Saturday, 6 August 2016

சபரிமலை ஐயப்பன் - சில விபரங்கள்



ஐயப்பனின் வரலாறு

மகிஷாசுரனின் தங்கையான அரக்கி மகிஷி. தேவலோகத்தையும் பூலோகத்தையும் ஆட்டி படைத்து கொண்டிருந்தாள், அத்துடன் தன் சகோதரன் மகிஷாசுரனின் அழிவுக்கு தேவர்களே காரணம் என கருதி அவர்களை பழிவாங்கவும் மகிஷி முடிவு செய்தாள். அதற்கான சக்தியை பெற மகிஷி பிரம்மாவை நோக்கி தவம் புரிந்தாள். பிரம்மா, இவள் முன் தோன்றி,வேண்டும் வரம் கேள் என்றார்.

சிவனுக்கும், விஷ்ணுவுக்கும், பிறந்த புத்திரனால் அல்லாது வேறு யாராலும் எனக்கு மரணம் நேரிடக்கூடாது என மகிஷி வரம் கேட்டாள். கேட்ட வரம் கிடைத்தது. வரம் பெற்ற மகிஷி தேவலோகத்தில் தேவர்களையும்,பூலோகத்தில் மக்களையும் கடும் கொடுமைப்படுத்தி வந்தாள்.


தேவர்கள் துயரம் தாங்காமல் பரமசிவனிடத்தில் முறையிட்டனர். விஷ்ணுவின் அம்சமான மோகினி மூலம் சைவ வைஷ்ணவ ஜோதியாக ஐயப்பன் பூலோகத்தில் அவதரித்தார். பம்பாதீரத்தில் ஒரு குழந்தையாய் ஐயன் அழும் சமயத்தில் பாண்டிய மன்னனும், பந்தளத்து அரசனுமான ராஜசேகரன், குழந்தை இல்லாத தனக்கு பகவானே அளித்ததாக எண்ணி அந்தக் குழந்தையை பந்தளம் கொண்டு வந்து ராணியிடம் கொடுத்து மகிழ்வித்தார். கழுத்தில் மணி இருந்தால் மணிகண்டன் என்றும் ஐயப்பன் என்றும் பெயர் சூட்டினார். பகவான் வருகையால் ராணியும் கருவுற்றாள்.

எல்லா லட்சணங்களுடனும் கூடிய பாலகனும் பிறந்தான். அவனுக்கு ராஜராஜன் என்று பெயர் சூட்டினர். மணிகண்டனின் வருகையால் தான் தனக்கு எல்லா நலன்களும் ஏற்படுகிறது என்பதை புரிந்து கொண்ட ராஜசேகரன்,மணிகண்டனுக்கு பட்டாபிஷேகம் செய்வதற்கு ஏற்பாடு செய்தார். இதை உணர்ந்த மந்திரி, மணிகண்டன் ராஜாவானால் தனக்குள்ள செல்வாக்கும்,வசதிகளும் போய்விடும் என்று எண்ணி மணிகண்டனையே ஒழிக்கப்பார்க்கிறான். ஆனால் ஒன்றும் பலிக்கவில்லை. பின் தனது சூழ்ச்சியால் புலிப்பால், கொண்டு வந்தால்தான் மகாராணிக்கு வந்துள்ள நோய் போகுமென்று அரண்மனை வைத்தியர்களைக் கொண்டுச் சொல்லச் செய்கிறான்.இது சூழ்ச்சி என்று தெரிந்தபோதிலும், மணிகண்டன் புலிப்பால் கொண்டு வர காட்டுக்குச் செல்கிறான். ஐயனின் வரவிற்காகக் காத்திருந்த தேவர்கள் பகவானை பொன்னம்பல மேட்டில் பூஜை செய்து மகிஷியினால்படும் துயரத்தைக் கூறினர். மணிகண்டன் தேவலோகம் சென்று மகிஷியை வென்று பூமிக்குத் தள்ள மகிஷி அழுதா நதிக்கரையில் விழுந்தாள்.

ஐயன் அவள்மேல் நர்த்தனமாடி, மகிஷியை உயிரிழக்க செய்தார். மகிஷி மீண்டும் சாப விமோசனம் பெற்று ஐயனை அடையும் ஆவலைத் தெரிவித்தாள். ஆனால் தான் பிரம்மச்சர்ய நிஷ்டையுள்ளவனானதால் அது சாத்தியமாகாது என்றும், தான் இருக்கும் இடத்தின் இடப்பக்கத்தில் மாளிகைப்புரத்தம்மா என்ற பெயருடன் அவர் விளங்கிவர ஐயன் அருள் செய்தார்.


மகிஷியின் கொடுமை நீங்கியதால் சந்தோஷமடைந்த தேவர்கள் மணிகண்டனை பலவிதமாக துதித்து பூஜித்தனர். பின் யாவரும் புலியாக மாறி ஐயனின் பணிகளை நிறைவேற்றுவதற்காகப் பந்தளம் சென்றனர். புலிக்கூட்டம் வருவதை கண்டு மக்கள் பீதியடைந்தனர். ஐயப்பனின் சக்தியும், பெருமையும் உணர்ந்து மந்திரியும், ராணியும் மணிகண்டனிடம் மன்னிப்பு கேட்டனர்.

மணிகண்டனும், மன்னிப்பதற்கு எதுவுமில்லை. எல்லாம் லீலைகள்படி நடந்துள்ளன. நான் பூமியில எதற்காக பிறந்தேனோ, அந்த வேலை முடிந்துவிட்டது. இனி நான் தேவலோகம் செல்கிறேன் என்றான். மன்னன் பகவானே தாங்கள் எங்களுடன் இருந்ததன் அடையாளமாக உங்களுக்கு ஒரு கோயில் கட்ட நினைக்கிறோம். அதை எங்கு கட்ட வேண்டும் என்று சொல்லுங்கள் என்றான். மணிகண்டன் ஒரு அம்பை எடுத்து எய்து, இந்த அம்பு எங்கு போய் விழுகிறதோ அங்கு கோயில் எழுப்புங்கள் என்றான். அந்த அம்பு சபரிமலையில் விழுந்தது. அங்கு 18 படிகளுடன், கிழக்கே நோக்கி தனக்கும் பக்கத்தில் மாளிகைப்புறத்தம்மனுக்கும் கோயில் கட்டும்படி கூறிவிட்டு மணிகண்டனாகிய ஐயப்பன் தேவலோகம் சென்றார்.

