சார்தாம் யாத்திரை - கேதார்நாத்
திருக்கேதாரம்
திருக்கேதாரம் இமய மலையில் வட நாட்டில் இருந்த போதும் பாடல் பெற்ற தலம்.
அம்மையின் ஞானப்பாலுண்ட ஆளூடையபிள்ளை திருஞானசம்பந்தரும், எம்பிரான் தோழர் சுந்தரரும் திருக்கேதாரத்திற்கு பதிகம் பாடியுள்ளனர்.
பாரத தேசமெங்கும் அமைந்துள்ள 12 ஜோதிர்லிங்கங்களுள் ஒன்று இந்த தலம்.
பாரத கண்டமெங்கும் அமைந்துள்ள 12 ஜோதிர் லிங்கங்கள் உங்கள் பார்வைக்கு...
1.சௌராஷ்டிரே சோமநாதம் :
குஜராத் மாநிலத்தில் கடற்கரை ஓரம் சோமனாதத்தில் சந்திரன் வழி பட்ட சோமனாதராய் தழல் தூணாய் சோமநாதராய் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார், கல்லுயிராய் நின்ற கனலே என்று இறையருளால் செந்தமிழ் ஞானமும் இசை பாடும் ஆற்றலும் பெற்ற வாகீசர் என்னும் திருநாவுக்கரசர் பாடிய எம்பெருமான்.
2. ஸ்ரீ சைலே மல்லிகார்ஜுனம் :
ஆந்திர பிரதேசத்திலே மல்லிகார்ஜுன பர்வதத்திலே மஹா லக்ஷ்மி, முருகர் வழிபட்ட ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் ஜோதி என்று ஓங்காரம் உணர்ந்த மாணிக்க வாசகர் பாடிய எம்பருமான் ஜோதி ரூபனாய் மல்லிகார்ஜுனராய் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.
3:உஜ்ஜன்யாம் மகாகாளம் :
மத்திய பிரதேசத்தில் உஜ்ஜயினி நகரத்தில் சிப்ரா நதிக்கரையில் மஹா காளி பூசித்த எம்பெருமான் நள்ளிரவில் சுடு காட்டு சாம்பல் அபிஷேகம் காணும் மஹா காளேஸ்வரராய் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.
4. ஓங்காரம் மாமலேஷ்வரம் :
மத்திய பிரதேசத்தில் இந்தூருக்கு அருகே பாண லிங்கங்கள் நிறைந்த நர்மதை நதிக்கரையில் சுயம்பு மூர்த்தியாய் அமலேஸ்வரராய் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார் எம்பெருமான்.
5. பரல்யாம் வைஜ்யனாதம் :
மஹாராஷ்டிர மாநிலத்தில் பரலியில் நோய்களை எல்லாம் நீக்கும் பரம வைத்தியராய் வைத்தியநாதராய் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.
6. டாகின்யாம் பீமசங்கரம் :
மஹாராஷ்டிர மாநிலத்தில் புனேக்கு அருகே உள்ள பீமசங்கர மலையில் அசுரன் பீமன் வழிபட்ட ஜோதி லிங்கமாய் அருள் பாலிக்கின்றார்.
7. சேதுபந்தே து இராமேஷம் :
தமிழக்த்திலே கடற்கரையிலே இராம பிரான் சேதுபந்தனம் செய்த இராமேஸ்வரத்தில், ஸ்ரீ இராமர், சீதாதேவி வழிபட்ட இராமேஸ்வரராய் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.
8. நாகேஷம் தாருகாவனே:
மஹாராஷ்டிர மாநிலம் ஒளண்டாவிலே நாக தெய்வம் வழிபட்ட நாகேஸ்வரராய் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார் எம்பெருமான். தேவதாரு மரங்கள் நிறைந்த தாருகா வனமாம் உத்த்ராகண்ட மாநிலம் ஜாகேஸ்வரத்தில் நாகேஸ்வர ஜோதி லிங்கமாய் எம்பெருமான் எழுந்தருளி உள்ளார் என்பாரும் உண்டு.
9.வாரணாஸ்யாம் து விஸ்வேஷம் :
உத்திர பிரதேஷ மாநிலத்தில் கங்கை நதி தீரத்தில் இறக்க முக்தி தரும் காசியில், அம்மை விசாலாக்ஷ’யாயும், அன்ன பூரணியாகவும் அருள் கொடுக்கும் வாரணாசியில், கால பைரவர் காவல் காக்கும் புண்ணிய பூமியில் விஸ்வனாதராய் அருட்காட்சி தருகின்றார்.
