Wednesday 17 August 2016

திருப்பம் தரும் திருப்பதி !





திருமலை திருப்பதி இந்த க்ஷேத்திரத்துக்கு இணையான வேறு க்ஷேத்திரம் இல்லை; திருமலை திருவேங்கடவனுக்கு இணையான வேறு தெய்வம் இல்லை.

உண்மைதான்! ஏழுமலையானைக் கண்கண்ட தெய்வமாக ஏற்றுக்கொண்ட அவன் அடியார்களுக்கு, அவனுடைய திருநாமமே உயிர் உந்தும் மந்திரம்; அவன் கோயில்கொண்டிருக்கும் திருமலையே உலகம். இன்றைக்கும்… வழக்கமான நாட்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் லட்சோபலட்சம் பக்தர்களும் திருமலையில் குவிகிறார்கள் என்றால், திருவேங்கடவனின் அருட்கருணையே அதற்குக் காரணம்!

வருடத்தின் 365 நாட்களில் 450 திருவிழாக்களும், உற்சவங்களும் இவருக்கன்றி வேறு எந்த தெய்வத்துக்கும் நடைபெறுவதில்லை. அதனால்தான் என்னவோ திருப்பதியை, ‘பூலோக வைகுண்டம்’ என்றே சிறப்பித்திருக்கிறார்கள்.



சீமாந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டத்தில், கிழக்குத்தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது திருப்பதி. இந்த நகரத்தை ஒட்டியுள்ள திருவேங்கட மலையின் மீதுதான் ஏழுமலையான் கோயில் கொண்டிருக்கிறான். சேஷாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, வ்ருஷபாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய ஏழுமலைகளுக்கும் அதிபதி என்பதால் பெருமாளுக்கு ‘ஏழுமலையான்’ என்றொரு திருநாமம். திருவேங்கடமும், பத்மாவதி தாயார் குடியிருக்கும் திருப்பதியும் இரு நகரங்களாக விளங்கினாலும், பொதுவில் திருப்பதி என்று ஒரே பெயரிலேயே அழைக்கப்படுகிறது. மலைக்கு மேலுள்ளதை மேல் திருப்பதி என்றும், மற்றதை கீழ் திருப்பதி என்றும் அழைக்கிறார்கள்.

தமிழ் இலக்கியங்களான சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இந்தத் தலத்தை திருவேங்கடம் என்றே குறிப்பிடுகின்றன. திருப்பதியை திரு பதி எனப் பிரித்தால், திருமகளின் நாயகன் என்றும் பொருள் வரும். ஆமாம்! திருமகள் பரிபூரணமாக வசிக்கும் திருத்தலம் அது. அதுமட்டுமா? வைணவ திவ்ய தேசங்களில் திருவரங்கத்துக்கு அடுத்ததான தலம் இது. ஆழ்வார்களில் பத்து பேரின் பாசுரங்களைப் பெற்ற க்ஷேத்திரம்!




திருப்பதியின் தல வரலாற்றுக் கதை, தேவ லோகத்தில் பிருகு முனிவரிடமிருந்து துவங்குகிறது.

ஒரு முறை, துயரங்கள் அநீதிகள் எல்லாம் அகன்று, உலகில் சகல நன்மைகளும் பெருகவேண்டும் என்பதற்காகப் பெரும் யாகம் நடத்தத் தீர்மானித் தார்கள் முனிவர்கள். யாகத்தின் பலனை மும்மூர்த்திகளில் ஒருவருக்கு அளிப்பது என்று முடிவானது. மூவரிலும் தகுதியானவர் யார் என்பதை அறியும் பொறுப்பு, பிருகு முனிவரிடம் விடப்பட்டது. பிருகு முனிவருக்குப் பாதத்தில் ஞானக் கண் உண்டு. எதிர்காலத்தை உணரும் சக்தியும் உண்டு. இதைப் பயன்படுத்தி மற்றவர்களை மட்டம் தட்டுவதில் அவருக்கு அலாதி இன்பம்! இதனால் உண்டான அவரது கர்வத்தை பங்கம் செய்ய பரம்பொருளும் தருணம் எதிர்பார்த்திருந்தது.



