நாட்டிய சாஸ்திரம் தெய்வீகமானது. கணபதி, சரஸ்வதி, காளி, கிருஷ்ணர் என்று பலரும் நடனமாடும் கோலத்தில் காட்சி அளித்தாலும் நடனத்திற்கு ராஜாவாக இருப்பவர் சிவனே. அதனால் அவருக்கு, நடராஜர் என்ற பெயர் உண்டானது. நம் தேசத்து கலைபண்பாட்டின் சின்னமாக இருப்பவர் நடராஜர் தான். வெளிநாட்டவர் சுற்றுலா வந்ததற்கு அடை யாளமாக நடராஜர் சிலையை வாங்கிச் செல்வதை பெருமையாகக் கருதுகின்றனர். வெளிநாடுகளுக்கு அரசுமுறைப்பயணம் செல்பவர்கள் நடராஜர் சிலையையே அங்குள்ளவர்களுக்கு பரிசளிக்கிறார்கள்.
ஆனந்த தாண்டவம்: ஒருவனின் உள்ளத்தில் மகிழ்ச்சி இருந்தால் நடனமாடத் தோன்றும். பழங்காலத்தில் நடனத்தை கூத்தாடுதல் என்றே சொல்வர். கூத்துக்கலையில் வல்லவராக விளங்குபவர் சிவன். அவர் நடனமாடும் சிதம்பரத்தையும் சேர்த்து, தில்லையம்பலக்கூத்தன் என்றே குறிப்பிடுவர். அவர் ஆடும் நடனம் களிநடனம். இதற்கு ஆனந்த தாண்டவம் என்றும் பெயருண்டு. மார்கழி திருவாதிரையன்று நடராஜருக்கு படைக்கும் பிரசாதமும் களி தான்.
சிதம்பரம் என்றால் என்ன ?
சித்+அம்பரம்=சிதம்பரம். சித்-அறிவு. அம்பரம்-வெட்டவெளி. நடராஜர் சந்நிதியின் வலதுபுறம் ஒரு சிறு வாயில் உள்ளது. இதனுள் தங்கத்தினால் ஆன வில்வ மாலை உள்ளது. வாசலில் திரை தொங்கும். பூஜையின் போது திரை விலக்கப்பட்டு ஆரத்தி காட்டப்படும். அங்கே என்ன இருக்கிறது? என்று குனிந்து பார்த்தால், ஆகாயம் தான் தெரியும். இறைவன் ஆகாயம் போல் பரந்து விரிந்தவன். ஆகாயத்துக்கு ஆரம்பமும் கிடையாது, முடிவும் கிடையாது. முதலும் முடிவும் இல்லாதவன் இறைவன் என்பதை இது குறிக்கிறது. பஞ்சபூத தலங்களில் இது ஆகாயத்தலம்.
No comments:
Post a Comment