Monday, 26 December 2016

51 சக்தி பீடங்கள் - 20


உன்னத வாழ்வருளும் உலகநாயகி

























திருநெல்வேலி-அம்பாசமுத்திரம் வழியில், 60 கி.மீ. தொலைவில் பாபநாசம் பாவநாசர் திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு 51 சக்தி பீடங்களுள் ஒன்றான விமலைபீட நாயகி உலகநாயகி எனும் லோகநாயகியாக திருவருட்பாலிக்கின்றாள். சிவபெருமானுடைய திருக்கல்யாணத்தை தரிசிக்க கயிலாயம் சென்ற தேவர்கள், முனிவர்கள் ஆகியோர் பாரத்தைத் தாங்க மாட்டாது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. அதைச் சமன் செய்ய, அகத்திய முனிவரை அழைத்து, தென்திசைக்குச் செல்லும்படி சிவபெருமான் கட்டளையிட்டார், அதன்படி தென்திசையிலுள்ள பொதிகை மலைக்கு எழுந்தருளிய அகத்தியருக்கு கயிலையிலிருந்தே தம்முடைய திருக்கல்யாணக் கோலத்தைக் காட்சி கொடுத்தருளினார். அப்படி திருக்காட்சி கொடுத்த இடம் பாபநாசம் எனும் இத்தலத்தில்தான். பாபநாசத்திற்கு மேற்கே இரண்டு கி.மீ. தொலைவிலுள்ள நீர்வீழ்ச்சியும் இதனால் ‘கல்யாண தீர்த்தம்’ என்று பெயர் பெற்றது.

இங்கு அகத்திய முனிவருக்கு தனிக்கோயில் உள்ளது. அகத்தியர் கோயில் உள்ள இடம் பழைய பாவநாசம் என்றழைக்கப்படுகிறது. மலையுச்சியில் உற்பத்தியாகும் தாமிரபரணி சமபூமியில் இறங்குமிடமே பழைய பாவநாசமாகும். ஒவ்வொரு ஆண்டும் உள்ளூர் கோயிலில் நடைபெறும் திருக்கல்யாணத்தின்போது அகத்திய முனிவர் அவரது கோயிலிலிருந்து அழைத்து வரப்படுவார். அவர் வந்து சேர்ந்த பிறகு தான் அம்மையப்பர் திருக்கல்யாணம் நடைபெறும். அகத்திய முனிவரின் முதல் சீடர் உரோமச முனிவர் பிறவிப் பெரும்பயன் அடைவதைப் பற்றி அகத்தியரிடம் கேட்க, அவர் பாபநாசம் தொடங்கி தாமிரபரணி ஆறு செல்லும் பாதையில் மலர்கள் ஒதுங்கும் இடங்களில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபடுமாறு கூறினார்.

அவ்வாறு பூக்கள் சேர்ந்த இடங்களில் உள்ள சிவத்தலங்கள் நவகயிலாயத் தலங்கள் என்றும், திருநெல்வேலியைச் சுற்றியுள்ள நவகிரக தலங்கள் என்றும் பெயர் பெற்றன. அவற்றுள் பாபநாசம் சூரியனுக்குரிய தலமாகக் கருதப்படுகிறது. இத்தல சக்திபீட நாயகியான உலகம்மை மிகவும் வரப்ரசாதியாகக் கருதப்படுகிறாள். தன் பக்தருக்காக தேவி திருவருள் புரிந்த ஒரு லீலையை அறிவோமா? இத்தலத்திற்கு அருகிலுள்ள விக்ரமசிங்கபுரத்தில் ‘நமசிவாயக் கவிராயர்’ என்பவர் (ஸ்ரீமத் சிவஞான சுவாமிகளின் சிறிய தந்தையார்) வாழ்ந்து வந்தார். இவர் அம்பாள் உலகநாயகி மீது அளவிலா பக்தி கொண்டிருந்தார். தினந்தோறும் அர்த்தசாமத்தில் பாவநாசத் திருக்கோயிலுக்குச் சென்று அம்பிகையைத் தொழுதுவிட்டு வருவார். அப்போது பரவசத்துடன் பக்திப் பாடல்களைப் பாடிகொண்டே வருவது வழக்கம். ஒருநாள் இரவு அப்படி பாடியவாறே வீடு திரும்பியபோது அம்பாள் இவர் பாடல்களைக் கேட்டவாறே அவர் அறியாதபடி பின்தொடர்ந்தாள்.

கவிராயர் தரித்திருந்த தாம்பூலத்தின் எச்சில் அவர் பாடி வரும்போது தெறித்து அம்பிகையின்மீது பட்டது. அக்கோலத்துடனேயே அம்பிகையும் கோயிலுக்கு எழுந்தருளினாள். மறுநாள் காலை அர்ச்சகர் அம்பாள் ஆடையில் படிந்திருந்த எச்சில் திவலைகளைக் கண்டு மனம் வருந்தி, மன்னனிடம் முறையிட, அரசனும் பிராயச்சித்தம் செய்யப் பணித்து, இப்பாதகச் செயலைச் செய்தவரைத் தண்டிப்பதாகக் கூறினான். அன்றிரவு மன்னன் கனவில் அம்பிகை தோன்றி, நடந்ததை விவரித்தாள். மறுநாள் காலை கவிராயரை அழைத்து வரச்செய்து, அவருடைய பக்தியை அளவிட எண்ணி, அம்பாளின் கரத்தில் பூச்செண்டு ஒன்றை வைத்துப் பொன் கம்பிகளால் சுற்றிக்கட்டி, அப்பூச்செண்டு தன் கைக்கு வருமாறு பாடக் கவிராயரைப் பணித்தான். அவரும் கலித்துறையில் அந்தாதி ஒன்றைப் பாடினார். அம்பிகையின் கரத்தில் கட்டப்பட்டிருந்த பொன் கம்பிகள் கவிக்கொரு சுற்றாக அறுந்து கவிராயரின் கைக்குப் பூச்செண்டு சென்று அவருடைய பெருமையை வெளிப்படுத்தியது.

