சித்தர்கள் ஆழ்ந்த ஞானம்கொண்டவர்கள். அவர்கள் நடக்கப்போகும் நிகழ்ச்சிகளைக் கண்டறிந்தவர்கள். மக்களுக்கு வரக்கூடிய வியாதிகளை அனுபவபூர்வமாகத் தெரிந்துகொண்டவர்கள். ஆகையால், அவர்களுடைய மருந்து முறை, நமது நாட்டு வானிலைக்கும் மக்கள் பண்புக்கும் ஏற்ற முறையில் அமைந்திருந்தது. தவிர மற்ற முறைகளில் இல்லாத சில தனிச் சிறப்புகளும், சித்தர்கள் கண்ட அனுபவ மருத்துவ முறைகளில் காணப்பட்டன.
இயற்கையில் நாம் காணும் நிலைகளை அவர்கள் நமது உடலிலும் உணர்ந்தார்கள். "வெளியே உலாவும் காற்று நமது உடலிலும் உலாவுகிறது. வெளியே காணும் வெப்பம் நமது உடலையும் பாதிக்கக் கூடியது. வெளியே உணரும் குளிர்ச்சி, நமது உடலிலும் கபமாகத் தோன்றக் கூடியது" என்று தத்துவங்களை எழுதி வைத்திருக்கிறார்கள்.
அவர்களுடைய முறைப்படி மனித உடல் 96 தத்துவங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அதில், ஆன்மாவின் ஆட்சியில் 24 சக்திகள் இருந்ததையும் அவர்கள் உணர்ந்திருந்தார்கள். நமது உடலை 72,000 ரத்தக் குழாய்களும், 13,000 நரம்புகளும், 10 முக்கிய தமனிகளும், 10 வாயு அமைப்புகளும் கொண்டதாக அவர்கள் சொன்னார்கள். இந்த அடிப்படையில் 96 வகைத் துடிப்புகளை உணர்ந்து, நாடி மூலம் வைத்தியம் செய்யும் வகையையும் குறிப்பிட்டிருந்தார்கள்.
சமயத்துக்கு மிகச் சிறந்த தொண்டு செய்த ஞானிகளாகிய சித்தர்கள், மனித உடலின் நலனுக்காக மிக உன்னதமான மருத்துவ முறையையும் எழுதிவைத்தார்கள். அகத்தியர், திருமூலர், சட்டநாதர், இடைக்காடர், மச்சமுனி, புலிப்பாணி, கொங்கணர் போன்ற சித்தர்கள் இவ்வாறு வகுத்துக் கொடுத்துள்ள மருத்துவ சாத்திரம் மிக அருமையானது. இன்று நாம் உபயோகிக்கும் பல்வேறு இயந்திரங்கள், கருவிகள் ஆகியவற்றின் துணை ஏதுமின்றி, அவர்கள் கண்ட மருத்துவ அடையாளங்களும், வியாதிக்கான நிவர்த்திகளும் ஆச்சர்யமானவை. தேகத்தின் சூடு, உடலின் நிறம், நாக்கின் நிறம், குரல், கண்களின் பார்வை, மலஜலம் ஆகியவற்றின் தன்மை இவற்றை நாடித் துடிப்புடன் ஒப்பிட்டு, உன்னதமான சிகிச்சை முறைகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
நாடியை உணரும் முறை
சித்த மருத்துவத்தில் ஜோதிடத்தின் பங்கு
வேத நூல்களின் முக்கியமான அங்கமாகிய ஜோதிடக் கலை, மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்பட்டது. வெவ்வேறு கிரக நிலைகளில், வெவ்வேறு லக்கினங்களுக்கு உரியவர்களுக்கு, உடம்பின் இன்னென்ன பகுதிகள் பாதிக்கப்படும் என்ற தத்துவத்தை அவர்கள் கணக்கிட்டு, அந்த அடிப்படையில் வைத்தியம் செய்ய உலோகங்களையும், ரத்தினக்கற்களையும் பக்குவம் செய்து உபயோகித்தார்கள். ஒரு மனிதனின் ஆயுட்காலத்தை 100 ஆண்டுகள் என்றும், அவற்றில் 30 ஆண்டுகள் வாயு, 33 ஆண்டுகள் பித்தம், 37 ஆண்டுகள் கபம் என்று பிரிக்கப்பட வேண்டியவை என்றும் அவர்கள் கணக்கிட்டார்கள். இதேபோல, ஒரு நாளின் பகுதிகளும் மூன்றாகப் பிரிக்கப்பட்டன. இப்படி அவர்களுடைய வைத்திய முறை இயற்கையின் சக்திகளை ஒட்டியதாகவே அமைந்திருந்தது.
