ஹரித்வார் பயனம்
ஹரித்வாரம்
இமயத்தின் ஒரு உச்சியில் கோமுக்கில் உற்பத்தியாகும் பாகீரதி பல்வேறு ஆறுகளுடன் கூடி மலைகளில் சுமார் 253 கி.மீ பாய்ந்தோடி வந்து சமவெளியைத் தொடும் இடம்தான் ஹரித்வாரம்.
துவாரம் என்றால் கதவு, ஆம் பல்வேறு புண்ணியத் தலங்களுக்கு ஹரித்வார் தான் நுழைவு வாயில்.
ஹரித்வாரம் என்பதை ஹரியின் நுழைவு வாயில் அதாவது பத்ரிநாத்திற்கான வாயில், ஹரனின் நுழைவு வாயில் அதாவது கேதார்நாத்திற்கான வாயில் என்றும் கொள்ளலாம்.
மேலும் இந்நகரை கங்கா துவார் மற்றும் சொர்க்க துவார், மாயாபுரி, மாயா க்ஷேத்திரம் என்றும் அழைக்கின்றனர்.
உத்தராகாண்ட் மாநிலத்தின் மேற்குப்பகுதியான கர்வால் பகுதியில் அமைந்துள்ள அனைத்து புண்ணிய தலங்களுக்கும் செல்ல நாம் ஹரித்வாரை கடந்துதான் செல்ல வேண்டும்.
சிவாலிக் குன்றுகளின் அடிவாரத்தில் இந்த புண்ணிய நகரம் கடல் மட்டத்திலிருந்து 951 மீ உயரத்தில் அமைந்துள்ளது. நமது பாரதபூமியின் முக்தி நகரங்கள் ஏழினுள் ஒன்று இந்த ஹரித்வாரம் ஆகும்.
மற்ற முக்தி நகரங்கள் துவாரகை, மதுராபுரி, காஞ்சிபுரம், அயோத்தி, அவந்திகா, காசி ஆகியவை ஆகும். இந்த ஏழு தலங்களில் முக்தி அடைந்தால் மீண்டும் மனித பிறப்பு இல்லை என்பது ஐதீகம்..
பண்டைக்காலத்தில் இங்கே கங்காத்வார் என்னும் கோயில் இங்கு இருந்ததாக நம்பப்படுகின்றது. ஆதி காலத்தில் பாகீரதனின் முன்னோர்களான சகரர்களை எரித்த கபில முனிவர் தவம் செய்துள்ளார். எனவே இத்தலம் கபில ஸ்தலம் என்றும் அழைக்கப்படுகின்றது.
சமவெளியை அடைந்த கங்கை இங்கே பல்வேறு கால்வாய்களாக ஓடுகின்றாள். கங்கை இங்கு இரண்டு கி.மீ அகலம். மிகவும் புராதானமான இந்நகரில் பல புண்ணிய தலங்கள் உள்ளன, அவற்றுள் முதன்மையானது ஹரி-கா-பௌரி என்னும் படித்துறை. இங்குதான் ஹரியின் பாதம் (விஷ்ணு பாதம்) அமைந்துள்ளது.
பத்ரிநாத்திலிருந்து ஹரித்வார் வரை உள்ள விஷ்ணுவின் பாதம் இங்குதான் அமைந்துள்ளது.
மாலையில் கங்கைக்கு காட்டப்படும் ஆரத்தி ஹரியின் பாதத்திற்கு காட்டப்படும் ஆரத்திதான். இந்த கங்கையின் கட்டத்தை கட்டியவர் மால்வாவின் அரசன் யசோதர்மன் ஆகும்.
குரு மேஷ இராசியில் பிரவேசிக்கும் போது 12 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் முழு கும்பமேளாவும் , ஆறு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் அர்த்த(பாதி) கும்பமேளாவும் இந்த படித்துறையில்தான் நடைபெறுகின்றது.
மந்தார மலையை மத்தாகவும், வாசுகி என்னும் நாகத்தை கயிறாகவும் கொண்டு கூர்ம அவதாரம் எடுத்து மஹா விஷ்ணு மந்தார மலையை தாங்க பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்த போது முதலில் ஆலம் (விஷம்) வந்தத, வலி தாங்காமல் வாசுகியும் விஷத்தை கக்கினாள். இரண்டும் சேர்ந்து ஆலாலமாகி அனைவரையும் மிரட்ட, தேவர்கள் சிவபெருமானை சரண் அடைய அந்த பரம கருணாமூர்த்தி அந்த ஆலாலத்தை எடுத்து விழுங்கினார், அம்பிகை தன் தளிரண்ண கரத்தினால் அவ்விடத்தை ஐயனின் கண்டத்திலேயே நிறுத்தினாள் எனவே ஐயனின் கண்டம் நீலநிறமானது அவரும் நீலகண்டரானார். பின்னர் தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தனர் ஐராவதம், உச்சிரவசு, கற்பக மரம், காமதேனு, மஹா லக்ஷ்மி, சிந்தாமணி, எல்லாம் பாற்கடலில் இருந்து வந்தது. இறுதியாக அமிர்த கலசத்துடன் தன்வந்திரி வந்தார். பின்னர் அந்த அமிர்த கலசத்தை கைப்பற்ற தேவர்களும், அசுரர்களும் முயன்றனர் இவ்வாறு அவர்கள் போட்டியிட்ட போது அமிர்தத்துளிகள் நான்கு இடங்களில் சிந்தியது. இந்த நான்கு தலங்களிலும் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை கும்பமேளா நடைபெறுகின்றது. கும்பமேளா நடைபெறும் மற்ற தலங்கள் நாசிக், அலகாபாத் மற்றும் உஜ்ஜயினி ஆகும்.
