Sunday, 25 December 2016

அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில், திருப்பந்துருத்தி ( தஞ்சாவூர் )


மூலவர் : புஷ்பவனேஸ்வரர், ஆதிபுராணர், பொய்யிலியர்

உற்சவர் : -

அம்மன்/தாயார் : சௌந்தரநாயகி, அழகாலமர்ந்த நாயகி

தல விருட்சம் : வில்வம்

தீர்த்தம் : சூரியதீர்த்தம், காசிபதீர்த்தம், கங்கை, காவிரி, அக்னி தீர்த்தம்

ஆகமம்/பூஜை : -

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருப்பந்துருத்தி

ஊர் : மேலைத்திருப்பூந்துருத்தி

பாடியவர்கள்: திருநாவுக்கரசர் , அருணகிரிநாதர், ராமலிங்க அடிகள்

தேவாரபதிகம்

அதிரர் தேவர் இயக்கர் விச்சாதரர் கருத நின்றவர் காண்பரி தாயினான் பொருத நீர்வரு பூந்துருத் திந்நகர்ச் சதுரன் சேவடிக் கீழ்நாம் இருப்பதே
 - திருநாவுக்கரசர்

தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 11வது தலம்.

திருவிழா:

சப்த ஸ்தான திருவிழா, நவராத்திரி, கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, திருக்கல்யாணம், திருவாதிரை, மகா சிவராத்திரி, பாரிவேட்டை

தல சிறப்பு:

இத்தலத்தில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சப்தஸ்தான தலங்களில் ஆறாவது த லம். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 74 வது தேவாரத்தலம் ஆகும். அப்பரால் மடம் அமைக்கப்பட்ட சிறப்புடையது. அப்பரும் சம்பந்தரும் உழவாரத்தொண்டு செய்த தலம். அப்பருக்கு இறைவன் காட்சி தந்த தலம். இத் தலத்தில் நந்தி விலகியுள்ளது. கோஷ்டமூர்த்தங்களில் வீணா தெட்சிணாமூர்த்தி திருமேனி மிகவும் சிறப்பானது. மகிடனை யழித்த பாவத்தைப்போக்க ஒற்றைக் காலில் நின்று தவம் செய்யும் துர்க்கையும், அமர்ந்த கோலத்தில் அப்பர் பெருமானும் பூந்துருத்தி காடவநம்பியின் திருவுருவமும் தரிசிக்கச் சிறப்புடையன. பூந்துருத்தி காடவநம்பியின் அவதாரத்தலம். காசிபமுனிவரின் கடும் தவத்திற்கு மகிழ்ந்து இறைவன் இங்குள்ள கிணற்றில் 13 கங்கையையும் பொங்கி எழச்செய்து ஆடி அமாவாசை அன்று காட்சி தந்த தலம். இங்கு அமாவாசை கிரிவலம் சிறப்பு. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

திறக்கும் நேரம்:

காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.


பொது தகவல்:

கோஷ்டப் பிரகாரத்தில் வீணாதட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீசுவரர், பிஷாடனரும் காட்சியளிக்கின்றார்.

பிரகாரத்தில் விநாயகர், சப்தமாதர்கள், நால்வர் வரலாற்றுச் சித்திரங்கள் உள்ளன. சோமாஸ்கந்த மண்டபம், நடராஜர் சபையும் உள்ளது.

பிரார்த்தனை

பித்ரு சாபம் நீங்க அமாவாசையன்று கிரிவலம் வந்து இறைவனைவழிபட்டால் சாபம் நீங்கும் என்பது நம்பிக்கை.

திருமணம் நடைபெறவும், குழந்தை பாக்கியம் வேண்டியும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும் இங்குள்ள சன்னதிகளில் தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

தலபெருமை:

இந்திரன், திருமால், லட்சுமி, சூரியன், காசிபர் ஆகியோர் வழிபட்ட தலம். இந்திரன் மலர்வலம் அமைத்து வழிபாடு செய்து உடல்நலம் பெற்றான். கழுகு உருவம் பெற்ற விஞ்ஞயர் இருவர் இத்தலத்தை அடைந்து மலர் வழிபாடு செய்து தம் உண்மை உருவம் பெற்றனர்.

