Sunday, 18 December 2016

கங்கை கரையில் - 18


             ஹரித்வார் பயனம்




கடோத்கஜன்

பீமனுக்கும் ஹிடும்பிக்கும் பிறந்தவன் தான் கடோத்கஜன். அரக்கு மாளிகையிலிருந்து உயிர் தப்பிய பஞ்ச பாண்டவர்கள், தாய் குந்தியுடன் ஹிடும்பிவனம் என்ற காட்டிற்கு வந்தார்கள். அந்த வனத்தை ஆண்டு வந்த ஹிடும்பன், பஞ்ச பாண்டவர்களைக் கொன்று வருமாறு, தன் தங்கை ஹிடும்பியை அனுப்பினான்.ஹிடும்பி, அரக்கி உருவத்தை, அழகான இளம்பெண் உருவமாக மாற்றிக் கொண்டு சென்றாள். பாண்டவர்களுக்காக, நீர் கொண்டு வருவதற்காகக் கிளம்பிய பீமனை ஹிடும்பி பார்த்தாள். பீமன் மீது காதல் கொண்டு அவனை மணக்க விரும்பினாள். ஹிடும்பியைத் தொடர்ந்து, ஹிடும்பன் வந்தான்.

 பாண்டவர்களுடன் யுத்தம் செய்து உயிரிழந்தான். ஹிடும்பி, பீமனை மணம் புரிந்து கொண்டாள். அவர்களுக்குப் பிறந்த பிள்ளை கடோத்கஜன்.

அர்ஜுனன்  கர்ணனால்  கொல்லப்படாமல் காத்தவன் கடோத்கஜன் . வீரமும் தீரமும்  கீர்த்தியும் நிறைந்தவன். பாண்டவர்களின் அன்புக்கும் அபிமானத்திற்கும் உரியவன் . அரக்கர் குலத்திலே தோன்றினாலும் பீமனின் மகனானதால் உத்தமமான பண்புகள் நிறைந்தவனாகத் திகழ்ந்து தியாகம் புரிந்தவன். பாண்டவர் பரம்பரையில் முதலில் பிறந்தவன் கடோத்கஜன்.  ஆனால் எந்தவிதமான உரிமையையோ பதவியையோ அவன் எதிர்பார்க்கவில்லை. அதேசமயம், கடோத்கஜன் உயிர்த் தியாகம் செய்யவில்லை என்றால், பாண்டவர்கள் வெற்றி பெற்றிருக்கவே முடியாது. அர்ஜுனன் வாழ்வும் முடிந்திருக்கும்.அப்படி   நடக்காமல், தன் வாழ்வையே முடித்துக் கொண்ட, மிகவும் உயர்ந்ததான ஒரு புண்ணிய ஆத்மாதான் கடோத்கஜன்.

கிருஷ்ணபரமாத்மாவின் ஆலோசனைப்படி கடோத்கஜன் மணிப்பூரின் அரசன் முரண் என்பவனின் மகள் கரகண்கடியை வென்று வந்து அவளை திருமணம் செய்து கொண்டான்.

 அரசளங்குமரி மிகவும் புத்திக் கூர்மை மிக்கவள். ஆகவே அவள் தன்னை யார் வெல்கிறார்களோ அவரைத்தான் திருமணம் செய்து கொள்வதாக அறிவித்திருந்தாள். பலர் முயன்று அவளிடம் தோற்று அவளுக்கு அடிமையாயினர். கிருஷ்ணரின் ஆசியுடன்  கடோத்கஜன் அவளுடன் போட்டியிட வந்தான்.  யார் முதலில் பதில் உடனே பதில் சொல்ல தயங்குகிறார்களோ அவர்கள் தோற்றவர்கள் என்பது போட்டிகளின் விதி. அரச குமாரி கேட்ட கேள்விகளுக்கெல்லாம் கடோத்கஜன் டாண் டாண் என்று பதில் சொல்லி விட்டான். பின் அவன் அரசகுமாரியிடம் ஒரு கதை சொன்னான்.

மனைவி  இல்லாத ஒருவர் தனது பெண் குழந்தையை தனது நண்பனின் குழந்தையை தனது நண்பனின் குழந்தை என்று தானே வளர்த்து வந்தார்.  அந்த குழந்தையும் வளர்ந்து பெரியவளானாள். அவரே அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார் அவர்களுக்கும் ஒரு பெண் பிறந்தாள்.

