Friday, 12 August 2016

வரலட்சுமி விரதம்





முன்ஜென்ம கர்ம பாவ வினைகளால் உண்டாகும் தடைகள், தோஷங்கள், பிணிகள், கவலைகள் நீங்கி தெய்வ திருவருள் பெறுவதற்கு வழிபாடுகள், விரதங்கள் பெரிதும் துணை நிற்கின்றன. ஆயுள், ஆரோக்யம், புத்திர சம்பத்து, மாங்கல்ய பலம், சவுபாக்ய யோகம் கிடைக்கவும், மன அமைதி, சந்தோஷம் ஏற்படவும் பல பூஜை, புனஸ்காரங்கள் இருக்கின்றன. அந்த வகையில் செல்வத்துக்கு அதிபதியான ஸ்ரீமகாலட்சுமியின் அருள் வேண்டி செய்யும் விரத பூஜையே வரலட்சுமி பூஜை அல்லது வரலட்சுமி நோன்பாகும்.



‘வேதம் படிப்பதால் கிடைக்கும் அத்தனை வளமும், நலனும், ஞானமும் விரதங்களால் கிடைக்கின்றன’ என்று புராணங்கள் கூறுகின்றன. மகாலட்சுமியின்

அவதார நாள் துவாதசி வெள்ளிக்கிழமை என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த நாளில் செய்யும் ஸ்வர்ண தன ஆகர்ஷண தேவி பூஜை மிகவும்

சிறப்பானது, பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி அல்லது ஆவணி மாத பவுர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமை வரலட்சுமி பூஜை நோன்பு நாளாகும்.

லட்சுமி பூஜை பற்றிய புராண கதை


பத்ரச்ரவஸ் என்ற மன்னன் விஷ்ணு பக்தன். அவனுடைய மனைவி சுரசந்திரிகா, மகள் சியாமபாலா. மகளை சக்கரவர்த்தியான மாலாதரன் என்பவருக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள். காலங்கள் கடந்தன. ஒருநாள் வயது முதிர்ந்த ஒரு சுமங்கலி மூதாட்டி பத்ரச்ரவசின் அரண்மனைக்கு வந்தாள். மூதாட்டியின் வடிவெடுத்து வந்தது சாட்சாத் மகாலட்சுமி தேவி. வரலட்சுமி விரதத்தின் அருமை பெருமைகளை சொன்ன மூதாட்டி, அந்த விரதத்தை கடைபிடிக்குமாறு சுரசந்திரிகாவிடம் சொன்னாள். வந்திருப்பது லட்சுமி தேவி என்பது அவளுக்கு தெரியவில்லை. பிச்சை கேட்க வந்த கிழவி உளறுவதாக கருதி, அவமானப்படுத்தி விரட்டினாள் சுரசந்திரிகா.

லட்சுமிதேவி ஒரு இடத்துக்கு வருவது சாமானிய காரியம் அல்ல. அரண்மனையை தேடிவந்தவளை விரட்டினால் அங்கு இருப்பாளா? அந்த இடத்தை விட்டு அகன்றாள் லட்சுமி தேவி. விளைவு..? மணிமகுடத்தையும் செல்வச் செழிப்பையும் இழந்தாள் சுரசந்திரிகா. அந்த இடத்தை காலிசெய்த மகாலட்சுமி நேராக அரசியின் மகள் சியாமபாலாவிடம் சென்றாள். வரலட்சுமி விரதத்தின் பலன்கள் பற்றி அவளிடமும் சொன்னாள். சியாமபாலா பக்தி சிரத்தையுடன் அதை கேட்டாள். பயபக்தியுடன் வரலட்சுமி நோன்பு மேற்கொண்டு பூஜை செய்து வழிபட்டாள். விரத மகிமையால் அவளிடம் மலை போல் செல்வம் குவிய தொடங்கியது.

பெற்றோர் வறுமை நிலையில் இருப்பதை சியாமபாலா அறிந்தாள். ஒரு செப்பு பானை நிறைய தங்கத்தை நிரப்பி அவர்களுக்கு அனுப்பி வைத்தாள். அவள் அனுப்பி வைத்தாலும், அதை அனுபவிப்பதற்கு யோகம் இருக்க வேண்டுமே. அவர்களை சூழ்ந்திருந்த தரித்திரம், அவயோகம் அந்த வாய்ப்பை தடுத்துவிட்டது.