அம்பிகையின் பாதங்கள் சிந்தாமணி என்னும் ரத்னம்போல் எல்லையற்ற பிரகாசத்துடன் விளங்குகிறது. சிந்தாமணி, நினைத்ததை நினைத்தவண்ணம் அளிக்க வல்லது. தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபோது ஒரு சிறிய ரத்னமே வெளிப்பட்டது. ஆனால், தேவியின் இருப்பிடமான ஸ்ரீநகரம் முழுவதுமே சிந்தாமணிக் கற்களால் ஆக்கப்பட்டது என லலிதோபாக்யானம் கூறுகிறது. நினைத்ததை அளிக்கவல்ல சிந்தாமணி கிரகத்தில் வாழும் அம்பிகை, நம் அகங்காரத்தை முற்றிலும் ஒழித்து ஸம்சார துக்கமெனும் தாபத்தை நீக்குகிறாள். அம்பிகையின் திருவடிகள் ஒளி மிகுந்த தன்மையினால் சூரியனாகவும், அமிர்தமயமாய் உள்ளதால் சந்திரனாகவும், சிவந்த நிறம் கொண்டமையால் செவ்வாயாகவும், தம்மை வந்து வணங்குவோருக்கு ஸெளம்யம் பொருந்திய புதனாகவும், புத்தியை வாரி வழங்குவதால் குருவாகவும், ஐஸ்வர்யங்களை அளிப்பதால் சுக்கிரனாகவும், மந்தகதி நடையால் சனிபகவானாகவும், பூஜிப்பவர்களுக்கு ஞானத்தை அளிப்பதால் ராகு-கேதுவாகவும் விளங்குகிறது. தேவியின் திருவடிகளைப் பற்றினால் நவகிரகங்களையும் பூஜித்த பலன் ஏற்படும் என்பதில் ஐயமேது?

உலகம்மையின் சந்நதி எதிரில் உரல் ஒன்று உள்ளது. அதில் கன்னியரும், சுமங்கலிகளும் விரலி மஞ்சளை இடித்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யத் தருகின்றனர். அந்த மஞ்சள் தீர்த்தத்தை அருந்தினால் திருமணத் தடை, புத்திரபாக்யத் தடைகள் நீங்கி தீர்க்க சுமங்கலி வரம் கிட்டுகிறது என்பது நம்பிக்கை. சந்தனச் சோலைகளும் மூலிகைகளும் நிறைந்து தென்றலின் பிறப்பிடமாய்த் திகழும் பொதிகைமலை உச்சியில் தாமிரபரணி உற்பத்தியாகின்றது. கோயிலின் முன் தாமிரபரணி ஆறு (பொருநையாறு) அழகாகப் பாய்ந்தோடுகிறது. நீராடும் வசதியுள்ளது. ஆண்டு முழுவதும் இடையறாது பாய்ந்தோடும் தாமிர பரணியில் மூலிகைச் சத்துகள் நிறைந்திருப்பதால் அருவி வீழ்ச்சியில் நீராடுவோருக்கு உடல் நலத்தைத் தருவதாகச் சொல்லப்படுகிறது. தினமும் உச்சிக்கால பூஜையில் தாமிரபரணி ஆற்றில் மீன்களுக்கு நைவேத்திய உணவுப் பொருட்களை படைத்து பூஜைகள் செய்யப்படுகின்றன.

தாமிரபரணி, வேத தீர்த்தம், கல்யாண தீர்த்தம், பைரவ தீர்த்தம் ஆகியவை இத்தலத்தின் தீர்த்தங்களாகும். இவற்றுள் கல்யாண தீர்த்தமும், பைரவ தீர்த்தமும் மலையுச்சியில் உள்ளன. இறைவனுக்குப் பல பெயர்கள்: தன்னையடைந்தோரின் பாவங்களைப் போக்குவதால் பாவநாசர்; விராட்புருடன் வழிபட்டதால் வயிராசர்; மூன்று வேதங்களும் களாமரங்களாக நின்று வழிபட்டதால் பழமறைநாதர், முக்கால மூர்த்தி; மேலான சோதி வடிவாக விளங்குபவர், பரஞ்சோதி. சுவாமியின் கர்ப்பக் கிரகத்தைச் சுற்றிலும் அருமையான வேலைப்பாட்டோடு அமைந்த மிக நுண்மையான சிற்பங்கள் காணப்படுகிறன. இக்கோயிலில் எண்ணெய் சாதம் என்ற ஒருவகை பிரசாதமும், அதற்கேற்ற துவையலும் நிவேதனம் செய்யப்படுகின்றன. பங்குனியில் தெப்பத் திருவிழாவும், தேர்த் திருவிழாவும், சித்திரை முதல்நாள் அகத்தியருக்குத் திருமணக் காட்சிதரும் விழாவும் சிறப்பாக நடைபெறுகின்றன.

No comments:

Post a Comment