Saturday 31 December 2016

அருள்மிகு கற்பகநாதர் திருக்கோயில், கற்பகநாதர் குளம் - தொண்டியக்காடு , திருவாரூர்


மூலவர் : கற்பக நாதர்

உற்சவர் : -

அம்மன்/தாயார் : பாலசுந்தரி

தல விருட்சம் : பலா

தீர்த்தம் : விநாயகர் தீர்த்தம்

ஆகமம்/பூஜை : -

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருக்கடிக்குளம்

ஊர் : கற்பகநாதர்குளம்

பாடியவர்கள்: சம்பந்தர்

தேவாரப்பதிகம்

பொடி கொண்மேனி வெண்ணூலினர் தோலினர் புலியுரியதளாடை கொடி கொளேற்றினர் மணிகிணி எனவரு குறைகழல் சிலம்பார்க்கக் கடிகொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத் துறையும் கற்பகத்தைத்தம் முடிகள் சாய்த்தடி வீழ்தரும் அடியரை முன்வினை மூடாவே. - திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 109வது தலம்.

திருவிழா:

மகா சிவராத்திரி

தல சிறப்பு:

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 173 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

பொது தகவல்:

இத்தல விநாயகர் மாங்கனி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

பிரார்த்தனை

சகல வரங்கள் பெற இங்கு வழிபாடு செய்யப்படுகிறது. பித்ருக்களுக்கு பரிகாரம் செய்ய ஏற்ற தலம்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் வெண்ணெய் தானம் செய்து வழிபாடு செய்கின்றனர்.

தலபெருமை:

இத்தல சிவபெருமான் 8 முக பட்டை லிங்கமாக அருள்பாலிக்கிறார். இவரை தரிசிப்பதால் அஷ்டலட்சுமியின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இவரை அஷ்டமி திதியிலும், சனிக்கிழமை புத ஹோரையிலும் குங்குமப்பூவுடன் வெண்ணெய் சேர்த்து காப்பிட்டு வணங்கினால் வேண்டும் வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தலத்தில் வெண்ணெய் தானம் செய்வது சிறந்தது. ராமர் சேது சமுத்திரத்தில் பாலம் கட்டும் முன்பாக இத்தலம் வந்து கற்பக விநாயகரையும், கற்பகநாதரையும் வழிபாடு செய்ததாக புராணம் கூறுகிறது.

இதன் காரணமாக கோதண்டராமர் கோயில் இத்தலத்தின் அருகே உள்ளது. ஒரு அந்தணர் தன் தந்தைக்கு பிதுர்கடன் செய்வதற்காக கொண்டு வந்த அஸ்தி இத்தலத்திற்கு வந்தவுடன் கொன்றை மலராக மாறியது என்பர்.

தல வரலாறு:

கார்த்திகாச்சுரன் என்ற அரக்கன் இத்தல இறைவனை வழிபாடு செய்து வரங்கள் பல பெற்றான்.

தான் வேண்டும் போதெல்லாம் கற்பக விருட்சம் போல வரங்களை அள்ளித்தந்த இறைவனுக்கு கோயில் கட்டி வழிபாடு செய்தான். இதனால் இத்தல இறைவன் கற்பகநாதர் என வழங்கப்படுகிறார். கற்பக விநாயகர் கற்பகநாதரை வழிபட்டு மாங்கனி பெற்றுள்ளார்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

No comments:

Post a Comment