மணிகண்டன் கட்டளைப்படி, அகத்திய முனிவரின் ஆலோசனையுடன் மன்னர் ஊண், உறக்கமின்றி தானே மேற்பார்வை செய்து சபரிமலையில் பதினெட்டு படியோடு கூடிய அழகிய கோயிலை கட்டினார்.


ஆண்டுதோறும் லட்சோப லட்சம் மக்கள் ஜாதி, மத பேதமின்றி மாலை அணிந்து 48 நாட்கள் கடும் விரதம் அனுசரித்து சபரிமலை வந்து புனித பதினெட்டுப்படி ஏறி ஐயப்பன் அருள் பெற்று வருகின்றனர். ஆண்டுதோறும் மகர சங்கராந்தி தினத்தன்று ஐயப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சியளித்து அருள்பாலிக்கிறார்.

 ஐயப்பனின் வாழ்வில் வாபரின் பங்கு

வாபர் ஒரு இஸ்லாமியர். கொள்ளைக்காரனாக இருந்தனர். ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் வழியில் அவர் தன்னுடன் வந்த மக்களுக்கு கூடாரங்கள் அமைத்துக் கொடுத்து தங்க வைத்திருந்தார். கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் கொள்ளையடித்து அந்த பொருட்களை தன்னுடன் தங்கியிருந்தவர்களுக்கு வழங்கி வந்தார். அரசர்களால் வாபரை பிடிக்கமுடியவில்லை. எனவே அவர்கள் ஐயப்பனிடமே இதுபற்றி முறையிட்டனர்.

ஒருமுறை ஐயப்பன் வாபரை காணச்சென்றார். குழந்தையாக இருந்த ஐயப்பன் வாபருக்கு எச்சரிக்கை விடுத்தார். என்னைக் காணவரும் பக்தர்களை துன்புறுத்தினால் உன்னை அழித்துவிடுவேன் என்று கூறினார். இரக்க குணமுள்ள வாபர் சிறுவனான ஐயப்பனை பார்த்து, நீ என் குழந்தை போல இருக்கிறாய். உன்னை எப்படி நான் கொல்லுவேன். என்னை நீ துன்புறுத்தாதே. போய்விடு என்றார். இதற்கெல்லாம் கலங்காத ஐயப்பன் வாபரை கொல்ல முயன்றார். உடனே வாபர் ஐயப்பனிடம் என்னை நீ கொன்றுவிட்டால் என்னை நம்பி இங்கு குடியிருக்கும் மக்களை என்ன செய்யப்போகிறாய் என்று கேட்டார்? உடனே ஐயப்பன் அவர்களுக்கு வேண்டிய பொருளைக் கொடுத்து நல்லபடியாக வாழ வைக்கிறேன் என்றார்.

அதன்படி அந்த இடத்தில் ஒரு பள்ளிவாசல் கட்டப்பட்டது. அத்துடன் எனது கோயிலுக்கு வரும் பக்தர்கள் உனது இடத்துக்கும் வருவார்கள். அவர்களை சோதித்தபின்பே நீ எனது மலைக்கு அவர்களை அனுப்பி வைக்க வேண்டும்.


இதன்படி சரியாக விரதமிருக்காதவர்கள், பிரம்மச்சாரியம் பூணாதவர்கள், இளம் பெண்கள் ஆகியோரை நீ இந்த இடத்திலேயே தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்று உத்தரவிட்டார். ஐயப்பனின் தாராள மனமறிந்த வாபர், ஐயப்பனின் சொல்படி இன்றுவரை பக்தர்களை சோதித்துக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இந்தப் பள்ளிவாசலில் பக்தர்களுக்கு இப்போதும் திருநீறு தருகிறார்கள். அங்கு விபூதி பூசியபிறகுதான் சபரிமலைக்கு செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.

ஐயப்ப விரதத்தின் ரகசியம்

ஐயப்பனை தரிசிக்கும் அனுபவத்தை போலவே, அவருடைய அவதார திருக்கதையும் மெய்சிலிர்க்கச் செய்யும். தேவர்களை மிகவும் கொடுமை படுத்தி வந்த பிரம்மாசுரனை அழிப்பதற்காக கிருஷ்ண பரமாத்மா மோகினி அவதாரம் எடுத்தார். அவருடைய அழகில் சிவபெருமான் மயங்கினார். அதன் விளைவாக, அய்யப்பன் அவதாரம் நிகழ்ந்தது. மகிஷி என்ற அரக்கியை அழிக்கவே அவர் அவதரித்தார். எனவே, கழுத்தில் மணி மாலையை அடை யாளமாக இட்டு காட்டில் விட்டு விட்டு அவர்கள் சென்றனர். இந்த நிலைமையில், மேற்கு தொடர்ச்சி மலையில் பந்தள நாட்டு பகுதியை ஆண்டு வந்த பந்தள மகாராஜா ராஜசேகரன், காட்டுக்கு வேட்டையாட சென்றபோது கழுத்தில் மணியுடன் கிடந்த குழந்தையை எடுத்து வந்து வளர்த்தார்.