அவர்களிடம் வந்ததுமே, ஒரு பானைத் தங்கமும் கரியாக மாறிவிட்டது. இதை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தாள் சியாமபாலா. வீடு தேடி வந்த லட்சுமி தேவியை அவமானப்படுத்தி அனுப்பியதாலேயே அவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொண்டாள். வரலட்சுமி விரதத்தின் மகிமைகளை தாய்க்கு எடுத்து சொன்னாள். தாங்கள் செய்த தவறுகளை மன்னித்து அகம்பாவத்தை போக்குமாறு மகாலட்சுமியை

மனமுருக வேண்டினாள் சுரசந்திரிகா. வரலட்சுமி விரதம் மேற்கொண்டு, பூஜை, வழிபாடு செய்து பிரார்த்தனை செய்தாள். இழந்த செல்வங்களை மட்டுமின்றி, ஆட்சி, அதிகாரமும் அவர்களை வந்தடைந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
எப்படி பூஜை செய்வது?


ஒரு மனையில் கோலம் போட்டு லட்சுமி அல்லது அஷ்டலட்சுமி படம் வைத்து மலர் மாலை, கதம்ப பூக்களால் அலங்கரிக்க வேண்டும். சில வீடுகளில் தங்கம் அல்லது வெள்ளியில் வரலட்சுமி உருவம் வைத்திருப்பார்கள். கலசத்தின் மீது இதை வைத்து பூஜை செய்வார்கள். அவ்வாறு வைத்திருந்தால், கலசம் வைத்து அதன்மேல் தேங்காய் வைத்து பட்டுத்துணி, பூக்கள் கொண்டு அலங்கரிக்க வேண்டும். கலசத்தின் உள்ளே நீர்விட்டு ஏலக்காய் பச்சை கற்பூரம், வாசனாதி திரவியங்களை சேர்க்க வேண்டும் அல்லது கலசத்தில் அரிசி, பருப்பு நிரப்பியும் செய்யலாம். அந்த தேங்காயில் வரலட்சுமி உருவத்தை பொருத்தி, அவரவர் குடும்ப வழக்கப்படி பூஜை செய்யலாம். வசதிக்கேற்ப அப்பம், வடை, பொங்கல், கேசரி போன்ற நைவேத்யங்கள் படைத்து கும்பத்தில் மஞ்சள் நோன்பு கயிறுகள் வைத்து பூஜை செய்ய வேண்டும்.

அக்கம்பக்கம் இருக்கும் சுமங்கலி பெண்கள், குழந்தைகளை பூஜைக்கு அழைக்கலாம். அனைவரும் சேர்ந்து லட்சுமி அஷ்டோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், சகலகலாவல்லி மாலை, லலிதா சகஸ்ரநாமம் போன்றவற்றை சொல்லி விரதம் முடிக்கலாம். தீபாராதனை முடிந்ததும், வந்திருக்கும் பெண்கள் அனைவருக்கும் நோன்பு கயிறு, முழுத் தேங்காய், பூ, பழம், குங்குமம் கொடுத்து உபசரித்து நைவேத்ய பிரசாதங்களை வழங்க வேண்டும். பக்தி சிரத்தையுடன் நோன்பிருந்து வரலட்சுமி பூஜையை செய்வதாலும், பங்கேற்பதாலும் ஆயுள், ஆரோக்யம், மாங்கல்யபலம் கிட்டும். கன்னிப் பெண்களுக்கு திருமண பிராப்தம் கூடிவரும்.

குழந்தை பாக்ய தடைகள் நீங்கி சற்புத்திர யோகம் உண்டாகும். ஜாதகத்தில் சுக்கிர தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் நீங்கும். கணவன் - மனைவி இடையே மன கசப்புகள், கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். பிரிந்திருக்கும் தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். இந்த நன்னாளில் வீடுகளுக்கு அருகில் இருக்கும் அம்மன், அம்பாள், ஆண்டாள் கோயில்களுக்கு சென்று நெய்தீபம் ஏற்றி வணங்கி, பக்தர்களுக்கு தயிர்சாதம், சர்க்கரை பொங்கல் பிரசாதம் தரலாம். பக்தி, ஸ்லோக புத்தகங்கள் வாங்கி தரலாம். இல்லாதோர், இயலாதோருக்கு ஆடை, போர்வைகள் தானம் செய்ய, புண்ணிய பலன்கள் அதிகரிக்கும். வரலட்சுமி விரதமிருந்து மகாலட்சுமியை வழிபட்டு அவள் அருளால் சகல ஐஸ்வர்யங்களும் பெறுவோம்