பிருகு முனிவர் முதலில் சத்தியலோகம் சென்றார். அங்கு சரஸ்வதியும் பிரம்மனும் தனித்திருந்தனர். பிருகு, அனுமதி பெறாமல் உள்ளே நுழைந்துவிட்டார். பிரம்மா இதைக் கண்டித்தார். இதனால் கோபம் கொண்ட பிருகு, ‘பக்தனை வரவேற்காத பிரம்மனுக்கு உலகில் பூஜையே நடக்காது’ எனச் சபித்துவிட்டு, திருக்கயிலாயத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.

அங்கே, சிவ பார்வதியர் தனித்திருந்தனர். அங்கும் தடைகளைப் பொருட்படுத்தாது உள்ளே நுழைந்தார். சிவனாரும் கோபத்துடன் அவரைக் கண்டித்தார். பக்தர்களை எதிர்கொள்ளும் பக்குவம் இல்லையே என்று கருதி, ஈசனுக்கும் சாபம் தந்தார் பிருகு. ‘பூலோகத்தில் உமக்கு இனி லிங்க ரூபமே கிடைக்கும். அதற்கே பூஜை நடக்கும்’ என்று சபித்தவர், அடுத்து வைகுண்டத்துக்கு சென்றார்.

அங்கே சயனத்தில் இருந்த திருமால், முனிவரின் வருகையை அறிந்தும் அறியாதவராக அரிதுயில் கொண்டிருந்தார். மிகுந்த கோபம் கொண்ட பிருகு, பகவானின் மார்பில் எட்டி உதைத்தார். ஆனால் எம்பெருமானோ கோபம் கொள்ளவில்லை. குழந்தை மார்பில் உதைத்தால், தந்தைக்கு சினம் எழுமா என்ன? அதேநேரம், குழந்தையின் துடுக்குத்தனத்தை களைய வேண்டாமா? பிருகுவின் பாதம் நோகுமே என்று பிருகுவின் பாதத்தைப் பிடித்துவிடுபவர்போல் அதிலிருந்த ஞானக் கண்ணையும் பிடுங்கி எறிந்து விட்டார் பகவான். பிருகு முனிவர் பகவானின் சாந்தத்தைக் கண்டு, அவரே யாக பலனை ஏற்கத் தகுதியான மூர்த்தி என்று முடிவு செய்தார். ஆனால், தான் வசிக்கும் எம்பெருமானின் திருமார்பை முனிவர் எட்டி உதைக்கிறார், அவரை தன் நாயகன் கண்டிக்கவில்லையே என்ற கோபம் திருமகளுக்கு. எனவே, பெருமாளைவிட்டுப் பிரிந்தாள். பூலோகத்தில் ஆகாசராஜனின் மகளாக அவதரித்தாள்.

மாலவனால் மலர்மகளைப் பிரிந்திருக்க முடியுமா? அவளைத் தேடி, அவர் பூலோகத்துக்கு இறங்கியதும், அவரை வகுளாதேவி மகனாக ஏற்றதும், பின்னர் அவர் வேடனாக வந்து பத்மாவதியை சந்தித்ததும், அவளை மணந்துகொள்ள ஆசைப்பட்டதும், வகுளாதேவியின் முயற்சியால் ஆகாசராஜனின் அனுமதி பெற்று பத்மாவதியை பெருமாள் மணம் புரிந்ததும், கல்யாணத் துக்காக குபேரனிடம் கடன்பட்டு, அந்தக் கடனை இன்றுவரையிலும் அவர் செலுத்திக்கொண்டிருக்கும் கதையும் எல்லோரும் அறிந்ததுதானே!




இனி திருப்பதி பெருமாளின் தரிசனம், தீர்த்தங்கள், பூஜை வழிபாட்டு நியதிகள், நம்மை சுவாரஸ்யப் படுத்தும் சில நிகழ்வுகளைப் பார்க்கலாம்.


