முற்பிறவி, இப்பிறவிகளில் செய்த பாவங்கள் போக, சாபங்கள் நீங்க சிறந்த பரிகாரத் தலமாக விளங்கி வருகிறது நார்த்தாம்பூண்டி.
கொலை செய்த பாவத்தையே நீக்கும் தலமான இது திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே உள்ளது. இங்கே பசுமை நிறைந்த வயல் வெளிகளுக்கு நடுவே, சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் 16 அடி உயர மதில் சுவர்களுடன் கம்பீரமாய்க் காட்சியளிக்கிறது கைலாசநாதர் திருக்கோவில்.
தெற்கு நோக்கியுள்ள கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தால், முதலில் விநாயகர் சந்நிதியைத் தரிசிக்கலாம். அருகே சூரியனுக்கும் சந்திரனுக்கும் அழகிய சந்நிதிகள் உள்ளன. மகா மண்டபம், அர்த்த மண்டபம் கடந்து கருவறையில் லிங்க வடிவினராக கைலாசநாதர் அருள்புரிகிறார். அன்னை பெரியநாயகி நான்கு கரங்களுடன், நின்ற திருக்கோலத்தில் தனிச்சந்நிதி கொண்டு எழிற்காட்சி தருகிறாள். மகா மண்டபத்தில் சப்த கன்னியரையும் காணலாம். மேலும் தட்சிணாமூர்த்தி சந்நிதி, வேணுகோபால சுவாமி சந்நிதி, வள்ளி- தெய்வானை யுடன் முருகன் சந்நிதி ஆகியவையும் சிறப்பாக அமைந்துள்ளன.
சிவனின் இடப்பாகம் பெற்றிட விரும்பிய உமாதேவி, பூலோகம் வந்து சிவ தலங்களைத் தேடிச் சென்று வழிபட்டாள். அப்படி தரிசித்துக் கொண்டு வரும்போது வாழைப்பந்தல் என்ற இடத்தைக் கண்டு, அதன் எழிலால் ஈர்க்கப்பட்டாள். அங்கே மணலால் செய்யப்பட்ட லிங்க பூஜை செய்ய விரும்பினாள். அதற்கு நீர் தேவைப்படவே, முருகனை நினைத்தாள். உடனே தாயின் முன் தோன்றிய முருகனிடம், ""சிவலிங்கத்தை உருவாக்கிப் பூஜிக்க எண்ணுகிறேன். ஆனால் நீரில்லை'' என கோரிக்கை வைத்தாள்.
தாயின் வாட்டத்தைப் போக்க முருகன் தன்னிடமிருந்த சக்தி வேலை எய்தார். வேல் ஒரு குன்றின்மேல் பாய்ந்தது. வேல் குத்திய இடத்திலிருந்து நீர் பெருக்கெடுத்து வந்தது. ஆனால் அந்நீர் செந்நீராக வர, அதிர்ந்து போன உமாதேவி யும் முருகனும் நதி ஓடி வரும் வழியே சென்று பார்த்தனர். அங்கே குன்றின்மீது தவம் செய்து கொண்டிருந்த ஏழு முனிவர்களின் உடலை முருகனின் வேல் துளைத்துக் கொண்டு போனதால், அவர் கள் இறந்து போயிருந்தனர். அந்த முனிவர்களின் குருதி கலந்த நீர்தான் செந்நீராகப் பாய்ந்து வருவதைக் கண்டனர். புனிதம் மிக்க முருகனின் வேல் முனிவர்கள் உடலைத் துளைத்ததால் அவர்கள் மோட்சம் அடைந்தனர். ஆனால் முனிவர்களைக் கொன்ற பாவம் முருகனைப் பீடித்தது. அதைப் போக்க தன் அன்னை உமாதேவியிடம் வழி கேட்டார் முருகன்.
""எனக்காக நீ உருவாக்கிய சேயாற்றின் வட கரையில் சப்த கரைகண்ட ஈஸ்வர தலங்களையும் தென்கரையில் கைலாயங்களையும் உருவாக்கி, சிவனைப் பூஜித்து வா. உன் பாவம் போகும்'' என்றாள். ("சேய்' என்றால் மகன். முருகனையும் குறிக்கும் சொல். முருகனால் தோற்றுவிக்கப்பட்ட ஆறு சேயாறு எனப்பட்டது. தற்போது அது மருவி செய்யாறு என்று அழைக்கப்படுகிறது.)