அவருக்கு அதுவரை குழந்தை கிடையாது. எனவே, கழுத்தில் மணி இருந்ததால் மணிகண்டன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். இந்த சூழ்நிலையில், ராணிக்கு ஒரு ஆண்மகன் பிறந்தான். பெற்ற மகன் என்ப தால் பாசம் அதிகமானது. அந்த பாசத்தை பயன்படுத்திய அமைச்சர் துர்போதனை செய்யத் தொடங்கினார். அதன் விளைவாக தலை வலிப்பது போல நாடகமாடிய ராணி, புலிப்பால் கொண்டு வருமாறு 12 வயது பாலகன் மணிகண்டனை காட்டுக்குள் அனுப்பினார். காட்டுக்கு செல்லும்போது பம்பை ஆற்றில் மகிஷாசுரன் தங்கையான மகிஷி தடுத்து நிறுத்த கடும் போர் நடந்தது. முடிவில் மகிஷி வீழ்ந்தாள். ஒரு அழகிய பெண்ணாக சாப விமோசனம் பெற்றாள்.

விமோசனம் பெற்றதும் மணிகண்டனின் அழகிய உருவத்தை கண்டு மணம் முடிக்க ஆவல் கொண்டாள். ஆனால், மணிகண்டனோ, ‘நான் ஒரு நித்திய பிரம்மச்சாரி. ஐயப்பன் அவதாரமாக அவதரித்துள்ள என்னை நாடி எப்போது கன்னி ஐயப்பன்மார் வராமல் இருக்கின்றனரோ, அன்று நான் உ ன்னை திருமணம் செய்து கொள்கிறேன். அதுவரை மாளிகை புரத்து மஞ்சள் மாதாவாக இரு’ என அருள் பாலித்தார். பின்னர், ஏராளமான புலிகளை திரட்டிக் கொண்டு நாடு திரும்பினார். அவரை அந்த கோலத்தில் கண்ட ராணியும் மந்திரியும் அதிர்ச்சி அடைந்தனர். ராஜா ராஜசேகரனும் உண்மையை உணர்ந்து மணிகண்டனை வணங்கினார். அவருடைய வேண்டுகோளை ஏற்று அங்கேயே தங்க மணிகண்டன் சம்ம தித்தார்.


அவர் அம்பு எய்த இடத்தில் பம்பை நதிக்கரையில் மன்னன் ராஜசேகரன் கோவில் எழுப்பினான். அதில், பரசுராமர் பிரதிஷ்டை செய்த விக்கி ரகத்தில் ஐயப்பனாக மணிகண்டன் ஐக்கியமானார். ஐயப்பனை வஞ்சகமாக காட்டுக்கு அனுப்பிய ராணியும் மந்திரியும் 41 நாட்கள் கடும் அவதிப்பட்டனர். உடலை வருத்தி துன்பத்தை அனுபவித்தனர். அதுவே அவர்களுக்கு தண்டனையாக அமைந்தது. கடைசியாக ஐயப்பனை சரணடைந்தனர். அவர்கள் இருவரும் விரதம் இருந்ததன் விளைவே இன்று வரை ஐயப்பனை வேண்டி விரதம் இருக்கும் முறை தொடருகிறது. 41 நாட்கள் என்பது ஒரு மண்டலமாக, (48நாட்களாக) மாறி உள்ளது.

அரிக்கும் அரனுக்கும் மகனாக அரிகர புத்திரனாக பிறந்து பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தி ஐயப்பனாக உயர்ந்த சபரிமலை நாயகன், ஒவ்வொரு ஆண்டும் மகர சங்கராந்தி தினத்தன்று தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு ஜோதி வடிவாய் இன்றும் காட்சியளித்து வருகிறார்.

விரதம் அனுஷ்டிக்கும் முறை.


சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கடும் விரதம் மேற்கொள்ள வேண்டும். துவக்க நாளன்று ருத்ராட்சம் அல்லது துளசி மணிகளால் ஆன மாலையை கழுத்தில் அணிந்து கொள்ளவேண்டும். மாமிச உணவு, மீன், மதுபானங்கள்,புகையிலை, பெண்களுடன் தொடர்பு, அநாகரிகமான பேச்சுவார்த்தைகளை தவிர்த்தல் வேண்டும். தலை முடி, முகத்தில் வளரும் மீசை போன்றவைகளை திருத்தக்கூடாது. ஒவ்வொரு நாளும் அருகா மையில் உள்ள கோயில்களுக்கு சென்று பிரார்த்தனை செய்ய வேண்டும். கருப்பு, நீலம், காவி நிற ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும்.

முற்காலத்தில் சபரிமலைக்கு காடுகள் நிறைந்த பெருவழிப்பாதை வழியாக சுமார் 45 கிலோ மீட்டர் தூரம் நடந்தால் மட்டுமே செல்ல முடியும். விலங்குகள் அதிகம் வசிக்கும் இவ்வழியில் வெள்ளை நிற ஆடை அணிந்தால் வெகு வெகு தூரம் வரை தெரியும் என்பதாலும் காட்டு விலங்குகளிடமிருந்து தப்ப குறைந்த ஒளிச் சிதறல் கொண்ட கருப்பு, நீலம் நிற துணிகள் பயன்படுத்தினர். முந்தைய காலத்தில் காட்டு வழியாக சென்று பம்பா நதியை அடைய வெகு நாட்கள் ஆகும். எனவே, இறைவனுக்கு சமர்ப்பிக்கும் பொருட்களை ஒரு புறமும், வழி உணவுக்கான பொருட்கள் மற்றொரு புறமுமாக இருமுடி பையில் கட்டி எடுத்துச் சென்றனர்.

