Saturday 31 December 2016

அருள்மிகு அசலேஸ்வரர், அரநெறியப்பர் திருக்கோயில், (தியாகராஜர் கோயில் உள்ளே) ஆருர் அரநெறி - திருவாரூர்


மூலவர் : அசலேஸ்வரர், அரநெறியப்பர்

உற்சவர் : அரநெறியப்பர்

அம்மன்/தாயார் : வண்டார்குழலி

தல விருட்சம் : பாதிரி

தீர்த்தம் : சங்கு தீர்த்தம், கமலாலயம்

ஆகமம்/பூஜை : -

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : ஆருர் அரநெறி

ஊர் : ஆருர் அரநெறி

பாடியவர்கள்: திருநாவுக்கரசர்

தேவாரப்பதிகம்

விழித்தனர் காமனை வீழ்தர விண்ணின் இழித்தனர் கங்கையை ஏத்தினர் பாவம் கழித்தனர் கல்சூர் கடியரண் மூன்றும் அழித்தனர் ஆரூர் அரநெறி யாரே. - திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 88வது தலம்.

திருவிழா:

மார்கழி திருவாதிரை. மாசி சிவராத்திரி.

தல சிறப்பு:

இங்கு சிவன் மேற்கு நோக்கிய சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அசலேஸ்வரர் கோயில் மூலஸ்தானத்தின் நிழல் கிழக்கு திசையில் மட்டும் விழும். மற்ற திசைகளில் விழுகாது. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோபுரத்தை போன்ற கட்டட அமைப்பில் இது கட்டப்பட்டுள்ளது.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 151 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்:

காலை 5 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

பொது தகவல்:

கோயில் நாற்புறமும் உயர்ந்த மதில்களுடன் - கோபுரங்களுடன் விளங்குகிறது. சீழக்கோபுரம் 118 அடி உயரமுள்ளது.

மொத்தம் வீதிப் பிராகாரங்களையும் சேர்ந்து ஐந்து பிராகாரங்கள், கிழக்குக் கோபுரவாயில் வழியாகச் சென்றால் விநாயகர் முருகன் கோயில்கள் இருபுறமும், உள்ளே நுழைந்தால் வீதிவிடங்க விநாயகர் தரிசனம். பின்னால் பிரமநந்தி எழுந்தருளியுள்ளார். அடுத்து பெரிய பிராகாரத்தில் வலமாக வந்தால் பக்தகாட்சி மண்டபம், ஊஞ்சல் மண்டபம் அடுத்து ஆகாசவிநாயகர், துலாபாரமண்டபம், சரஸ்வதிதீர்த்தம் முதலியவை உள்ளன.

பிரார்த்தனை

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

நேர்த்திக்கடன்:

சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

தலபெருமை:

கழற்சிங்கர் எனும் பல்லவ மன்னன் தன் மனைவியுடன் இத்தலத்திற்கு வந்தான். அப்போது இறைவனுக்கு சாற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்த மலரை, ராணி முகர்ந்து பார்த்தாள்.

இந்த தவறை செய்தது ராணி என்று தெரிந்தும் கூட, செருத்துணையார் என்ற சிவனடியார் ராணியின் மூக்கை அறுத்து விட்டார். இறைவனின் கருணையால் ராணியின் மூக்கு சரியானது. செருத்துணையார் 63 நாயன்மார்களில் ஒருவரானார். அசலேஸ்வரர் கோயில் மூலஸ்தானத்தின் நிழல் கிழக்கு திசையில் மட்டும் விழும். மற்ற திசைகளில் விழுகாது. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோபுரத்தை போன்ற கட்டட அமைப்பில் இது கட்டப்பட்டுள்ளது.

தல வரலாறு:

நமிநந்தியடிகள். 63 நாயன்மார்களில் ஒருவரான இவர் சிறுவயதிலிருந்து திருவாரூர் பெரிய கோயிலில் உள்ள புற்றிடங்கொண்டீசரை வழிபட்டு வந்தார்.