மனித உடலில் 4448 வியாதிகள் வரக்கூடும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள். நுட்பமான எல்லா வியாதிகளுமே இந்தக் கணக்கில் வந்துவிடுகின்றன. வெவ்வேறு விதமான 32 களிம்புகளைத் தடவுவதன் மூலமும், 26 உள்ளுக்குச் சாப்பிடக் கூடிய மருந்து வகைகளின் மூலமாகவும் அவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது. மிக அபூர்வமாகவே அறுவை சிகிச்சை முறை கையாளப்பட்டது. சித்தர்களின் வைத்திய முறையில் மூன்று அங்கங்கள் உண்டு. முனிவர்கள் உணர்ந்து அளித்த யோகம், பிராணாயாமம் போன்றவற்றின் மூலம் மூலிகைகளைப் பயன்படுத்திக் கட்டுப்பாடாக வாழ்வது, ஆரம்ப நிலையிலேயே உடற்குறைகளைக் கண்டறிந்து அவற்றை அறவே நீக்கும் முறைகளைப் பின்பற்றுவது, கொடிய வியாதிகளின் கடுமையை இயன்றவரையில் குறைப்பது ஆகிய மூன்றுமே அந்த முக்கியமான அம்சங்களாகும்.
சித்த மருத்துவ முறையைக் கற்றுணர்பவர்களுக்கு ரசவாதம், பௌதிகஞானம், வான்கணிதம் ஆகியவைகளும் தெரிந்திருக்க வேண்டும். இந்த முறையை பயிலுபவர்களுக்கு மனப்பக்குவமும், தொண்டு செய்யும் மனப்பாங்கும் இருக்க வேண்டும். அவர்கள் தயாரிக்கும் மருந்துகளில் மூன்றில் ஒரு பங்கு உறவினர் - நண்பர்களுக்காகவும், இரண்டாவது பங்கு ஏழை எளியவர்களுக்கு தர்ம வைத்தியம் செய்வதற்காகவும், மூன்றாவது பங்கு வியாபார முறையிலும் பயன்படுத்த வேண்டும். டானிக்குகளை உபயோகிக்குமுன் வைத்தியன், தானே அதைச் சாப்பிட்டு உணர்ந்து, பிறகு நோயாளிகளுக்குக் கொடுக்க வேண்டும். எந்த வியாதியையும் மூன்றே நாட்களில் குணப்படுத்திவிட வேண்டும்.
சித்த வைத்திய முறைகள் இயற்கையை ஒட்டியவை. உடலின் 4448 வியாதிகளுக்கு அவர்கள் 4448 வித மூலிகைகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். மூலிகைச் சத்து, உலோகங்களிலிருந்து ஸ்புடம் போட்டுத் தயார் செய்த பஸ்மங்கள், செந்தூரங்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. மருந்துகளை உபயோகிக்கும்போதே, அவை உடலைப் பாதுகாத்து வளப்படுத்தும் டானிக்குகளாகவும் பயன்பட்டன. இன்று குணப்படுத்த முடியாத புற்றுநோய் போன்ற நோய்களுக்கும் சித்த வைத்திய முறையில் சிகிச்சை செய்யலாம் என்றூ சித்தர்கள் கண்டறிந்தார்கள். தேனை மட்டும் கொம்புத்தேன், புற்றுத்தேன், மாப்பொந்துத்தேன், வீட்டுத்தேன், பழையதேன், புதியதேன் என்று 60 வகைகளாக அவர்கள் பிரித்து உபயோகப்படுத்தினார்கள். மருந்துகளுடன் பழைய தேனை உபயோகிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடும் இருந்தது. பூஜைக்கு உரிய வில்வம், துளசி போன்றவைகளும் சித்தர்களின் மருத்துவ முறையில் பயன்படுத்தப்பட்டன. அதற்கென்றும் சில விதிமுறைகளை அவர்கள் வகுத்திருந்தனர்.