பள்ளிக்கட்டு அல்லது இருமுடி என்பது பருத்தித் துணியில் கைகளால் தைக்கப்பெற்ற இரு அறைகள் கொண்ட பை ஆகும். மாலை அணிந்த நாள் முதல் தினம்தோறும் குளிர்ந்த நீரில் குளிக்கவேண்டும், பிரம்மச்சரியம் மேற்கொள்ள வேண்டும், சவரம் செய்யக்கூடாது ஆகிய நெறிமுறைகளும் சபரிமலை யாத்திரை மேற்கொள்ள பக்தர்களை தயார்படுத்த உதவும். இந்தப் பயணத்தின் முதல் பகுதி எருமேலியில் இருந்து தொடங்கி அழுதா நதி வரை செல்லும். பிறகு அழுதா மலையைத்தாண்டி கரியம் தோடினை அடைந்து புனிதமான கரிமலையை ஏறிக் கடக்க வேண்டும்.

அங்கிருந்து செறியனவட்டம், வலியனவட்டம் ஆகியவற்றை கடந்து முடிவில் பம்பா நதியைச் அடையலாம். தற்போது பெரும்பாலான பக்தர்கள் வாகனங்கள் மூலம் மாற்று வழிகளில் பயணம் செய்து பம்பா நதிக்கரையை அடைகின்றனர். இதன் பிறகு அனைவரும் சுமார் நான்கு கிலோ மீட்டார் தூரம் கடுமையான ஏற்றத்துடன் கூடிய நீலிமலையில் ஏறிக்கடந்து சபரிமலையை அடையலாம். முன் காலத்தில் ஒற்றை வழிப்பாதையாக இருந்த இவ்வழி தற்போது மேம்படுத்தப்பட்டு இருபுறமும் கடைகள் மற்றும் மருத்துவ வசதிகள் அமைய பெற்றுள்ளது.

வழிபாட்டு இடங்கள்

அரசனாக அச்சன் கோவிலில்

சபரி மலை ஐயப்பன் கோயிலுக்கு அடுத்து பிரசித்தி பெற்றது அச்சன்கோவில் ஆகும். அச்சன் கோவில் அரசனான ஐயப்பன் வீற்றிருக்கும் பகுதி தமிழக,கேரள எல்லையிலுள்ள செங்கோட்டையிலிருந்து 28 கி.மீ தூரத்தில் உள்ளது. கேரள மாநிலத்தின் அடர்ந்த வனப்பகுதியில் இயற்கை சூழ்நிலையில் இந்த தலம் அமைந்துள்ளது.



அச்சன்கோவில் பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்டது. பல தலங்களில் உள்ள ஐயப்பன் விக்கிரகங்கள் தீயாலும், இதர இயற்கை சக்திகளாலும் பாதிப்படைந்து மாற்றப்பட்டவை. ஆனால் அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் மட்டும் பழைய விக்ரகம் இன்றும் உள்ளது. கார்த்திகை மாதம் 30ம் தேதி புனலூர் கருவூலத்திலிருந்து அச்சன்கோவில் அரசனுக்கு திரு ஆபரணங்கள் கொண்டுவரப்படும். மார்கழி முதல்நாள் காலை கொடியேற்றத்துடன் திருவிழா நடக்கும். ஐயப்ப தலங்களிலேயே 10 நாள் திருவிழா நடப்பது சபரி மலையிலும் அச்சன் கோயிலிலும் மட்டுமே ஆகும். அச்சன்கோவிலில் நடக்கும் விழாவில் 9வது நாளன்று தேரோட்டம் நடத்தப்படும். மற்ற ஐயப்ப தலங்களில் தேரோட்டம் கிடையாது. இந்த கோயிலுக்கு ஒரு விசேஷமுண்டு. விஷப்பூச்சிகள் தீண்டினால் நள்ளிரவு நேரமானாலும் நடை திறக்கப்பட்டு ஐயப்பனின் விக்ரகம் மீதுள்ள சந்தனத்தை பூசினால் விஷம் நீங்கிவிடும் என்று இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதற்காக வைத்தியரை நாடி யாரும் செல்வதில்லை.

படிப்பு தரும் குட்டி சாஸ்தா

கேரளாவில் குளத்துப்புழை என்ற இடத்தில் சாஸ்தா கோயில் உள்ளது. இங்கு சாஸ்தா, குழந்தை வடிவில் இருக்கிறார். கருவறை நுழைவு வாயில் சிறுவர்கள் புகும் அளவிற்கு உயரம் குறைந்து உள்ளது. செங்கோட்டையில் இருந்து 50 கி.மீ., தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. விஜயதசமி தினத்தன்று இங்கு "வித்தியாரம்பம்' எனும் நிகழ்ச்சி விமரிசையாக நடக்கிறது. இந்நாளில் பள்ளியில் புதிதாக சேரவிருக்கும் குழந்தைகளுக்கு எழுத்து பயிற்சி தரப்படும். குழந்தைகளின் படிப்பு சிறப்பாக அமைந்திட "குட்டி சாஸ்தா'அருள்புரிவார் என்பது நம்பிக்கை.

குழந்தை வரம் வேண்டி வருவோரின் துன்பமும் தீர்கிறது. கோயில் முன்பு மீன்கள் துள்ளி விளையாடும் ஆறும் ஓடுகிறது. குடும்பத்துடன் சென்று ஐயப்பனை வழிபட ஏற்ற தலம்.

மாப்பிள்ளை ஐயப்பன்

சபரிமலையில் பிரம்மச்சரியம் காக்கும் சாஸ்தா கிரகஸ்த (குடும்பம்) நிலையில் ஆரியங்காவில் இருக்கிறார். செங்கோட்டையில் இருந்து 20 கி.மீ.,தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. இங்கு சாஸ்தா, புஷ்கலாதேவியுடன் மாப்பிள்ளை கோலத்தில் காட்சி தருகிறார். சவுராஷ்டிரா இன மக்களின் குல தெய்வமான புஷ்கலாவிவே இங்கே சாஸ்தாவுடன் ஐக்கியமானார். அவரை சாஸ்தா திருமணம் செய்யும் காட்சியை ஒவ்வொரு டிசம்பர் மாதமும் இங்கு நடத்துவர். மதம் கொண்ட யானையை அடக்கி அதன் மேல் அமர்ந்த கோலத்தில் இங்கு சாஸ்தா இருப்பதால் "மதகஜ வாகன ரூபன்' என்றொரு பெயரும் உண்டு. இவரை வணங்கினால் தடைபட்ட திருமணங்கள் விரைந்து நடக்கும் என்பது நம்பிக்கை.