திருமாலின் மார்பில் குடியிருக்கும் மகாலட்சுமி, அஷ்ட ஐஸ்வரியங்களுக்கும் அதிபதியாக உள்ளார். தன லட்சுமி, தானிய லட்சுமி, தைரிய லட்சுமி, ஜெய லட்சுமி, வீர லட்சுமி, சந்தான லட்சுமி, மகா லட்சுமி என 8 வகையான லட்சுமியாக காட்சி தந்து அருளாசி புரிகிறார். லட்சுமி தேவியை குறித்து அனுஷ்டிக்கும் மிக சிறப்பான விரதம் ‘வரலட்சுமி விரதம்’. செல்வம், தானியம், தைரியம், வெற்றி, வீரம், புத்திர பாக்கியம், கல்வி போன்ற செல்வங்களை லட்சுமி தேவி அள்ளிக் கொடுப்பதால், இதை வரம் தரும் விரதம் எனவும் அழைக்கின்றனர். 

திருப்பாற்கடலை கடைந்த போது பூரண கும்பத்துடன் தோன்றியவர் லட்சுமி. இவரது கையில் எப்போதும் பூரண கும்பம் இருக்கும். லட்சுமி, மகா விஷ்ணுவை மணந்தார். ஸ்ரீமன் நாராயணன் பூமியில் அதர்மங்களை அழித்து, தர்மங்களை காப்பதற்காக அவதாரங்கள் எடுத்த போது அவரோடு பல வடிவங்கள் எடுத்தார். சீதாதேவி, பத்மாவதி, துளசி என பல வடிவில் வந்து பூலோகத்தில் நித்ய சுமங்கலியாக காட்சி தரும் ஸ்ரீதேவி, பெண்களுக்கே உரித்தான கருணை உள்ளம் கொண்டவர். பொறுமையே வடிவானவர். செல்வத்துக்கு அதிபதியாக விளங்கும் மகாலட்சுமி, நமக்கு செல்வத்தை வாரி வழங்குகிறார்.

பெண்கள் வரலட்சுமி விரதம் இருந்தால் அஷ்டலட்சுமிகளும் மகிழ்வார்கள். இதனால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். திருமணம் தோஷம் உள்ள கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவவும், செல்வங்கள் பெருகவும், கணவருக்கு நீண்ட ஆயுள் வேண்டியும், குழந்தைகள் நலமுடன் வாழவும், சுமங்கலி பெண்கள் அனுஷ்டிப்பதே வரலட்சுமி நோன்பாகும். வரலட்சுமி விரதம், ஆவணி மாதம் வளர்பிறையில் வரும் கடைசி வெள்ளிக்கிழமையில் அனுஷ்டிக்கப்படுகிறது. சில ஆண்டுகளில் இந்த விரதம் ஆடி மாதத்திலும் வரும்.

நோன்பு தோன்றிய கதை

மகத நாட்டில் குஞ்சினாபுரம் என்ற ஊரில் சாருமதி என்ற பெண் வாழ்ந்து வந்தாள். இவள் தனது கணவன், மாமனார், மாமியார் ஆகியோரை சாதாரண மனிதர்கள் போல் கருதாமல், இறைவனாகவே கருதி அவர்களுக்கு பணிவிடை செய்து வந்தாள். அவளது மனப்பான்மை மகா லட்சுமிக்கு மகிழ்ச்சியை அளித்தது. மகாலட்சுமி சாருமதியின் கனவில் வரலட்சுமியாக தோன்றி அருள்புரிந்தார். ‘என்னை துதித்து வரலட்சுமி விரதம் மேற்கொள்பவர்களின் இல்லத்தில் நான் வசிப்பேன்’ என்று அருளிய மகாலட்சுமி, சாருமதிக்கு வரலட்சுமி நோன்பு இருப்பதன் வழிமுறையைக் கூறி, அதை மற்றவர் களுக்கு எடுத்துரைக்கும்படி கேட்டுக்கொண்டார். அதை அப்படியே செய்தாள் சாருமதி. அவள் பெற்ற நன்மைகளை கண்ட பெண்கள், தாங்களும் மகாலட்சுமிக்காக விரதம் இருக்க தொடங்கினர். விரைவில் அந்த நாட்டு மக்கள் முழுவதும் விரதம் இருக்க தொடங்கினர். நாடு சுபீட்சம் அடைந்தது.
விரதத்தின் மகிமை 

