Sunday 25 December 2016

அருள்மிகு பாலைவனேஸ்வரர் திருக்கோயில், திருப்பாலைத்துறை, பாபநாசம்


மூலவர் : பாலைவனேஸ்வரர், பாலைவனநாதர்

உற்சவர் : -

அம்மன்/தாயார் : தவளவெண்ணகையாள். (மக்கள் தவளாம்பிகை, தவளாம்பாள் என வழங்குகின்றனர்.)

தல விருட்சம் : பனைமரம் மற்றும் பாலை, (பாலை இப்போது இல்லை )

தீர்த்தம் : வசிஷ்ட தீர்த்தம், இந்திரதீர்த்தம், எமதீர்த்தம் முதலியன. (புத்தகத்தில் காவிரியாறு என உள்ளது)

ஆகமம்/பூஜை : -

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருப்பாலைத்துறை, திருப்பாலத்துறை

ஊர் : பாபநாசம்

பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்

தேவாரபதிகம்

வெந்த நீற்றினர் வேலினர் நூலினர் வந்தென் நன்னலம் வெளவினார் பைந்தன் மாதவி சூழ்தரு பாற்றுறை மைந்தர் தாமோர் மணாளரே. - திருஞானசம்பந்தர்

தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 19வது தலம்.

திருவிழா:

மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம்

தல சிறப்பு:

இங்கு மூலவர் சிவன் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். ராமர் இத்தலத்தில் 108 சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 82 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30மணி வரை திறந்திருக்கும்.

பொது தகவல்:

இக்கோவிலில் பதினோரு கல்வெட்டுக்கள் உள்ளன. முதற் குலோத்துங்கன், விக்கிரமசோழன், இரண்டாம் ராசராசன், மூன்றாம் ராசராசன், மூன்றாம் குலோத்துங்கன் இவர்கள் காலத்துக் கல்வெட்டுக்கள் உள்ளன. இறைவர் திருப்பாலைத்துறை மகாதேவர் என்று குறிக்கப்பட்டுள்ளது. வலப்பக்கம் ஒரு பெரிய நெற்களஞ்சியம் - செங்கல்லால் கட்டப்பட்டது காட்சிதருகிறது. வட்ட வடிவில் கூம்பு முனையுடன் கட்டப்பட்டுள்ள இக்களஞ்சியம் 12 ஆயிரம் கலம் கொள்ளவுடையது.

இவ்வளவு அதிகமான நெல் வருவாயைக் கொண்டதாக இக்கோயில் விளங்கிய தென்பது நமக்குத் தெரிகின்றது. இன்று பயன்படுத்தப்படாமல் உள்ளது.

பிரார்த்தனை

திருமணத்தடை நீங்கவும், புத்திரபாக்கியம் வேண்டியும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனைநிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும் புது வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

தலபெருமை:

சுவாமி அம்பாள் இருவரும் கல்யாணகோலத்தில் விளங்குகின்றனர். கோஷ்டமூர்த்தங்களாக விநாயர், ஊர்த்துவதாண்டவர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேஸ்வரர் சன்னதி உள்ளது.

குடமுருட்டியாற்றின் கரையில் பனைமரத்தைத் தலமரமாகக் கொண்டுள்ளதால் இத்தலம் பாலைத்துறை என வழங்குகிறது. விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், வசிஷ்டர் பூசித்த சிவலிங்கம், மகாலட்சுமி, பார்த்திபன், மலையத்துவசன் ஆகியோர் வழிபட்ட லிங்கங்கள் உள்ளன.

அறுபத்துமூவர் மூலவத்திருமேனிகள் உள்ளன. நடராசசபை உள்ளது. காலபைரவர், சூரியன் சன்னதிகளும் உள்ளன. திருமால், பிரமன், அஷ்டதிக்குப் பாலகர் முதலியோர் வழிபட்டதலம். இத்தலத்திற்கு அருகில் பாவநாசத்தில் விளங்கும் 108 சிவலிங்கக் கோவில் கீழைராமேச்சுவரம் என வழங்கப்பெறுவது.

தல வரலாறு:

தாருகா வனத்து முனிவர்கள், இறைவனைப் புறக்கணித்து அவரையே அழிக்க எண்ணி, தீயவேள்வி செய்து புலியை வரவழைத்து, அதை இறைவன் மீது ஏவ, இறைவனும் அப்புலியின் தோலை உரித்து உடுத்திக் கொண்ட செயலைச் செய்த தலம். பாலைவனம், பிரம்மவனம், அரசவனம், புன்னாகவனம் எனப்பல பெயர்கள் இத்தலத்திற்குண்டு. திருநல்லூரைச் சேர்ந்த "சப்தஸ்தானங்களில் இத்தலமும் ஒன்றாகச் சொல்லப்படுகின்றது. பாண்டவர்களின் வனவாச காலத்தில் தௌமிய முனிவரின் ஆலோசனைப்படி அர்ச்சுனன் இத்தலத்திற்கு வந்து, வழிபட்டு வில்வித்தையின் நுட்பங்களை உணர்ந்து, பாதாள உலகம் சென்று உலூபியை மணந்து வந்தான் என்று சொல்லப்படுகின்றது.

ராமர் சிவபிரானை வழிபட்டுத் தான் செய்த கொலைப் பாவத்தைப் போக்கிக் கொண்ட காரணத்தால் இத்தலம் பாவநாசம் எனப்பெற்றது. தனிமண்டபத்தில் ஆவுடையாரோடு சிவலிங்கங்கள் வரிசையாக அமைந்துள்ளன.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு மூலவர் சிவன் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.

No comments:

Post a Comment