சொரிமுத்தையனார் கோயில்:

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகிலுள்ள சொரிமுத்தய்யனார் கோயிலில், தர்ம சாஸ்தாவான ஐயப்பனே இங்கு சொரிமுத்தைய்யனார் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இங்கு செல்வது முன்னொரு காலத்தில் மிகவும் கடினமானதாக இருந்தது. பொதிகை மலைக்காடுகளில், வனவிலங்குகள் ஏராளமாக வசிக்கும் காட்டுப்பகுதியில் தாமிரபரணி ஆற்றின் நடுவே இந்தக் கோயில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆடி அமாவாசை அன்று இங்கு நடக்கும் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.தாமிரபரணியில் நீராடி இந்த ஐயனை வழிபட்டால் எப்படிப்பட்ட பாவமும் விலகும் என்பது ஐதீகம். இதுகோயில் மட்டுமல்ல. மிகச்சிறந்த சுற்றுலாத்தலமும் ஆகும்.

மாம்பழத்துறை பத்ரகாளி

ஆரியங்காவில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் உள்ளது மாம்பழத்துறை தலம். புஷ்கலையை மணம் முடித்த சாஸ்தா தனது தொழிலுக்கு அவள் தொந்தரவாக இருந்து விடக்கூடாது என்பதற்காக இத்தலத்தில் தங்கும்படி செய்தார். இங்கு புஷ்கலை தேவி, "பகவதி' அம்மனாக "பத்திரகாளி' வடிவத்தில் அருளுகிறாள்.

பந்தளம்

சபரிமலையில் இருந்து 88 கி.மீ தூரத்தில் திருவனந்தபுரத்தையும்,கோட்டயத்தையும் இணைக்கும் பாதையில் உள்ளது பந்தளம். பந்தள ராஜாவின் குடும்ப கோயில் இங்குள்ளது.மகர விளக்கு திருவிழாவின் மிக முக்கியமான நிகழ்ச்சியான திருஆபரண பெட்டி இங்கிருந்துதான் புறப்படுகிறது. மார்கழி 26ம் தேதி பந்தளத்திலிருந்து புறப்படும் திருவாபரணம் தை முதல் தேதி சபரிமலை வந்து சேருகிறது.


மகர சங்கிரம தினத்தில் ஜோதிபாய் ஐயன் தெரியும் போது மட்டுமே சபரிமலை ஐயப்பனுக்கு இத்திருவாபரணங்கள் சாத்தப்பட்டிருக்கும்.

ஐயப்பன் திருவுருவில் அணிவிக்கும் ரத்ன மகுடம், நூபுரம், ஆரம், கடகம்,அங்குலியங்கள், பதக்கம் ஆகியவை ஒரு பெட்டியிலும், மாளிகை புறத்-தம்மனுக்கு அணிவிக்க வேண்டிய ஆபரணங்கள் மற்றொரு பெட்டியிலும் கொண்டு வருவர். தை முதல்நாள் பிற்பகலில் திருஆபரண பெட்டி சபரிபீடம் வந்தடையும்போது, வானத்தில் பருந்துகள் தோன்றி வட்டமிட்டு, திருஆபரண பெட்டியுடன் தொடர்ந்து வரும் காட்சி கண்கொள்ளா அதிசய காட்சி.
  
ஐயப்பனின் அறுபடை வீடுகள்


தமிழ் கடவுளான முருகனைப் போல் தர்ம சாஸ்தாவான ஐயப்பனுக்கும் அறுபடை வீடுகள் உள்ளன. அவை:

1 ஆரியங்காவு
2 அச்சன்கோவில்
3 குளத்துப்புழா
4 எரிமேலி
5 பந்தளம்
6 சபரிமலை

1. ஆரியங்காவு

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில், கேரள மாநிலத்தில் இந்த ஊர் அமைந்துள்ளது. இங்குள்ள கோயிலில் ராஷ்ட்ர குலதேவி புஷ்கலையுடன் அரசராக அய்யப்பன் காட்சி தருகிறார்.

2. அச்சன்கோவில்

செங்கோட்டையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் கேரள மாநிலத்தின் அடர்ந்த வனப்பகுதியில் இது அமைந்துள்ளது. பரசுராமரால் தோற்று விக்கப்பட்ட இந்த கோயிலின் விக்ரகம் மட்டுமே பழமை மாறாதது என்கிறார்கள். இங்கு வனராஜனாக அமர்ந்த நிலையில் கையில் அமுதமும் கருப்ப னின் காந்தமலை வாளும் ஏந்திய திருக்கோலத்தில் அய்யப்பனை தரிசிக்கலாம். இவருக்கு இருபுறமும் பூர்ணா, புஷ்கலை தேவியர் மலர் தூவுவது போல் காட்சி தருகின்றனர். இங்குள்ள ஐயப்பனை ‘கல்யாண சாஸ்தா‘ என்று அழைக்கிறார்கள். இதனால், திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு அதிகம் வந்து வழிபடுகின்றனர்.

3. குளத்துப்புழா

செங்கோட்டையில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் கேரளாவில் அமைந்துள்ளது இது. இங்கு அய்யப்பன் குழந்தை வடிவில் குடி கொண்டுள்ள தால் ‘பால சாஸ்தா‘ என்று அழைக்கப்படுகிறார். இதனை உறுதிப்படுத்தும் வகையில், இந்த கோவில் வாசலும் சிறு குழந்தைகள் நுழையும் அள வுக்கே கட்டப்பட்டு உள்ளது.