ஏழுமலையானுக்கு இங்கு கோயில் எழுப்பியது ஆகாசராஜனின் தம்பியான தொண்டைமான் என்கிறது தல வரலாறு. ஸ்வாமியைத் தரிசிக்க முப்பத்துமுக்கோடி தேவர்களும் இங்கு கூடினர். பெருமாளுக்கு பெருவிழா நிகழ்த்த அனுமதி வேண்டினான் பிரம்மன். பரம்பொருளும் இசைந்தது. அதுமுதல் துவங்கியது திருமலையின் பிரம்மோற்ஸவம்.

திருப்பதி மலைமேல் உறையும் மூலவரை ஏழுமலையான், திருவேங்கடமுடையான், திருவேங்கடநாதன், வேங்கடேசன், வேங்கடேசுவரன், சீனிவாசன், பாலாஜி என்றெல்லாம் போற்றுவர். பண்டைய தமிழ் இலக்கியங்கள் இவருக்குச் சூட்டிய பெயர் என்ன தெரியுமா? வெறுங்கை வேடன்!

திருப்பதி திருமலையின் மூலஸ்தானம் ‘ஆனந்த நிலையம்’. பெயருக்கு ஏற்ப… வாழ்வில் ஒரே ஒருமுறையேனும் கண்டடைய மாட்டோமா என்று திருமால் அடியவர்கள் ஏங்கித் தவிப்பதும், அவர் களுக்கு சில விநாடிப் பொழுதுகளில் பலகோடி புண்ணியம் தரும் பேரானந்த தரிசனம் வாய்ப்பதும் இங்குதான். தங்கத் தகடுகளால் வேயப்பட்டு, காணக்கிடைக்காத பேரழகுடன் திகழ்கிறது, ஆனந்த நிலையம்.

தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும் இல்லையா? அந்த விக்கிரகத்தில் ஏதேனும் ஓரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும்.ஆனால், திருவேங்கடவனின் திருமேனியில் அப்படி எவ்விதமான அடையாளத்தையும் காணமுடியாது. அது மட்டுமா? சிலையில் வடிக்கப்பட்டுள்ள ஆபரணங்களும் பாலீஷ் போட்ட உண்மையான நகைபோன்று மின்னுவது அற்புதம்தான்!


கடல் மட்டத்திலிருந்து சுமார் 3000 அடி உயரத்தில் இருப்பதால், எப்போதும் குளிர் நிறைந்திருக்கும் திருப்பதியில், அதற்கு நேர்மாறாக கருவறையில் ஓர் இயற்கை அற்புதம் உண்டு. அதிகாலை குளிர்ந்த நீரால் அபிஷேகிக்கும்போதும் பெருமாளுக்கு வியர்க்குமாம். பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள். ஏழுமலையானின் திருமேனி எப்போதும் 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்துடன் இருக்கும் என்கிறார்கள். இது பேரதிசயம்தானே!

அதுபோன்று ஒவ்வொரு வியாழக்கிழமையும், ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்கு முன்னதாக நகைகளைக் களைவார்கள். அப்போது ஏழுமலையானின் ஆபரணங்கள் கதகதப்புடன் இருப்பதை உணரமுடியுமாம்!


ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண் சட்டியிலேயே பிரசாதம் படைப்பர். தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும், கர்ப்பக்கிரகத் துக்கு முன்னுள்ள குலசேகரப்படியைத் தாண்டுவது இல்லை. இந்த மண் சட்டியும், தயிர் சாதமும் பிரசாதமாகக் கிடைப்பதை வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாகக் கருதுகின்றனர் பக்தர்கள்.

திருப்பதி ஆலயத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் ‘சிலா தோரணம்’ என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இங்கு மட்டுமே காணப்படும் இந்தப் பாறைகளின் வயது 250 கோடி வருடம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஏழுமலையானின் திருமேனியும், இந்தப் பாறை களும் ஒரே விதமானவை.


