Sunday 25 December 2016

அருள்மிகு கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோயில், திருநல்லூர்( கும்பகோணம் )


மூலவர் : கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்)

உற்சவர் : கல்யாணசுந்தரேஸ்வரர்

அம்மன்/தாயார் : கல்யாணசுந்தரி

தல விருட்சம் : வில்வம்

தீர்த்தம் : சப்தசாகரம்

ஆகமம்/பூஜை : -

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருநல்லூர்

ஊர் : நல்லூர்

பாடியவர்கள்:சம்பந்தர், அப்பர்

தேவாரப்பதிகம்

நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார் நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார் சினந்திருகு களிற்றுரிவைப் போர்வை வைத்தார் செழுமதியின் தளிர்வைத்தார் சிறந்து வானோர் இனந்துருவி மணிமகுடம் தேறத் துற்ற இனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப் பல்கி நனைந்தனைய திருவடியென் தலைமேல் வைத்தார் நல்லூர் எம் பெருமானார் நல்லவாறே. - திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 20வது தலம்.

திருவிழா:

மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை

தல சிறப்பு:

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இவர் தினமும் ஐந்து நிறத்தில் காட்சியளிப்பதால் "பஞ்சவர்ணேஸ்வரர்' என அழைக்கப்படுகிறார்.

திறக்கும் நேரம்:

காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

பொது தகவல்:

அம்மன் திரிபுர சுந்தரி தனி சன்னதியில் காட்சி தருகிறாள். இது தவிர 8 கரங்களுடன் ஆடும் நடராஜர், அப்பர், சம்பந்தர், சுந்தரர், காசி விஸ்வநாதர், அகத்தியர், கணநாதர் ஆகியோரும் காட்சி தருகின்றனர்.

பிரார்த்தனை

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இங்கு வழிபாடு செய்தால் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை. கருவுற்ற பெண்கள் சுகப்பிரசவத்திற்காக வளைகாப்பு நடத்தியும், நினைத்த காரியம் நிறைவேறவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனைநிறைவேறியதும் சந்தனக்காப்பு, முடி காணிக்கை போன்ற நேர்த்திக்கடன் செய்கின்றனர்.

தலபெருமை:

மகம் நட்சத்திர கோயில்: மாசி மகத்திற்காக கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடுவதால் என்ன பலன் கிடைக்குமோ, அதே பலன் இத்தலத்தின் குளத்தில் நீராடினாலும் கிடைக்கும் என்கிறது புராணம். பாண்டவர்களின் தாய் குந்திதேவி, பஞ்சபூதங்களினால் குழந்தை பெற்றாள் என்பதால் அவளுக்கு தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷம் நீங்க குந்தி தேவி நாரதரிடம் யோசனை கேட்கிறாள். ஏழு கடல்களில் நீராடினால் தோஷம் நீங்கும் என நாரதர் கூறினார். நான் பெண், என்னால் எப்படி ஏழு கடல்களில் சென்று நீராட முடியும். எனவே வேறு ஏதாவது வழி கூற வேண்டும், என்கிறாள் குந்தி. அப்படியானால் கும்பகோணம் அருகிலுள்ள நல்லூர் சென்று கல்யாண சுந்தரேஸ்வரரை வழிபடு. அதற்குள் நான் வழி சொல்கிறேன் என்கிறார் நாரதர். குந்தி வழிபாடு செய்து வருவதற்குள் நல்லூர் தலத்திலுள்ள குளத்தில் ஏழு கடல்களின் நீரையும் நாரதர் சேர்த்து விடுகிறார்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்த குந்தி, தன் தோஷம் நீங்க நல்லூர் குளத்தில் நீராடுகிறாள். மகம் நட்சத்திரத்திற்குரிய கோயில் நல்லூர் என்றும், இக்குளத்தில் நீராடினால் கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடிய பலன் கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.