பின்னர் மஹாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து சாதுர்யமாக தேவர்களுக்கு அமிர்தத்தை அளித்தார். தேவர்களும் அமரர்கள் ஆனார்கள்.
கங்கைக்கரை முழுவதும் கட்டிடங்களும் கோயில்களும் நிறைந்திருக்கின்றன. மேலும் நகர் முழுவது எண்ணற்ற வழிபாட்டுத்தலங்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமான சில, மலை மேல் அமைந்திருக்கும் மானஸதேவி ஆலயம் மற்றும் சண்டிதேவி ஆலயம் ஆகும்.. இவை இரண்டும் சக்தி பீடங்கள் ஆகும்.
இவ்வூரில் சித்தி பீடம் அதாவது மன விருப்பத்தை பூர்த்தி செய்யும் தலங்கள் என்று அழைக்கின்றனர்.
தக்ஷன் தவம் செய்த குண்டமும், சதி தேவி தன் உடலை தியாகம் செய்த இடம் தக்ஷேஸ்வரர் மஹாதேவ் ஆலயம் உள்ளது. அன்னையின் இருதயம் விழுந்த இடம் மாயா தேவி ஆலயம் ஹரித்வாரின் மூன்றாவது சக்தி பீடம் ஆகும். இதல்லாமல் ம்ருத்யுஞ்சய் மஹாதேவ் ஆலயம், பைரவர், நாராயணர், பீமா கோடா , பாரத மாதா ஆலயங்கள் உள்ளன.
பாரத மாதா ஆலயத்தில் ஒன்பது அடுக்கடுக்கான மாடங்களில் ஒவ்வொரு மாடத்திற்கும் பாரத திருநாட்டில் இருந்த ஆன்மீக மற்றும் அரசியல் முன்னோடிகளை கடவுள்களைப் பற்றிய குறிப்புக்களும் சிலைகளும் என அலங்கரிக்கப் பட்டிருக்கின்றன.
ஹரித்வாரில் மற்ற பார்க்கவேண்டிய இடங்கள் சப்தரிஷி ஆசிரமம் மற்றும் சப்த் சரோவர் ஆகும். காஸ்யபர், பரத்வாஜர், அத்ரி, கௌதமர், ஜமதக்னி, விஸ்வாமித்திரர் என்னும் சப்த ரிஷிகள் இங்கே தவம் செய்த போது கங்கை அவர்களது தவத்திற்கு எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்க ஏழு அருவிகளாக ஓடினாள் என்பது ஐதீகம். பீமா கோடா குளம் பீமன் குளிப்பதற்காக தனது முழங்காலினால் உருவாக்கியது என்பது ஐதீகம்.
கும்பமேளாவைத் தவிர கங்கா தசரா மற்றும் காவண்ட் மேளா ஆகிய இரு பண்டிகைகள் ஹரித்வாரில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. பகீரதன் செய்த கடுந்தவத்தின் பலனாக கங்கைத்தாய் முதன் முதலில் தரையைத்தொட்ட நாள் வைகாசி மாத வளர்பிறை 10ம் நாள் கங்கா தசரா என்று சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இந்த நாளில்தான் சிவபெருமான் முதன்முதலாக தன் சடாமுடியிலிருந்து கீழே விடத்தொடங்கினார் என்பது ஐதீகம்.
நம்மூரில் முருகனுக்கு காவடி எடுப்பது போல சிரவண மாதம் ( நம்முடைய ஆடி மாதம் ) அமாவாசைக்கு 10 நாள் முன்பிருந்து காவடியில் கோமுக்கிலிருந்து ஹரித்வார் வரை கங்கை நீரை சுமந்து சென்று தங்கள் ஊரில் உள்ள சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்கின்றனர். ஆடி மாதத்தில் ஹரித்வாரில் லட்சக்கணக்கான சிவபக்தர்கள் இவ்வாறு கங்கை நீரை சிவபெருமானின் அபிஷேகத்திற்காக காவடி சுமந்து செல்ல கூடுகின்றனர்.ஒரு நீண்ட மெல்லிய மூங்கிலில் இரண்டு புறமும துணியில் தொங்கும் தூளிகள் அதனுள் ஒரு சிறிய பித்தளை குடஙகள். இந்த காவடியை இவர்கள் கான்வர் அல்லது கான்வட் என அழைக்கிறாகள். இப்படி பயணம் செல்பவர்கள் கான்வரியா அல்லது கான்வடியா என்று அழைக்கப் படுகின்றனர். இப்பண்டிகையும் கான்வட் மேளா என்று அழைக்கப்படுகின்றது. இது வரை ஹரித்வாரின் சிறப்புகளை கண்டோம்...
அடுத்த பதிவில் ஹரித்வாரில் உள்ள ஆலயங்களை பார்க்கலாம்.....
திருச்சிற்றம்பலம்
கங்கை கரையில் தொடர் இன்னும் வ(ள)ரும்...
No comments:
Post a Comment