Monday, 15 August 2016

மலைக்கோவில் தரிசனம்... மலையளவு பலன் !

ன்றைக்கு மாடிப்படி ஏறினாலே நமக்கு மூச்சு முட்டுகிறது. ஆனால் நம் பாட்டன் பூட்டன்கள் காட்டுப்பாதைகளைக் கடந்து, கரடு முரடு மலைகளில் ஏறி கம்பீரமாக நிற்கும் சிகரத்தில் குடிகொண்டிருக்கும் இறைவனை தரிசித்துவிட்டு திரும்பியதை கதை கதையாக சொல்லக் கேட்டிருப்போம்.

"என்னுடைய தாத்தா கம்பு விதைத்துவிட்டு திருப்பதி கிளம்புவார். நடைபயணம் சென்று, உச்சிமலை ஏறி அவர் திரும்பி வருகையில் கதிர் விளைந்திருக்கும். வந்ததும் அறுவடைக்கு தயார் ஆவார்...'' என கிராமத்து அம்மாக்கள் பூரிப்புடன் சொல்வார்கள். 



இன்றைக்கு ரோப் கார்கள் மூலம், மூலவர் வரை செல்லும் வசதியை விஞ்ஞானம் வந்துவிட்டாலும், இப்போதும் பலர் திருப்பதிக்கும், சபரிமலைக்கும், பழனிக்கும் நடைபயணமாக சென்று மலை ஏறி இறைவனை தரிசித்து வருகிறார்கள்.

பொதுவாக மலைகளில் உள்ள மூலிகைகள் உடலுக்கு நன்மையும், அங்கு நிலவும் சூழல் மனதுக்கும் அமைதியும் தரும் என்பதால் மலைப் பயணங்களை மைன்ட் ரிலாக்ஸ் பயணங்களாகவே கைகொண்டார்கள் நம் முன்னோர்கள்.
உதாரணமாக சதுரகிரி மலையில் காணப்படுகிற மூலிகைகளும், தீர்த்தங்களும் பல நோய்களை தீர்க்கும் குணமுடையது. இந்த மலையின் மூலிகை கலந்த காற்றுபட்டால் பல நோய்கள் குணமாவதாக பலரும் அனுபவங்களை சொல்லக் கேட்டிருக்கலாம்.

அதேபோல், 'பழநியில் கால்வைத்தாலே பாதி நோய்கள் தீர்ந்து விடும். உச்சிமலை ஏறிவிட்டால் மொத்த நோயும் குணமாகும்' என்பார்கள். ஒரு கோயிலுக்கு அபூர்வ சக்தி அளிப்பவை அங்குள்ள சிலை, தீர்த்தம், அமைவிடம் ஆகியவை. அந்த வகையில் பழநி கோயிலுக்கு அபூர்வ சக்தி அளிப்பது நவபாஷாண சிலை.

இப்படி திருப்பதி, சபரிமலை என கைலாயம் வரை அதன் மகிமைகளையும், சிறப்புக்களையும் சொல்லிக்கொண்டே போகலாம். வாகன வசதிகள் இல்லாத காலத்தில் மாதக் கணக்கில் மலை கோயில்களுக்கெல்லாம் நடந்தே சென்று இறை தரிசனம் செய்தார்கள். அதுபோல நாம் இப்போதும் நடந்தே செல்ல வேண்டும் என்பதில்லை. ஆனால் படியேற இயலாதவர்கள், வயதானவர்கள் தவிர மற்றவர்கள் ரோப் கார்களை தவிர்த்து படிக்கட்டுகளில் ஏறி இறங்கினால் பயணத்தின் நிஜமான பலனை அடையலாம். 


இன்றைய வணிக யுகத்தில், மலையேறுதலை ஒரு பயிற்சியாகவும் பாடமாகவும் பயிற்றுவிக்கிறார்கள். மலையேற்றம் என்பது உடல் தசைகளை வலிமைப்படுத்துவதாகவும், ரத்த ஓட்டத்தை சீர்படுத்துவதாகவும் மருத்துவர்களும் சொல்கிறார்கள். தைரியத்தையும், தன்னம்பிக்கையையும், மனோதிடத்தையும் அதிகரிக்க மலையேற்றம் உதவுவதாக உளவியல் ரீதியாகவும் சொல்லப்படுகிறது.

மொத்தத்தில் இயற்கை எழில் சூழ்ந்த மலை உச்சிகளில், நம் முன்னோர்கள் வழிபாட்டு தலங்களை அமைத்ததன் காரணத்தை புரிந்துகொண்டால் மலைக்கோவில் தரிசனம் மனதிற்கும், உடலுக்கும் நலம் தரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

No comments:

Post a Comment