இக்கோயிலுக்குள்ளேயே அரநெறி என்ற தனிக்கோயில் உண்டு. இங்குள்ள சிவன் அரநெறியப்பர் என அழைக்கப்படுகிறார். இவரையும் நமிநந்தியடிகள் வழிபாடு செய்து வந்தார். ஒருமுறை அரநெறியப்பர் கோயிலுக்கு மாலை வேளையில் வழிபாடு செய்ய வந்தார். கோயில் விளக்கு ஒளி மங்கலாகி, நெய் தீர்ந்து போகும் நிலை ஏற்பட்டது. அப்போது அடிகள் விளக்கேற்ற யாராவது வருகிறார்களா என பார்த்தார். யாரும் வரவில்லை.

தொலைவிலுள்ள தமது வீட்டிற்கு சென்று நெய் வாங்கி வருவதற்குள் நன்றாக இருட்டிவிடும். அத்துடன் விளக்கும் அணைந்துவிடும் என்று நினைத்த அடிகள் கோயில் வாசலில் இருந்த வீட்டிற்கு சென்று சிறிது நெய் கேட்டார். அந்தக்காலத்தில் கோயிலை சுற்றி சமணர்கள் அதிகம் வசித்து வந்தனர். இவர் நெய் கேட்ட சமணர் வீட்டை சேர்ந்தவர்கள், ""கையில் தீ ஏந்தி நடனம் செய்யும் உங்கள் இறைவனுக்கு விளக்கு தனியாக வேண்டுமா? தீயின் ஒளியே போதுமே. 

அப்படியும் நீ விளக்கு ஏற்ற வேண்டுமானால், கோயில் எதிரில் உள்ள குளத்து நீரை எடுத்து தீபத்தை ஏற்றுவது தானே?'என கேலி பேசினர். இதனால் வருத்தமடைந்த அடிகள் கோயிலுக்கு வந்து,""இறைவா! உனக்கு விளக்கேற்ற நெய் கேட்க சென்ற வீடுகளில், என்னுடன் சேர்த்து உன்னையும் கேலி செய்கின்றனர். இதையெல்லாம் கேட்பதற்கு நான் என்ன பாவம் செய்தேன்?'என அழுது புலம்பினார். அப்போது இறைவன் அசரீரியாக,""அடிகளே! கலங்காதே. அவர்கள் கூறியபடி இங்குள்ள குளத்து நீரை எடுத்து எனது சன்னதியில் விளக்கேற்று'என கூறினார். இதைக்கேட்டவுடன் அடிகளுக்கு மிகுந்த சந்தோஷம் ஏற்பட்டது.

உடனே ஓடிச்சென்று அங்கிருந்த சங்கு தீர்த்தம் எனப்படும் குளத்திலிருந்த நீரை எடுத்து வந்து விளக்கில் ஊற்றி தீபத்தை தூண்டிவிட்டார். தீபம் முன்பை விட பலமடங்கு பிரகாசமாக எரிந்தது. அத்துடன் அங்கிருந்த பல விளக்குகளிலும் நீரை ஊற்றி தீபம் ஏற்றினார். கோயில் முழுவதும் சூரிய ஒளி பட்டது போல் பிரகாசித்தது. இதை கேள்விப்பட்ட சமணர்கள் இறைவனின் திருவிளையாடலை கண்டு ஆச்சரியமடைந்தனர்.

சோழமன்னன் அடிகளின் பக்தியை கேள்விப்பட்டு, அவரையே கோயிலுக்கு தலைவராக்கி, கோயிலில் புகழ் மென்மேலும் பரவவும், திருவிழாக்கள் சிறப்பாக நடக்கவும் உதவினான். இறைவன் அடிகளின் பக்தியில் மகிழ்ந்து 63 நாயன்மார்களில் ஒருவராக்கினார்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் மேற்கு நோக்கிய சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் விஞ்ஞானம் அடிப்படையில்: அசலேஸ்வரர் கோயில் மூலஸ்தானத்தின் நிழல் கிழக்கு திசையில் மட்டும் விழும். மற்ற திசைகளில் விழுகாது. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோபுரத்தை போன்ற கட்டட அமைப்பில் இது கட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment