Sunday 25 December 2016

அருள்மிகு பிராணநாதேசுவரர் திருக்கோயில், திருமங்கலக்குடி( தஞ்சாவூர் )


மூலவர் : பிராணநாதேசுவரர்

உற்சவர் : -

அம்மன்/தாயார் : மங்களாம்பிகை

தல விருட்சம் : கோங்கு, இலவு(வெள்ளெருக்கு)

தீர்த்தம் : மங்களதீர்த்தம் (காவிரி)

ஆகமம்/பூஜை : -

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருமங்கலக்குடி

ஊர் : திருமங்கலக்குடி

பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்

தேவாரப்பதிகம்

பொலியும் மால்வரை புக்கெடுத் தான்புகழ்ந்து ஏத்திட வலியும் வாளொடு நாள்கொடுத்தான் மங்கலக்குடிப் புலியின் ஆடையின் னானடி ஏத்திடும் புண்ணியர் மலியும் வானுலகம் புகவல்லவர் காண்மினே. - திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 38வது தலம்.

திருவிழா:

பங்குனி உத்திரம் - 10 நாட்கள் - பிரம்மோற்சவம் - 2 ம் நாள் திருக்கல்யாணம் விசேசம் - இத்தலத்தின் மிக முக்கிய திருவிழா இதுவே ஆகும். இது தவிர சங்கட சதுர்த்தி, கிருத்திகை ஆகிய நாட்களும் இத்தலத்தில் சிறப்பு மிகுந்த நாட்கள் என்பதாகும். அஷ்டமி தேய்பிறை அன்று பைரவர்க்கு விசேசம். மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல், தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.

தல சிறப்பு:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பொதுவாக கோயில்களில் சிவலிங்கத்தில், ஆவுடையாரை விட சற்று உயரம் குறைந்ததாகத்தான் பாணம் இருக்கும். ஆனால் இக்கோயிலில் பாணம், ஆவுடையாரைவிட உயர்ந்ததாக இருக்கிறது. நடராஜர் சன்னதியில் மரகதலிங்கம் ஒன்று உள்ளது. இரவில் திருக்கல்யாணம் : மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் போன்ற கோயில்களில் காலையில் திருக்கல்யாணம் நடந்து, மதிய வேளையில் திருக்கல்யாண விருந்து வைக்கப்படும். ஆனால், இக்கோயிலில் இரவில்தான் திருக்கல்யாணம் நடக்கிறது. பங்குனியில் நடக்கும் பிரம்மோற்ஸவத்தின் ஏழாம் நாளன்று திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு மேல் மாப்பிள்ளை அழைப்பு, சுவாமி, அம்பாள் மாலை மாற்றும் வைபவமும், ஊஞ்சல் காட்சியும் நடக்கிறது. இரவு 9 மணியளவில் சுவாமி, அம்பிகை திருக்கல்யாணமும், அதன்பின் திருமண விருந்தும் நடக்கும்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 38 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்:

காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.


பொது தகவல்:

சிவன் சன்னதிக்குச் செல்லும்போது முன் மண்டபத்தில் மகாலட்சுமி, சரஸ்வதி இருவரும் துவாரபாலகிகள் போல இருபுறமும் காட்சி தருகின்றனர். இவ்விருவரும் இரு கால்களையும் மடக்கி பத்மாசனத்தில் அமர்ந்திருப்பது விசேஷமான தரிசனம். இதில் சரஸ்வதி வீணையில்லாமல் காட்சி தருகிறார்.

பிரகாரத்திலுள்ள நடராஜர் சன்னதியில் அடுத்தடுத்து இரண்டு நடராஜர்கள், சிவகாமி அம்பிகையுடன் இருக்கின்றனர். இதில் பிரதான நடராஜருக்கு அருகில் இருக்கும் மற்றொரு நடராஜரின் பாதத்திற்கு கீழே, பூதகணம் ஒன்று சுவாமியின் நடனத்திற்கேற்ப இசைக்கருவி வாசித்தபடி இருக்கிறது.

பிராணநாதர் கோயில் பிரகாரத்தில் சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் என இரு தீர்த்தங்களும் அருகருகில் இருக்கிறது. சிவனது இரண்டு கண்களாக இருக்கும் சூரிய, சந்திரர்களே இங்கு சிவனை குளிர்விப்பதற்காக தீர்த்தமாக இருப்பதாக சொல்வதுண்டு. சுவாமிக்கு இந்த இரு தீர்த்தத்தையும் சேர்த்தே அபிஷேகம் செய்கின்றனர். சிவன் சன்னதி கோஷ்டத்தில் விஷ்ணு துர்க்கை இருக்கிறாள்.