10. த்ரயம்பகம் கௌதமீதடே :
மஹாராஷ்டிர மாநிலத்தில் நாசிக் நகருக்கு அருகில் நர்மதை நதி உற்பத்தியாகும் த்ரயம்பகேஸ்வரத்தில் மும்மூர்த்திகள் பூசித்த எம்பெருமான் மும்மூர்த்தி ரூபமாகவே எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.
11. ஹிமாலயே து கேதாரம் :
உத்தராகாண்ட் மாநிலத்தில் அன்னை பார்வதியின் தாய் வீடாம், ஹிமவான் நாடாம் பனி நிறைந்த இமய மலையிலே திருக்கேதாரத்தில், உமா தேவியார் கேதார விரதம் அனுஷ்டித்த போது சுயம்பு லிங்கமாய் தோன்றிய எம்பெருமான் கேதாரீஸ்வரராய் அருள் பாலிக்கின்றார்.
12. குஷ்மேஷம் ச சிவாலயே :
மஹாராஷ்டிர மாநிலம் எல்லோராவிலே பராசக்தி வழிபட்ட ஜோதி லிங்கமாய் கிராணேஸ்வரராய் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.
அவரே ஜம்மு காஷ்மீர் மாநிலம் அமர்நாத்தில் பனி லிங்கமாகவும், பாணலிங்கமாகவும்,
திருபாச்சிலாசிரமத்திலே மூங்கில் லிங்கமாகவும்
நெல்லை மாவட்டம் பாபனாசத்தில் ருத்ராக்ஷ லிங்கமாகவும், எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர்.
திருக்கேதாரத்தில் ஈசன் ஒரு மலை உச்சியாக சுயம்பு லிங்கமாக எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். இவரை உமையம்மை, விஷ்ணு, பரசுராமர், நர நாராயணர்கள், கண்ணன், கௌதம முனிவர், பாண்டவர்கள் ஆகியோர் வழிபட்டுள்ளனர். ஐயன் கேதாரீஸ்வரர், கேதார நாதர், கேதார கிரீசன் என்று அழைக்கப்படுகின்றார். தற்போதைய உத்தராகண்ட் (உத்தராஞ்சல்) மாநிலத்தில், சமோலி மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 3584 மீட்டர் அதாவது சுமார் 11800 அடி உயரத்தில் பனி மூடிய சிகரங்களுக்கு நடுவில், மந்தாங்கினி ஆற்றின் உற்பத்தி ஸ்தானத்தில் ருத்ர இமயமலைத் தொடரில் அமைந்துள்ளது திருக்கேதாரம் என்னும் கேதார்நாத் தலம்.
சமோலி மாவட்டத்தில் கிட்டத்தட்ட 200 சிவாலயங்கள் உள்ளன அவற்றுள் மிகவும் முக்கியமானது திருக்கேதாரம் ஆகும்.
இமய மலையில் உள்ள பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று இத்தலம்.திருஞான சம்பந்தர் மற்றும் சுந்தரர் தேவாரப்பாடல் பெற்ற தலம் இருவரும் திருக்காளத்தியிலிருந்து இத்தலத்தைப்பற்றி பாடியுள்ளனர்.
இமய மலையில் உள்ள மற்ற பாடல் பெற்ற தலங்கள் கௌரி குண்டம், இந்திர நீல பர்வதம், திருக்கயிலாயம் ஆகியவை ஆகும்.கருட புராணத்தில் பாவமனைத்தையும் போக்கும் தலம் என்று திருக்கேதாரத்தைப் பற்றி கூறப்பட்டுள்ளது.
சிவ புராணத்தில் திருக்கேதாரத்தை தரிசனம் செய்யாத பிறவி பயனற்றது என்றும் இங்கு இறைவனை தரிசனம் செய்தவர்கள் எவ்வளவு மஹா பாவியாக இருந்தாலும் புனிதமடைவான் என்று கூறப்பட்டுள்ளது.
ஸ்கந்த புராணத்தில் ஒரு அத்தியாயம் இந்த கேதார க்ஷேத்திரத்தின் மகிமையை கூறுகின்றது.
கேதார்நாத் மகிமை தொடரும்....
திருச்சிற்றம்பலம்
கங்கை கரையில் தொடர் இன்னும் வ(ள)ரும்...
No comments:
Post a Comment