தேவர்களுக்குத் தலைவனான தம்மை ஒரு சாதாரண சிவகணம் முறைத்துப் பார்ப்பதா? என்றெண்ணி, தன் கையில் இருந்த வஜ்ராயுதத்தை அக்கணத்தின் மீது ஏவினான். அந்த வஜ்ராயுதம் கற்பாரை போல் வலிமையாக இருந்த கணத்தின் மார்பைத் தாக்கி நெருப்புப் பொறி களைக் கக்கியது. பின் தூள் தூளாக ஆயிற்று. சற்றும் தாமதிக்காது சிவபெருமான், ருத்ர ரூபம் தரித்து புன்முறுவலுடன் இந்திரனுக்குக் காட்சி கொடுத்தார். அதைப் பார்த்து இந்திரன் வெலவெலத்துப் போனான். ஆயிரக்கணக்கான தோத்திரங்களைக் கூறி வழிபட்டான். இறைவனும் அத்துதிகளில் மகிழ்ந்து, சிவபெருமானாகக் காட்சி அளித்து, “இந்திரனே, என்னைக் கண்டு அஞ்ச வேண்டாம்! இங்கு நானே பிரஸன்னமாகியிருக்கிறேன் என்பதை அறிவாயாக. இனி உன் நகரம் திரும்பலாம்,’’ என அருள் புரிந்து அவனை அனுப்பிவைத்தார். இந்திரன் சென்றபின் தன் கோபாவேசத்தினால் உண்டான அக்னியை கருணையுடன் கையில் ஏந்தி கடலில் விட்டு விட்டுத் தன் இருப்பிடமான கயிலை திரும்பினார் சிவபெருமான்.
இறைவன் கடலில் விட்டுச் சென்ற அக்னி சில நிமிடங்களில் குழந்தை உருவெடுத்து, மிகுந்த குரல்கொடுத்து அழத்தொடங்கியது. குழந்தையின் பெரு ஓலத்தைக் கேட்ட முனிவர்களும், தேவர்களும் செய்வதறியாது நின்றனர். ஆனால், குழந்தையின் அலறல் கேட்டுப் பதறியடித்துக் கொண்டு வந்த வருணன், குழந்தையை சமாதானப் படுத்தி, அதை வளர்ப்பதற்காகத் தன்னுடன் எடுத்துச் சென்றான். குழந்தை வளர்ந்து கொண்டிருக்கையில், வருணனைப் பார்ப்பதற்காக பிரம்ம தேவர் வந்தார். வருணனும் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்று, குழந்தையை அவர் மடியில் இட்டான். பிரம்மதேவர் அதைத் தன் மடியில் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருக்கையில் அது அவருடைய தாடியையும், மீசையையும் பிடித்திழுத்து விளையாடியது. உடனே பிரம்மன் வருணனைப் பார்த்து, ‘‘இந்தக் குழந்தை சந்தேகமில்லாமல் , விஷ்ணுவைக்கூட யுத்தத்தில் வெற்றிகொள்ளப் போகிறது.
இவனுக்கு எந்த இடத்திலும், எவர் சாபத்தினாலும் பயம் என்பதே கிடையாது. இவன் மூன்று உலகங்களிலும் ‘ஜலந்தரன்’ என்ற நாமத்தோடு சிறப்படையப் போகிறான். தைரியம், வீரம் யாவும் இருந்தும் பலிஷ்டனாகவும், மஹா துஷ்டனாகவும் விளங்குவான். தேவர்களை வெற்றிகொள்வதோடு, அவர்களுடைய நகரத்தையும் கைக்கொள்வான்,’’ என்று கூறி எச்சரித்தார். நன்கு வளர்ந்தபின் ஜலந்தரன் கொடிய அசுரர்களைச் சேர்த்துக் கொண்டு பூலோகத்தை அடைந்தான். பல தவங்கள் புரிந்தான். பின் காஞ்சிபுரத்தில் இறைவனைத் துதித்து பூசைகள் செய்தான். ஜலத்தில் தோன்றினமையால் ஜலந்தரன் எனப் பெயர் பெற்ற மேன்மையுடைய புகழ் வாய்ந்த அசுரன் காஞ்சியில் நலமுடைய சிவலிங்கம் நிறுவி நாளும் வணங்கிக் குற்றமில்லாத மெய்த்தவத்தைப் புரிய, இறைவன் மகிழ்ச்சி கொண்டு எதிரே தோன்றினார். அப்பொழுது திருக்காட்சி தந்தருளிய மாநிழலில் அரசுபுரி திருவேகம்பரைத் தொழுது, ‘வீரமும், வலிமையும், மாண்பு மிகு அரசுரிமையும், பகைவரை அழித்தலும் நீக்க மின்றி நிலைபெற அருள்செய்வாய்’என்று வேண்டினான்.