அந்த பெண்ணுக்கு அவர் என்ன உறவு? என்று கடோத்கஜன் கேட்டார். இளவரசி குழம்பி ”ஙே!” என்று முழித்தாள்..
இதனால் அந்த அரசகுமாரி தோல்வியடைய அவளை  கிருஷ்ண பரமாத்மா கூறியபடி இந்திரபிரஸ்தம் அழைத்து வந்து திருமணம் செய்து கொண்டான். இவர்களின் குழந்தைதான் பார்பரிக். இவன் பிறந்தவுடன் இவன் தலை முடி சிம்மத்தின் பிடரி மயிர் போல இருந்ததால் வலிமை மிக்கவன் என்ற பொருளில் இவனுக்கு இந்தப் பெயர் வைத்தனர்.

இவன் கிருஷ்ண பரமாத்மாவின் ஆலோசனைப் படி துர்கா தேவியை உபாசித்து யாராலும் வெல்ல முடியாத வரம் பெற்றான். மேலும்  மிகவும் விசேஷமான மூன்று அம்புகளைப் பெற்றான். முதல் அம்பு இவனது எதிரிகளின் மேல்  அடையாளமிடும். இரண்டாவது அம்பு இவனது நண்பர்களை அடையாளமிடும். மூன்றாவது அம்பு அடையாளம் இட்ட பகைவர்கள் அனைவரையும் அழித்து விடும். இதனால் இவன். மூன்று அம்புக்காரன் என்றும் அழைக்கப்பட்டான். அக்னி பகவான் இவனுக்கு இந்த அம்புகளை எய்ய வல்ல ஒரு திவ்ய அம்பை அளித்தார்.

மஹாபாரதப்போர் முடிவான போது பார்பரிக் அந்த யுத்தத்தில் கலந்து கொள்ள விரும்பினான் அவன் தன் தாயிடம் அதற்காக அனுமதி கேட்ட போது அவள் யார் நலிவுற்றிருக்கிறார்களோ அவர்கள் பக்கம் நீ சேர்ந்து போரிடு என்று ஆசி அளித்தாள். தன் தாய்க்கு அது போலவே செய்வதாக வாக்களித்துவிட்டு, வீரதீர, பார்பரிக் தனது நீலக்குதிரையில் ஏறி குருஷேத்திரத்தை நோக்கி பாய்ந்து வந்து கொண்டிருந்தான்.  அவன் வருவதை தனது ஞான திருஷ்டியால் அறிந்துகொண்ட கண்ணபிரான் அவனை சோதிக்க வந்தார். கிருஷ்ணர் பிராமண வேடத்தில் அவன் காற்றென பாய்ந்து வரும் பாதையில் ஒரு ஆலமரத்தடியில் அமர்ந்து கொண்டார். ஒரு பிராமணரை ஆலமரத்தடியில் கண்ட பார்பரிக், குதிரையை விட்டு இறங்கி அவருக்கு நமஸ்காரம் செய்தான்.  பிராமணராக கள்ள வேடம் பூண்ட பகவான் ஏதும் அறியாதது போல, இளைஞனே! இவ்வளவு வேகமாக எங்கு செல்கின்றாய்? என்று வினவினார். அதற்கு பார்பரிக் மஹாபாரதப் போரில் கலந்து கொள்ள செல்கின்றேன் என்று பதிலிறுத்தான்.  அவனைப் பார்த்து சிரித்துக்கொண்டே கண்ணன், மூன்று அம்புகளை மட்டும் வைத்துக்கொண்டு நீ என்ன செய்து விட முடியும் என்று கேட்டார். அதற்கு அவன் என் ஒரு அம்பு போதும் இப்போரில் ஈடுபடும் அத்தனை வீர்ர்களையும் கொல்ல, என்னுடைய மூன்று அம்புகளை நான் பயன்படுத்தினால் மூன்று உலகங்களிலும் பிரளயமே ஏற்பட்டு விடும் என்று பெருமையாக கூறினான். வீணாக மார் தட்ட வேண்டும், முடிந்தால் இந்த ஆலமரத்தின் அத்தனை இலைகலையும் உனது அம்பால் ஒன்றாகக் கட்டு பார்க்கலாம் என்று கிருஷ்ணர் கூறினார். அதற்கு பார்பரிக் இது வெறும் தற்பெருமை அல்ல எனது கடுமையான தவத்தின் பலன் மற்றும் அம்பாளின் அருள், இப்போதே நான் அதை செய்து காட்டுகின்றேன் என்று கண்ணை மூடி அம்பாளை தியானித்து அம்பை எய்தான். அதற்குள் கிருஷ்ணர் அந்த ஆலமரத்தின் ஒரு இலையை பறித்து தனது வலது கால் கட்டை விரலின் கீழே மறைத்து வைத்துக்கொண்டார். பார்பரிக் எய்த முதல் அம்பு ஆலமரத்தின் அனைத்து இலைகளையும் கட்டி விட்டு  பிராமணனாக வந்த மாய கண்ணனின் கட்டை விரலை சுற்றி வட்டமிட்டது. அம்பு ஏன் இன்னும் உனது அம்புறாதூணிக்கு வரவில்லை என்று பிராமணன் கேட்க, உங்களது பாதத்தின் அடியில் ஒரு இலை இருக்க வேண்டும்  ஆகவே தான் அம்பு தங்கள் பாத்ததை வட்டமிடுகின்றது என்றான். எனது கட்டை விரலை துளைத்து செல்ல்லாமே என்று பிராமணர் கேட்க, அந்த அம்பு இலைகளை மட்டுமே கட்டுவதற்காக எய்யப்பட்டது தங்கள் கட்டை விரலை துளைக்க அல்ல என்றான் பார்பரிக். எனவே கிருஷ்ணர் தந்து பாதத்தை உயர்த்த அந்த இலையையும் கோர்த்துக் கொண்டு அவனது அம்புறாத்தூணிக்கு  திரும்பியது. பார்பரிக்கின் அம்பின் திறத்தை அறிந்து கொண்டார் கிருஷ்ணர்.

