Monday, 15 August 2016

கோலம் எனும் யோகா !


தழைய தழைய தாவணி கட்டிக்கொண்டும், சரசரக்க சேலை கட்டிக்கொண்டும் நம் தமிழ் பெண்கள் கோலம் போடும் அழகை காண ஆயிரம் கண்கள் வேண்டும். அதிகாலையில் அழகு கொஞ்சும் கோலம் போட்டு அசத்துவதால், லட்சுமி விருந்தாளியாக வந்து நிரந்தரமாக தங்கி தாண்டவம் ஆடுவாள் என்பது பெரியவர்கள் நம்பிக்கை.

அழகுக்காகத்தான் கோலம் போடுகிறார்கள். இந்த காலத்தில் வாசலும் இல்லை, கோலம் போட நேரமும் இல்லை என்பது வேறு விஷயம். ஆனால் கோலம் போடுவதால் பல நன்மைகள் இருப்பதாக அறிவியல் ஆய்வுகள் சொல்கின்றன.

பசு சாணம் கரைத்து வாசலில் கோலம் போடுவது வழக்கம். பிரம்ம முகூர்த்தம் என சொல்லப்படுகிற அதிகாலை 4.30 - 6 மணிக்குள் கோலம் போட்டு முடிக்க வேண்டும் என்பார்கள் நம் பாட்டிகள். 'ஏன்... 8 மணிக்கு போட்டால் என்ன கோலம் கோவிச்சுக்குமா?' என எகத்தாளம் பேசும் இளசுகளுக்கு, பாட்டி சொல்லும் விஷயத்தின் விஞ்ஞானம் தெரிவதில்லை.

பிரம்ம முகூர்த்த நேரத்தில் காற்றில் ஓசோன் வாயு கலந்திருக்கும். சூரிய உதயம் ஆவதற்கு முன் சாணம் தெளிப்பதால் நிலத்திலிருக்கும் பிராண வாயு மேல் எழும்பி மூலாதாரங்கள் வழியாக பெண்களின் கர்ப்ப பை வரை பரவி, சுகப் பிரசவம் நிகழ உதவுகிறது என்ற உண்மையை பெரியவர்கள் கண்டுபிடித்து உணர்ந்திருக்கிறார்கள்.

இயல்பாகவே விரும்பி, அர்ப்பணித்து, ரசித்து மகிழ்ந்து, முறையாக கோலம் போடும் பெண்கள் ஆரோக்கியமாக மட்டுமல்ல, புத்துணர்வுடன் இருப்பதை நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? கோலத்தின் விஞ்ஞானத்தை அறிந்தவராக இருந்தால் மட்டுமே அதை நீங்கள் உணர்ந்திருக்க முடியும்.

குனிந்து பெருக்கி, வளைகரங்களில் மாவெடுத்து வளைந்து நெளிந்து கோலமிடுவது என வாசல் கோலத்துக்கும் பல வரைமுறைகளை வகுத்து வைத்திருக்கிறார்கள். இன்றைய ஃபேஷன் உலகத்தில் வியாபாரமாகிப் போன யோகா கலையை வாழ்வியலோடு அழகியலாக கலந்து வைத்து, நம்மை வழி நடத்த நம் பாட்டன்மார்கள் போட்டுத் தந்த பாதையிலிருந்து விலகி பயணிப்பதால்தான், ஊர்ப்பட்ட நோய்களை நாம் இன்று விருந்து வைத்து அழைத்து வந்திருக்கிறோம்.

கொஞ்சம் நம் பெண்களின் கோலக் கலையை மனசுக்குள் நிறுத்திப் பாருங்கள். நம் மாடர்ன் சாமியார்கள் கல்லா கட்டும் யோகா அதில் ஒளிந்திருப்பதை உணரலாம்.

பசு சாணம் ஒரு கிருமிநாசினி என்பதும் நாம் மறந்து போன விஷயம். அடுக்குமாடிகளில் முடங்கிவிட்ட நம் பெண்களுக்கு, கோலம் என்னும் இயற்கை யோகாவை சொல்லிக் கொடுப்போம். வாரம் ஒருமுறையாவது பிரம்ம முகூர்த்தத்தில் அந்த வாழ்வியல் யோகாவை பழக்கமாக்கிக் கொள்ள பயிற்சி தருவோம்.

No comments:

Post a Comment