Monday, 15 August 2016

நலம் தரும் சாம்பிராணி தூபம் !


சாம்பிராணி என்பது 'பிரங்கின்சென்ஸ்' (Frankincense) என்ற மரத்திலிருந்து வடியும் பால் அல்லது பிசின். 'பாஸ்வெல்லியா செர்ராட்டா' (Boswellia serrata) என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த இந்த பிசின், மிக மெதுவாக இறுகி, ஒளிப்புகும் தன்மையும், எளிதில் எரியக்கூடிய தன்மையும் கொண்ட சாம்பிராணியாக மாறுகிறது.

சாம்பிராணி குமஞ்சம், குங்கிலியம் மரத்துவெள்ளை, பறங்கிச்சாம்பிராணி, வெள்ளைக்கீரை என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. சாம்பிராணியை எரித்தால் நறுமணத்தைப் பரப்பும். சாம்பிராணி மரங்கள் மேற்கத்திய நாடுகள் மற்றும் இந்தியாவில் குஜராத், அஸ்ஸாம், ராஜஸ்தான், பீகார், ஒடிசா மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் அதிகமாக காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் குறிப்பாக கல்வராயன், சேர்வராயன் மலைச்சரிவுகளில் சாம்பிராணி மரங்கள் காணப்படுகின்றன.

சாம்பிராணி மரம் உறுதியானது. ஆனாலும் இதை எளிதாக அறுக்கவும், இழைக்கவும் முடியும். தீக்குச்சிகள் தயாரிப்பில் சாம்பிராணி மரங்கள் பயன்படுகின்றன. நவம்பர் மாதம் முதல் ஜூலை வரை இந்த மரங்களிலிருந்து அதிக பால் வடியும். இதன்மூலம் ஆண்டு ஒன்றுக்கு, ஒரு மரத்திலிருந்து ஒரு கிலோ வரை சாம்பிராணி பெறப்படுகிறது. கோயில்களில் தூபக்கால் என்று ஒன்று இருக்கும். இதில், மரக்கரியை எரியச் செய்து, அந்த தணலில் சாம்பிராணியைப் போட்டு, புகைய விட்டு, இறைவன் சந்நிதியில் காட்டுவது வழக்கம். பாறை போல் இறுகிக் கிடக்கும் சாம்பிராணிக் கட்டிகள், தீயில் பட்டவுடன் புகையாக வெளிப்படும். அதுபோல், நம்முன் பூதாகரமாக, மிகக் கடினமாகக் கிடக்கும் துன்பங்கள் எல்லாம், அக்னி உருவாக உள்ள இறைவனின் அருள் கடாட்சம் கிட்டியவுடன் புகையைப் போன்று லேசாகி விலகிவிடும் என்பது நம்பிக்கை.

இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம் என எந்த பாகுபாடும் இல்லாமல் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் சாம்பிராணி தூபம் காட்டப்படுகிறது. வீடுகளில் சாம்பிராணி புகை போடுவதன் மூலம் தேள், பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் வீட்டில் இருந்தாலும் அவை விலகிச்சென்றுவிடும். ஆகவேதான் சில வீடுகளில் மாலை நேரங்களில் சாம்பிராணி தூபம் போடுவார்கள். சுமங்கலிப்பெண்கள், மங்கல நாட்களான செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மாலை வேளையில் குளித்துவிட்டு தெய்வப்படங்களுக்கு விளக்கேற்றி வைத்து, சாம்பிராணி தூபமிட்டால் அந்த வீட்டில் இருக்கும் பீடைகள், தரித்திரம் விலகிச்செல்லும், லட்சுமி கடாட்சம் கிடைக்கும், செல்வம் பெருகும் என்பார்கள்.

மழைக்காலங்களில் அல்லது சளி, ஜலதோஷம் போன்றவற்றால் பாதிக்கப்படும்போது தலைக்கு குளித்ததும் சாம்பிராணி புகை காட்டுவதை இன்னமும் வழக்கமாக கொண்டுள்ளனர். ஈரத்தலையை உலர வைப்பதற்கு சாம்பிராணி தூபம் உதவிகரமாக இருக்கும். குழந்தைகளை குளிப்பாட்டி சாம்பிராணி புகை காட்டுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இப்படி சாம்பிராணி புகை காட்டும்போது மூக்கால் சுவாசிக்கக்கூடாது. அப்படி சுவாசித்தால் சுவாசக்கோளாறுகள் ஏற்பட்டு மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சகக்கோளாறுகளை ஏற்படுத்தும். ஆகவே மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

No comments:

Post a Comment