Saturday, 6 August 2016

சபரிமலை நாயகன் !


சபரிமலையில் கோவில் கொண்டிருக்கும் தர்மசாஸ்தாவுக்கு கார்த்திகையில் திருவிழா துவங்குகிறது. பக்தர்கள் ஐம்புலனையும் அடக்கி 41 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை விரதம் இருப்பர்.
விரதம் என்ற சொல்லை வி+ரதம் எனப் பிரிக்கலாம். வி என்றால் மேலான ஆங்கிலத்தில் கூட வி' என்ற அடையாளத்தை விக்டரி என்ற பொருளில் வெற்றியின் சின்னமாக எடுத்துக் கொள்கின்றனர். ரதம் என்றால் தேர் வாழ்க்கைத் தேர் வெற்றிகரமாக ஓட உதவுவது விரதம்.
விரதம் என்றால் வெறும் உணவு கட்டுப்பாடு என்று மட்டுமில்லை. கண், காது, மூக்கு, நாக்கு, உடல் எனும் ஐம்புலன்களும் கட்டறுந்து ஓடுகின்றன. இஷ்டப்பட்டதை எல்லாம் இவை பார்க்கின்றன, கேட்கின்றன, நுகர்கின்றன, பேசுகின்றன, அனுபவிக்கின்றன. இந்த புலன்களைக் கட்டுப்படுத்தினால், வாழ்க்கைத் தேர் சரியான பாதையில் செல்லும். இதற்கு பெரிதும் உதவுவது ஐயப்ப விரதம்.
ஐயப்பன் எனும் சொல் ஐயன் என்ற சொல்லில் இருந்து வந்தது. "ஐயன்' என்றால், "உயர்ந்தவன், பெரியவன்' என்றெல்லாம் பொருள் உண்டு. இப்போதும், கிராமங்களில் உள்ளவர்கள் சாஸ்தா கோவிலுக்குச் செல்கிறவர்களை, "ஐயன் கோவிலுக்கு கிளம்பியாச்சா?' என்று கேட்பது வழக்கம். தெய்வங்களில் இவன் உயர்ந்தவனாகக் கருதப்படுவதற்கு காரணம் உண்டு.
தனக்கென வாழாமல், பிறர்க்கென வாழ்பவனே உயர்ந்தவன். அவ்வகையில், 12 வயதிலேயே தன் தாயின் தலைவலியைப் போக்க, தன் உயிரையே பணயம் வைத்து காட்டிற்கு சென்று, புலியையே ஓட்டி வந்தவர் ஐயப்பன். இவ்வளவு பெரிய தியாக உணர்வுள்ளவர் என்பதால் தான் அவர் ஐயப்பன் என்ற பெயர் பெற்றார்.
அவரை, "தர்மசாஸ்தா' என்றும் சொல்வர். அவர் தர்மத்தை உலகில் நிலைநிறுத்த அவதரித்தவர். மகிஷி எனும் அரக்கியால், உலகம் பல அவலங்களை அனுபவித்த போது அவளை அழித்து, தர்மத்தை நிலைநிறுத்தினார். இதனால், "தர்ம' என்ற அடைமொழி, "சாஸ்தா' என்ற பெயரோடு இணைந்தது. "சாஸ்தா' எனும் சொல்லுக்கு, "கூட்டமாக வந்து வழிபடப்படும் கடவுள் என்று பொருள்.
இப்போதும், சாஸ்தா கோவில்கள் அடர்ந்த காட்டுப் பகுதி, ஊரை விட்டு ஒதுக்குப்புறமான சோலைகள் நிறைந்த பகுதிகளுக்குள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த இடங்களில் மிருகங்கள் நிறைந்திருந்தன. இங்கே தனியே செல்வது ஆபத்து என்பதால், பக்தர்கள் ஒலி எழுப்பியபடியே சாஸ்தாவை வழிபடச் சென்றனர். இந்த ஒலி கேட்டு, மிருகங்கள் ஒதுங்கி ஓடி விடும். இன்றைக்கு, ஐயப்பன் கோவிலுக்கு செல்ல எவ்வித பயமும் இல்லை என்றாலும், பழைய நடைமுறைப்படி சரண கோஷம் எழுப்பியபடியும், "சுவாமி திந்தக்கதோம், ஐயப்ப திந்தக்கதோம்...' என்றும் வாத்தியங்களை முழங்கியபடியும் செல்கின்றனர்.
சபரிமலை கோவில் பரசுராமரால் உருவாக்கப்பட்டது. சாஸ்தா, தேசத்தைப் பாதுகாக்கும் தெய்வம். எனவே, 12 சாஸ்தா கோவில்களை அவர் பிரதிஷ்டை செய்துள்ளார். அவற்றில் அச்சன்கோவில், குளத்துப்புழை, ஆரியங்காவு, சாஸ்தாம்கோட்டை ஆகியவை புகழ் மிக்கவை. குளத்துப்புழையில், ஐயப்பன் பாலகனாக இருந்த போது வாழ்வைக் கழித்தார். ஆரியங்காவில் இளைஞனாகவும், அச்சன்கோவிலில் தம்பதி சமேதராகவும், சபரிமலையில் யோக நிலையிலும் (துறவு) காட்சியளிக்கிறார்.
சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள், குருவின் மூலம் மாலை அணிந்து கொள்கின்றனர். குருமார்கள் எக்காரணம் கொண்டும் பணத்தின் மீது நாட்டம் கொண்டிருக்கக் கூடாது. இல்லறத்தில் இருந்தாலும், தாமரை இலை தண்ணீர் போல வாழ வேண்டும்.
ஒருவரது வசதி, பணம் ஆகியவை குருசாமியாவதற்கு தகுதியைத் தராது. அவரது சபரிமலை பயண அனுபவம், 18 ஆண்டுகளுக்கு, 41 நாள் தொடர் விரதம் இருந்து பெருவழிப்பாதை மூலம் சென்று திரும்புதல், அதன் மூலம் அவர் பெற்ற தெய்வசக்தி, வழி பாட்டிலும், பக்தர்களை வழி நடத்துவதிலும் அவருக்குரிய திறமை ஆகியவற்றைப் பொறுத்தே குருசாமியாகும் தகுதியைப் பெறுகிறார்.

No comments:

Post a Comment