சித்த மருத்துவத்தில் மூலிகைகளின் பங்கு
பூஜைக்குப் பயன்படும் மகாவில்வ தளம், துளசிதளம் போன்றவை சிகிச்சைக்கும் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டன. மூலிகைகள் வளரும் மண், அவை பறிக்கப்படும் நேரம், பறிக்கும் முறை எல்லாவற்றுக்குமே விதிகள் இருந்தன. காற்றில் ஏற்படும் அசுத்தங்களை ஹோமங்கள் செய்வதன் மூலம் நீக்கலாம் என்று நம் முன்னோர்கள் கண்டறிந்திருந்தார்கள். நாயுருவி (பாதரசம்), எருக்கு ( சூரியன் ), பலாசம் ( சந்திரன் ), வன்னி ( சனி ), அருகம்புல் ( குரு - ராகு ), தர்ப்பை ( கேது ) போன்ற ஹோமத்துக்கு உரிய பொருட்கள், சிக்கலான மருத்துவ முறைகளுக்கும், உரியவை என்பது அவர்கள் கண்டறிந்த தத்துவம் ஆகும்.
உலோகங்கள், ரத்தினங்கள், மிருகங்களின் கொம்புகள் போன்ற இயற்கையான பொருட்களைக்கொண்டு பக்குவம் செய்து பஸ்மங்கள் தயார் செய்யப்பட்டன. நெருப்பில் உருக்குவது, புடம் வைப்பது, காய்ச்சுவது, வடித்தெடுப்பது ஆகிய முறைகளால் இவைகள் தயார் செய்ய பயன்பட்டன. பலவகையான நச்சுப் பொருட்களும் மருந்து செய்ய பயன்பட்டன. இந்த அபூர்வ சிகிச்சை முறைகளை அரேபியா, சைனா, துருக்கி, எகிப்து போன்ற வெளிநாடுகள் பலவற்றுக்கும் சித்தர்களும் போகர்களும் பரப்பி இருக்கிறார்கள்.
பூஜைக்கு உரிய பசுவின் சாணம் புடம் போடவும் பயன்படுத்தப்பட்டது. பூஜை செய்யப்பட்ட பசுவின் சாணம், இளங்கன்றுக்குப் பால் கொடுக்கும் பசுவின் சாணம், சிவன் கோயிலில் வளர்க்கப்படும் பசுவின் சாணம் என்று இவை தரம் பிரிக்கப்பட்டன. இவற்றிலிருந்து சாஸ்திரீயமான முறையில் வறட்டிகள் தட்டப்பட்டு, பக்குவத்துக்கு எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டன.
ரசவாதம் பணம் சம்பாதிக்கும் முறையாகப் பயன்படுத்தப்படவில்லை. உடலின் உறுப்புகளைப் புதுப்பிக்கவும், நீண்ட ஆயுளைக் கொடுக்கவும், மூப்பை நீக்கி மீண்டும் இளமையைத் தரவும் பயன்பட்டன. காயகல்பம் என்ற மருத்துவமுறை இவ்விதம் இளமையை மீட்டுத் தரவல்லது. இரும்பு போன்ற உலோகம் தங்கம் போன்ற உலோகமாக மேன்மையுறச் செய்யும் பக்குவத்தைக் கண்டறிந்து, அவர்கள் மனிதப் பண்புகளையும், மேம்படச் செய்தார்கள். அற்புதங்களை நிகழ்த்தும் மந்திர முறைகள், விஷங்களைப் போக்கவும் பயன்பட்டன.