இதுதவிர, சிவதுர்க்கை சோமாஸ்கந்தர் சன்னதியின் பின்புறத்தில் காட்சி தருகிறாள். இவ்விருவரின் பாதங்களுக்கு கீழேயும் மகிஷாசுரன் கிடையாது. காவேரி, சிவன் கோஷ்டத்தில் துர்க்கைக்கு அடுத்து சிலை வடிவில் இருக்கிறாள். ஆடி பதினெட்டாம் பெருக்கின்போது இவளுக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது.

காளி, பிரம்மா, விஷ்ணு, அகத்தியர். சூரியன், அம்பாள் ஆகாசவாணி , பூமாதேவி ஆகியோரால் பூஜிக்கப்பட்ட தலம். இங்கு முருகன் சண்முகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். 11 ம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழனால் திருப்பணி செய்யப்பட்டுள்ள தலம். திருவாவடுதுறை ஆதீனத்துக்கு மேற்பார்வையில் நடந்து வரும் கோயில் இது.

பிரார்த்தனை

நவகிரக தலங்களில் சூரிய தலமான சூரியனார் கோயிலுக்கு செல்லும் முன்பு இத்தலத்துக்கு வந்து வழிபட வேண்டும் என்பது முக்கியமாதலால் நவகிரக தோஷமுள்ள பக்தர்கள் இத்தலத்தில் வந்து வழிபட்ட பின்னரே சூரியனார் கோயில் செல்கின்றனர். தீர்க்க சுமங்கலி பாக்கியம் : திருமணம் ஆன பெண்கள் அம்பாள் கையிலிருந்தே திருமாங்கல்ய கயிறு வாங்கி அணிந்து கொள்வது இத்தலத்தில் மிகவும் விசேசம்.

தவிர நவகிரக தோஷம், பெண்கள் திருமண பாக்கியம்,குழந்தை பாக்கியம், சுமங்கலி பாக்கியம், சத்ருபயம்(எதிரிகள் பயம்) நீக்கம்பெறல், திருட்டுபயம் விடுபடுதல் ஆகியவற்றுக்காக பக்தர்கள் பெருமளவில் இத்தலத்தில் வழிபாடு செய்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

தொடர்ந்து பதினொன்று ஞாயிற்றுக் கிழமைகள் மதியம் 12 மணிக்கும் 12.30 க்கும் இடையில் வெள்ளெருக்கு இலையில் தயிர் சாதம் நைவேத்தியம் செய்து அங்கு கோயில் பிரகாரத்தில் நடைபெறும் வழிபாடுகளிலும் பங்கு பெற வேண்டும். இப்படி செய்தால் நவகிரக தோஷம்,எல்லாவிதமான வியாதிகளிலிருந்தும் விடுபடலாம். தொடர்ந்து ஐந்து வெள்ளிக் கிழமைகள் மங்களாம்பிகையை ஆராதிக்கும் பக்தர்களுக்கு மாங்கல்ய தோஷம் ராகு, கேது சனி முதலிய கிரக தோஷங்களும் விலகி திருமணத்திற்கு உரிய தடைகளும் நீங்கி மாங்கல்ய பாக்கியம் உண்டாகும். அம்மனுக்கு திருமாங்கல்யம், புடவை சாத்தி சுவாமிக்கு வஸ்திரம் படைத்து அபிசேகம் செய்து வழிபாடு செய்து 5 சுமங்கலி பெண்களுக்கு ஜாக்கெட் துணி மஞ்சள் குங்குமம் , பூ வெற்றிலை, பாக்கு, சீப்பு , கண்ணாடி வளையல், மாங்கல்ய கயிறு தட்சிணை வைத்து கொடுத்து ஆசி வாங்குதை நேர்த்திகடனாக பக்தர்கள் செய்கிறார்கள். சுவாமிக்கு நல்லெண்ணெய், மா பொடி, திரவிய பொடி, மஞ்சள் பொடி, பஞ்சாமிர்தம், தேன்,பால், தயிர், பழவகைகள், இளநீர், சந்தனம் விபூதி ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம்.கலசாபிசேகம் செய்யலாம்.கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.

தலபெருமை:

பஞ்ச மங்கள ஷேத்திரம்: இத்தலம் பஞ்ச மங்கள ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

1. இந்த ஊரின் பெயர் மங்கலக்குடி, 2. அம்பாள் பெயர் மங்களாம்பிகை, 3. இக்கோயில் விமானம் மங்கள விமானம் 4. இத்தலத்தின் தீர்த்தத்தின் பெயர் மங்கள தீர்த்தம், 5. இத்தலத்து விநாயகர் பெயர் மங்கள விநாயகர் என்பதால் இத்தலம் மங்களமே உருவாக இருப்பதால் மங்கள ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

கிரகங்கள் வழிபட்ட சிவன்: ஒருசமயம் காலமாமுனிவருக்கு உண்டாகவிருந்த நோயை நவக்கிரகங்கள் தடுத்ததால், அந்நோய் கிரகங்களுக்கு பிடிக்கும்படி பிரம்மா சாபம் கொடுத்தார். எனவே, அவர்கள் பூலோகத்தில் இத்தலம் வந்து சுயம்பு லிங்கமாக எழுந்தருளியிருந்த சிவனை வேண்டி, தவமிருந்து சாபவிமோசனம் பெற்றனர். இவ்வாறு கிரகங்களின் தோஷம் போக்கிய சிவனாக, இத்தலத்தில் சிவன் அருளுகிறார்.

நின்ற லிங்கம் : பொதுவாக கோயில்களில் சிவலிங்கத்தில், ஆவுடையாரை விட சற்று உயரம் குறைந்ததாகத்தான் பாணம் இருக்கும். ஆனால் இக்கோயிலில் பாணம், ஆவுடையாரைவிட உயர்ந்ததாக இருக்கிறது. அகத்தியர் இத்தலத்திற்கு வந்தபோது அவருக்கு சுவாமி உயர்ந்தவராக காட்சி தந்தாராம். இதன் அடிப்படையில் பாணம் மட்டும் பெரிதாக இருப்பதாக சொல்கிறார்கள். குள்ள முனிவரான அகத்தியர், சுவாமியின் பாணத்தின் மீது தன் கையை உயர்த்திதான் மலர் வைத்து பூஜித்தாராம்.

முதல்கோயில்: கிரகங்கள் வழிபட்ட இத்தலத்தில், நவக்கிரகத்திற்கு சன்னதி கிடையாது. இங்கிருந்து சற்று தூரத்தில், நவக்கிரக திசையான வடகிழக்கில் கிரகங்களுக்கென தனிக்கோயிலே (சூரியனார் கோயில்) அமைந்திருக்கிறது. மொத்தத்தில் ஒரே கோயிலே, இவ்வாறு இரட்டைக்கோயிலாக தனித்தனியே, அமைந்திருக்கிறது.இதில் பிராணநாதர் கோயிலே பிரதான கோயில் ஆகும். கிரக தோஷமுள்ளவர்கள் முதலில் பிராணநாதரை வழிபட்டு, அதன்பின்பே சூரியனார் கோயிலில் வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.

எருக்கு இலையில் தயிர் சாத பிரசாதம்: நவக்கிரகங்கள் இங்கு சிவனுக்கு எருக்க இலையில் தயிர் சாத நைவேத்யம் படைத்து வழிபட்டதாக ஐதீகம். எனவே, இக்கோயிலில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் உச்சிகால பூஜையின்போது, உப்பில்லாத தயிர் சாதத்தை சுவாமிக்கு நைவேத்யமாக படைத்து வழிபடுகின்றனர். பித்ரு தோஷம் (முன்னோர்களுக்கு முறையான தர்ப்பணம் போன்ற சடங்குகள் செய்யாதவர்கள்) உள்ளவர்கள் சுவாமிக்கு தயிர்சாத நைவேத்யம் படைத்து வழிபடுகிறார்கள்.

மரகதலிங்கம்: நடராஜர் சன்னதியில் மரகதலிங்கம் ஒன்று இருக்கிறது. தினமும் உச்சிக்காலத்தில் மட்டும் இதற்கு பூஜைகள் செய்கின்றனர். அப்போது வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு நைவேத்யம் படைத்து, வலம்புரி சங்கில் பால், பன்னீர், தேன், சந்தனம் ஆகிய நான்கு திரவிய அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த அபிஷேக தீர்த்தத்தை பருகினால் நோய் நீங்கும் என்பது நம்பிக்கை.


தாலி தரும் தாய்: அம்பிகை மங்களாம்பிகை தனிச்சன்னதியில் தெற்கு நோக்கி அருளுகிறாள். இவளே இங்கு வரப்பிரசாதியாவாள். இவளது பெயரிலேயே கோயிலும் அழைக்கப்படுகிறது. அம்பிகையின் வலது கையில் எப்போதும் தாலிக்கயிறு அணிவிக்கப்பட்டிருக்கிறது. அம்பிகையை வழிபடும் பெண்களுக்கு, இதையே பிரசாதமாக கொடுக்கின்றனர். இதனால் திருமணமாகாத பெண்களுக்கு நல்ல வரன் அமையும், திருமணமான பெண்கள் நீண்டகாலம் தீர்க்கசுமங்கலியாக வாழ்வர் என்பது நம்பிக்கை. இந்த அம்பிகை தன்னை வேண்டுபவர்களுக்கு தாலி தரும் தாயாக இருந்து அருளுகிறாள். சுமங்கலிப்பெண்கள், அம்பிகையிடம் இருந்து தாலியை வாங்கி தங்கள் கழுத்தில் அணிந்து கொண்டு, ஏற்கனவே அணிந்திருக்கும் தாலியை அம்பாள் பாதத்தில் வைத்து பூஜை செய்கின்றனர். இதனால் பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