4. எரிமேலி

கேரளாவில் உள்ள இத்தலத்தில் அய்யப்பன் கைகளில் வில், அம்பு ஏந்தி வேடன் போன்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். எருமேலியும் கேரளாவி லேயே உள்ளது.

5. பந்தளம்

இந்த தலத்தில் தான் பந்தள மன்னன் ராஜசேகர பாண்டியனால் அய்யப்பன் சீரோடும், சிறப்போடும் வளர்க்கப்பட்டார். அந்த நாட்டு மன்னன் கட்டிய கோயில் இங்கு உள்ளது. இங்கு சுவாமி ஐயப்பனுக்குரிய உரிய திருஆபரணங்கள் வைக்கப்பட்டுள்ளன. பந்தளம் என்பது ஐயப்பன் வாழ்ந்ததாக கரு தப்படும் பந்தளம் அரண்மனை இருக்கும் இடம். இது அச்சன்கோவில் நதியின் கரையில் அமைந்துள்ளது. மகரவிளக்கின் போது இங்கிருந்து கொண்டு செல்லப்படும் ஆபரணங்கள் தான் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படுகின்றன. இதன் அருகில் செங்கனூர் ரயில் நிலையம் உள்ளது.

6. சபரிமலை

கேரளாவில் உள்ள இங்கு தர்மசாஸ்தாவான ஐயப்பன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு யோக சின் முத்திரை தாங்கி கேட்பவர்களுக்கு கேட்ட வரம் வாரி வழங்கும் வள்ளலாக காட்சி தருகிறார். சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், ஐயப்பனின் அறுபடை வீடுகளான இந்த 6கோயில்களுக்கும் சென்று வழிபட்டால் சீரும் சிறப்பும் பெற்று வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.

ருத்ராட்சம், துளசி மாலை அணிய வேண்டும்

சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் ருத்ராட்ச மாலையும், துளசி மாலையும் அணிந்து விரதமிருந்து செல்வார்கள். சிவனும் பெருமாளும் இணைந்து ஒரு மாபெரும் சக்தியாக உருவானவர் ஐயப்பன். இதில் ருத்ராட்சம் என்பது சிவனின் சின்னமாகும். துளசி என்பது பெருமாளுக்கு மிகவும் பிடித்தமானது. இது தவிர, துளசியின் கதையில் துளசியிடம் மஹாலட்சுமி வாசம் செய்கிறாள். ஆகையால் மலைக்குப் போகும் பக்தர்களுக்கு ஐஸ்வர்யம், சுபீட்சம் கிடைக்கும் என நம்பிக்கையும் உண்டு.

கார்த்திகை மாதத்தில் தொடங்கி, தை மாதம் வரை குளிர் இருப்பது நம் எல்லோருக்கும் தெரியும். இந்தத் துளசிக்கு உஷ்ணம் கொடுக்கும் தன்மை உண்டு. சளி, ஜலதோஷம் என்றால் துளசி கஷாயம் சாப்பிடுவது வழக்கம். ஐயப்ப பக்தர்கள், உடலில் வெப்பம் கொடுக்கத்தான் இந்தத் துளசி மாலையை அணிகின்றனர். மஹாவிஷ்ணு பாற்கடலில் சயனித்திருக்க, அவர் கழுத்தையும் துளசி மாலை அலங்கரிக்கும். இதன் காரணமாக ஐயப்ப பக்தர்கள் ருத்ராட்சம் மற்றும் துளசி மாலையணிந்து சபரிமலை செல்கின்றனர்.
சபரி மலை செல்ல விரும்பும் பக்தர்கள் கார்த்திகை மாதம் முதல் நாள் அல்லது 19ம் தேதிக்குள் ருத்ராட்சம், துளசி மணிகளால் செய்யப்பட்ட மாலையை அணியவேண்டும். மது, மாமிசம், தவிர்க்க வேண்டும். கருப்பு,நீலம், குங்குமப்பூ உடைகள் அணிந்து விரதங்கள் கடை பிடிக்கவேண்டும். காட்டுப் பகுதிக்குள் செல்லவேண்டும் என்பதால் இதுபோன்ற உடைகள் அணிவது வழக்கமாகிவிட்டது. கருப்பு, நீல நிறங்கள் மனிதனை விலங்கு களிலிருந்து காப்பாற்றும்.

சாதாரண படுக்கையில் தலையணை தவிர்த்து உறங்க வேண்டும். காலணி,குடைகளை உபயோகிக்க கூடாது. பொதுவாக 41 நாட்கள் விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. மலைக்கு புறப்படும் முன்பு பெற்றோரை வணங்க வேண்டும்.

நடை திறக்கும் காலம்

ஆண்டுதோறும் சாதி, மத, இன வேறுபாடின்றி சுமார் 45 முதல் 50 மில்லியன் பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலை சென்று சுவாமி ஐயப்பனை தரிசிக்கின்றனர். 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் செல்ல அனுமதி இல்லை. இதற்கு ஐயப்பன் ஒரு பிரம்மச்சாரி என்ற ஐதீகமே முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. ஆண்டு தோறும் மண்டல பூஜை கார்த்திகை 1ம் தேதி முதல் 41 நாட்களும், மகர சங்கராந்தியின்போதும், மகர விளக்கு அன்றும் ஏப்ரல் 14ல் வரும் விஷுவின்போதும் மற்றும் ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் மட்டும் சபரிமலை கோயில் நடை திறக்கப்படும்.


