Monday, 15 August 2016

இளமை தரும் எண்ணெய்க்குளியல் !


த்திச்சூடியின் உயிர்மெய் வருக்கம் பகுதியில், 'சனி நீராடு' என்று சொல்லியிருக்கிறார் அவ்வையார். அவ்வையாரின் 'சனி நீராடு' என்ற ஆத்திசூடிப்பாடலுக்கு இதுவரை... 'சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்து நீராடு' என்றே பொருள் கொள்ளப்பட்டது. அத்துடன், 'குளிர்ந்த நீரில் குளி' என்றும் பொருளாகக் கொள்ளப்பட்டது.

ஆனால் பரிமேலழகர் `சனி' என்ற சொல்லுக்கு 'காரி' என்று பொருள் கூறுகிறார். காரி என்றால் விடியல், இருள் முற்றும் நீங்காப் பொழுது என்று பொருள் கொண்டு 'வைகறையில் நீராடு' என்று உரை எழுதியுள்ளார். ஆக, நம் முன்னோர் உடல் ஆரோக்கியம் பேணுவதற்காக கண்டுபிடித்த எண்ணற்ற இயற்கை வழிகளில் எண்ணெய்க்குளியலும் ஒன்றாகி விட்டது. வாரம் ஒருநாள் தவறாமல் எண்ணெய்க்குளியல் செய்து வந்தால் மூட்டு வலி வராது. மசாஜ் செய்வதற்கும், மூட்டு வலி போக்குவதற்கும் பெரும்பாலும் எண்ணெய்களே மூலாதாரமாக பயன்படுத்தப்படுகிறது.



ஆக, எண்ணெய்க்குளியல் செய்வதால் மூட்டு வலி வராது. தலைமுடி உதிராமல் தடுப்பதோடு நரை விழாமல் காத்துக்கொள்ளும். ஒரு முழுமையான எண்ணெய்க்குளியல் உடம்பை சர்வீஸ் செய்தது போலாகிவிடும்.

ஆண்கள் சனி அல்லது புதன்கிழமைகளிலும் பெண்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் எண்ணெய்க்குளியல் செய்யலாம். சூரிய உதயத்திலிருந்து ஒரு மணி நேரத்திற்குள் எண்ணெய்க்குளியல் செய்வது நல்லது. கொஞ்சம் நேரமானாலும் பரவாயில்லை. தேங்காய்எண்ணெய், நல்லெண்ணெய் அல்லது கரிசலாங்கண்ணித் தைலம் போன்றவற்றைக்கொண்டு எண்ணெய்க்குளியல் செய்யலாம். முதலில் தொப்புள் அல்லது உச்சந்தலையில் எண்ணெய் தேய்த்து அதன்பிறகு உடல் முழுவதும் குளிரும் அளவுக்கு எண்ணெய் தேய்க்க வேண்டும். தாராளமாக எண்ணெய் தேய்த்தால் நல்லது.

மூட்டுவலி உள்ளவர்கள் வலி உள்ள இடங்களில் கொஞ்சம் அதிகமாக எண்ணெய் தேய்க்கலாம். அதன்பிறகு குறைந்தது அரை மணிநேரமாவது எண்ணெயை உடம்பில் ஊற விட வேண்டும். இப்போது உடல் குளிர்ச்சி அடைந்திருப்பதை உணர முடியும். போதுமான சூட்டில் வென்னீர் வைத்து மனைப்பலகையில் உட்கார்ந்து குளிக்க வேண்டும். இப்படி உட்கார்ந்து குளிக்கும்போது முதலில் சிறுநீர் தாராளமாக பிரியும். இதன்மூலம் சிறுநீரக கோளாறுகள் வராமல் காக்கப்படும். இப்போது சீயக்காய் அல்லது பயத்தமாவு தேய்த்து குளிக்க வேண்டும்.

குளித்து முடித்தபிறகு காலை உணவாக வெந்தயக்களி சாப்பிடலாம். சாப்பிட்டு முடிந்த சிறிது நேரத்தில் கண்கள் குளிர்ந்து கண்ணைக் கட்டிக்கொண்டு சுகமான தூக்கம் வரும். உடனே படுத்து தூங்கிவிடக்கூடாது. ஏதாவது சிறு சிறு வேலைகளைச் செய்து பொழுது போக்குங்கள். மதிய உணவு மற்றும் இரவு உணவு மிக எளிய உணவாக இருக்கட்டும். இறைச்சி உணவுகளை எடுக்காதீர்கள். இதுதவிர இளநீர் குடிப்பது, உடல் உறவு போன்றவை அன்றைய தினம் வேண்டாம். இதை முறையாக கடைபிடித்தால் இளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கலாம்.



அருணோதயத்தில் எண்ணெய் குளியல் எடுப்பது நல்லது. அருணோதயம் என்றால் அருணனின் உதயம். அருணன் சூரியனுடைய தேரோட்டி. அவன் ஒரே சிவப்பாக இருப்பான். நல்ல சிவப்புக்கு 'அருணவர்ணம்' என்று பெயர். சூரியன் அடிவானத்தில் தெரிவதற்கு முன் ஒரு முகூர்த்த காலத்துக்கு முந்தியே வானில் சிவப்பு பரவ ஆரம்பிப்பதுதான் அருணோதயம் எனப்படுகிறது. ஒரு முகூர்த்தம் என்பது இரண்டு நாழிகை. அதாவது நாற்பத்தெட்டு நிமிஷம்.

தீபாவளியன்று சூரியோதயத்துக்கு ஒரு முகூர்த்தம் முந்தியே எண்ணெய் தேய்த்து குளித்துவிட வேண்டும். சிலர், விடிவதற்கு முன்னால் எண்ணெய்க் குளியல் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக, ராத்திரி இரண்டு மணி, மூன்று மணிக்கே ஸ்நானம் செய்கிறார்கள். இப்படி செய்வது தவறு.

No comments:

Post a Comment