பிறகு பிராமணர் பார்பரிக்கிடம் நீ எங்கு செல்கிறாய் என்று கேட்டார். பாரதப்போரில் கலந்து கொள்ள செல்கிறேன் என்றான். பிறகு கண்ணன், வீரனே !, நீ  யார் பக்கம் சேர்ந்து போரிடப்போகிறாய்?  என்று கேட்டார். அதற்கு அவன் நான் போரில் கலந்து கொள்ள செல்லவில்லை,  ஆனால் யார் தோற்கும் நிலையில் இருக்கின்றார்களோ அவர்கள் பக்கம் சேர்ந்து கொள்வேன் என்று கூறினான். எப்படியும் கௌரவர்கள்தான் தோல்வியடையப் போகிறார்கள் என்பதை அறிந்த கண்ணபிரான் இந்த வீரன் கௌரவர்கள் பக்கம் சேர்ந்து போரிட்டால் பாண்டவர்கள் வெல்வது கடினம் என்பதை உணர்ந்து கள்ளத்தனமாக,   ஒரு சத்திரியன்  மிக சிறந்த வீரனாக இருந்தால் மட்டும் போதாது, சிறந்த தர்மவானாகவும் இருக்க வேண்டும் என்று கூறினான்.  அதற்கு பார்பரிக், பிராமணரே! தங்களுக்கு என்ன வேண்டுமோ?  அதைக் கேளுங்கள் நான் அதை தானமாகத் தருகிகின்றேன் என்று கூறினான். முதலில் நீ என்ன கேட்டாலும் தருவதாக சத்தியம் செய்து தருமாறு கேட்டார் கபட வேடதாரி கிருஷ்ணர். அவனும் என்ன கேட்டாலும் தருவதாக வாக்களித்தான்.  கண்ணன் நீ உனது தலையை தானமாக கொடு என்று கேட்க, பார்ப்பரிகிற்கு தூக்கிவாரி போட்டது. அவர் வெறும் பிராமணரில்லை என்பதை உணர்ந்து கொண்டு தாங்கள் யார்? எதற்காக எனது தலையை தானமாக கேட்கின்றீர்கள் என்று வினவினான். கிருஷ்ணரும் தந்து திவ்ய மங்கள சொரூபத்தை பார்பரிக்கிற்கு காட்டி அருளினார். போர் துவங்குவதற்கு முன் ஒரு மிகச் சிறந்த வீரனை பலியிடுவது வழக்கம் உன்னை விட சிறந்த வீரன் யார் உள்ளார் எனவேதான் உனது தலையை தானமாகக் கேட்டேன் என்றான் கிருஷ்ண பரமாத்மா. அதற்கு பார்பரிக் கிருஷ்ணா, மஹாபாரதப் போரை பார்க்க வேண்டும் என்ற என்னுடைய ஆசையை மட்டும் நிறைவேற்றித் தரவேண்டும் என்று கோரினான். கிருஷ்ணரும் அவ்விதமே வரம் தந்தார்.