சனி கிரகத்தின் தேவன் ஐயப்பன்

ஐயப்பன் சனி கிரகத்தின் தேவனாக கருதப்படுகிறார். சனி தோஷம் மாறுவதற்கு சாஸ்தாவின் அருளே போதுமானது. ஏழரை சனி, கண்டக சனி மற்றும் அஷ்டம சனி ஆகியவை எல்லாம் ஐயப்ப தரிசனத்தால் மாறிவிடும். ஐயப்பனுக்கு பூஜை செய்து வழிபட்டால் சனியால் ஏற்படும் அனைத்து தீங்குகளும் மறைந்துவிடும். சனி தோஷத்தை அகற்ற ஐயப்பனுக்கு நீராஞ்சன பூஜை செய்து வழிபடுவது தான் மிகச்சிறந்தது. நெய்யபிஷேகம் செய்தாலும் சனியால் ஏற்படும் தீங்குகளை அகற்றலாம்.

சிறப்பு வாய்ந்த புண்ணியத் தலம் சபரிமலை

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சிறப்பு வாய்ந்த புண்ணியத் தலம் சபரிமலை. மஹிஷி என்ற அரக்கியை கொன்ற பிறகு சுவாமி ஐயப்பன் இங்கு தியானம் செய்ததாக ஐதீகம். கடல்நீர் மட்டத்திலிருந்து 914 அடி உயரத்தில் பதினெட்டு மலைகளுக்கு இடையே மலையின் உச்சியில் காடுகள் சூழ அமைந்துள்ளது.
 
 ஐயப்பனின் தாலாட்டு - ஹரிவராசனம்

ஒவ்வொரு நாள் இரவும் ஐய்யப்பன் கோயில் நடை சார்த்தப்படுவதற்கு முன்பு ஹரிவராசனம் பாடல் இசைக்கப்படுகிறது. இது இறைவனை உறங்கச்செய்யும் தாலாட்டுப்பாடல். ஸ்ரீகம்பக்குடி குளத்தூர் ஸ்ரீனிவாச அய்யர், கோயிலில்,சுவாமி பாடலைப் பாடிவந்தார். சுவாமி விமோசனானந் தாவின் முயற்சியால் கோயிலின் தந்திரி மற்றும் மேல் சாந்தி இந்தப்பாடலை ஒரு தாலாட்டு பாட்டாக ஏற்றுக்கொண்டார். இந்த பாடல் 352 எழுத்துக்கள் 106 சொற்கள் மற்றும் 32 வரிகள் உடையது.

இருமுடி


பருத்தித்துணியில் இரண்டு அறைகளாகப் பிரித்து அதில் புனிதமான நெய்யை கொண்டும் ஐய்யப்பன் விக்கிரகத்தின் மீது நெய் அபிஷேகம் செய்யப்படும்.

ஐயப்பனுக்கு காணிக்கையாய் கொடுக்க நெய் கொண்டு செல்வது காலம் காலமாய் இருந்து வருகிறது. இந்த வழக்கம் ஏன் ஏற்பட்டது தெரியுமா?
இருமுடியில் நெய்த்தேங்காய் சுமந்து செல்வதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது.

முதல் காரணம்: பந்தளராஜன் மனைவிக்கு தலைவலி ஏற்படுகிறது. உடனே புலிப்பாலால் தலைவலி தீரும் என பொய்க்காரணம் காட்டி ஐயப்பனை காட்டுக்கு அனுப்புகின்றனர். வளர்ப்புத் தந்தையான பந்தள மன்னன் மிக வருத்தத்துடன் மகனை வழியனுப்பும் போது, காட்டில் உண்பதற்காக பல நாட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக நெய்யில் தயாரித்த சில உணவு வகைகளை ஒரு முடியாகக் கட்டினான். அதே சமயம், சிவபக்தனான பந்தள மன்னன், முக்கண்ணனான சிவனின் அம்சம்போல் ஒரு தேங்காயை மற்றொரு முடியில் வைத்துக் கொடுத்தான். அந்த இருமுடிகளையும் இணைத்து திருமுடிமேல் ஏந்திய சிறுவன் மணிகண்டன், புலிப்பால் கொண்டுவர காட்டுக்குச் சென்றான். இருமுடியை முதன்முதலில் தலையில் ஏற்றியது ஸ்ரீஐயப்பன் என்று புராணம் கூறுகிறது. இவ்வாறு ஐயப்பன் செய்தது போலவே,இருமுடியை தலையில் தாங்கி ஐயப்பனை வழிபடும் முறையாக அதுமாறி,நாளடைவில் நிலைத்தும்விட்டது.

இரண்டாவது காரணம்: ஐயப்பனின் வளர்ப்புத் தந்தை பந்தளமகாராஜா ராஜசேகரன் ஐயப்பனை விட்டு பிரிந்து செல்லும் காலம் வந்தது. ஐயப்பன் பிரியும் நேரத்தில் மணிகண்டா, நீ காட்டுக்குள் குடியிருக்கப் போவதாய் சொல்கிறாய். அங்கே மலைகளைக் கடந்து வரவேண்டும். அவை சாதாரண மலையல்ல. வயதான நான் உன்னைக் காண எப்படி வருவேன் என்றார். அதற்கு மணிகண்டன் உங்களுக்கு ஒரு கருடன் வழிகாட்டும். அந்த வழிகாட்டுதலின்படி நீங்கள் எனது இடத்திற்கு வந்து விடலாம் என அருள்பாலித்தார். அதன்படி ஆண்டுக்கு ஒருமுறை ஐயப்பனைக் காண பந்தளராஜா மலைக்குச் செல்வார்.மகனை வெறுங்கையோடா பார்க்கச் செல்ல முடியும். அவனுக்கு பிடித்தமானவற்றை எல்லாம் எடுத்துச் செல்ல வேண்டாமா? என்ன கொண்டு செல்வது என யோசித்தார். நெய் இலகுவில் கெட்டு போகாத ஒன்று.