ஏழுமலையானின் திருமேனிக்குப் பச்சைக் கற்பூரம் சாத்துகிறார்கள். பச்சைக் கற்பூரம் ஒரு வகை ரசாயனம் கலந்தது என்பதை அறிவோம். சாதாரண கற்களில் இதைத் தடவி வந்தால், காலப்போக்கில் அந்தக் கல்லில் வெடிப்பு விழும். ஆனால், ஏழுமலையானுக்கு வருடத்தில் 365 நாட்களும் பச்சைக் கற்பூரம் தடவுகிறார்கள்; எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லை!


ஸ்வாமியின் அபிஷேகத்துக்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்தில் இருந்து கஸ்தூரி, சீனாவில் இருந்து புனுகு, பாரிஸ் நகரில் இருந்து வாசனைத் திரவியங்கள் வரவழைக் கப்படுகின்றனவாம். தங்கத் தாம்பாளம் ஒன்றில் சந்தனத்தோடு வாசனைத் திரவியங்கள் சேர்த்துக் கரைத்து அபிஷேகத்தில் சேர்க்கப்படும். அத்துடன் 51 வட்டில் (சல்லடை போன்ற அபிஷேகத் தட்டு) பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும். காலை 4:30 மணி முதல் 5:30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்துக்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் வரை செலவு ஆகும். அபிஷேகத் தின்போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணைத் திறப்பதாக ஐதீகம்!

பெருமாளுக்காக ஆம்ஸடர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள், பக்தர் களால் திருப்பதிக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலை சுமார் 80 ரூபாய்! அதேபோன்று, சீனாவிலிருந்து சீனச் சூடம், அகில், சந்தனம், அம்பர், லவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்களும் ஏழுமலையான் திருக் கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.

என்ன மலைப்பாக இருக்கிறதா? மலையப்ப சாமிக்கு இதெல்லாம் சம பாவம்தான். அவருக்கு பக்தியே பிரதானம். தூய அன்புடன் ஒரு துளசி இலையைச் சமர்ப்பித்தாலும் ஏற்றுக்கொள்வார். ஆனால் அவன் குழந்தைகளாகிய நாம்தான், நம் தந்தைக்கு செய்வது போன்று ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்கிறோம். இருப்பதில் உயர்ந்தது எதுவோ அதைச் சமர்ப்பித்து, நாம் சந்தோஷப்படுகிறோம் !




ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு சுமார் ரூ.1000 கோடி. இவருடைய நகைகளை வைத்துக் கொள்ள இடமும் இல்லை; சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டுக்கு ஒரு முறை உபரியான நகைகளை செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள். ஏழுமலையானின் சாளக் கிராம தங்கமாலை சுமார் 12 கிலோ எடை கொண்டது. இதைச் சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை; பாத கவசம் 375 கிலோ; கோயிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம், உலகில் வேறெங்கும், எவரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100 கோடி.


மூலவர் ஏழுமலையானைப் போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் (கி.பி.966 ஜூன் 8ம் தேதி) வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்கிரகத்துக்குப் பல்லவ குறுநில மன்னன் சக்திவிடங்கனின் பட்டத்தரசி காடவன் பெருந்தேவி நகைகளைத் தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் செய்து வைத்ததாகத் தகவல் உண்டு. முதலாம் குலோத்துங்க சோழன் திருமலைக்கு வந்து காணிக்கை செலுத்தியுள்ளார்.

பெருமாளுக்கு உகந்தது துளசி அல்லவா? ஆனால், இந்தப் பெருமாளுக்கு வில்வத்தாலும் அர்ச்சனை உண்டு. வெள்ளிக் கிழமைகளிலும், மார்கழி மாதத்திலும் வில்வார்ச்சனை செய்யப் படுகிறது. சிவராத்திரி அன்று திருப்பதியில் ‘க்ஷேத்ர பாலிகா’ என்ற உற்ஸவம் நடைபெறுகிறது. அன்று உற்ஸவப் பெருமாளுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்பட்டை சாத்தப்பட்டு, திருவீதி உலா நடைபெறும்.

திருப்பதி அலர்மேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில், பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்து தருகிறார்கள்.



ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயிலில் இருந்து ஸ்ரீஆண்டாள் அணிந்த மாலைகள் திருப்பதிக்கு கொண்டு வரப்பட்டு ஏழுமலையானுக்கு சாத்தப்படுகிறது.

விழாக்களுக்கு இங்கு குறைவில்லை. வைகுண்ட ஏகாதசி, ராம நவமி, ஜென்மாஷ்டமி போன்ற வைணவப் பண்டிகைகள் அனைத்தும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதம் ரதசப்தமி (மகா சுத்த சப்தமி) என்ற திருவிழா மிகவும் விசேஷமானது! வெங்கடேஸ்வரர் சர்வ அலங்கார பூஷிதராக நான்மாடவீதிகளில் தேர் பவனி வருகிறார்.


இவை அனைத்துக்கும் மகுடம் சூட்டும் விதமாக, செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள புரட்டாசி பிரம்மோற்ஸவம் மிகவும் முக்கியமான விழாவாகக் கருதப்படுகின்றது. பிரம்மனே இங்கு வந்து முன்னின்று இந்த உற்சவத்தை நடத்துவதாக ஐதீகம்! இந்த நேரத்தில் ஒரு வாரத்துக்குள் 10 முதல் 15 லட்சம் பக்தர்கள் திருமலையில் வந்து குவிகின்றனர்.

தீர்த்த க்ஷேத்திரம்!

திருமலை ஒரு பக்தி க்ஷேத்திரம் மட்டுமல்ல; ஒரு முக்தி க்ஷேத்திரம், இதையெல்லாம்விட இது ஒரு மிகப்பெரிய தீர்த்த க்ஷேத்திரம். இங்கு 108 தீர்த்தங்கள் உண்டு என புராண நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளன. அரூபமாக – பிரத்யட்சமாகாமல் இருக்கக் கூடிய தீர்த்தங்களும் ஆண்டுக்கு ஒருமுறை இங்கு வந்து கூடுகின்றன என்கின்றன ஞானநூல்கள்.


திருப்பதியில் திகழும் முக்கிய தீர்த்தங்கள்: குமார தீர்த்தம், தும்புரு தீர்த்தம், ராமகிருஷ்ண தீர்த்தம், ஆகாச கங்கை, பாண்டு தீர்த்தம், பாபவிநாச தீர்த்தம், ஸ்வாமி புஷ்கரணி.

திருமலைக்கு நடந்து செல்லும் பாதைகள்…

திருமலைக்கு, திருப்பதி மலை அடிவாரத்தில் இருந்து நடந்து செல்ல இரண்டு விதமான பாதைகள் உள்ளன. அலிபிரி- அதாவது கீழ்த் திருப்பதிக்கு அருகில் உள்ள இந்த பாதையே நீண்ட நெடுநாட்களாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. அகோபில மடத்தின் முதலாவது ஜீயர் சுவாமிகளான ஸ்ரீஆதிவண் சடகோப யதீந்த்ர மகா தேசிகன் என்னும் ஜீயர் ஸ்வாமிகளே திருமலைக்கு படிக்கட்டுகளை முதன் முதலில் அமைத்தவர்.

ஸ்ரீவாரிமெட்டு வழி: திருப்பதிக்கு 20 கி.மீ தொலைவில் ஸ்ரீநிவாசமங்காபுரத்துக்கு அருகில் உள்ளது. பழங்காலத்தில் பெருமளவில் பயன்பாட்டில் இருந்து, சமீப வருடங்களில் திருப்பதி தேவஸ்தானத்தால் சீரமைக்கப்பட்டது. இந்த வழியை ஆந்திராவைச் சேர்ந்தவர்கள், கீழ் திருப்பதிக்கு அருகில் உள்ள ஊர்களில் உள்ளவர்கள்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

பார்த்து ரசிக்க வேண்டிய இடங்கள்…

பிரதான கோயிலான திருப்பதி மலைக்கோயில் மட்டுமல்லாமல் இங்கு ஸ்ரீவராக ஸ்வாமி கோயில், ஸ்ரீவேங்கடேஸ்வர ஸ்வாமி கோயில், ஸ்ரீபத்மாவதி கோயில், ஸ்ரீகோவிந்தராஜா கோயில், சீனிவாசமங்காபுரம் ஆகிய ஆலயங்களும் இந்நகரில் அமைந்துள்ளன.

