ஹரித்வார் பயனம்
கங்கை மலைப்பிரதேசத்தில் பாயும் கடைசி நகரம்
ரிஷிகேசம்....
எண்ணற்ற திருகோவில்கள், மடங்கள், ஆசிரமங்கள், ஸ்நான கட்டங்கள் நிறைந்த நகரம்.
சார்தாம் யாத்திரை அதாவது இமயமலை பயணத்திற்கு இந்நகரம்தான் நுழைவு வாயில்.
மஹாவிஷ்ணு மது கைடபரை அழித்த இடம் ரிஷிகேசம்.
மூன்றுபக்கமும் மலைகளால் சூழப்பெற்று கங்கையின் கரையில் அமைந்துள்ளது இந்த புண்ணிய நகரம்.
புராதன காலத்தில் இருந்தே மகான்களையும், ரிஷிகளையும் ஈர்த்து வந்த பகுதி. இந்நகரத்தின் ஒரு பகுதி முனி-கா-ரேதி அதாவது முனிவர்கள் பாதம் பட்ட மண் என்று அழைக்கப்படுகின்றது.
இராமர், இலக்ஷ்மணன், பரதன் மட்டுமல்ல இராமானுஜரும், ஆதி சங்கரரும் கூட தவம் செய்த புண்ணீய பூமி பவித்ர பூமி இது.
ரிஷிகேசத்தில் சுற்றிப்பார்க்க வேண்டிய, லஷ்மண் ஜூலா என்று அழைக்கப்படும் பழைய பாலம், கங்கையின் குறுக்கே கட்டப்படுள்ள இந்த பாலம் கட்டப்ட்டுள்ள இந்த இடத்தில் இலக்ஷ்மணன் தவம் செய்ததாக ஐதீகம். இப்பாலத்தை இலக்குவன் தனது அம்புகளால் அமைத்தாராம். ஜூலா என்றால் ஊஞ்சல் என்று பொருள், தொங்கும் பாலம் ஆதலால் இதில் நடந்து செல்லும் போது பாலம் ஆடுவதால் இப்பெயர்.
ராம் ஜூலா என்று அழைக்கப்படும் புதிய பாலம் தற்போது கட்டப்பட்டது.
ஆதி சங்கரால் கட்டப்பட்ட பாரத் மாதா மந்திர் பரபரப்பான கடைவீதியில் அமைந்துள்ளது. பரதன் இங்கு தவம் செய்ததாக ஐதீகம். இங்குள்ள ஆஸ்ரமங்களில் சுவாமி பரமார்த்த நிகேதன் ஆசிரமம் மிகவும் புகழ் பெற்றது. தினமும் மாலை கங்கை ஆற்றின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள யோக நிஷ்டையில் அமர்ந்த கோலத்தில் அமைத்துள்ள சிவபெருமான் சிலைக்கு எதிரே இந்த ஆசிரமத்தின் சிறார்கள் வேதம் ஓத, ஹோமம் நடைபெற்று அந்தி சாயும் நேரத்தில் கங்கா ஆரத்தி தினமும் சிறப்பாக நடைபெறுகின்றது.
13 மாடி கோயிலும் பார்க்க வேண்டிய ஒரு முக்கியமான இடம் ஆகும். எல்லா தெய்வ மூர்த்தங்களையும் நாம் இந்த கோயிலில் காணலாம்.
நீலகண்டர் ஆலயம் |
ரிஷிகேசத்திலிருந்து சுமார் 27 கி.மீ தூரத்தில் நீலகண்டர் ஆலயம் அமைந்துள்ளது. வாகனத்திலும், நடைப்பயணமாகவும் இத்திருக்கோவிலை அடையலாம். மணிகூடம், விஷ்ணு கூடம், பிரம்ம கூடம் என்று மூன்று சமவெளிகள், மற்றும் மதுமதி மற்றும் பங்கஜா ஆறுகளின் சங்கமத்தில் அடர்ந்த காட்டின் இடையே சுமார் 1330 மீ உயரத்தில் சிவபெருமானுக்குரிய இந்த ஆலயம் அமைந்துள்ளது.
