உற்சவர் : -
அம்மன்/தாயார் : அபினாம்பிகை (ஏழவார் குழலி)
தல விருட்சம் : வன்னி
தீர்த்தம் : சரவணப்பொய்கை
ஆகமம்/பூஜை : காரண ஆகமம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : பெருவேளூர், காட்டூர் ஐயன்பேட்டை
ஊர் : மணக்கால்ஐயம்பேட்டை
பாடியவர்கள்: அப்பர், சம்பந்தர்
தேவாரப்பதிகம்
குணக்கும் தென்திசைக் கண்ணும் குடபாலும் வடபாலும் கணக்கென்ன அருள்செய்வார் கழிந்தோர்க்கும் மொழிந்தோர்க்கும் வணக்கம்செய் மனத்தராய் வணங்காதார் தமக்கென்றும் பிணக்கம் செய் பெருமானார் பெருவேளூர் பிரியாரே. - திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 92வது தலம்.
திருவிழா:
கந்த சஷ்டியும், வைகாசி விசாகமும் இத்தலத்தின் முக்கிய திருவிழா ஆகும். இது தவிர சிவனுக்குரிய அனைத்து விசேஷ நாட்களும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
தல சிறப்பு:
இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 155 வது தேவாரத்தலம் ஆகும்.
திறக்கும் நேரம்:
காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல்:
இத்தல விநாயகர் கணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். கங்கை, முருகன், பிருங்கி முனிவர், கவுதம முனிவர் ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர். சுமார் 70 சென்ட் பரப்பளவில் கிழக்குநோக்கிய 5 நிலை ராஜ கோபுரத்துடன் கோயில் அமைந்துள்ளது. கோச்செங்கண்ணன் என்ற சோழமன்னன் கட்டிய மாடக்கோயில்களில் இதுவும் ஒன்று. கோயில் கீழ்பகுதியில் விநாயகரும், அர்த்தநாரீஸ்வரரும் அருள்பாலிக்கிறார்கள்.
இடதுபக்கம் சிவன் சன்னதியும், நடுவில் முருகன் சன்னதியும், வலது பக்கம் அம்மன் சன்னதியுமாக கோயில் சோமாஸ்கந்த அமைப்பில் உள்ளது. கால பைரவர், ஸ்ரீ பைரவர், வடுக பைரவர் என மூன்று பைரவர்கள் அருள்பாலிக்கிறார்கள்.
பிரார்த்தனை
திக்குவாய் உள்ளவர்கள், பேசும் ஆற்றல் இல்லாதவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்தால் பலன் நிச்சயம். சுக்கிரனுக்குரிய பரிகார ஸ்தலம். கடன் பிரச்னை உள்ளவர்கள் வழிபாடு செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
சிவனுக்கும், அம்மனுக்கும் புது வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர். அன்னதானம் செய்கின்றனர்.
தலபெருமை:
சிவபெருமானின் தேவாரப்பாடல் பெற்ற தலங்களுள், முருகன் பூஜை செய்த தலங்கள் வைத்தீஸ்வரன் கோவில், கீவளூர், பெருவேளூர், திருவிடைக்கழி ஆகியன. அதேபோல், முருகன் இத்தலத்தில் தங்கி தவம் செய்து தன்பெயரால் தீர்த்தம் உண்டாக்கி, சிவனை வழிபட்டு வேலாயுதமும், அருளாற்றலும் பெற்ற தலம். முருகன் பூஜை செய்த தலமாதலால் இத்தலம் "பெருவேளூர்' எனப்பட்டது. அருணகிரிநாதர் திருப்புகழ் பாடிய தலம்.
தேவ அசுரர்கள் பாற்கடலை கடைந்து அமுதம் எடுத்த போது, அது அசுரர்களின் கையில் கிடைக்காமல் செய்ய பெருமாள் மோகினி அவதாரம் எடுத்தார். இவர் தனது அவதார நோக்கம் நிறைவேறிய பின், மீண்டும் தனது ஆண் உருவத்தை பெறுவதற்காக இத்தலத்து இறைவனை வேண்டினார் என தல வரலாறு கூறுகிறது. பெருமாள் இங்கு தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.
சரஸ்வதீஸ்வரர் கோயிலின் கீழ் பிரகாரத்தில் ஆறு சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு லிங்கம் "சரஸ்வதீஸ்வரர்' என்ற திருநாமத்துடன் விளங்குகிறது. முன்பு ஒரு முறை ஊமைச்சிறுவன் ஒருவனை அவனது பெற்றோர் இந்த சரஸ்வதீஸ்வரர் சன்னதிக்கு அழைத்து வந்து வழிபாடு செய்தனர். இவர்களது வழிபாட்டில் மனமிறங்கிய சிவன் சிறுவனுக்கு பேசும் சக்தியை தந்தார் என கோயில் வரலாறு கூறுகிறது.
தல வரலாறு:
ஒரு முறை கங்காதேவி சிவபெருமானிடம்,""இறைவா! இவ்வுலக உயிர்கள் எல்லாம் தங்களது பாவங்களை போக்கி கொள்வதற்காக என்னிடம் வருகின்றன. இதனால் அனைத்து பாவங்களும் என்னிடம் சேர்ந்து விட்டன. இதை தாங்கள் தான் போக்கி அருளவேண்டும்,''என வேண்டினாள்.
கங்கையின் வேண்டுதலை ஏற்ற இறைவன்,""கங்கா! முருகன் தோற்றுவித்த தீர்த்தம் கொண்ட காவிரித் தென்கரைத்திருத்தலத்தில் நீராடி உனது பாவங்களை போக்கி கொள்,''என்றார். அதன்படி கங்கை இத்தலத்தில் நீராடி இறைவனை வழிபட்டு தன் பாவங்களை போக்கி கொண்டதாக வரலாறு கூறுகிறது. எனவே தான் அம்மன் இங்கு ராஜராஜேஸ்வரியாக அமர்ந்த தவக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
தேவாரப்பாடல் பெற்ற கோயில்களில் காஞ்சிபுரம், திருமீயச்சூர் ஆகிய தலங்களில் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கும் அம்மன் இத்தலத்திலும் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிப்பது சிறப்பம்சமாகும். இத்தலத்தில் தான் "லலிதா திரிசதை' பாடப்பட்டது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.
No comments:
Post a Comment