Sunday 14 August 2016

காலத்தின் சாட்சியாய் நிற்கும் சோமநாதர் ஆலயம் !!


12 ஜோதிர்லிங்கங்களில் முதலாவதாக வைத்துப் போற்றப்படுவது குஜராத்திலுள்ள சோமநாதர் லிங்கமாகும். இந்த சுயம்புலிங்கத்தை முதன்முதலில் கண்டவர் பிரம்மா என்று கூறப்படுகிறது.

தட்சப்பிரஜாதிபதியின் 27 மகள்களை மணந்த சந்திரன், அவர்களில் ரோகிணியிடம் மட்டுமே மிகவும் அன்பு செலுத்திவந்தான். இதனால் வேதனையுற்ற 26 பேரும் தந்தையிடம் சென்று முறையிட, கோபம் கொண்ட தட்சன், சந்திரன் தன் கலைகளை ஒவ்வொன்றாக இழந்து தேய்ந்துபோகுமாறு சபித்தான். மனம்வருந்திய சந்திரன் சிவபெருமானைச் சரணடைந்து சாபவிமோசனம் வேண்ட, அவனது கலைகள் மீண்டும் வளர அருள்புரிந்தார் ஈசன். மேலும் சந்திரனைத் தன் முடியிலும் சூடிக்கொண்டார். சந்திரன் ஈசனை வழிபட்டு தன் சாபம் நீங்கப்பெற்ற தலம் இந்த சோமநாதபுரமே.

மேலும், திருமால்- நான்முகனிடையே ஏற்பட்ட பூசலை நீக்க, சிவபெருமான் ஜோதிரூபமாகத் தோன்றி அருள்புரிந்த இடமென்றும் சொல்லப்படுகிறது.

ஸ்ரீகிருஷ்ணர் தன் யாதவகுல மக்களிடம் சோமநாதரை வழிபடுமாறு கூறினார் என்ற புராணத் தகவலும் உண்டு.

சாளுக்கியர்களின் பாணியில் கட்டப்பட்ட இவ்வாலயம் கடற்கரை அருகில் அமைந்துள்ளது. பக்தர்கள் கடலில் நீராடி விட்டு ஆலயம் சென்று சிவபெருமானை வழிபடுகிறார்கள். இவ்வாலயத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் பிராச்சி திரிவேணி என்னும் இடமுள்ளது. கபில நதி, சரஸ்வதி நதி, ஹிரண்ய நதி ஆகிய மூன்றும் சந்திக்கும் இடம். அங்குசென்றும் பக்தர்கள் நீராடுகிறார்கள்.
அதற்கு அருகே சூரிய நாராயணர் ஆலயம் உள்ளது. அதன் பக்கத்திலுள்ள குகையில் பவானி ஆலயமும், சித்தநாத சிவன் சந்நிதியும் உண்டு. அதற்கு அருகிலேயே ஒரு ஆலமரம் காணப்படுகிறது. அதன்கீழ் பலதேவர் சிலையுள்ளது. இங்கிருந்துதான் பலதேவர் சேஷநாதர் வடிவில் பாதாள லோகம் சென்றார் என்பது ஐதீகம்.
அதன் பக்கத்தில் பாலகதீர்த்தம் உள்ளது. இதன் கரையில் படுத்திருந்த போதுதான், ஸ்ரீகிருஷ்ணர் காலில் அம்புபாய்ந்து வைகுந்தம் சேர்ந்தார் எனப்படுகிறது. திரிவேணி மாதா, மகாகாளேஸ்வரர், ராமர், கிருஷ்ணர், பீமேஸ்வரர் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன.
சோமநாதர் ஆலயம் அளவுக்கு அந்நியரின் படையெடுப்பால் சேதமுற்ற ஆலயம் வேறெதுவுமில்லை என்றே சொல்லலாம். இங்கிருந்த விலைமதிப்புமிக்க ரத்தினங்களின் காரணமாக பலமுறை இவ்வாலயம் தாக்குதலுக்குள்ளானது.
கி.பி. 1024-ல் இங்கு படையெடுத்து வந்த மொகலாய மன்னன் கஜினி பெருமளவு செல்வங்களை கொள்ளையிட்டு, ஆலயத்தையும் சேதப்படுத்திச் சென்றான். அதன்பின் குஜ்ஜார் பர்மாரா என்ற இந்து மன்னன் ஆலயத்தைப் புதுப்பித்தான். சோலங்கி குமார் பால் என்ற மன்னனும் திருப்பணி செய்தான்.
1296-ல் அலாவுதீன் கில்ஜி இவ்வாலயத்தை சேதப்படுத்தி செல்வங் களைக் கொள்ளையிட்டான். அதன்பின்னர் 1326 முதல் 1351 வரை இப்பகுதியை ஆட்சி புரிந்த சந்த்சன் என்ற இந்து மன்னன் ஆலயத் தைப் புதுப்பித்தான்.
1375-ல் மொசபத் ஷா என்ற இஸ்லாமிய மன்னன் தாக்கிக் கொள்ளையிட்டான். பின்னர் மொகமஹ்பெகுடா, ஔரங்கசீப் என பலராலும் இவ்வாலயம் தாக்கப்பட்டது. பின்னர் பெஷாவர் இந்து மன்னரால் ஆலயம் சீரமைக்கப்பட்டது. தொடர்ந்து நாக்பூர் மன்னர், குவாலியர் மன்னர்களால் ஆலயம் திருப்பணி செய்யப்பட்டது.
இந்தியா சுதந்திரம் அடைந்தபின் இவ்வாலயத்தைப் பார்வையிட்ட சர்தார் வல்லபபாய் படேல், அதைப் புதுப்பிக்க உத்தர விட்டார். பின்னர் அவர் காலமாகிவிடவே, அவர் ஆணையை அமைச்சர் கே. எம். முன்ஷி நிறைவேற்றினார்.
பல்வேறு அரசியல் மாற்றங்களையும் காலமாறுதல்களையும் பார்த்துக்கொண்டு, சலனமின்றி நிமிர்ந்து நிற்கிறது சோமநாதர் ஆலயம். இவ்வாலயத்தை ஒருமுறை சுற்றி வந்தால் உலகையே சுற்றியதுபோல என்று கூறுகிறார்கள். சொர்க்க பதவி சித்திக்கும்.
தாய் சாபம் பெற்றவர்கள், தோல் நோயுள்ளவர்கள். மனநிலை சரியில்லாதவர் கள், ஜாதகத்தில் சந்திரன் நீசம்பெற்றவர்கள் மற்றும் பல்வேறு தோஷமுள்ளவர்கள் இங்குவந்து வழிபட்டு குறைகளிலிருந்து விடுபடுகின்றனர்.
காலை 6.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரை ஆலயம் திறந்திருக்கும்.
சென்னையிலிருந்து அகமாதபாத் சென்று, அங்கிருந்து 465 கிலோமீட்டர் பயணித்து சோமநாதரை தரிசிக்கவேண்டும்.

No comments:

Post a Comment