ஆற்றிடைக் குறையிலுள்ள ஊர்கள் "" துருத்தி'' என்று பெயர் பெறும். இத்தலம் காவிரிக்கும் குடமுருட்டிக்கும் இடையில் உள்ளதால் இப்பெயர் பெற்றது. (மயிலாடுதுறைக்குப் பக்கத்தில் உள்ள ஒரு தலமும் (குத்தாலமும்) துருத்தி என்று வழங்கப்படுகிறது).

அப்பர் உழவாரத்தொண்டு செய்த தலமென்று எண்ணி, காலால் மிதிக்கவும் அஞ்சி வெளியில் நின்ற ஞானசம்பந்தருக்கு இறைவன் நந்தியை விலகச் செய்து காட்சி தந்ததாகத் தலபுராணம் கூறுகிறது. ஞானசம்பந்தரின் பல்லக்கை அப்பர் பெருமான் தன் தோளிற் சுமந்த தலம். இவ்விடம் சம்பந்தர்மேடு என்று சொல்லப்படுகிறது. திருவாலம் பொழிலுக்குப் பக்கத்தில் வெள்ளாம்பரம்பூரையடுத்து இம் மேடு உள்ளது. அங்கு இருவருக்கும் கோயில் கட்டப்பட்டு, விழா நடைபெறுகிறது.

அப்பர் அமைத்த ""திங்களும் ஞாயிறும் தோயும் திருமடம்'' என்று புகழப்படும் திருமடம் உள்ளதலம். இத்திருமடம் கோயிலுக்கு எதிரில் சற்றுத் தள்ளி உள்ளது. ஊர் பெரியது. மேலை, கீழை என இருபிரிவாகவுள்ளது. மேலைப்பூந்துருத்தியில்தான் கோயில் உள்ளது.

தல வரலாறு:

முற்காலத்தில் அகத்தியர் காகம் கவிழ்க்க அதிலிருந்து தோன்றிய காவிரியான ஆறாக கிழக்கு நோக்கி ஓடி, செந்தலையிலிருந்து அந்திலி, வெள்ளாம்பிரம்பூர், ஆற்காடு, கண்டியூர், திருச்சோற்றுத்துறை, திருப்பழனம், திருவையாறு, திருநெய்த்தானம், சாத்தனூர் வரை சூழ இடைப்பட்ட இடங்களில் கடல்போல் தேங்கி நின்றுவிட்டது. இதற்கிடையில் உள்ள கோனேரிராஜபுரம், கருப்பூர், நடுக்காவேரி, திருவாலம்பொழில், திருப்பூந்துருத்தி முதலிய ஊர்கள் எல்லாம் நீர்நிலையில் மூழ்கி இருந்தன.


இந்திரன் ஐயாறப்பரை வழிபட்டு காவிரியை அவர் அருளால் கிழக்கு நோக்கி அழைத்துச்சென்று கழுமலப் பூங்காவை வளப்படுத்தினான். அவ்வாற காவிரி கிழக்கு நோக்கி ஓடுகையில் முதலில் காணப்பட்ட நிலப்பகுதி கண்டியூர். பின்னர் ஆற்று வண்டலும் மணலும் படிந்ததாய் தோன்றியது திருப்பூந்துருத்தி. அதற்கு மேற்கே ஆலமரம் இருந்ததாக காவிரி எக்கல் நிறைந்து மேடிட்ட பகுதி நிலம் மென்மையாக பூப்போல இருந்ததாலும், மலர் வாட்டத்தில் நிலம் அமைந்திருந்ததாலும் இந்நிலப்பரப்பை ""பூந்துருத்தி'' என்று வழங்கிவந்தனர்.

இதனை பொருத நீர்வரு பூந்துருத்தி என்று அப்பர் கூறுகிறார். இதுபோல் ஆற்றிடையில் உண்டாகும் நிலப்பகுதிக்கு ""துருத்தி'' என்று பெயர். காவிரியில் கிழக்கே உண்டாகிய மற்றொன்றிற்கு ""துருத்தி'' (குற்றாலம்) என தற்காலம் வழங்குகின்றது. ஆதலால் நில அமைப்பு நோக்கி இப்பெயர்ஏற்பட்டது போலும்.