மனித உடலில் பஞ்சபூதங்களின் விகிதாசாரம்
இயற்கையில் உள்ள பஞ்சபூதங்களான ஆகாயம், நெருப்பு, காற்று, நீர், மண் ஆகியவை நமது உடலிலும் இருக்கின்றன. ஆகாயம் உடலில் மறைபொருளாக அரைப்பங்கு இருக்கிறது. நெருப்பு, காற்று, நீர், மண் ஆகியவை ஒவ்வொன்றும் அரைக்கால் பங்கு இருக்கின்றன. இந்த ஐந்து இயற்கைப் பொருட்களும் இந்த விகிதப்படி இருந்து வர வேண்டும். மண் நிறைந்துள்ளவை - கேசம், தோல், சதை, எலும்பு, நரம்பு ஆகியவை. நீர் நிறைந்துள்ளவை - கொழுப்பு, இரத்தம், பித்தம், கழிவுநீர், ஆகியவை. நெருப்பு நிறைந்துள்ளவை - பசி, தாகம், தூக்கம், சோம்பல், மேனி அழகு ஆகிய பண்புகள். வாயு நிறைந்துள்ளவை - அசைவு, சுருக்கம், விரிவு ஆகிய தன்மைகள். ஆகாயம் நிறைந்துள்ளவை - வயிறு, இருதயம், மூளை ஆகியவற்றிலுள்ள இடைவெளிகள். இவற்றை சித்தர்களின் சாஸ்திரப்படி கண்டறிந்த முனிவர்கள், மருந்துகள் ஏதுமில்லாமலே வியாதி இன்றி வாழ முடிந்தது. உணவு உட்கொள்ளாமலே பசியும் தாகமும் இன்றி வாழ முடிந்தது. நெருப்பில் நிற்பது, நீர் மேல் நடப்பது, காற்றில் பறப்பது போன்ற அபூர்வச் சித்து வேலைகளையும் நிகழ்த்த முடிந்தது.
உடலின் உறுதியையும், உள்ளத்தின் மேன்மையையும் பாதுகாக்க, இச்சைகளை அடக்க வேண்டும் என மெய்ஞ்ஞானம் கூறுகிறது. இதையே சித்த சாஸ்திரமும் உணர்த்துகிறது. பிராணயாமம், யோகாப்பியாசம் ஆகியவற்றின் மூலம் உடலில் ஏற்படக்கூடிய அசுத்தங்களை நீக்கும் வழிமுறைகளையும் அவர்கள் கண்டறிந்தார்கள். சாவு நேரிடும் வரையில் நரம்பு தளர்ச்சி, நரை, சுருக்கம் விழுதல் ஆகியவை இன்றி வாழும் ரகசியத்தை சித்தர்கள் அறிந்திருந்தார்கள். ஆனால் அப்படிப் பாதுக்காத்த உடலின் ஆரோக்கியத்தை இறைவனை எண்ணித் தியானம் செய்யவும், இறைவன் படைத்த உயிர்களைக் காக்கவுமே பயன்படுத்தினார்கள். உடலையும், உள்ளத்தையும் காக்க உணவுக் கட்டுப்பாடுகள், விரதங்கள் ஆகியவற்றைக் கடைப்பிடித்தார்கள். ஆலயங்களை ஒட்டியும், மூலிகைகள் நிறைந்த காடுகளிலுமே, உலக பற்றின்றி உத்தமர்களாக வாழ்ந்தார்கள்.
இன்றைய மருத்துவத்தில் சித்தர்களின் பங்களிப்பு
இன்றைய மருத்துவ விஞ்ஞானத்தின் அடிப்படையே சித்தர்களின் மருத்துவ முறையில்தான் அமைந்திருக்கிறது. அவர்களுடைய பாடல்களில் தமிழ் மொழியின் வளம் நிறைந்திருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் இறைவனின் அருளை நம்பி, வேதாந்திகளாகவே வாழ்ந்தார்கள். சித்தர்களின் அபூர்வ மருத்துவ பயன்களைப் பெற விரும்பும் மக்கள், நல்லொழுக்கத்தைக் கடைப்பிடித்து, பக்திமார்க்கத்தை ஒட்டி, தூய பண்புகளுடன் வாழ்ந்தாலே முழுப் பயன்பெற முடியும்.
No comments:
Post a Comment