காளத்தில்தான் உள்ளது.

அப்போது பூவுலகில் ரகுவம்ஸத்தில் பகீரதன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். ஸ்ரீராமனின் மூதாதையர்களில் ஒருவன் பகீரதன். இவன் காலத்தில், தேசத்தில் கடும் பஞ்சமும் வறட்சியும் ஏற்பட்டன. அந்தக் கால கட்டத்தில் ஒரு சாபத்தால் மடிந்து சாம்பலான தன் மூதாதையர்கள் அஸ்தியைக் கரைத்து, அவர்களுக்கு நற்கதியை உண்டாக்கித் தரவும், நாட்டின் வறட்சி நீங்கவும் பகீரதன் விரும்பினான்.

அதற்காக, பவித்திரமான கங்கையை பூமிக்குக் கொண்டு வர முயன்றான். எனவே, ஸ்ரீமன் நாராயணனைக் குறித்து ஒற்றைக் காலில் நின்று கடும் தவம் மேற் கொண்டான். அதன் பலனாக நாராயணன் பிரத்யட்சமானார். அவரிடம், விஷ்ணு பாதத்தில் பணிபுரியும் கங்கா மாதாவை, கங்கோத்ரியிலிருந்து புறப்பட்டு இமயத்தின் சிகரங்கள் வழியே ஓடி, பூமியைக் குளிரச் செய்து, தன் மூதாதையர் அஸ்தியைக் கடலில் கரைக்கும் இடத்தில் அவள் சங்கமம் ஆகும்படி அருள்பாலிக்க, பகீரதன் வரம் கேட்டான். நாராயணனும் தந்தருளினார்.

Related image

புனித கங்கை ஆகாச கங்கையாக, அதிவேகமாக புறப்பட்டாள். இமயத்தைத் தாண்டி அவள் பூமியில் இறங்கும்போது அவள் வேகத்தைத் தணிக்காவிட்டால், நாடு நகரமெல்லாம் மூழ்கிவிடும் என்று பகீரதன் பயந்தான். அவள் வேகத்தைத் தடுக்க வல்லவர், சிவபெருமான் ஒருவரே என்றுணர்ந்து, சிவனைக் குறித்துத் தன் தவத்தைத் தொடங்கினான் பகீரதன்.

Related image

உலகைக் காக்க ஈஸ்வரன் தோன்றி, தன் சடையை விரித்து, கங்கையை அதில் தாங்கி, அவள் வேகத்தைத் தடுத்து, பூவுலகில் பாயச் செய்தார். (சிவனார் கங்கையைத் தலையில் தரித்தமையால், கங்கையையும் சிவ பத்தினி என்று சிலர் தவறாகக் குறிப்பிடுவதுண்டு. கங்கா அஷ்டோத்திரத்தில் கங்கையை விஷ்ணு பத்னி என்றும், சிவ சோதரி என்றும்தான் குறிப்பிடப்பட்டுள்ளது).

விஷ்ணு பாதத்தில் இருந்து புறப்பட்ட கங்கை, முதலில் நந்த பிராயக் என்றும், பிறகு சிவனை தரிசித்துத் தாண்டிய இடத்தில் ருத்ர ப்ராயக் என்றும் பெயர் பெற்று, பகீரதன் கங்கையை தரிசித்த இடத்தில் பாகீரதி என்று பெயர் பெற்றாள். பகீரதனிடம் கங்காதேவி, ''தான் எப்படிச் செல்ல வேண்டுமென்றும், எந்த மார்க்கமாகத் தன் தாரைகள் ஓட வேண்டும் ?'' என்றும் கேட்டாள்.

பகீரதன் தன் தேரில் ஏறி, 'தாயே ! நான் முன்னே வழிகாட்டிச் செல்கிறேன். என்னைப் பின்தொடருங்கள்’ என்று கூறிவிட்டு, வாயு வேகத்தில் புறப்பட்டான். கங்காதேவியும் பின்தொடர்ந்தாள். பல காதங்கள் வந்த பின்பு, திடீரென பகீரதன் திரும்பிப் பார்த்தான். கங்கை அவன் பின்னே வரவில்லை. ரதத்தின் வேகத்துக்குக் கங்கையால் ஓடி வர முடியவில்லை போலும் என்று நினைத்து, சிறிது நேரம் காத்திருந்தான் பகீரதன். அப்போதும் கங்கை வரவில்லை.

எனவே, தேரைத் திருப்பிக் கொண்டு, வந்த வழியே சென்றான். சிறிது தூரம் சென்றதும், அவன் கண்ட காட்சி அவனைத் திகைப்பில் ஆழ்த்தியது. ஆம், கங்கை ஏழு பிரிவாகப் பிரிந்து, மீண்டும் ஒன்றாக ஒரே இடத்தில், ஒரு தீவு போன்ற பகுதியை உருவாக்கிக் கொண்டிருந்தாள்.

காரணம் , அங்கே சப்த ரிஷிகள் எனப்படும் ஏழு மகரிஷிகளும் தவம் புரிந்து கொண்டிருந்தனர். அவர்களது தவத்துக்கும் ஞானத்துக்கும் கட்டுப்பட்டு, அவர்களின் பாதங்களை வருடிக்கொண்டு, அங்கே தானும் தவம் புரிந்து கொண்டிருந்தாள் ஞான கங்கை. அந்த இடம்தான் இன்று ரிஷிகேஷ், ஹரித்வார் ஆகிய புண்ணிய க்ஷேத்திரங்களாக விளங்குகின்றன. கங்கை ஏழாகப் பிரிந்து, மீண்டும் இணைந்த நிலையை இன்றும் ஹரித்வாரின் பூமி அமைப்பைக் குறிக்கும் செயற்கைக்கோள் படங்களில் காணலாம்.

சப்த ரிஷிகளுக்கான ஆலயமும் ஹரித்வாரில் உள்ளது. சப்த ரிஷிகளைத் தாண்டிச் செல்லும்போது, அவர்களைத் தரிசித்து ஆசி பெறாமல் சென்றது தவறு என்று பகீரதனுக்குப் புரிந்தது. தன் தவத்துக்கு இரங்கி பூமிக்கு வந்த கங்கை தன்னைவிட உயர்ந்த தபஸ்விகளின் தரிசனத்துக்காகத் தங்கிவிட்டாள் என்பதையும் உணர்ந்தான் பகீரதன்.

                                       - புனித பயணம் வ(ள)ரும்..

No comments:

Post a Comment