ஹரித்வார் பயனம்
நம்மில் பலர் அறிந்திடாத பல புராண கதை உள்ளது... அதில் ஒன்றை பார்ப்போம்...
பெருமாள்(பத்ரிநாதர்) தானே நர நாராயணராக அவதரித்து பத்ரி வனத்தில் தவம் செய்தார்.., ஆனால் அவர் எதற்காக அவ்வாறு தவம் செய்தார் என்பதற்கு கூறிய குட்டிக்கதை இதோ.
அசுரர்கள் கடுமையான தவம் செய்து வரம் பெறுவது நாம் அறிந்ததுதானே... இந்த அசுரனும் ( சகஸ்ரகவசன் ) கடுந்தவம் செய்து வரம் பெற்றான். அது என்ன வரம் தெரியுமா? தனக்கு ஆயிரம் உடல் கவசம் வளர வேண்டும் அது மட்டுமா ? அந்த கவசம் யாராலும் உடைக்க முடியாததாய் இருக்க வேண்டும் என்று வரம் கேட்டான். அதன் மூலம் தான் சாகாவரம் பெறலாம் என்று எண்ணினான் அது மாதிரி வரம் முடியாது என்றவுடன் யார் ஆயிரம் வருடங்கள் தவம் செய்கிறாத்களே அவர்களால் மட்டுமே ஒரு கவசத்தை உடைக்க முடியும் என்ற வரம் பெற்றான்.
ஆயிரம் தடவை ஆயிரம் அதாவது பத்து லட்சம் வருடமாவது தான் வாழமுடியும் என்ற ஆணவத்தில் தன் கொடுமைகளை துவங்கினான், தேவர்கள் அனைவரும் ஆபத்பாண்டவாக வரும், அசுரர்களை அழித்து காப்பவருமான் மஹா விஷ்ணுவை சரணடைந்து அபயம் வேண்டினர்.
அவரும் சகஸ்ர(ஆயிரம்) கவசனை அழித்து தேவர்களை காப்பாற்றுவதாக வாக்குக்கொடுத்தார்.
பிறகு பெருமாள் நாரதரை அழைத்து , த்ரிலோக சஞ்சாரியே இப்பூவுலகில் எங்கு ஒரு வருடம் தவம் செய்தால் ஓராயிரம் வருடம் தவம் செய்த பலம் கிடைக்குமோ அந்த இடத்தை கண்டுபிடித்து வா என்று அனுப்பினார். நாரதரும் பூவுலகம் வந்து எல்லா இடமும் சுற்றினார்.. இமயமலையின் இந்த பத்ரிவனத்தில் அவர் சுற்றிய போது தன்னையே மறந்து அங்கு மூன்று நாழிகை நேரம் தங்க நேர்ந்தது. வெங்கடேச சுப்ரபாத்தில் ஒரு ஸ்லோகம் வரும் “ ஓரிடத்தில் நிலையாக நின்றறியா நாரதரும், நீ இங்கு கோவில் கொண்டததனால், இங்கே நிலை கொண்டார்” என்று வரும். இவ்வாறு ஒரே இடத்தில் தங்காத நாரதர் பத்ரிநாத்தில் மூன்று நாழிகை இருந்ததால் இந்த இடமே பெருமாள் தவம் செய்வதற்காக சிறந்த இடம் என்று பெருமாளிடம் வந்து தெரிவித்தார். எனவே பெருமாள் நர நாராயணராக பத்ரிநாத் வந்து தவம் செய்ய ஆரம்பித்தனர். இருவராக ஏன் வந்தார் ஒருவர் தவம் செய்யும் போது அடுத்தவர் சகஸ்ரகவசனுடன் போர் புரிந்தார். இவ்வாறு வருடம் ஒருவர் போர் புரிந்து அசுரன் கவசத்தை உடைக்க அடுத்தவர் தவம் செய்தார், இவ்வாறு தவம் செய்யும் போது மஹாலக்ஷ்மித் தாயார் பத்ரி மரமாக நிழல் தந்தார், இவர்கள் தவத்தை கலைக்க அழகிய பெண்களை அசுரன் அனுப்ப பெருமாள் தனது தொடையில் இருந்து பேரழகியான ஊர்வசியை பிறப்பித்தார் (ஊரூ என்றால் வடமொழியில் தொடை, தொடையில் இருந்து தோன்றியதால் அவள் பெயர் ஊர்வசியாயிற்று) அவளின் அழகைக்கண்ட அசுரப்பெண்கள் நாணி திரும்பிச்சென்று விட்டனர். எனவே பத்ரிநாத்தில் ஊர்வசி தாரா என்று ஒரு நீர் வீழ்ச்சிக்கு பெயர். மேலும் பத்ரிநாத்தில் நவராத்திரி கொண்டாட்டமும் ஊர்வசி நவராத்திரி என்று கொண்டாடப்படுகின்றது. இவ்வாறு 999 வருடங்கள் முடிந்தன. இன்னும் ஒரு கவசம் மட்டுமே பாக்கி இருந்தது. யுகம் மாறியது அவர்கள் மூவரும் யாராக பிறந்தார்கள் தெரியுமா?