அதற்கு பிறகு பந்குனி மாதம் சுக்லபக்ஷ ஏகாதசியன்று விரதம் இருந்து துவாதசியன்று  தான் வாக்களித்தபடி தனது தலையைஅரிந்து கண்ணனுக்கு தானமாக அளித்தான். அதனால் அவர் தலை அளித்த வீரன் என்றும் போற்றப்படுகிறார்.

 கிருஷ்ணா ஏன் இவ்வாறு ஒரு அருமையான வீரனின் தலையை நீ தானமாகப் பெற்றாய் என்று பாண்டவர்கள் கேட்க, கண்ணபிரான் கூறினார். சென்ற பிறவியில் இவன் சூரியவசன் என்ற கந்தர்வன். ஒரு சமயம் அனைத்து தேவர்களும் மஹாவிஷ்ணுவிடம் சென்று பூலோகத்தில் பாவம் பெருகிவிட்டது. துஷ்டர்கள் அதிகமாகி விட்டனர் தாங்கள் தான் இரட்சித்து அருள வேண்டும் என்று விண்ணப்பம்ச் செய்தனர். மஹா விஷ்ணுவும் தானே அவதாரம் செய்து  துஷ்டர்களை அழித்து பூபாரம் குறைப்பதாக அருளினார். அப்போது இந்த கந்தர்வன் மஹா விஷ்ணு எதற்காக அவதாரம் எடுக்க வேண்டும் தான் மட்டும் போதுமே அந்தக் காரியத்தை முடிக்க என்று அகங்காரமாக பேசினான். இதனால் கோபம் கொண்ட பிரம்மதேவன்,  பெருமாள் அவதாரம் செய்யும்   போது உன் தலை  அவரால் கொய்யப்படும் என்று. சாபம் கொடுத்தார். ஆகவே தான் இவ்வாறு நடந்த்து என்று விளக்கமளித்தார்.

 பார்ப்பரிக்குக்கு வரம் தந்தபடி அவனது தலையை ஒரு மலை உச்சியில் வைத்து மஹா பாரதப்போரை அவன் பார்க்குமாறு அருளினார் கிருஷ்ணர்.

பாரதப்போர் முடிந்த பிறகு பாண்டவர்கள் தங்களுள் யார் மிகவும் வீரமாக போரிட்டனர் என்று கேட்டனர். அதற்கு கிருஷ்ணரும் பார்பரிக்கிடம் கேட்கலாம் என்று அழைத்து சென்றார்.   பார்பரிக் பாரதப் போர் முழுவதும் நான் சுதர்சன  சக்கரத்தையும் துர்க்கையின்   கப்பரையையும் தான் கண்டேன் என்று பதில் கூறினான். அனைத்தையும் ஆட்டுவிப்பவன் அவனே மற்றவர்கள் எல்லாம் ஆட்டுவிப்பவர்களே என்பதை உணர்த்தினான். (இங்கு துர்க்கை எனக்குறிப்பிடப்பட்டது திரௌபதி). இதற்குபிறகு   கண்ணபிரான்  கொடுத்த வரத்தின்படி கலியுகத்தில்  கட்டு என்னும் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டு கண்ணனின் பெயரான ஷ்யாம் என்ற பெயரிலேயே பார்பரிக வணங்கப்படுகின்றார்...

இனி வரும் பதிவில் 108 திவ்யதேசங்களின் ஒன்றான தேவப்ரயாகை (கடிநகர்)பற்றி  பார்ப்போம்...

திருச்சிற்றம்பலம்


கங்கை கரையில் தொடர் இன்னும் ()ரும்...

No comments:

Post a Comment