Monday, 15 August 2016

பிள்ளையாரை ஏன் சாலை ஓரங்களில் வைத்து வழிபடுகிறோம்?

 
மற்ற தெய்வங்களைப் போல் அல்லாமல், பிள்ளையாரை மட்டும் சாலை ஓரங்களிலும் மரத்தடிகளிலும் கூட  வைத்து வழிபடுகிறோமே... அது சரியா? அவரை தலையில் குட்டிக் கொண்டு வணங்குவதன் தாத்பர்யம் என்ன? என்பது குறித்து காஞ்சி மஹா ஸ்வாமிகள்அளித்த அருளுரை இது....

" பிள்ளையார் ஏழை எளியவர்களுக்கெல்லாம் அருள் செய்யும் எளிய சுவாமி. மஞ்சள் பொடியிலும், களிமண்ணிலும், மஞ்சள் பொடியிலும், வெல்லத்திலும்கூட பிள்ளையார் பிடித்து வழிபட சாஸ்திரம் அனுமதிக்கிறது. சொல்லப்போனால் வெல்லப் பிள்ளையாரைக்  கிள்ளி அவருக்கே நைவேத்தியம் செய்யலாம். அந்த அளவுக்கு எளிமையான சுவாமி பிள்ளையார். அவரை வழிபட நாம் நிறைய சாஸ்திரம் படிக்கவேண்டும் என்பதில்லை. ஒன்றும் படிக்காதவனுக்குக் கூட அவர் கூப்பிட்ட உடனே வந்துவிடுவார்.
மற்ற சுவாமிகளை நாம் தரிசனம் செய்வது என்றால், நாம் அதற்காக ஒரு காலம் பார்த்து நேரம் பார்த்து, குளித்து முழுகி, அர்ச்சனை சாமான்கள் வாங்கிக் கொண்டு கோயிலுக்குப் போகவேண்டி இருக்கிறது. போனாலும் நேரே சுவாமியிடம் போய்விடமுடியாது. பிராகாரத்தைச் சுற்றிக்கொண்டு போகவேண்டும். அப்படியும் சுவாமிக்கு ரொம்பவும் பக்கத்தில் போய்விடமுடியாது. கொஞ்சம் தள்ளித்தான் நிற்கவேண்டும்.

ஆனால், பிள்ளையார் அப்படி இல்லை. சாலை ஓரத்திலும் மரத்தடியிலும்கூட அவர் அமர்ந்துகொண்டிருக்கிறார். கிட்டே போய் கும்பிடலாம். ஆபீசுக்கோ, கடைக்கோ, பள்ளிக்கூடத்துக்கோ போகிற வழியிலும்கூட அவரை தலைநிமிர்ந்து பார்த்து வணங்கலாம். அதிலேயே நமக்கு சொல்லத் தெரியாத சந்தோஷம் உண்டாகிவிடும். அவர் எளிய குழந்தை வடிவமான சுவாமி. பிள்ளையார் வழிபாட்டுக்கென்றே சில அம்சங்கள் இருக்கின்றன. சிதறு தேங்காய் போடுவது, நெற்றியில் குட்டிக்கொள்வது, இரண்டு கைகளை குறுக்காக மறித்து இரண்டு காதுகளையும் பிடித்துக் கொண்டு, முட்டிக்கால் தரையில் படுகிற மாதிரி தோர்ப்புக்கரணம் போடுவது ஆகியவை பிள்ளையார்  வழிபாட்டில் அடங்கி இருக்கின்றன.

யோக சாஸ்திரம் என்று ஒன்று இருக்கிறது. அதிலே நாம் நாடிகளில் ஏற்படுகிற சலனங்களால்,  எப்படி மனதையும் நல்லதாக மாற்றிக்கொள்ளலாம் என்று வழி சொல்லப்பட்டு இருக்கிறது. நம்முடைய உடம்பை பல தினுசுகளாக வளைத்துச் செய்கிற அப்பியாசங்களினால், சுவாசத்தின் போக்கில் உண்டாக்கிக் கொள்கிற மாறுதல்களால்,  நம்முடைய உள்ளம் உயருவதற்கான வழி அந்த யோக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. நெற்றிப் பொட்டில் குட்டிக்கொள்வது, தோர்ப்புக்கரணம் போடுவது இவற்றால் நம்முடைய நாடிகளின் சலனம் மாறும். மனதில் தெய்வீகமான மாறுதல்கள் உண்டாகும். நம்பிக்கையுடன் செய்தால் அதற்கு நிச்சயமாகப் பலன் தரும்.

No comments:

Post a Comment