Thursday 18 August 2016

விநாயகருக்கு முதல் மரியாதை ஏன் ?



இந்து சமய பூசைகளின் போது முதலில் விநாயகருக்கான விக்னேசுவர பூசையத்தான் செய்கிறோம். விநாயகரின் உருவச்சிலை இல்லாவிட்டால், மஞ்சள்தூளில் பிள்ளையார் பிடித்து வைத்துப் பூசை செய்த பிறகுதான் மற்ற பூசைகளைச் செய்கிறோம். விநாயகருக்கு ஏன் இந்த முதல் மரியாதை?

விநாயகரை மங்களநாதா என்றும், சித்திதாதா என்றும் கூறுகிறோம். அவர் அனைத்து நன்மைகளையும் நமக்கு அருள்பவர். நாம் மேற்கொள்ளும் செயல்கள் விக்கினம் (இடையூறு) இல்லாமல் நடைபெற அவர் அருள் புரிபவர்.அதனால் அனைத்து நல்ல செயல்களுக்கும் முதலில் விக்கினேசுவர பூசை செய்ய வேண்டும்.

கணபதி ஞானத்தின் உருவம். அதனால், அவர் நம்மை நமது முயற்சிகளில் எப்போதும் நல்ல வழியில் நடத்துவார். தவறுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வார். ஆகையால், நாம் நல்ல வழியில் காரியசித்தி (செயல் வெற்றி) ஏற்பட முதலில் அவருடைய அருளை நாடுகிறோம்.

யோக அடிப்படையிலும், வேதாந்தப்பூர்வமாகவும் பார்த்தால், அவர் மூலாதாரர். ஆகையினால், எந்த நற்செயலுக்கும், மூலமாகவும், ஆதாரமாகவும் அவரைக் கருதி வழிபடுகிறோம்.

பஞ்சபூதங்களில் அவர் தண்ணீர் உருவமானவர். அகச்சுத்தி மட்டுமின்றி, புறத்தூய்மைக்கும் நாம் தண்ணீரை நாடுகிறோம். அதனால் எந்தப் பூசையையும் செய்யத் தொடங்கும் முன்பு கணேச பூசையைச் செய்கிறோம்.

கணேசர் வரம் வழங்குபவர் என்று சொல்வதுண்டு. எந்த ஒரு செயலிலும் வெற்றியை ஒரு வரமாக நாடுவது நமது இயல்பு. எனவே, வெற்றி எனும் வரத்தைப் பிரசாதமாக அருளுவதற்கும், நாம் முதற் கடவுளாகக் கணபதியை நாடுகிறோம்.

புராணங்களில், நாம் எந்த இந்து சமயச் சடங்கையும் விக்கினேசுவர பூசையுடன்தான் தொடங்க வேண்டுமென்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ரிக்வேதம் கணேசரை ஜேஷ்டராஜர் எனக் கூறுகிறது. ஓம் என்ற பிரணவத்துக்கு உருவமாக அமைந்த மூர்த்தி அவர்.

எனவே, எந்தப் பூசையிலும், எந்த நல்ல செயலுக்கான தொடக்கத்திலும் விக்கினேசுவரரைப் பூஜிப்பது பொருத்தமானது.

No comments:

Post a Comment