Tuesday, 16 August 2016

விநாயகருக்கும் அறுபடை வீடுகள்


முருகப்பெருமானுக்கு இருப்பது போல விநாயகருக்கும் அறுபடை வீடுகள் உள்ளது. அந்த அறுபடை வீடுகளின் வழிபாடு பலன்கள் வருமாறு:-

* முதல்படை வீடு - திருவண்ணாமலை : 

திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள விநாயகரின் பெயர் `அல்லல் போம் விநாயகர்'. இந்த விநாயகரைக் குறித்து போற்றப்படும் பாடலே `அல்லல் போம் வல்வினை போம், அன்னை வயிற்றில் பிறந்த தொல்லைபோம்' என்பது. இவரை வழிபட அல்லல்கள் தீரும். 


 * இரண்டாம் படை வீடு - விருத்தாசலம் : 

இங்குள்ள அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் எழுந்தளியுள்ள கணபதிக்கு ஆழத்துப் பிள்ளையார் என்று பெயர். பெயருக்கேற்ப ஆழத்தில் சன்னதி கொண்டுள்ளார். இந்த விநாயகரைத் துதித்தால் செல்வமும், கல்வியும் மற்றும் சீரான வாழ்வும் நம்மை வந்து சேரும்.

* மூன்றாவது படைவீடு - திருக்கடவூர் : 



அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்றாக இத்தலம் விளங்குகிறது. இங்குள்ள விநாயகருக்கு ” கள்ள வாரணப் பிள்ளையார்” என்று பெயர். நமக்கு நீண்ட ஆயுளை அள்ளி வழங்குபவராக விளங்குகிறார். அபிராமி பட்டர் அபிராமி அந்தாதியின் காப்புச் செய்யுளில் குறிப்பிடும் விநாயகர் இந்தக் கள்ள வாரணப் பிள்ளையார்தான். ” தாமரைக் கொன்றையும் செண்பக மாலையும்” என்று தொடங்குகிறது அப்பாடல்.

* நான்காம்படை வீடு - மதுரை : 

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள சித்தி விநாயகர் நான்காம்படை வீடு விநாயகராக கருதப்படுகிறார். மீனாட்சி அம்மன் சன்னதிக்குள் நுழையும் முன்னர் இவரின் தரிசனத்தைப் பெறலாம். நாம் விரும்புகின்றவாறு காரியங்களை நிறைவேற்றித் தருபவராக இவர் உள்ளார். மாணிக்கவாசகர் பாண்டிய மன்னருக்காக குதிரை வாங்கப் புறப்படுகையில் இந்த சித்தி விநாயகரையே தரிசித்துச் சென்றதாக திருவிளையாடல் புராணம் தெரிவிக்கிறது. 

* ஐந்தாவது படைவீடு காசி மற்றும் பிள்ளையார்பட்டி

காசியில் ” துண்டி ராஜ கணபதி”யாகவும், பிள்ளையார்பட்டியில் ” கற்பக விநாயகர்” ஆகவும் இருந்து அருள்பாலிக்கிறார். காசியில் இருக்கும் துண்டி ராஜ கணபதி, தீட்சா கணபதியாக இருந்து, ஞானத்தை வாரி வாரி வழங்குகிறார் காசிக்கு போகமுடியாதவர்களுக்கு அதே பலனைப் பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் அருளுகிறார். இவர் கையில் சிவலிங்கத்தைத் தாங்கியிருப்பது விசேஷமான அமைப்பு.

* ஆறாம்படைவீடு திருநாரையூர்



இங்கு ” ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார்” என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். சிற்பியின் உளியால் போள்ளப்படாமல் சுயம்புவாகத் தோன்றியவர்.என்பதால் இத்திரு நாமம். இத்திருத்தலத்தில்தான் தேவாரத் திருமுறைகள் கிடைக்கக் காரணமாக இருந்த நம்புயாண்டார் நம்பிகளும் அவதரித்தார். கணபதியை அவரது படை வீடுகளுக்கே சென்று தரிசித்து சிறப்பான பயன்களைப் பெறுவோமாக

No comments:

Post a Comment