உற்சவர் : -
அம்மன்/தாயார் : மங்கையர்க்கரசி
தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : வைத தீர்த்தம்
ஆகமம்/பூஜை : -
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருவேதிகுடி
ஊர் : திருவேதிகுடி
பாடியவர்கள்: அப்பர், சம்பந்தர்
தேவாரப்பதிகம்
வருத்தனை வாளரக்கன்முடி தோளொடு பத்திறுத்த பொருத்தனைப் பொய்யா அருளனைப் பூதப்படையுடைய திருத்தனைத் தேவர்பிரான் திருவேதி குடியுடைய அருத்தனை ஆரா அழுதினை நாமடைந் தாடுதுமே.
- திருநாவுக்கரசர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 14வது தலம்.
திருவிழா:
திருவையாறு ஐயாரப்பர் சித்திரை மாதத்தில் எழுந்தருளும் ஏழு சிவத்தலங்களுள் இத்தலம் நான்காவதாகும். ஐப்பசியில் அன்னாபிஷேகம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, சிவராத்திரி
தல சிறப்பு:
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆண்டுதோறும் பங்குனி 13,14,15 தேதிகளில் சூரியனின் ஒளி கதிர்கள் சிவ லிங்கத்தின் மீது விழுகிறது.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 77 வது தேவாரத்தலம் ஆகும்.
திறக்கும் நேரம்:
காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல்:
கிழக்கு நோக்கிய 3 நிலை ராஜகோபுரம். ஒரு பிரகாரம். உள்பிரகாரத்தில் செவி சாய்த்த விநாயகர், 108 லிங்கங்கள், சுப்பிரமணியர், தெட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை, முருகன், மகாலட்சுமி, நடராஜர், சப்தஸ்தான லிங்கங்கள் உள்ளன. ராஜசேகரிவர்மன், கோப்பரகேசரிவர்மன் இவர்கள் காலங்களில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் இறைவனின் பெயர் திருவேதிகுடி மகாதேவர் என்றும், பரகேசரி சதுர்வேதிமங்கலத்து மகாதேவர் என்றும் குறிக்கப்பட்டுள்ளது.
வாழைமடுவில் இறைவன் தோன்றிய காரணத்தினால் வாழைமடுநாதர் என்ற பெயரும் உண்டு. பல்லவ மன்னர்களும் திருப்பணி செய்துள்ளனர்.
பிரார்த்தனை
திருமணத்தில் தடை உள்ளவர்கள் இத்தலம் வந்து இறைவனையும், அம்மனையும் வழிபட்டு, சம்பந்தரின் பதிகத்தை வீட்டில் அமர்ந்து காலை மாலை விடாது படித்து வந்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
தலபெருமை:
பொதுவாக சம்பந்தர் கோயில் இறைவனைப்பற்றி பாடுவார். ஆனால் இத்தலத்தில் திருமணத்தடை நீக்கும் பாடலை பாடியுள்ளது சிறப்பு. திருஞானசம்பந்தர் இக்கோயிலைப்பற்றி தான் பாடிய பதிகத்தின் ஏழாவது பாட்டில், ""உன்னி இருபோதும் அடிபேணும் அடியார்தம் இடர் ஒல்க அருளி துன்னிஒரு நால்வருடன் ஆல்நிழல் இருந்த துணைவன் தன் இடமாம் கன்னியரொடு ஆடவர்கள் மாமணம் விரும்பி அருமங்கலமிக மின் இயலும் நுண்இடை நன்மங்கையர் இயற்றுபதி வேதிகுடியே என்று பாடியுள்ளார். பொதுவாக அர்த்தநாரீஸ்வரர் என்றால் சிவன் வலது புறமும், அம்மன் இடது புறமும் இருப்பார்கள். ஆனால் இங்கு பெண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சிவனின் வலது புறம் அம்மன் இணைந்துள்ள அர்த்தநாரீஸ்வர கோலம் இங்கு வித்தியாசமாக உள்ளது.
விசேஷ விமானம்: சப்தஸ்தான தலங்களில் நான்காம் கோயில் இது. முழுவதும் கல்லால் அமைக்கப்பட்ட விமானத்தின் கீழ், வேதபுரீஸ்வரர் வீற்றிருக்கிறார். விமானத்தின் நான்கு திசைகளிலும் வேதங்களை உணர்த்தும் நந்திகள் உள்ளன. வடதிசையில் சிவனுடன் எப்போதும் இருக்கும் மனோன்மணி அம்பிகை சிலை உள்ளது. சிவன் சன்னதிக்குப் பின்புள்ள (கோஷ்டம்) அர்த்தநாரீஸ்வரர், விசேஷமானவர். வழக்கமான சிவனுக்கு இடப்புறம்தான், அம்பாள் இருக்கும்படி அர்த்தநாரீஸ்வரர் சிலை இருக்கும். இங்கு, அம்பிகை வலப்புறம் இருக்கிறாள். இத்தகைய அமைப்பைக் காண்பது மிக அபூர்வம். தற்போது இந்த சிலை சேதமடைந்த நிலையில் உள்ளது.
பிரம்மன் (வேதி) வழிபட்ட தலமாதலால் திருவேதிகுடி ஆனது. பிரம்மன் பூஜித்த தெட்சிணாமூர்த்தியை நாமும் வழிபட்டால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். 4 வேதங்களும் இங்கு இறைவனை வழிபட்டுள்ளன. வேதம் கேட்பதில் விருப்பமுள்ள பிள்ளையார் இத்தலத்தில் தலை சாய்த்து அருள்பாலிக்கிறார். எனவே இவர் வேத பிள்ளையார் எனப்படுகிறார். நான்கு வேதங்களையும் பயின்றவர்கள் இத்தலத்தில் அதிகமாக வாழ்ந்த காரணத்தினால் சதுர்வேதிமங்கலம் என்ற பெயரும் இருந்துள்ளது.
கல்வி சிறக்க வழிபாடு: வாளை என்னும் மீன்கள் நிறைந்த தடாகத்தில் கரையில் அமைந்ததால் இவருக்கு "வாளைமடுநாதர்' என்றும் பெயருண்டு. இவர் வேதங்களுக்கு அதிபதி என்பதால், பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும்முன் பெற்றோர் இங்கு வந்து வேண்டிச் செல்கின்றனர். சரஸ்வதி பூஜையன்றும் சிவனுக்கு விசேஷ பூஜை செய்து வழிபடுகின்றனர். பங்குனி 13,14,15 ஆகிய தேதிகளில் சுவாமி மீது சூரிய ஒளி விழும். சிவன் சன்னதி முன் மண்டபத்தில் வேதங்களைக் கேட்டபடி செவிசாய்த்த விநாயகர் இருக்கிறார். கோயில் எதிரே வேத தீர்த்தம் உள்ளது. திருவையாறில் சப்தஸ்தான விழா நடக்கும்போது, ஐயாறப்பர், அம்பிகை, நந்திதேவர் இங்கு எழுந்தருளி, இத்தல மூர்த்தியை அழைத்துச் செல்வர்.
மங்கல அம்பிகை: இத்தல அம்பிகை பெண்களுக்கு அரசியாக இருந்து, அவர்களுக்கு மங்களகரமான வாழ்க்கையை அமைத்துத் தருபவதால் "மங்கையற்கரசி' என்றே பெயர். ஆடி, தை மாத வெள்ளியன்று இவள் சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சி தருவாள். மாங்கல்ய தோஷம் உள்ள பெண்கள் நிவர்த்திக்காக, இவளுக்கு மஞ்சள் புடவை, தாலி அணிவித்து வழிபடுகிறார்கள். செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடையுள்ளவர்கள் இங்குள்ள சுப்ரமணியருக்கு அபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கின்றனர். இவர் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்றவர். பிரகாரத்தில் லட்சுமி நாராயணர் இருக்கிறார். அருகில் ஆஞ்சநேயர் வணங்கியபடி கிரீடம் இல்லாமல் இருக்கிறார். சிவன் சன்னதியைச் சுற்றிலும் 108 லிங்கங்கள் உள்ளன.
தல வரலாறு:
பிரம்மாவிடம் இருந்த வேதங்களை, அசுரன் ஒருவன் எடுத்துச் சென்று கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். அதை, பெருமாள் மீட்டு வந்தார். அசுரனிடம் இருந்ததால் உண்டான தோஷம் நீங்க, வேதங்கள் சிவனை வழிபடவே, அவர் வேதங்களை புனிதப்படுத்தினார். பின், வேதங்களின் வேண்டுதலுக்காக வேதபுரீஸ்வரராக எழுந்தருளினார். தலத்திற்கும் திருவேதிகுடி என்ற பெயர் ஏற்பட்டது. பிரம்மா தனக்கு ஏற்பட்ட ஒரு சாபத்திற்கு, இங்கு சிவனை வேண்டி விமோசனம் பெற்றார். பிரம்மாவிற்கு "வேதி' என்ற பெயர் உண்டு. இதனாலும் சிவனுக்கு இப்பெயர் ஏற்பட்டதாகச் சொல்வர்.
சோழமன்னன் ஒருவன் தன் மகளின் திருமணம் தொடர்ந்து தடைபட்டு வந்ததால் மிகவும் வருந்தினார். ஒரு முறை அவன் இக்கோயில் வந்து மங்கையர்க்கரசி அம்மனை தரிசனம் செய்து, தன் மகளின் திருமணம் விரைவில் நடக்க வரம் வேண்டினான். அம்மனின் கருணையால் அவனது மகளுக்கு விரைவில் திருமணம் நடந்தது. அன்றிலிருந்து தன் மகளுக்கு மங்கையர்க்கரசி என்று செல்லப்பெயர் சூட்டி தன் நன்றியை தெரிவித்தான். அதன்பின் கோயிலுக்கு பல திருப்பணிகளும் செய்தான்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆண்டுதோறும் பங்குனி 13,14,15 தேதிகளில் சூரியனின் ஒளி கதிர்கள் சிவ லிங்கத்தின் மீது விழுகிறது.
No comments:
Post a Comment