Thursday, 22 December 2016

அருள்மிகு சிவகுருநாதசுவாமி திருக்கோயில், சிவபுரம், சாக்கோட்டை அஞ்சல்.(தஞ்சாவூர்)


மூலவர் : சிவகுருநாதசுவாமி, சிவபுரீஸ்வரர், பிரமபுரீஸ்வரர், சிவபுரநாதர்

உற்சவர் : -

அம்மன்/தாயார் : ஆர்யாம்பாள், சிங்காரவல்லி, பெரியநாயகி

தல விருட்சம் : செண்பகம் (இப்போதில்லை)

தீர்த்தம் : சந்திர புஷ்கரிணி, சுந்தர தீர்த்தம் - எதிரில் உள்ளது.

ஆகமம்/பூஜை : -

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : குபேரபுரம், திருச்சிவபுரம்

ஊர் : சிவபுரம்

பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், அப்பர்

தேவாரபதிகம்

மலைமகள் மறுகிட மதகரியைக் கொலைமல்க உரிசெய்த குழகன்நகர் அலைமல்கு மரிசிலி னதனயலே சிலைமல்கு மதிளணி சிவபுரமே. -  திருஞானசம்பந்தர்

தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 67வது தலம்.

திருவிழா:

சித்திரை மாதப்பிறப்பு, ஆனித்திருமஞ்சனம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, கந்தசஷ்டி, அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, கார்த்திகை சோமவாரம், தனுர்மாதம், திருவாதிரை, தைப்பொங்கல், மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம்


தல சிறப்பு:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு சித்திரை மாதம் 4, 5, 6 ஆகிய தேதிகளில் சூரியனின் ஒளி சுவாமிமீது விழுகிறது. சிவாலயங்களில் அங்கப்பிரதட்சணம் செய்யக்கூடிய சிறப்புமிக்க தலம் இது ஒன்றேயாகும்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 130 வது தேவாரத்தலம் ஆகும்.


திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல்11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.


பொது தகவல்:

இத்தல நடராஜர் மிக அழகிய திருவுருவம் கொண்டவர். இத்தல நடராஜப் பெருமானை வெளிநாட்டிற்குக் கடத்தப்பட்டதும், பெரும் வழக்குகளுக்குப்பின் மீண்டும் கிடைத்ததும் உலகப் புகழ் பெற்ற நிகழ்ச்சியாகும். இத்தல முருகப் பெருமான் மீது அருணகிரிநாதர் திருப்புகழ் அருளியுள்ளார்.

பிரார்த்தனை:

குழந்தைப்பேறு வேண்டுபவர்கள் இங்குள்ள அன்னைக்கு அபிஷேக ஆராதனை செய்து, விரதமிருந்து 11 வெள்ளிக்கிழமை அர்ச்சனை செய்ய குழந்தைப் பேறு கிடைக்கப்பெறுவர். குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய தோஷங்கள் நீங்கவும், உடல் மெலிவைப் போக்கவும் இங்குள்ள அம்மனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர். வசதிபடைத்தோர் அன்னதானம் செய்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

தலபெருமை:

குபேரபுரம், பூ கயிலாயம், சண்பகாரண்யம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்களாகும். திருமால் (சுவேதவராக) வெள்ளைப்பன்றி உருவில் பூஜித்த தலம். திருமகள், குபேரன், ராவணன், அக்னி முதலானோர் வழிபட்ட தலம். சிவாலயங்களில் அங்கப்பிரதட்சணம் செய்யக்கூடிய சிறப்புமிக்க தலம் இது ஒன்றேயாகும். குபேரன் தனபதி என்ற பெயருடைய மன்னனாகப் பிறந்து இத்தலத்து இறைவனை வழிபட்டு அருள் பெற்ற தலம்.

கோஷ்ட மூர்த்தங்களாக நடன விநாயகர், தெட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரமன், துர்க்கை முதலானோர் அருள்பாலிக்கின்றனர். தெட்சிணாமூர்த்திக்குப் பக்கத்து சுவரில் திருமால் வெண் பன்றியாக இருந்து தாமரை மலர்களைக் கொண்டு வழிபடும் ஐதீக சிற்பம் உள்ளது. வெளிச் சுற்றில் விநாயகர் சந்நிதியும், அடுத்து சுப்பிரமணியர், கஜலட்சுமி சந்நிதிகளும் உள்ளன. இந்நிகழ்ச்சியை அப்பர் பெருமான் இத்தலத்துத் திருத்தாண்டகத்தில் ""பாரவன்காண்'' என்று தொடங்கும் பாடலில் ""பிறை எயிற்று வெள்ளைப் பன்றி பிரியாது பலநாளும் வழிபட்டேத்தும் சீரவன்காண்'' என்று பாடியுள்ளார்.

தல வரலாறு:

இவ்வூரில் பூமிக்கடியில் ஓர் அடிக்கு ஒர் சிவலிங்கம் இருப்பதாக ஐதீகம். இதனால்தான் ஞானசம்பந்தர் முதலியோர் இத்தலத்தில் நடக்காமல், அங்கப்பிரதட்சணம் செய்து சுவாமியை தரிசித்துப் பின்பு ஊர் எல்லைக்கு அப்பால் தள்ளி நின்று பெருமானைப் பாடியதாக வரலாறு. அவ்வாறு பாடிய இடம் இன்று "சுவாமிகள் துறை' என்றழைக்கப்படுகிறது. (அரிசொல் ஆறு) அரிசிலாறு பக்கத்தில் ஓடுகின்றது. இவ்வூர் பட்டிடைத்து விநாயகர் கோயிலில் பட்டினத்தார் அமர்ந்த திருக்கோலத்தில் சிலை வடிவாய் உள்ளார்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு சித்திரை மாதம் 4, 5, 6 ஆகிய தேதிகளில் சூரியனின் ஒளி சுவாமிமீது விழுகிறது.

No comments:

Post a Comment