மலைக்கு மேல் ஸ்ரீஆதிவராக மூர்த்தியைத் தரிசித்துவிட்டே ஏழுமலையானையும் மற்ற சந்நிதிகளையும் தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். ஆகாச கங்கை, பாபவிநாச நீர்வீழ்ச்சி ஆகிய தீர்த்த தலங்களையும் பக்தர்கள் தரிசித்து வர வேண்டும்.

ஆன்மிக அம்சங்களைத் தரிசித்தபின் பயணிகள் இங்குள்ள ஸ்ரீவேங்கடேஸ்வரா விலங்கியல் பூங்காவுக்கும் விஜயம் செய்யலாம். இங்கு பலவகை விலங்குகள் மற்றும் பறவைகள் பாதுகாத்து வளர்க்கப்படுகின்றன. சிலாத்தோரணம் என்றழைக்கப்படும் பாறைத்தோட்டமும் அவசியம் பார்க்க வேண்டிய அம்சமாகும்.




திருப்பதி ஏழுமலையான் தரிசனம்..!


நேரடியாக திருமலையேறி திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கக் கூடாதாம்.

ஒரு தனி மரபே இருக்கிறது.


முதலில் கீழே, திருப்பதியில் கோவிந்தராஜப் பெருமாளை சேவிக்க வேண்டும்,

பிறகு அலர்மேல்மங்காபுரம் சென்று பத்மாவதி தாயாரை தரிசித்து உளமாற வணங்க வேண்டும்,


அதற்குப் பிறகு திருமலையேறி, வராக தீர்த்தக் கரையில் கோயில் கொண்டிருக்கும் வராகரை தரிசிக்க வேண்டும்,


அதற்குப் பிறகுதான் மலையப்பன் என்று சொல்லப்படும், ஏழுமலையானை, கோவிந்தனை, வேங்கடவனை சேவிக்க வேண்டும்!


ராமானுஜர் காலத்திலிருந்து அவர் தொடங்கி, பின்னால் வந்த அனைத்து ஆசார்யார்களும் கடைபிடித்து வந்த சம்பிரதாயம்.


கோவிந்தராஜப் பெருமாள் வேங்கடவனின் அண்ணன் என்று போற்றப்படுகிறார்.


சிதம்பரத்தில் கோயில் கொண்டிருக்கும் தில்லை திருச்சித்திரகூடத்தானான கோவிந்தராஜனே இவர் என்று புராணம் சொல்கிறது.


தில்லை கோவிந்தராஜன் இந்தப் பகுதிக்கு வந்திருந்தபோது, இந்த இடத்தின் எழிலில் மனதைப் பறிகொடுத்து இங்கேயே தங்கிவிட்டதாகவும் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அவருக்காக ஒரு கோயில் எழுப்பப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.


அதே சயன கோலத்தில் திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளும். அற்புதமாக தரிசனம் தருகிறார்,


இவருடைய கோயில் மிகப் பெரியதாக விளங்குகிறது.


பளபளக்கும் கலசங்களுடன் மின்னும் ராஜகோபுரத்தினுள் சென்றால் வலது பக்கத்தில் நரசிம்மர் நமக்கு ஆசியளிக்கிறார்.


அடுத்து இரு புறங்களிலும் மணவாள மாமுனிகள், ரங்கநாத சுவாமி, சக்கரத்தாழ்வார், கோதண்டராமர் ஆகியோர் சந்நதிகள் நம்மை வாழ்த்தி மூலவர் அருளாசி பெற அன்புடன் உள்ளே அனுப்பி வைக்கின்றன.


கோதண்டராமர் வித்தியாசமான கோலத்தில் அருள்கிறார். கண்கள் இரண்டும் ஜொலிக்கின்றன. வட இந்தியப் பாணியில் காட்சிதரும் இவரை அயோத்தியின் சக்கரவர்த்தி என்று விவரிக்கிறார்கள்.