சந்தன அலங்காரம்: நவராத்திரியின்போது கோயில்களில் அம்பாள் உற்சவர் சிலைக்கு ஒவ்வொருநாளும் ஒவ்வொரு அலங்காரங்கள் செய்வர். ஆனால், இங்கு மூலஸ்தானத்தில் இருக்கும் அம்பிகைக்கே அலங்காரம் செய்யப்படுகிறது. அப்போது இவளது சிலைக்கு வஸ்திரம், ஆபரணங்கள் என எதுவும் சாத்தப்படாமல் சந்தனக்காப்பு மட்டும் செய்யப்படுகிறது. அந்த சந்தனத்திலேயே பட்டுத் துணிகளுக்கு பயன்படுத்தப்படும் வண்ண சாயங்களை சேர்த்து வஸ்திரம் மற்றும் ஆபரணங்கள் அணிந்ததைப்போல அலங்கரிக்கின்றனர். சந்தனத்திலேயே, இவ்வாறு அம்பிகை சர்வ அலங்காரத்துடன் காட்சி தருவதை காண கண் கோடி வேண்டும். ஒவ்வொரு வருடமும் தை மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையன்று முழுதும் அம்பிகையை சந்தனக்காப்பு அலங்காரத்தில் தரிசிக்கலாம். விசேஷ நாட்கள் தவிர மற்ற நாட்களில் பக்தர்கள் இந்த அலங்காரம் செய்யலாம்.

தல வரலாறு:

பதினோறாம் நூற்றாண்டில் முதலாம் குலோத்துங்க சோழனின் மந்திரியாக இருந்த அலைவாணர் என்ற மந்திரி மன்னனிடம் அனுமதி பெறாமல் வரிப்பணத்தில் இக்கோயிலை கட்டினார். இதை அறிந்த மன்னன் கோபம் கொண்டு மந்திரியை சிரச் சேதம் செய்ய உத்தரவிட்டார். கொலையுண்ட மந்திரி தன்னை திருமங்கலக்குடியில் தகனம் செய்யுமாறு ஏற்கனவே கூறியிருந்ததால் அவரது உடல் திருமங்கலக்குடிக்கு எடுத்து வரப்பட்டது.

ஊரின் எல்லைக்கு வரும்போது மந்திரியின் மனைவி மங்களாம்பிகை கோயிலில் சென்று தனது கணவரின் உயிரை திரும்பத்தருமாறு வேண்டினார்.அவளது பிரார்த்தனை பலிக்கும் என்று அசரீரி கேட்டது.அதுபடி மந்திரி உயிர் திரும்பபெற்றார். மகிழ்ச்சியில் கோயிலுக்குள் சென்று பிராணநாதேசுவரரை கட்டிப்பிடித்து ஜீவதாயகன் என்று கூறி பூஜித்தார். அன்று முதல் இங்குள்ள பிம்பமானது பிராணநாதேசுவரன் (ஜீவதாயகன்)என்ற பெயரால் அழைக்கப்பெற்றார். கணவர் உயிரை தந்த அம்பாள் மங்களாம்பிகை என்றழைக்கப்பட்டாள்.

இங்கு வந்து வழிபடும் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் உண்டாக வேண்டும் என்று மந்திரியும் மனைவியும் வேண்டிக்கொள்ள அதுபடியே சுவாமியும் அம்பாளும் அருளியதாக வரலாறு கூறுகிறது.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பொதுவாக கோயில்களில் சிவலிங்கத்தில், ஆவுடையாரை விட சற்று உயரம் குறைந்ததாகத்தான் பாணம் இருக்கும். ஆனால் இக்கோயிலில் பாணம், ஆவுடையாரைவிட உயர்ந்ததாக இருக்கிறது. நடராஜர் சன்னதியில் மரகதலிங்கம் ஒன்று உள்ளது சிறப்பு. இத்தலத்தில் உள்ள புருஷமிருகம் என்ற பெயரில் உள்ள விக்கிரகத்தில்.மனிதன், விலங்கு, பறவை என்ற மூன்று முகங்கள் உள்ளது.

No comments:

Post a Comment