சிறப்பம்சம்: இங்குள்ள கல்யாண சுந்தரேஸ்வரர் தினமும் ஐந்து தடவை நிறம் மாறுகிறார். தாமிர நிறம், இளம் சிவப்பு, தங்க நிறம், நவரத்தின பச்சை, இன்ன நிறமென கூறமுடியாத தோற்றம். இப்படி ஐந்து வண்ணத்தில் காட்சி தருவதால், இவர் பஞ்சவர்ணேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் தான் சிவபெருமான் நாவுக்கரசருக்கு பாத தரிசனம் தந்தார். அன்று முதல் இங்கு பெருமாள் கோயிலைப்போல சடாரி வைக்கும் வழக்கம் ஏற்பட்டது.

அஷ்டபுஜ மாகாளி: எட்டு கைகளுடன் கூடிய காளி இங்கு அருள்புரிகிறாள்.

சோமாஸ்கந்த மூர்த்தி: இக்கோயிலில் உள்ள சோமாஸ்கந்த மூர்த்தி திருவாரூர் தியாகராஜருக்கு ஈடாக உள்ளது. மாசி மகத்தின் போது இவர் கோயிலுக்குள் உலா வருவார். மாடக்கோயிலின் படிகள் வழியாக இவர் இறங்கும் போது அடியார்கள் வெண்சாமரமும், விசிறியும் வீசுவார்கள். ஆனாலும் கூட பெருமாளின் முகத்தில் வியர்வை துளிகள் அரும்புவதைக் காணலாம்.

தல விருட்சம்: இக்கோயிலில் உள்ள வில்வ மரத்தை ஆதிமரம் என்கின்றனர். முதன் முதலாக தோன்றிய வில்வமரம் இது தான் என கூறப்படுகிறது. இந்த வில்வ இலைகளால் இறைவனை அர்ச்சனை செய்ய நமக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

கணநாதர்: இத்தலத்தின் மேற்கு கோபுர வாயிலில் மேல்புறம், பலிபீட வடிவில் கணநாதர் வீற்றிருக்கிறார். இந்த வடிவத்துடன் இத்தலத்திலும், காசியிலும் மட்டுமே கணநாதர் வழிபடப்படுகிறார். ஆண்டுக்கொருமுறை இரவில் நடக்கும் கணநாதர் பூஜை சிறப்பானது. அன்றைய தினம் இந்த ஊரிலும், பக்கத்து ஊரிலும் உள்ள மக்கள் தங்கள் பசு, ஒரு வேளை கறக்கும் பாலை அப்படியே கொடுத்து இப்பூஜையில் கலந்து கொள்கின்றனர். இந்த பூஜையை பக்தர்கள் பார்க்க முடியாது. இத்தலத்தில் தான் அமர்நீதி நாயனாரை சிவபெருமான் ஆட்கொண்டார்.

தல வரலாறு:

இமய மலையில் பார்வதியை சிவன் திருமணம் செய்யும் காட்சியைக்காண, உலகில் உள்ள உயிரினங்களும் திரண்டு நின்றன. இதனால் வடதிசை தாழ்ந்து, தென்திசை உயர்ந்தது. உலகை சமப்படுத்த அகத்தியரை தென் திசைக்கு செல்லும் படி சிவபெருமான் ஆணையிட்டார். தனக்கு திருமணத்தை காணும் வாய்ப்பு இல்லாமல் போய் விட்டதே என அகத்தியர் வருந்துகிறார். ""நான் உனக்கு திருமணக்காட்சி அருள்கிறேன்'என்றார் சிவன். அதன்படி அகத்தியருக்கு இறைவன் இத்தலத்தில் திருமணக்காட்சி காட்டியருளினார். இதைக்கண்டு மகிழ்ந்த அகத்தியர் இங்குள்ள சுந்தரலிங்கத்தின் வலதுபுறம் மற்றொரு லிங்கத்தை வைத்து பூஜித்து பேறுபெற்றார். அகத்தியர் தரிசித்த திருமணக்கோல மூர்த்தியை மூல லிங்கத்தின் பின்புறம் காணலாம்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இவர் தினமும் ஐந்து நிறத்தில் காட்சியளிப்பதால் பஞ்சவர்ணேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

No comments:

Post a Comment