பத்ரச்ரவஸ் என்ற மன்னன், மகாவிஷ்ணுவின் சிறந்த பக்தனாக திகழ்ந்தான். அவனது மனைவி சுரசந்திரிகா. இந்த தம்பதிகளின் மகள் சியாமபாலா. இவளை சக்கரவர்த்தியான மாலாதரன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். காலம் கடந்தது. ஒரு சமயம் மகாலட்சுமி தாயார், வயதான சுமங்கலியின் வேடம் தரித்து, சுரசந்திரிகாவின் அரண்மனைக்கு வந்தார். சுரசந்திரிகாவிடம் வரலட்சுமி விரதத்தை விரிவாக கூறி, அதை கடைப்பிடிக்கும் படி கூறினார். மகளை பிரிந்த ஏக்கத்தில் இருந்த சுரசந்திரிகா, லட்சுமி தேவியை யாரோ என்று கருதி விரட்டி விட்டாள்.

அப்படி விரட்டப்பட்ட லட்சுமி தேவியை, அரசியின் மகள் சியாம பாலா சமாதானப்படுத்தி, அவரிடம் இருந்து வரலட்சுமி விரத முறைகளை விரிவாக கேட்டு உபதேசம் பெற்றாள். பக்தியுடன் விரதத்தை கடைப்பிடித்தாள். விரத மகிமையில் அவள் செல்வச் சிறப்பை அடைந்தாள்.

ஆனால் லட்சுமி தேவியை அவமானப்படுத்திய அவளது பெற்றோர், வறுமையில் வாடத்தொடங்கினர். விவரம் அறிந்த சியாமபாலா ஒரு குடம் நிறைய தங்கத்தை பெற்றோருக்கு அனுப்பி வைத்தாள். ஆனால் அவர்கள் செய்த தீவினையால் அது கரியாகி விட்டது. இதையடுத்து சியாமபாலா, தன் தாயான சுரசந்திரிகாவிடம் வரலட்சுமி விரதத்தைப்பற்றி சொல்லி பூஜை செய்யும் படி கூறினாள். அவளும் மகள் சொன்னபடி வரலட்சுமி விரதத்தை கடைப்பிடித்து பூஜை செய்தாள். அதன் பிறகு இழந்த செல்வங்கள் மீண்டும் கிடைத்தது.
விரதம் இருப்பது எப்படி? 

வரலட்சுமி விரதத்தை ஆடி அல்லது ஆவணி மாதம் பவுர்ணமிக்கு முன் வருகிற வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். பூஜைக்கு முதல் நாளே வீட்டை சுத்தம் செய்து, பூஜை அறையை மெழுகி, கோலமிட்டு, வெள்ளை அடிக்க வேண்டும். வீட்டில் தென்கிழக்கு மூலையில் ஒரு சிறிய மண்டபம் அமைத்து அதை அலங்கரிக்க வேண்டும். மண்டபத்தில் இரு பக்கங்களிலும் வாழைக்கன்று கட்டி, பூக்களால் தோரணம் கட்ட வேண்டும். அதில் தங்கம், வெள்ளி அல்லது சந்தனத்தால் செய்யப்பட்ட வரலட்சுமியின் படத்தை வைத்து வழிபடலாம். படத்திற்கு மலர் களால் அலங்கரித்து அதை ஒரு பலகையில் வைக்க வேண்டும்.