எனவே நெய்யில் செய்த பலகாரங்களை கொண்டு செல்வார். மேலும் தனி நெய்யை தேங்காய்க்குள் ஊற்றி கொண்டு சென்றால் இன்னும் பல நாள் கெடாமல் இருக்கும். ஐயப்பனைக் காணப் செல்வதென்றால் எளிதான காரியமா? இன்று போல அன்று பஸ், ரயிலெல்லாம் கிடையாதே! எனவே பந்தளத்திலிருந்து நடந்தே மலை ஏறுவார். மலையை அடைய பல நாட்களாகும்.எனவே கெட்டுப் போகாத நெய்யை எடுத்துச் செல்லும் வழக்கம் உருவானது. இருமுடிகட்டில் முக்கியமானது நெய் தேங்காய்தான். அத்துடன் ஐயப்பன் அரண்மனையில் இருந்த போது அணிந்த நகைகளையும் எடுத்துச் சென்ற பழக்கம் நாளடைவில் உருவானது. அது இப்போது பெரும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. அன்று கருடன் வழிகாட்டுவது விசேஷ அம்சம். வயதான அவர் மலை ஏற முடியாமல் ஐயோ அப்பா என்று சொல்லியபடியே பல இடங்களில் உட்கார்ந்தும் விடுவார். இந்தச் சொற்களே திரிந்து ஐயப்பன் என ஆனதாகவும் சொல்லப்படுவதுண்டு.

சபரிமலைக்கு அருகில் உள்ள புகழ் பெற்ற கோயில்கள்


1. நிலைக்கல் கோயில், பத்தனம்திட்டா


2. மலையாளப்புழா கோயில், பத்தனம்திட்டா


3. ஆரன்முலா பார்த்தசாரதி கோயில்


4. மகாதேவர் கோயில், செங்கன்னூர்


5. ஸ்ரீவல்லபா கோயில், திருவல்லா


6. கவியூர்ஆஞ்சநேயா கோயில், திருவல்லா


7. செட்டிக்குளங்கரை தேவி கோயில், மாவேலிக்கரா


8. மன்னார்சாலை கோயில், ஹரிப்பாடு


9. சுப்பிரமணியர் கோயில், ஹரிப்பாடு


10. சக்குளத்துக்காவு கோயில், திருவல்லா


11. கண்டியூர் மகாசிவன் கோயில், மாவேலிக்கரா


12. சுனக்கற மகாதேவர் கோயில், மாவேலிக்கரா


13. பதநிலம் பரப்பிரம்மா கோயில், நூரநாடு.

நெய் அபிஷேகம்

பக்தர்கள் ஆசாரத்துடன் விரதம் இருந்து தலையில் சுமந்து வரும் இருமுடியில் காணப்படும் புனிதமான நெய்யைக் கொண்டு ஐயப்பனின் மூல விக்கி ரகத்தின் மீது நெய்யபிஷேகம் செய்யப்படும். ஜீவாத்மா மற்றும் பரமாத்மாவின் புனித சேர்க்கையைக் குறிக்கும் தத்துவமாக இது கருதப்படுகிறது. முதல் முறையாக சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள் (கன்னி அய்யப்பன்மார்கள் எனப்படுவோர்) குங்குமப்பூ நிறம் கொண்ட இருமு டியை சுமந்துவர வேண்டும். இதர புனிதப்பயணம் மேற்கொள்வோர் கருப்பு அல்லது நீல வண்ணத்திலான இருமுடிகளை பயன்படுத்துவார்கள்.

அகம் பிரம்மாஸ்மி மற்றும் தத்வமசி

சபரிமலை வந்து ஐயப்பனை தரிசிக்கும் பக்தர்களுக்கு இணையற்ற அறிவு கிடைக்கும் என்பது ஐதீகம். சமஸ்கிருத மொழியில் ‘தத்வம் அசி’ என்ப தற்கு “நீயும் ஒரு கடவுள்’’ என்பதற்கான ஞானமே. இதனால் புனிதப்பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் ஒருவரை ஒருவர் சுவாமி என்று அழைக்கி றார்கள். மேலும் அனைவரும் அந்த பரமாத்மா அல்லது உலகளாவிய ஆத்மா என்ற நிலையை அடைய வேண்டும் என்ற வேட்கையை இச்சொல் குறிக்கிற

கோயில் பிரசாதம்

சபரிமலை கோயிலில் அரவணை மற்றும் அப்பம் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. இது அரிசி, சர்க்கரை போன்ற பொருட்களால் ஆனது. சபரிமலையில் இந்த பிரசாதத்தை செய்வதற்காக அரிசி, செட்டிக்குளக்கரை தேவி கோயிலில் இருந்து பெறப்படுகிறது.

கே.ஜே.யேசுதாஸ் பாடிய ஹரிவராசனம் பாடல்
30 வருடங்களுக்கும் மேலாக பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ் பாடிய ஹரிவராசனம் பாடலே சபரிமலை கோயிலில் ஒலிபரப்பப்படுகின்றது. அச்சமயம் பக்தர்கள் மட்டுமல்லாது அரசுப் பணியில் ஈடுபட்டுள்ளோர்,வணிகம் செய்வோர் கூட எழுந்து நிற்பர்.


சபரிமலைக்கு அருகிலுள்ள ரயில் நிலையங்கள்

சபரிமலைக்கு அருகே கோட்டயம், பம்பை மற்றும் திருவல்லா ஆகிய ரயில் நிலையங்கள் உள்ளன. சென்னை உட்பட தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள்,பெங்களூர், ஐதராபாத் போன்ற நகரங்களிலிருந்து வருபவர்கள் கோட்டயம் அல்லது செங்கணூர் ரயில் நிலையங்களில் இறங்கி பம்பைக்கு கார் அல்லது பஸ்களில் செல்லலாம். இந்த ரயில் நிலையங்களில் இருந்து பம்பைக்கு சீசன் சமயங்களில் 24 மணிநேரமும் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. கேரள அரசு போக்குவரத்துக் கழகம் இந்த ரயில் நிலையங்களில் இருந்து பம்பைக்கு சிறப்பு பஸ்களை இயக்குகிறது.



No comments:

Post a Comment