"தூக்கமே வரலை... அந்த புத்தகத்தை படிக்க எடுத்தேன். மூணாவது பாராவுலேயே தூங்கிட்டேன்" என்று கிண்டலாகச் சொல்வார்கள் சிலர். ஆனால், உண்மையில் நல்ல புத்தகங்கள் நம்மை தூங்கவிடாது என்பதே எதார்த்தம்.
பொதுவாக நல்ல புத்தகங்களின் முதல் வரியை படிக்க தொடங்கியதுமே, இரவு முழுதும் விழித்துக்கிடந்து முற்றும் வரை படித்துவிட்டுத்தான் வைக்க முடியும். அந்த அளவுக்கு மனம் அதில் லயித்து ஒரு தவம் போல மாறிவிடும்.
மகாத்மா காந்தி, 'ஜான் ரஸ்கின்' எழுதிய 'அன்ட்டூ திஸ் லாஸ்ட்' என்ற புத்தகமே தனது வாழ்க்கையையே திருப்பிப்போட்டது என குறிப்பிட்டுள்ளார். ''அந்தப் புத்தகத்தை ஒரு பயணத்தின்போது வாசித்த நான், அதன் தாக்கத்தால் அன்று இரவு முழுவதும் தூங்கவில்லை. கடைசி மனிதனும் சிறந்த வாய்ப்புக்களைப் பெற வேண்டும் என்ற உயர்ந்த கோட்பாட்டுக்கு ஏற்ப எனது வாழ்க்கையை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும் என்று அப்போதே நான் உறுதிசெய்துவிட்டேன்" என்று அந்த நூல் தனக்குள் ஏற்படுத்திய பாதிப்பு குறித்து விளக்கியுள்ளார் காந்தியடிகள்.
காந்தியின் வாழ்க்கையைத் திருப்பிப் போட்டதைப் போலவே, நம் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு புத்தகத்தின் சில வரிகள் நம்மை செம்மைப்படுத்தி நம் மனதை பாசிட்டிவ் பாதையில் திருப்பிவிட்டிருக்கும். எப்போதுமே விடைதெரியாத பல வாழ்க்கைக் குழப்பங்களுக்கு, ஏதாவது ஒரு புத்தகத்தில்தான் நாம் பதில் தேடிக் கண்டுபிடித்திருப்போம். நல்ல நண்பர்களைப் போலவே, துன்பம் மிகுந்த பொழுதுகளில் நமக்கு துணை நிற்பவை நல்ல புத்தகங்களே.
சமூக மாற்றங்களுக்கும், எழுச்சிகளுக்கும் புத்தகங்கள் கூர்மையான ஆயுதமாக பயன்பட்ட வரலாறுகள் இருக்கின்றன. சீனாவில் அறிவுப்புரட்சிக்கு விதைபோட்ட பல விஷயங்களில், 2000 ஆண்டுகளுக்கு முன் கன்ஃபியூசியஸ் எழுதிய புத்தகங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. இந்திய விடுதலை போராட்டத்திலும்கூட ஏராளமான ஏடுகளின் வீச்சு இருந்ததை அறியலாம். சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற கிரேக்க அறிஞர்களின் நூல்கள் ஒட்டுமொத்த உலகையும் புதிய பாதைக்கு திருப்பிவிட்டிருக்கின்றன.
13-ம் நூற்றாண்டில் மார்க்கோ போலோவால் எழுதப்பட்ட 'பயணங்கள்' என்ற புத்தகத்தால் ஈர்க்கப்பட்டு, இந்தியாவைத் தேடிப் புறப்பட்ட கிறிஸ்டோபர் கொலம்பஸ், அமெரிக்காவை கண்டுபிடித்தார். கொலம்பஸ் கண்டுபிடித்த அமெரிக்காதான் இன்று உலக நாட்டாமையாக ஜொலிக்கிறது என்றால், புத்தகத்தின் வலிமையை என்னவென்று சொல்வது?
இந்த உலகில் பல்வேறு வெற்றியாளர்கள் மற்றும் சாதனையாளர்கள் தங்களுடைய வாழ்க்கையைப் பற்றி சொல்லும்போது 'ஒவ்வொரு நாளும் இரவு படுக்கப்போவதற்கு முன்பு ஏதேனும் ஒரு நல்ல நூலின் ஒரு பகுதியை படித்துவிட்டுத்தான் படுக்கச் செல்கிறேன்' என்று கூறியுள்ளனர். 'பாசிட்டிவ் எனர்ஜி புத்தகங்களை வாசிக்கும் போது மூளை புத்துணர்வு பெறுகிறது; மன அழுத்தம் குறைகிறது; மனம் ஒரு நிலைப்படுகிறது; தன்னம்பிக்கை வளர்கிறது; கற்பனைத் திறனை உருவாக்குகிறது; நல்ல குணங்களை வளர்க்கிறது' என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.
No comments:
Post a Comment