காசியைச் சேர்ந்த பைராகி மடம் எனப்படும் பூகா மடத்தின் ஆதரவில் இந்த ராமர் கோயில் துலங்குகிறது. இவருக்கு எதிரே ராமர் அபிஷேகத்துக்கு நீரெடுத்துச் செல்லும். பூகா தீர்த்தம் அமைந்துள்ளது.


புண்டரீகவல்லித் தாயார் அருள் பொழிகிறாள். தாயாரின் உற்சவ விக்ரகம் மஹாலக்ஷ்மியாக வணங்கப்படுகிறது. தாயாரின் கருணை ததும்பும் விழிகள் பரிவுடன் நோக்குவதிலேயே வேங்கடவனின் தரிசனம் இனிதே நிறைவேறும் என்ற நம்பிக்கை வலுப்பெறுகிறது.


அனந்தாழ்வார், மதுரகவி ஆழ்வார், கூரத்தாழ்வார், ராமானுஜர், கல்யாண வெங்கடேஸ்வரர் ஆகியோர் அடுத்தடுத்து கொலுவிருந்து தாயாரின் அருளை மேலும் உறுதிப்படுத்துகிறார்கள். பின்னால் யாகசாலை.


கருவறையை வலம் வந்தால் சிறிய திருவடியான ஆஞ்சநேயரும் கருடாழ்வாரும் பலம் தருகிறார்கள்..


கருவறையில் கோவிந்தராஜப் பெருமாள் சயனத் திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார்.


தில்லை கோவிந்தராஜனை தரிசித்தவர்கள், இந்தத் திருவுருவைக் காணும்போது, சிதம்பரத்தில்தான் இருக்கிறோமோ என்று வியக்கும் வகையில் அதே தத்ரூப அமைப்பு.


இவர் காலடியில் மது, கைடபர் என்ற இரு அரக்கர்கள் தம் அகங்காரத்தை சமர்ப்பித்து சரணடைந்திருக்கிறார்கள். திருப்பாற்கடல் காட்சியாக, ஆதிசேஷன் மீது, நான்கு திருக்கரங்களுடன் சயனித்திருக்கிறார் பெருமாள்.


திருமலையில் வேங்கடவன் கோயில் கொள்வதற்கு முன்னாலேயே இவர் இங்கே, திருப்பதியில் ஸ்தாபிக்கப்பட்டதால் இவரை ஏழுமலையானுக்கு அண்ணன் என்று சொல்கிறார்கள்.


மலைமீது தம்பிக்கு வசூலாகும் காணிக்கைகளை தினமும் பல்லக்கு மூலமாக சுமந்து வந்து இந்த அண்ணனிடம் சமர்ப்பிப்பது வழக்கமாக இருந்திருக்கிறது.


தம்பியின் வருமானத்தை முறைப்படுத்திப் பாதுகாக்கும் ஆடிட்டர், இந்த அண்ணன்! மொத்தப் பணம், நகைகள், பிற காணிக்கைகளைக் கொண்டுவரும் அந்த சம்பிரதாயம் இப்போது மாறி, கணக்கு மட்டும் சமர்ப்பிக்கப்படுவதாகச் சொல்கிறார்கள்.


இதனாலேயே முதலில் இவரை தரிசித்து வேங்கடவரை தரிசிக்க அனுமதி பெற வேண்டும் என்பது சம்பிரதாயமாம்.


இந்த கோவிந்தராஜர் 1500 ஆண்டுகளுக்கு முந்தி இங்கு கோயில் கொண்டவர் என்கிறார்கள்.


கோயிலில் ருக்மிணி, சத்யபாமா சமேதராக பார்த்தசாரதிப் பெருமாளை அமர்ந்த கோலத்தில் தரிசிக்கலாம்.