வானவர் அமுதுண்ண தான் அமுதுண்ட நீலகண்டராக சிவலிங்க வடிவத்தில் தியாகராஜர் சிவபெருமான் இத்தலத்தில் வணங்கப்படுகின்றார். ஆடி மாதத்தில் (இவர்களுடைய சிரவண மாதம்) காவடி எடுக்க வரும் லக்ஷக் கணக்கான பக்தர்கள் முதலில் இவருக்கு கங்கை நீரை சமர்பித்த பிறகே தங்கள் ஊர்களுக்கு கங்கை தீர்த்தம் கொண்டு செல்கின்றனர். மாசி மாத மஹா சிவராத்திரியின் போதும், ஆடி மாத சிவராத்திரியின் போதும் இங்கு மேளா எனப்படும் பெருவிழா நடைபெறுகின்றது.
ஜீப்பில் மலைப் பயணம் செய்து நீலகண்ட மஹாதேவர் ஆலயத்தை அடையலாம். ஆலய விமானம் நமது திராவிட பாணியில் கட்டப்பட்டுள்ளது புதுமையாக இருக்கும். மந்தார மலையை மத்தாகவும், வாசுகி என்னும் நாகத்தை கயிறாகவும் கொண்டு பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடையும் போது ஆலாலம் வெளிப்பட அதை பரம கருணா மூர்த்தியான சிவபெருமான் அருந்தி சகல ஜீவராசிகளையும் காப்பாற்றும் சுதை சிற்பம் பிரம்மாண்டமாக அற்புதமாக அமைத்துள்ளனர்.
மற்ற வடநாட்டு ஆலயங்கள் போல அருகே சென்று ஐயனைத் தொட்டு அபிஷேகம் செய்யலாம்.. தூரத்திலேயே தாரா பாத்திரம் அமைத்துள்ளனர் அதில் நாம் கங்கை நீராலும்,பன்னீரிலும் அபிஷேகம் செய்யலாம்.. ஒரு நிமிடம்தான் தரிசனம் கிட்டும். ஆலமுண்ட நீலகண்டரை அற்புதமாக தரிசனம் செய்து விட்டு ரிஷிகேஷ் திரும்பலாம்.
ரிஷிகேசில் அமைந்துள்ள படித்துறைகளில் திரிவேணி காட் என்னும் ஸ்நான கட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்தது , இங்குதான் லோக கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் கலப்பதாக ஐதீகம். ஹரித்துவாரில் ஹரி-கா-பௌரிக்கு எவ்வளவு முக்கியத்துவம் உண்டோ அத்தனை முக்கியத்துவம் இதற்கும் உண்டு. இதன் அருகில் இரகுநாத் மந்திர் முதலிய பல ஆலயங்கள் உள்ளன, கரையில் பல அற்புத சுதை சிற்பங்கள் அமைந்துள்ளன. மாலை இங்கு நடக்கும் ஆர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. மேலும் லக்ஷ்மண் ஜுலா செல்லும் வழியில் உள்ள குருத்வாராவும் பார்க்கவேண்டிய இடம். இந்த ஊரில் யாரும் மாமிசம் சாப்பிடுவதில்லை என்பது ஒரு சிறப்பு.
இங்கு சந்திரேஸ்வரர் ஆலயம் காண வேண்டிய தலம்.. சிவபெருமான் உறையும் இடம் மயானம் அல்லவா? இந்த ரிஷிகேசில் சந்திரேசர் மயானத்தின் அருகிலேயே கோயில் கொண்டுள்ளார்.
அடுத்த பதிவில் புண்ணியத் தலங்களுக்கு நுழைவுவாயில்
ஹரித்வார்...
திருச்சிற்றம்பலம்
கங்கை கரையில் தொடர் இன்னும் வ(ள)ரும்...
No comments:
Post a Comment