நமக்கு தெரிந்த மஹாபாரதக் கதையின் கர்ணன்தான் சகஸ்ரகவசனாக கவச குண்டலங்களுடன் பிறந்தான், நர நாராயணர்கள் அர்ச்சுனன், கிருஷ்ணராக அவதாரம் எடுத்து அசுரனின் இறுதி கவசத்தையும் நீக்கி அவனை தோற்கடித்தனர். ( இங்கு செய்கின்ற ஒவ்வோரு புண்ணிய செயலும் ஆயிரம் மடங்கு பலன் தரவல்லது..)
கேதாரதில் இருந்து ஹரித்வார் செல்லும் வழியில் மானா கிராமத்தில் இருக்கின்ற கணேசர் குகைக்கு ஒரு சிறப்பு உண்டு...
அது என்னவென்றால் விநாயகர் மஹா பாரதம் எழுதி இடம்..
விநாயகப் பெருமான் வியாச பகவான் கூற தனது வலது கொம்பினால் ஐந்தாம் வேதமாகிய மஹாபரதத்தை எழுதிய இடம் இந்த கணேசர் குகை..
முதலில் அந்த முழு முதற் கடவுளை
முத்தமிழடைவினை முற்படுகிரிதனில் முற்பட எழுதிய ...... முதல்வோனே
என்று மேருமலையில் முத்தமிழையும் இந்த இமய மலையில் மஹாபாரதத்தையும் எழுதிய மூலமுதல்வனை தரிசித்து வணங்கிடலாம்..
வேத வியாசர் பாரதம் கூறிய போது அதை எழுதியவர் விநாயகர் , அப்போது விநாயகர் ஒரு நிபந்தனை விதித்தாராம். நிறுத்தாமல் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் நிறுத்தினால் எழுதுவதையும் நிறுத்தி விடுவேன் என்றாராம். ஆகவே வியாச பகவான் முதலில் ஐந்து ஸ்லோகங்களை சொல்லுவாராம் அதை விநாயகப்பெருமான் தனது கொம்பினால் எழுதி முடிப்பதற்குள் அடுத்த ஐந்து ஸ்லோகங்களை மனதில் உருவாக்கி விடுவாராம்.
அடுத்து வியாச பகவானின் குகை...
வியாச பகவானைப்பற்றி விஷ்ணு சகஸ்ரநாம பூர்வ பாகத்தில் இவ்வாறு இரண்டு ஸ்லோகங்கள் வருகின்றன.
வ்யாஸம் வஸிஷ்ட நப்தாரம் சக்தே: பௌத்ர – மகல்மஷம் |
பராசராதமஜம் வந்தே சுகதாதம் தபோநிதிம் ||
வ்யாஸ பகவானின் மூதாதையர்களை கூறும் ஸ்லோகம் இது. பிரம்ம ரிஷியான வஷிஸ்டரின் கொள்ளுப்பேரன், சக்தி ரிஷியின் பேரன், பராசரர்- சத்தியவதியின் திருக்குமாரர் அது மட்டுமா இவரது புத்திரர் சுகபிரம்ம ரிஷி. உலக நன்மைக்காக பல்வேறு நன்மைகளை செய்து நீதிகளை அருளியவர்கள் அத்தனை பேரும்.