இந்திரன் கவுதமர் சாபத்தால் உடம்பெல்லாம் ஆயிரம் குறிகள் தோன்றப்பெற்ற சாபத்தை திருக்கண்ணார் கோயிலில் வழிபட்டு பிறருக்கு கண்களாக தெரிய வரம்பெற்றான். உடலெல்லாம் கண்ணாக தோன்றிய அந்நோயும் தீர வேண்டி பல தலங்களையம் சுற்றி வழிபட்டு வரும்போது மலர்க்காட்டிடையே மகாதேவன் உருவம் இத்தலத்தில் இருக்கக்கண்டு ""பூவின் நாயகனாய்'' விளங்கிய பரமனை மலர்களைக்கொண்டு வழிபாடு செய்து நோய்நீங்கி,மலர் போல் தூய நல்லுடல்பெற்றான். ஆதலால் இப்பெயர் வந்தது என்பர்.

தேவர்கள்எல்லோரும் மலர்கொண்டு இறைவனை இத்தலத்தில் வழிபட்டதால் இப்பெயர் பெற்றது என்றும் கூறுவர். இதனை "வானோருலகமெல்லாம் வந்திறைஞ்சி மலர்கொண்டு நின்று போற்றும் வித்தானை' என்று அப்பர் கூறுவதால் அறியலாம். திருமாலும், திருமகளும் இவ்வூர் இறைவனை வழிபட்டனர் என்பதை நாயக்க மன்னர் காலத்தில்கட்டப்பெற்ற ராஜகோபுரத்தில் உள்ள சிற்பம் காட்டுகின்றது. பூமகள் வழிபட்டதால் ""பூந்துருத்தி'' என பெயர் வந்தது என்றும் கூறுவர்.

திருமழபாடி நந்திதேவர் திருமணத்திற்கு மலர்கள் தந்து உதவியதாகவும் அதற்கு நந்திதேவர் வந்து நன்றி கூறிவதாகவும் அமைந்த விழாவே "ஏழூர் வலம் வரும் விழா' (சப்த ஸ்தான விழா) என்பர். ஆதலால் மலரோடு இத்தலம் தொடர்புடையது நன்கு பொருந்துவதைக் காணலாம். சோழநாட்டில் சில இடங்கள் மலர்தோட்டங்களாக இருந்துள்ளன. அவ்விடங்கள் "மலரி' என்றும் "மலர்க்காடு' என்றும் வழங்கி வந்துள்ளன.

முற்கால முதல் பிற்காலசோழர் தலைநகராகிய தஞ்சைக்கு அருகில் அவர்கள் அடையாள மலராகிய "ஆர்'ஐ (ஆத்தி) வளர்த்த இடம் "ஆர்க்காடு' என்று இதன் அருகில் உள்ளது. அதுபோல அரசரது பிற தேவைகளுக்கு வண்டல் நிறைந்த இத்துருத்தியை பூந்தோட்டமாக செய்து இதிலிருந்து மலர் கொண்டனர். ஆதலால் "மலர்க்காடு' என்று இதற்கு மற்றொரு பெயரும் உண்டாயிற்று. இதனையே கி.பி.1782ம் ஆண்டு தஞ்சை துளசி மகாராஜா காலத்தில் "புஷ்பவனம்' என்று மொழிபெயர்த்து கூறப்பட்டது என்பதை கல்வெட்டால் அறியலாம்.

சோழமன்னன் துருத்தியை வைத்துப் பூசிக்கச் செய்ததனால் திருப்பூந்துருத்தி என்று பெயர் வந்தது. என்று கூறுவர். ஆற்றிடைக் குறையில் உள்ள ஊர்கள் துருத்தி என்று வழங்கப்பெறும். இத்தலம் காவிரி, குடமுருட்டி ஆறுகளுக்கு கிடையில் அன்று விளங்கியதால் துருத்தி எனப்பெற்றது என்றும் கூறலாம்.

திருஞானசம்பந்தர் அப்பரைக் காண இத்தலத்திற்கு வந்தபோது அப்பர் ஒருவரும் காணாதபடி அவருடைய சிவிகையைத் தாங்கிவந்தது இத்தலத்தில் நிகழ்ந்ததாகும். மேலும் அப்பர் அடிகளார் திருமடம் அமைத்து திருப்பணி செய்து வந்ததும் இத்தலமேயாகும்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தலத்தில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

No comments:

Post a Comment