தாய் கூறியபடி காஞ்சி, கடலாடி, மாம்பாக்கம், வடபாதி மங்கலம், எலத்தூர், பூண்டி, குருவிமலை ஆகிய சேயாற்றின் ஏழு வடகரைத் தலங்களில் கரைகண்டீஸ்வரர் ஆலயங்களை உருவாக்கி, சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார் முருகன். அதேபோல தென் கரைகளில் தாமரைப் பாக்கம், வாசுதேவன்பட்டு, நார்த்தாம்பூண்டி, தென்பன்றிப் பட்டு, பழங்கோவில், கரப் பூண்டி, மண்டகுளத்தூர் ஆகிய ஏழு தலங்களில் கைலாயங்களை அமைத்துப் பூஜித்து தன் பாவத்தைப் போக்கிக் கொண்டார். முருகனால் உருவாக்கப்பட்ட நார்த்தாம்பூண்டி தலம் கைலாய ஆலய வரிசையில் மூன்றாவது தலமாகும். (மற்ற தலங்களும் கம்பீரமாக உள்ளன.)
இத்தலம் அமைந்த இப்பகுதிக்கு நார்த்தாம் பூண்டி என பெயர் வரக் காரணம் என்ன என் பதை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் இக்கோவில் நிர்வாகத்தைச் செய்து வரும் ராமஜெயம்.
""சிவனின் மாமனாரான தக்கன் தன் மகன்கள் மூவரையும் தனக்குச் சமமாக வளர்க்க எண்ணினார். ஆனால் அந்த மூன்று பேரையும் சந்தித்த நாரதமா முனிவர், மூன்று பேருக்கும் சிவ உபதே சம் செய்து சிவபக்தர்களாக்கி மோட்சத்துக்கு அனுப்பி விட்டார். இதைக் கண்டு ஆத்திரமடைந்த தக்கன் நாரத முனிவர்மேல் கோபம் கொண்டு, நாரதரின் உடல்நிலை கெடட்டும் என சாபமிட்டார்.
இச்சாபத்தால் கடும் அவதியுற்ற நாரத மாமுனி, அச்சாபத்தை நீக்கிக்கொள்ள இந்த மூன்றாவது கைலாயத்திற்கு வந்து கைலாசநாதரை வணங்கி, இச்சந்நிதியின் பின்புறம் உள்ள வில்வ மரத்தின் கீழ் அமர்ந்து 12 ஆண்டுகள் தவம் செய்தார். நாரதரின் தவத்தை மெச்சி பஞ்சமூர்த்திகளோடு ரிஷப வாகனத்தில் தோன்றிய சிவன், நாரதருக்கு சாப விமோசனம் தந்தார். அதில் மகிழ்ச்சியடைந்த நாரதர் தொடர்ந்து முருகப் பெருமானை நினைத் துத் தவம் செய்தார். கிருத்திகை தினத்தில் நாரதர் முன் தோன்றிய முருகனிடம் சப்த ரிஷிகளின் தலைமைப் பதவியைக் கேட்டார். முருகனும் முனிவர்களின் தலைவராக அவரை நியமித்தார். நாரதர் வணங்கி சாபம் நீங்கியதோடு, தலைமைப் பதவி பெற்ற தலம் என்பதால், இக்கோவில் அமைந்துள்ள இப்பகுதி நாரதர்பூண்டி என அழைக்கப்பட்டது. பின் காலப்போக்கில் மருவி நார்த்தாம்பூண்டியாகியது. கந்தபுராணத்தில் இந்த வரலாறை அறியலாம்'' என்றார்.
இத்தலத்தை வணங்கினால் கிடைக்கும் பலன் பற்றி அர்ச்சக மாணவரும் இளைஞருமான ரங்கநாதன் கூறுகையில், ""கொலைப் பாதகத்தில் ஈடுபட்டு மனம் திருந்தியவர்கள், சரும நோயால் பாதிக்கப்பட்டவர்கள், உடல் உபாதைகளால் அவதிப்படுபவர்கள் இத்தலம் வந்து ஐயனை மனமுருகி வேண்டி வழிபட்டால், உடனே அவர்களின் பாவங்களும் குறைகளும் நிவர்த்தி யாகும் என்பது நிதர்சன உண்மை. கோவிலில் வடமேற்கே நாரதர் அமர்ந்து தவம் செய்த வில்வ மரத்தை வணங்கி அதன் இலைகளை உண்டால், குழந்தை பாக்கியம் உண்டாகும்; கடன் பிரச்சினைகளும் தீரும்'' என்றார்.
திருவண்ணாமலை- வேலூர் சாலையில் நாயுடுமங்கலம் இறங்கி, ஐந்து கி.மீ. தூரத்திலுள்ள நார்த்தாம்பூண்டி செல்ல வேண்டும். நாயுடு மங்கலத்தில் இருந்து ஆட்டோ வசதி உண்டு. குறிப்பிட்ட நேர இடைவெளியில் பேருந்து வசதியும் உண்டு.
சிவராத்திரி, நவராத்திரி, பங்குனி உற்சவம், பிரம்மோற்சவம் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றன. மாதாமாதம் கிருத்திகை வழிபாடும் சிறப்பு. தினமும் காலை வேளையில் மட்டும் பூஜை நடக்கும் இத்தலம் காலை முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
No comments:
Post a Comment