மேலும், நின்னலால் என்னுயிர் நீப்பவர் இன்மையும் துன்னரு முத்திஇச் சூழலிற் பெறுவதும் பின்னல்வார் சடையினாய் அருளெனப்பெற்றுமீண்டன்னவா றுலகுதன் அடிப்படுத் தாளும்நாள் - என்றும் இறைஞ்சினான். ‘நின்னையன்றிப் பிறர் எவரும் என்னுயிரை நீக்கக்கூடாத வரமும் அருள்வாய்,’ என்று கோரி அவ்வாறே வரங்களையும் பெற்று உலகைத் தன்னடிக் கீழ்ப்படுத்தி ஆண்டுவந்தான். மயன் என்ற அசுர தச்சனால் அமைக்கப்பெற்ற ‘ ஜாலந்தரம்’ என்னும் நகரத்தில் வாழ்ந்தபடி பகைவர்களை ஜெயித்து, வீரத்துடன் விளங்கி வந்தான். உரிய காலத்தில் காலநேமி என்னும் அசுரனின் மகளான ப்ருந்தையை மணந்துகொண்டான். சிலகாலம் சென்றபின். இந்திரன் முதலிய எண்திசைத் தலைவரையும், பிரம்மனையும், வென்று பின்னர் திருமாலை நோக்கிச் சென்றான். கருடனை வலிமையான நாகபாசத்தினால் பிணித்தான். அடுத்து மேருமலைக்குச் சென்று அங்கிருந்த தேவர்களைச் சிறைப்படுத்தி, இறுதியாக மஹாவிஷ்ணுவுடன் போரில் இறங்கினான். இருபதினாயிரம் வருடங்கள் நீடித்தது யுத்தம்! மேலும் மஹாவிஷ்ணுவுடன் போரிட முடியாமல் களைப்படைந்தான். போரைக் கைவிட்டான்.
அனைத்து தேவர்களும் அச்சமுற்று, தன் தலைவன் இந்திரனுடன் சேர்ந்து, கைலாயம் சென்று, சிவபெருமானிடம், ஜலந்தரன் தங்களுக்கு இழைத்த கொடுமைகளைக் கூறி, தங்களைக் காப்பாற்றும்படி வேண்டினர். சிவபெருமானும், காப்பாற்றுவதாக வாக்களித்து சமாதானம் செய்தார். தேவர்கள் ஒருங்கிணைந்து கைலாயம் சென்றதை அறிந்த ஜலந்தரன் மிகவும் கோபம் கொண்டான். மனைவி பிருந்தை தடுத்தும் படைகள் பின் தொடர, கைலாய மலை நோக்கிச் சென்றான். எப்படியாவது சிவபெருமானை வெற்றி கொள்ள வேண்டும் என்ற தீவிர சிந்தனை தலைதூக்கியது. ஜலந்தரன் படையுடன் தம்மை நோக்கி வருகிறான் என்றறிந்து சிவபெருமானும் தண்டம், கமண்டலம், ஏந்தி, குடை பிடித்துக்கொண்டு ஓர் அந்தணர் வடிவில் அவன் வரும் திசையில் நின்றிருந்தார். ஜலந்தரன் நெருங்கியதும், “ நீ யார் ? எங்கிருந்து வருகிறாய்? எங்கு செல்கிறாய்?” என்று பலவாறாகக் கேட்டார். “ நான் ஜலந்தரன். அசுரன். தேவர்கள் யாவரையும் போரிட்டுத் தோற்கடித்துவிட்டு இப்பொழுது பரமேசுவரனை ஜெயிப்பதற்காகக் கயிலை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறேன்,’’ என்று ஆணவமாக பதில் சொன்னான்.
அதைக் கேட்டு நகைத்த சங்கரர், “ ஓ ஜலந்தரனா! நான் பரமேசுவரர் வசிக்கும் இடத்திற்குச் சமீபத்தில்தான் வசித்து வருகிறேன். அவரைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். நீ பிழைத்துப் போக வேண்டுமானால் வந்த வழியே திரும்பிவிடு,’’ என்று அறிவுரை கூறினார். “ அந்தணரே, என் பலம் புரியாமல் பேசுகிறீர்கள். இதோ என் வலிமையைக் காட்டுகிறேன்,’’ என்று கோபத்துடன் சூளுரைத்தான். “ ஓ, அப்படியா? சரி! அந்த பலத்தை என்னிடம் காட்டு, பார்ப்போம்! நான் என் கால் விரலால் பூமியில் ஒரு சக்கரத்தை இடுகிறேன். அந்தச் சக்கரத்தை உன் இரு கைகளால் எடுத்து உன் தலைமேல் வைத்துக் கொள், பார்க்கலாம்!’’ என்று சவால் விட்ட பரமேஸ்வரன் தன் கால் கட்டை விரலால் பூமியில் சக்கரத்தை எழுதினார். “ நான் யுத்தத்தில் பிரம்மா, விஷ்ணு போன்றவர்களையெல்லாம் விரட்டியடித்திருக்கிறேன், என் கையால் வடவாக்கினியை ஒரு நொடியில் அணைத்திருக்கிறேன். கடல்கள் யாவற்றையும் வற்ற வைத்திருக்கிறேன். மலைகளைப் பந்துபோல் விளையாடியிருக்கிறேன். அப்படிப்பட்ட என்னால் இந்த சக்கரத்தை தூக்க முடியாதா என்ன?’’ என்று கேட்டு, அதைக் கைகளால் எடுத்து மார்பில் வைத்து , பின் மிகுந்த முயற்சி செய்து அதைத் தலையில் தாங்கிக் கொண்டான்.
