Sunday 25 December 2016

64 சிவவடிவங்கள்(9. சோமாஸ் கந்த மூர்த்தி)

9. சோமாஸ் கந்த மூர்த்தி



சூரபத்மனின் கொடுமைகள் எல்லைக்கடந்து போயின. அவனது கொடுமைகளைத் தாள முடியாத விண்ணோர்கள் அனைவரும் ஈசனிடம் சென்று முறையிட்டனர். வல்லமைபெற்ற தங்கள் மகனால் அவனது வாழ்வு முடிய வேண்டுமென அவர்கள் விரும்பினர். சிவபெருமானும் அவர்களுக்காக மனமிரங்கி தம்முடைய ஆறு திருமுகத்திலுமுள்ள நெற்றிக் கண்ணிலிருந்து ஜோதிமயமான ஆறு நெருப்புப் பொறிகளை வெளிக்கொண்டு வந்தார். அப்பொறிகள் அகிலமெல்லாம் பரவின. உடன் பார்வதி தேவியார் அவ்வெப்பம் தாளாமல் தம் கொலுசு மணிகள் ஒன்றோடொன்று மோதி சிதறும் படி அந்தப்புரம் நடந்தார். இதனால் தேவர்கள் சித்தம் கலங்கி, மனம் வருந்தினர். மகனைக் கேட்டால் இவர் நெருப்பு பொறிகளை கொடுக்கின்றாரென கலங்கினர். உடன் வாயு தேவனையும், அக்னிதேவனையும் அழைத்து அப்பொறிகளைக் கொடுத்து கங்கையில் விடச் சொன்னார். கங்கையோ அப்பொறிகளை சரவணப்பொய்கையில் சேர்த்தது.

ஆறுமுகங்களும், பன்னிரு கரங்களுடனும் பிறந்த இக்குழந்தையை கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி வளர்த்தனர். பார்வதி தேவியின் கொலுசுமணியில் இருந்து சிதறிய நவரத்தினங்கள் நவ வீரர்களாயின. இதற்கிடையே சரவணப்பொய்கையில் வளரும் தங்கள் குமாரனைக் காண சிவனும், பார்வதியும் இடப வாகனத்தில் முன் செல்ல தேவர்கள் பின் தொடர்ந்தன. அங்கு ஆறு குழந்தைகளை பார்வதி ஒன்றாக தூக்குகையில் அவை ஒரேக் குழந்தையாயிற்று. அந்த ஒரேக் குழந்தை ஆறு முகத்துடனும், பன்னிரு கரங்கள் கொண்டதாகவும் விளங்கியது. ஆறு முகங்களைக் கொண்டதால் ஆறுமுகன் என்றும், கந்தன் என்றும் அழைத்தனர். பின்னர் மூவரும் வெள்ளிமலையை அடைந்தனர். அங்கே சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் இடையே கந்தன் வீற்றிருந்தார். அந்த தோற்றத்தையே நாம் சோமாஸ் கந்த மூர்த்தி என்கிறோம்.

சோமாஸ் கந்த மூர்த்தியை தரிசிக்க திருவாரூர் செல்ல வேண்டும். அங்குள்ள ஆயிரம் கால் மண்டபம் அருகே சுரக்கும் அமுத தீர்த்தத்தினால் சோமாஸ் கந்தரை அபிசேகம் செய்ய உடல் வலிமை, அறிவு விரத்தி, தந்தைக்கே உபதேசிக்கும் அளவு புத்தி வலுவடையும். மேலும் திங்கள், வியாழக்கிழமைகளில் வில்வார்ச்சனையும், தயிரன்ன நைவேத்தியமும் கொடுக்க குரு ஸ்தானம் விரைவில் கைகூடும். எழுத்தாளர்களுக்கு திறமை வளரும். எனவே எழுத்தாளர்கள் தொழ வேண்டியவர் இவர்.

No comments:

Post a Comment