Thursday 22 December 2016

அருள்மிகு சித்தநாதேஸ்வரர் திருக்கோயில், திருநறையூர். (தஞ்சாவூர்)


 மூலவர் : சித்தநாதேஸ்வரர்

உற்சவர் : சோமாஸ்கந்தர்

அம்மன்/தாயார் : சவுந்தர்யநாயகி

தல விருட்சம் : பவளமல்லி

தீர்த்தம் : சித்தநாத தீர்த்தம்

ஆகமம்/பூஜை : சிவாகமம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : சித்தீஸ்வரம்

ஊர் : திருநறையூர்

பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், சுந்தரர்

தேவாரப்பதிகம்

நீரும் மலரும் நிலவும் சடைமேல் ஊரும் அரவம் உடையான் இடமாம் வாரும் அருவி மணிபொன் கொழித்துச் சேரும் நறையூர்ச் சித்தீச் சரமே. - சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 65வது தலம்.


திருவிழா:

மார்கழி திருவாதிரையில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், ஐப்பசி அன்னாபிஷேகம்.

தல சிறப்பு:

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மகாலட்சுமியின் அவதார தலமென்பதால், குழந்தை வடிவில் காட்சி தருகிறாள். எனவே, "மழலை மகாலட்சுமி' என்றழைக்கப்படும் இவளுக்கு பாவாடை, சட்டை அணிவித்து அலங்காரம் செய்கிறார்கள்.


திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு மணி வரை திறந்திருக்கும்.


பொது தகவல்:

மேற்கு நோக்கிய தலம் இது. இத்தலவிநாயகர் ஆண்டவிநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். சவுந்தர்யநாயகி தாயார் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவளுக்கு தை மாத கடைசி வெள்ளியன்று சந்தனக்காப்பு செய்யப்படுகிறது. மகாலட்சுமி சன்னதி அருகில் ஒரு தெட்சிணாமூர்த்தி இருக்கிறார். இவர் மேற்கு நோக்கியிருப்பது சிறப்பு. இந்த தெட்சிணாமூர்த்திக்கு எதிரே நவக்கிரக சன்னதி இருக்கிறது.


கிரக தோஷம் உள்ளவர்கள் தெட்சிணாமூர்த்தியையும், கிரகங்களையும் வழிபடுகிறார்கள். பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர் சன்னதியில் மூன்று சண்டிகேஸ்வரர்கள் இருப்பது விசேஷமான அமைப்பு. கோஷ்டத்தில் உள்ள துர்க்கை, "பிரசன்ன துர்க்கை' என்று அழைக்கப்படுகிறாள். இவள் எட்டு கைகளில் ஆயுதம் ஏந்தி, நளினமாக வலது காலை சற்று முன்புறமாக வைத்திருக்கிறாள்.

துர்க்கையின் இத்தகைய கோலத்தை காண்பது அரிது. அருகில் உமையொருபாகன், பிச்சாண்டவர், பிரம்மா ஆகியோரும் இருக்கின்றனர். பிரகாரத்தில் சப்தகன்னியர், பஞ்சலிங்கம், ஆண்டவிநாயகர், கால பைரவர், வீர பைரவர் ஆகியோருக்கு சன்னதிகள் உண்டு.

பிரார்த்தனை:

சரியாக பேச்சு வராதவர்கள், குரல் வளம் சிறக்க வேண்டுபவர்கள் இங்கு சிவன், அம்பாளுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கிறார்கள். தோல்நோய் நீங்க இங்குள்ள சித்தரிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.


நேர்த்திக்கடன்:

சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், நல்லெண்ணெய் அபிஷேகம் செய்தும் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.


தலபெருமை:

மழலை மகாலட்சுமி: இங்கு அவதரித்த மகாலட்சுமி, திருமாலை திருமணம் செய்து அருகிலுள்ள நாச்சியார்கோயிலில் அருளுகிறாள். எனவே, இவளுக்கு தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் பட்டுப்புடவை, சீயக்காய், எண்ணெய், பொங்கல்பானை, வெல்லம் என இங்கிருந்து பிறந்த வீட்டு சீர் கொடுக்கின்றனர். வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் இங்கிருந்து சிவன், அம்பிகை இருவரும் பெருமாள் கோயிலுக்கு செல்கின்றனர். இங்கு மகாலட்சுமிக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இவளது அவதார தலமென்பதால் இவள், குழந்தை வடிவில் காட்சி தருகிறாள். எனவே, "மழலை மகாலட்சுமி' என்றழைக்கப்படும் இவளுக்கு பாவாடை, சட்டை அணிவித்து அலங்காரம் செய்கிறார்கள்.


பவுர்ணமி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இவளது சன்னதி முன்பு கோமாதா பூஜை, யாகம் நடக்கிறது. அப்போது இவளுக்கு 108 தாமரை மலர்களை படைத்து பூஜிக்கிறார்கள். இவளுக்கு அருகில் முருகன் தனிசன்னதியில் இருக்கிறார்.


கோரக்க சித்தர் வழிபாடு: சித்தர்களில் ஒருவரான கோரக்கருக்கு, தேவர்களின் சாபத்தால் தோல்வியாதி உண்டானது. நோய் நீங்க அவர் இங்கு சுவாமியை வழிபட்டார். சிவன் அவருக்கு காட்சி தந்து நோயை நீக்கி அருள்புரிந்தார். கோரக்க சித்தருக்கு அருள்புரிந்தவர் என்பதால் இவர், "சித்தநாதேஸ்வரர்' என்று பெயர் பெற்றார். சுவாமி கோஷ்டத்தில், சிவவழிபாடு செய்யும் கோரக்கர் சிற்பம் இருக்கிறது. அருகிலேயே இங்கு தவமிருந்த மேதாவி மகரிஷியும் இருக்கிறார். தோல் வியாதி உள்ளவர்கள் கோரக்கருக்கு, பவுர்ணமி மற்றும் வியாழக்கிழமைகளில் நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, உடலில் பூசிக் கொள்கிறார்கள். இதனால் நோய் நீங்குவதாக நம்பிக்கை.

தல வரலாறு:

மகரிஷியான மேதாவிக்கு, ஒருசமயம் மகாலட்சுமியே தனது மகளாக பிறக்க வேண்டுமென ஆசை எழுந்தது. அதற்காக அவர் இத்தலத்திலுள்ள தீர்த்தக் கரையில், வஞ்சுள மரத்தின் அடியில் சிவனை வேண்டி தவமிருந்தார். மேதாவியின் பக்தியில் மகிழ்ந்த சிவன் திருமாலிடம், மகாலட்சுமியை மேதாவியின் மகளாக பிறக்க அனுமதிக்கும்படி வேண்டிக்கொண்டார். திருமாலும் சம்மதித்தார். ஒரு பங்குனி மாத, உத்திர நட்சத்திரத்தில் தடாகத்தின் தாமரை மலரில் மகாலட்சுமி அவதரித்தாள். அவளுக்கு "வஞ்சுளாதேவி' எனப்பெயரிட்டு வளர்த்த மகரிஷி, திருமாலுக்கே மணம் முடித்துக் கொடுத்தார். மேதாவி மகரிஷிக்கு காட்சி தந்த சிவன், இத்தலத்தில் எழுந்தருளினார்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

No comments:

Post a Comment