ஹரித்வார் பயனம்
பஞ்சபாண்டவர்கள்
சொர்க்கம் சென்ற
கதை இன்று
பார்ப்போம்..
மஹா பாரதப்போரில் வென்ற பஞ்சபாண்டவர்கள் சிறப்பாக இராஜ்ய பரிபாலனம் செய்து இறுதியாக சொர்க்கம் செல்லுவோம் என்று இராஜ்யத்தை பரிக்ஷித்திடம் ஒப்படைத்து விட்டு இமயமலைக்கு வந்து கேதாரீஸ்வரரை பணிந்து கோத்ரஹத்யா (தன் உறவினர்களை கொன்ற பாவம்), பிராமணஹத்யா (பிரமாணர்களை கொன்ற பாவம்) நீங்கப்பெற்று பின் நிறைவாக பத்ரிநாதரை தரிசனம் செய்து விட்டு சொர்க்கம் செல்ல புறப்பட்டனர். சரஸ்வதி நதியை பீமன் அமைத்த பாலத்தினால் கடந்து யோகத்தை மனதில் நிறுத்தி அவர்கள் கடந்தனர்.
பீமன் பாலத்தை கடந்த சிறிது நேரத்தில் திரௌபதி கால்கள் தள்ளாடி கீழே விழுந்தாள். அதைக்கண்ட பீமசேனன் தர்மபுத்திரரிடம், தவத்தில் சிறந்தவரே, அரசகுமாரி திரௌபதி ஒரு பாவமும் செய்யவில்லையே அவள் விழுந்ததற்குக் காரணமென்ன? என்று வினவினான்.
பீமனுடைய கேள்வியைக் கேட்ட தர்மபுத்திரர் பின்னால் திரும்பாமல் நடந்து கொண்டே பதில் கூறினார் – “அவளுடைய உள்ளத்தில் அர்ஜுனனிடம் மட்டும் மிகுதியான அன்பு இருந்தது.”
சிறிது நேரம் கழித்து லக்ஷ்மி வனத்தை அடைந்த போது சகதேவன் பூமியில் விழுந்தான். அதைப் பார்த்த பீமன்- அண்ணா சகதேவனின் மனதில் சிறிதும் அகந்தை இருந்ததில்லை அவன் ஏன் இறந்தான் என்று கேட்டான். அதற்கு தர்மபுத்திரர், “தன்னைப் போன்ற புத்திமான் வேறு யாரும் இல்லை" என்ற அகந்தையினால்தான் அவன் விழுந்தான் என்று பதிலிறுத்துவிட்டு தொடர்ந்து நடந்தார் தர்மர். மற்ற சகோதரர்கள் மற்றும் தொடர்ந்து பின் வந்த நாயுடன் தர்மர் சென்று கொண்டிருந்த போது சகஸ்ரதாராவின் அருகே மற்றொரு மாத்ரி புத்திரனான நகுலனும் கீழே விழுந்தான். பீமன் மீண்டும் – அண்ணா அறத்திலிருந்து வழுவாத நம்முடைய பிரியமான நகுலன் ஏன் விழுந்தான்? என்று கேட்டான். அதற்கு தர்மர் “ தன்னைப் போன்ற அழகன் வேறு யாருமில்லை" என்ற அகந்தைதான் காரணம் , வா தம்பி என்று தொடர்ந்தார் தர்மர், சிறிது தூரம் சென்று சக்ரதீர்த்த்தின் அருகே வில் வீரன் அர்ச்சுனனும் விழுந்தவுடன் பீமன், அரசே,அர்ஜுனன் விளையாட்டாக கூட பொய் பேசியதில்லையே அவன் ஏன் விழுந்தான் என்று வினவ தரிமபுத்திரர் “ அர்ஜுனனுக்கு தன் வீரம் பற்றிய அகந்தை இருந்தது என்றார். சிறிது தூரம் சென்று சதோபன்த் ஏரியை அடைந்த போது இது வரை கேள்வி கேட்டுக்கொண்டிருந்த பீமசேனனும் விழுந்தான். விழுந்ததும் அவன் தர்மரை அழைத்து, இதோ பாருங்கள் நானும் விழுந்து விட்டேன். இதற்கு என்ன காரணம் என்று வினவ, தர்மபுத்திரர் கூறினார் தம்பி "உனக்கு உணவில் மிக்க விருப்பம். மேலும் மற்றவர்களை நீ துச்சமாக நினைத்து தற்பெருமை பேசிக்கொண்டிப்பாய்". அதனால்தான் நீ கீழே விழ வேண்டி வந்தது என்று கூறி விட்டு முன்னே நடந்தார்.
ஸ்வர்க்காரோகணி என்னும் மலை சிகரத்தில் ஏறி நின்ற தர்மரை சொர்க்கம் அழைத்து செல்ல புஷ்பக விமானம் வந்தது. தர்மருடன் நாயும் விமானத்தில் ஏற முயன்ற போது தேவ தூதர்கள அதை தடுத்தனர். தர்மர் இந்த நாய் என்னுடனே வந்து கொண்டிருக்கின்றது எனவே அதையும் சொர்க்கத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என்றார். அதற்கு தேவதூதர்கள் மறுப்புக்கூற தர்மர் விமானத்தில் இருந்து இறங்கி, நாய் வரவில்லையானால் நானும் வரவில்லை என்று கூறி நின்றார். அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது நாய் எமதர்மராஜனாக மாறி, தர்மம் தவறாத, தன்னலமில்லாத நீயே எனக்கு ஏற்ற மகன் என்று வாழ்த்தி தர்மபுத்திரரை பூத உடலுடன் சொர்க்கம் அழைத்து சென்றார். இவ்வாறு மஹாபாரதத்தின் நூலும் பாவும் இமயமலையுடன் இனைந்துள்ளது.
(இவ்வாறு பஞ்ச பாண்டவர்கள் சென்ற இந்த வழியில் ஸ்வர்க்காரோகிணி வரையில் மிகவும் கடினமான சதோபந்த (சத்தியத்தின் பாதை) யாத்திரையை மேற்கொள்ளும் அன்பர்கள் இருக்கின்றனர். பனி உருகிய பின் பத்ரிநாத்திலிருந்து பீமன் பாலத்தின் மூலம் சரஸ்வதி நதியை கடந்து மாதா மூர்த்தியின் அருள்பெற்று, மானாவிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள, 122 மீ உயரத்தில் இருந்து விழும் வசுதாரா நீர் வீழ்ச்சியை கண்டு களித்து லக்ஷ்மி தவம் செய்த லக்ஷ்மி வனம், குபேரனின் அளகாபுரி பளிங்குப்பாறை பகுதி என்று நான்கு நாட்கள் நடைபயணம் மேற்கொள்கின்றனர். மிகவும் கடினமான பாதை, சில இடங்களில் கத்தி முனை போல இருக்கும் மலை முகட்டில் நடந்து செல்ல வேண்டும் கரணம் தப்பினால் மரணம் தான். வழிகாட்டி மிகவும் அவசியம்.)
இது வரை நீங்கள்(ஒரு சிலர்) அறிந்திடாத கதை ஒன்று இருக்கிறது..
கடோத்கஜனின் மகன் பார்பரிக்கை பற்றிய கதை நாளை பார்ப்போம்....
திருச்சிற்றம்பலம்
கங்கை கரையில் தொடர் இன்னும் வ(ள)ரும்...
No comments:
Post a Comment