ஒரு வாழை இலைபோட்டு அதில் பச்சரிசியை பரப்ப வேண்டும். அரிசியின் மீது தேங்காய், மாவிலை, எலுமிச்சை, பழங்கள் ஆகிய வற்றை வைத்து, லட்சுமிக்கு மஞ்சள் ஆடை அணிவிக்க வேண்டும். ஒரு கலசத்தை எடுத்து அதன்மேல் முழுத்தேங்காயை வைக்க வேண்டும். கலசத்தை சுற்றி மஞ்சள் நிறக்கயிற்றை இணைத்துக் கட்ட வேண்டும். தேங்காயின் மேல் குங்குமம் இட வேண்டும். அதை அரிசியின் நடுவில் வைக்க வேண்டும்.

முதலில் விநாயகர் பூஜை செய்ய வேண்டும். மலர்களால் அன்னையை அர்ச்சித்து, அஷ்ட லட்சுமிகளுக்கும் விருப்பமான அருகம்புல்லை இலையின் மீது தூவி பூஜை செய்து தூப தீபங்கள் காட்ட வேண்டும். அன்னம், பாயாசம், பழ வகைகள், நிவேதனம் செய்ய வேண்டும். ஆரத்தி தட்டுகளால் பூஜை செய்ய வேண்டும். பின்னர் வரலட்சுமியின் முன் வைத்திருந்த நோன்புச்சரட்டை மஞ்சள் குங்குமம் இட்ட மலர்களோடு சேர்த்து கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும்.

பூஜையின் போது அஷ்ட லட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகா லட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிக்க வேண்டும். பின் கலசத்தை அரிசி பாத்திரத்திற்குள் வைப்பது விசேஷம்.

சுமங்கலி பெண்கள் இந்த விரதத்தின் போது தாலிக்கயிற்றை வைத்து பூஜை செய்து அதனை அணிந்து கொள்ள வேண்டும். வரலட்சுமி விரதம் கடைப்பிடிப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். செல்வம் சேரும். கன்னிப்பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். குழந்தைகளுக்கு கல்வி ஞானம் கிட்டும். அம்பிகையின் அருளால் விரும்பிய நலன்கள் அனைத்தும் கிடைத்து வாழ்க்கை வளமாகும்.
மகாலட்சுமி இருக்கும்  வீடு





அஷ்ட லட்சுமிகளில் ஒவ்வொரு லட்சுமியும் நமக்கு தேவையானதை வாரி வழங்குகின்றனர். குழந்தை பேறு தருபவள் ‘சந்தான லட்சுமி’. பதவியை தருபவள் ‘கஜ லட்சுமி’, செல்வத்தை தருபவள் ‘வித்யாலட்சுமி’. வீரத்தை தருபவள் ‘வீர லட்சுமி’. வெற்றியை தருபவள் ‘கருணை லட்சுமி’.

எல்லா செல்வமும் ஒரு சேர இருக்கும் இடத்தில் இருப்பவள் ‘அஷ்ட லட்சுமி’. மகாலட்சுமி ஒவ்வொரு வீட்டிலும் கடாட்சம் செய்ய அதிகாலை எழுந்ததும் கொல்லைப்புற வாசலை திறந்து வைத்து அதன் பின் தலைவாசலை திறக்க வேண்டும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கை ஏற்றி வழிபட வேண்டும். வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தண்ணீர் கொடுக்க வேண்டும். மஞ்சள் கிழங்கு கொடுக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் நாம் செய்த பாவம் விலகும்.

பவுர்ணமி தோறும் மாலையில் குளித்து சத்ய நாராயணரை துளசி, செண்பக மலர்களால் அர்ச்சனை செய்து பால், பாயாசம், கற்கண்டு, பழ வகைகள் வைத்து வணங்கிய பின்னர் இரவு உணவு உட்கொள்ள வேண்டும்.

ஒருவர் தனக்கு சீராக அளிக்கப்பட்ட வெள்ளிப்பாத்திரங்களை தன் காலத்தில் விற்கவோ, அன்பளிப்பாக கொடுக்கவோ கூடாது. ஏழு வெற்றிலை, பாக்கு, திருநீறு, ஆடை, பொன் போன்றவற்றை இரு கரங்களால் ஏற்க வேண்டும். வளையல், சீப்பு, கண்ணாடி, கண் மை, மஞ்சள், குங்குமம் ஆகியவற்றை தேங்காயுடன் முறத்தில் வைத்து தானம் அளிப்பவருக்கு லட்சுமி விரும்பிய வரங்களை அளிக்கிறார்.

No comments:

Post a Comment