சாணம் அல்லது சாணி என்றதும் பசுமாட்டின் கழிவுதான் நினைவுக்கு வரும். இயற்கை உரம், விபூதி என பல வகைகளில் பயன்படும் இது மிகச் சிறந்த கிருமிநாசினி. அதனால்தான் இன்றைக்கும் பலர் சாணத்தால் வாசல் தெளிக்கிறார்கள். மண் வீடுகளின் உள்ளே சாணத்தால் பூசி மெழுகுவதையும் இன்றைக்கும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். சென்னை மயிலாப்பூர் முண்டகக்கன்னியம்மன் கோயிலில், சாணத்தினால் தட்டப்பட்ட வரட்டியை, பொங்கல் வைக்க பயன்படுத்துவார்கள். அது எரிந்து சாம்பலானதும் அதை பிரசாதமாக கொடுக்கிறார்கள்.
சாணத்தை வயல் வெளிகளில் உரமாகவும் பயன்படுத்துகின்றனர். சாணத்தில் நைட்ரஜன், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் இருப்பதை அறிவியல் ஆராய்ச்சிகள் உறுதி செய்துள்ளன.
சாணத்தைக்கொண்டு தயாரிக்கப்படும் சாண எரிவாயுவில் மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு அதிகம் காணப்படுகின்றன. இச்சாண எரிவாயு, மரபு சாரா எரிசக்தியாக பயன்படுத்தப்படுகிறது. கிராமப்புறங்களில் அரசு விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்கள் அதிக அளவில் சொறி, சிரங்கு போன்றவற்றால் பாதிக்கப்படுவர். அந்த மாணவர்கள் விடுமுறைக்காக வீடு திரும்பும்போது வைத்தியர்களிடம் சென்றால், அவர்கள் பசுவின் சாணத்தை அள்ளி தொழுவத்தை சுத்தம் செய்யும் பணியை செய்யச்சொல்வார்கள்.
அப்படி கோமியம் கலந்த பசுவின் சாணத்தை கையில் அள்ளி சுத்தம் செய்வதன் மூலம், அது உடலின் பல்வேறு பகுதிகளிலும் படுவதற்கு வாய்ப்பு ஏற்படும். பசுவின் சாணமும், கோமியமும் சிறந்த கிருமிநாசினி என்பதால் மாணவர்களின் தொற்றுகள் மறைந்து விடும். இப்படியாக மாட்டுச்சாணம் பல்வேறு வழிகளில் பயன்படுகிறது.
No comments:
Post a Comment