கையில் செங்கழுநீர் புஷ்பத்துடன் ஆண்டாள், வித்தியாசமாக கோவிந்தராஜருக்கு வலது பக்கத்தில் சந்நதி கொண்டிருப்பதும் தனி விசேஷம்


கோவிந்தராஜரை தரிசனம் பண்ணிவிட்டு, அடுத்ததாக திருச்சானூரில் கோலோச்சும் அலர்மேல்மங்கைத் தாயாரை சேவிக்கலாம்.


தனித்திருந்து, திருமாலின் பெருமைகளை விளங்க வைத்துக் கொண்டிருக்கிறார், அலர்மேல்மங்கை என்னும் பத்மாவதி தாயார்


பத்மஸரோவரம் என்ற பத்மாவதி தீர்த்தத்திலிருந்து புறப்பட்டு வந்து, குளிர்விக்கும் தென்றல் இனிமையானது..


சற்றுத் தொலைவிலுள்ள ஸ்வர்ணமுகி ஆற்றிலிருந்து இந்த தீர்த்தத்துக்கு நீர் வருவதாகச் சொல்கிறார்கள்.


கார்த்திகை மாதம் சுக்ல பட்ச பஞ்சமி நாளன்று தாயார் பிரம்மோத்ஸவ
கொண்டாட்டத்தின் போது இங்கே தீர்த்தவாரி நடக்கிறது.

அத்தாணி மண்டபம். உள்ளே தாயார் திவ்ய தரிசனம் தருகிறார்.

உற்சவரின் சிரசின் மீது தங்கத் தாமரை கவிழ்த்து வைத்து அலங்காரம் செய்திருக்கிறார்கள்.


வெண் பட்டாடை அணிவித்து வைரப் பதக்கமும் மங்கலத் தாலியும் நகைகளும் பூட்டி பேரழகு செய்திருக்கிறார்கள்.


இந்த அன்னை மேளதாளங்கள் முழங்க, தீவட்டி ஒளி வழிகாட்ட, பிராகார வலம் வருகிறாள்.

தாயாருக்கு வெள்ளிக்கிழமைகள் விசேஷம்.

தை வெள்ளிக்கிழமைகள் அதி விசேஷம்.

திருமணம், பிள்ளைப்பேறு வேண்டும் பெண்கள் மஞ்சள் கயிற்றை தாயாருக்கு சமர்ப்பிக்கிறார்கள்.


இப்படி ஆயிரக்கணக்கில் சேரும் சரடுகளை தாயாரைச் சுற்றி வைத்து, வேறு அலங்காரங்களும் செய்து அர்ச்சனை, தீபாராதனை செய்கிறார்கள். இவ்வாறு சரடு சமர்ப்பிக்கும் பெண்களுக்கு அவர்களுடைய கோரிக்கைகள் உடனடியாக நிறைவேறுகின்றன.

இந்த தலம் கிருஷ்ணர், தாயார் கோயிலுக்காகத் தந்த இடம் என்கிறார்கள். இதற்கு சாட்சியாக கோபுரத்துக்கு நேராக கிருஷ்ணர் விக்ரகம் ஆசியளிக்கக் காணலாம்.


அண்ணன் பலராமருக்கு, ‘தவம் செய்ய சிறந்த தலம் இது’ என்று பூமியைச் சுட்டிக் காட்டியபடி கிருஷ்ணர் யோசனை சொல்ல, அதன்படி பலராமர் தவம் மேற்கொண்ட தலம். அதே கோலத்தில் கிருஷ்ணரை இங்கே தரிசிக்கலாம். பலராமர் பாதரட்சையுடன் காணப்படுகிறார். அதாவது யாத்திரைக்குக் கிளம்பி வரும் கோலம்.


ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக சௌந்திரராஜப் பெருமாளையும் தரிசிக்கலாம். தாயாரின் சந்நதியில் நித்ய கல்யாணப் பெருமாளாக ஸ்ரீநிவாசன் சேவை சாதிக்கிறார்.



பத்மாவதி தாயாரை சுயம்பு வடிவம் . தலம் ஸ்ரீபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.


தாயாரை உளமாற சேவித்து திருமலையேற அனுமதியும் பெற்றுக் கொள்வோம்.

No comments:

Post a Comment