வ்யாஸாய விஷ்ணுரூபாய வ்யாஸரூபாய விஷ்ணவே |
நமோ வை ப்ரஹ்மநிதயே வாஸிஷ்ட்டாய நமோ நம: ||
வஷிட்டரின் குலத்திலே பிறந்த வ்யாஸரே விஷ்ணு, விஷ்ணுவே வியாசர். மஹா விஷ்ணுவின் அவதாரங்களில் "தேவுடைய மீனமாயாமையாய் ஏனமாய் அரியாய்க் குறளாய் மூவுருவிலி ராமனாய்க் கண்ணனாய்க் கற்கியாய்" என்று பெரியாழ்வார் அருளிய தசாவதாரத்தைப் பற்றி நாம்மில் பலர்நன்றாக அறிவோம். ஆனால் ஹயக்ரீவர், அன்னம், மச்சம், கூர்மம், தன்வந்திரி, மோகினி, வராகம், நரசிம்மர், வாமனர், பரசுராமர், இராமர், பலராமன், கிருஷ்ணர், நர நாரயணர், கபிலர், யக்ஞர், வேத வியாசர், ரிஷபர், தத்தாத்ரேயர், பருதுர், புத்தர், கல்கி என்று இருபத்தி இரண்டு அவதாரங்கள் என்று ஆன்றோர்கள் கூறுவார்கள். இந்த கலியில் நாம் எல்லாஉம் உய்ய பெருமாளே வியாசராக அவதாரம் செய்து வேதங்களை பகுத்து, பாரதமும், பாகவதமும் நமக்கு அருளிச் சென்றார்.
விஷ்ணு ரூப வியாஸ பகவானின் திருநாமம் காரணப்பெயராகும். வியாஸம் என்றால் பகுத்தல் என்று பெயர். இவர் துவாபர யுகத்தில் பிறந்தார் அதுவரை வேதங்கள் எல்லாம் ஒன்றாகத்தான் இருந்தன அதை ரிக், யஜுர், சாம, அதர்வண வேதம் என்று பகுத்து அளித்தவர் இவர் எனவேதான் இவர் வேத வியாசர் என்று அழைக்கப்படுகின்றார். மேலும் இவர் அனைத்து நீதிக்கதைகளையும் உள்ளடக்கிய இதிகாசம் மஹாபரதத்தையும், கிருஷ்ண பரமாத்மாவின் லீலைகளைக் கூறும் ஸ்ரீமத் பாகவதத்தையும் நமக்கு அருளினார். இமயமலையின் கிழக்குப் பகுதியில் ஒரு பள்ளத்தாக்கு பியான்ஸ் பள்ளத்தாக்கு என்று இவர் பெயரால் அழைக்கப்படுகின்றது, (திருக்கயிலாய யாத்திரை செல்பவர்கள் இந்த பள்ளத்தாக்கில் நடந்து செல்வர்) மேலும் இவருக்கு பல இடங்களில் கோவில்களும் உள்ளன.
வியாசர் குகையில் தற்போது வியாசர் கூற விநாயகப்பெருமான் பாரதம் எழுவது போல சுதையில் சிற்பங்கள் உள்ளன. அங்கு சென்று விஷ்ணு ரூப வியாசரை வணங்கி விட்டு அடுத்து பீமன் பாலத்தையும் சரஸ்வதி நதியையும் தரிசிக்க செல்ல வேண்டும். அதற்கு முன்னர் ஒரு கதையை பார்த்து விடலாம்..
என்ன கதை என்று அறிந்து கொள்ள ஆவலாக உள்ளதா அடுத்த பதிவுவரை பொறுங்கள்...
திருச்சிற்றம்பலம்
கங்கை கரையில் தொடர் இன்னும் வ(ள)ரும்...
No comments:
Post a Comment