அச்சக்கரம் ஒரு நொடியில் அவனைத் துண்டாடியது. இரு துண்டுகளாக ஜலந்தரன் பூமியில் விழுந்தான். அவன் இறந்தவுடன் திரிபுராந்தகர் அவன் சேனைகளைத் தன் நெற்றிக்கண் பார்வையால் எரித்துச் சாம்பலாக்கினார். தாரகாசுரனுடன் போர் புரிந்தபோது திருமால் சக்கரத்தை ஏவ அது அவனை ஒன்றும் செய்யாமல் மழுங்கி விட்டது. அதனை எடுத்துத் தம் மார்பில் அணிந்து கொண்டான் ஜலந்திரன். சிவபெருமான், ஜலந்தரனை வீழ்த்த ஒரு சக்கரம் உருவாக்கினார் ஒப்பருந் தலைமை வாய்ந்ததாய் ஜலந்தராசுரனை அழிக்கச் சிவபிரானார் படைத்த கோபத்தீப் பொறியைச் சிந்தும் கூர்மையையுடைய சக்கரம் அது என்று அறிந்தார் விஷ்ணு. அந்தச் சக்கரத்தை தான் அடைய ஆவல் கொண்டார். அந்த சக்கரம் கிடைக்க வேண்டுமானால் காஞ்சியில் சிவலிங்கம் அமைத்துப் பூஜை செய்யவேண்டும் என்று தேவர்கள் கூற அதன்படியே, உருத்திராட்சம் தரித்துக்கொண்டார். தடாகம் அமைத்து, அதில் தாமரை மலர்களைத் உண்டாக்கினார்.
தினமும் ஆயிரம் தாமரை மலர்களினால் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்துவந்தார். ஒரு நாள் ஒரு பூ குறைந்து போய்விட, சற்றே மனம் கலங்கிய மஹாவிஷ்ணு, உடனே முடிவெடுத்து, தாமரை போன்ற தன் ஒரு கண்ணையே பிடுங்கி பூஜையை முடிக்க முனைந்தார். அப்போது சிவபெருமானும் எதிர் தோன்றி, “கண்ணா! நிறுத்து”என்று கூறி திருமாலின் பூஜைக்கு மகிழ்ந்து, அவர் கோரியபடி சக்கராயுதத்தைத் தந்தருளினார். இந்த நிகழ்ச்சியைப் பல அருளாளர்கள் தம் பாடல்களில் புகுத்தியிருந்தாலும் சம்பந்தப்பெருமான், முதல் திருமுறையில், திருவீழிமிழலை தலத்தில் பாடிய இரண்டாவது பாடலில், தான் ஏவி, ஜலந்தரனின் தலையைக் கொய்த சக்கரத்தை, சங்கரன், நாராயணனுக்கு கொடுத்த நிகழ்ச்சிகளைக் குறிப்பிட்டிருக்கிறார்:
தரையொடு திவிதல நலிதரு
தகுதிற லுறுசல தரனது
வரையன தலைவிசை
யொடுவரு திகிரியை
யரிபெற வருளினன்
உரைமலி தருசுர நதிமதி பொதிசடை
யவனுறை பதிமிகு
திரைமலி கடன்மண லணிதரு பெறுதிடர்
வளர்திரு மிழலையே.
பொருள்: மண்ணுலகத்தோடு விண்ணுலகையும் நலிவுறுத்துகின்ற வலிமை பொருந்திய ஜலந்தராசுரனின் மலைபோன்ற தலையை வேகமாக அறுத்து வீழ்த்திய சக்கராயுதத்தைத் திருமால் வேண்ட, அவர்க்கு அருளியவனும், புகழால் மிக்க கங்கை நதி மதி ஆகியன பொதிந்த சடைமுடியை உடையவனுமாகிய சிவபெருமான் உறையும் தலம், பெரிய அலைகளை உடைய கடற்கரை, மணலால் அழகுபெறும் மணல் மேடுகள் நிறைந்த திருவீழிமிழலையாகும்.
நன்றி ஆன்மீக பலன்
No comments:
Post a Comment