சார்தாம் யாத்திரை - கேதார்நாத்
யமுனோத்ரியில் வெறும் ஐந்து கி.மீ தூரம்தான் நடைப்பயணம் ஆனால் இங்கோ பதினான்கு கி.மீ நடைபயணம். இரு நெடிதுயர்ந்த மலைகள் இரண்டு மலைத்தொடர்களுக்கு இதையில் பொங்கி நுப்பும், நுரையுமாக பாய்ந்து வரும் மந்தாங்கினி நதி. வழியெங்கும் இயற்கையன்னையின் எழிற் காட்சிகள் கொட்டிக்கிடக்கின்றன. இரு பக்கமும் எண்ணற்ற நீர் வீழ்ச்சிகள் சிற்றரசர்கள் சக்ரவர்த்திக்கு கப்பம் கட்டுவது போல தங்களுடைய தண்ணீரைக் கொண்டு வந்து மந்தாங்கினியில் சேர்க்கின்றன. இந்த தண்ணீர் எல்லாம் பனி உருகுவதால் உண்டானவை எனவே வருடம் முழுவது தண்ணீர் இருந்து கொண்டே இருக்கின்றது.
இரு பக்கமும் பச்சை கம்பளம் போர்த்தியது போல் உள்ள மலைத்தொடர்களில் நெடிதுயர்ந்த மரங்கள், பல்வேறு வண்ணங்களில் பூத்துக்குலுங்கும் மலர்கள், பாய்ந்து வரும் வெள்லி அருவிகள் என்று இயற்கை அழகை இரசித்துக்கொண்டே மலையேறலாம்..
இன்னிசை வீணையர் யாழினர் ஒரு பால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒரு பால்
துன்னிய பினை மலர்க் கையினர் ஒரு பால் தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒரு பால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒரு பால் . . . .
என்று சிவபெருமானையே குருவாகப் பெற்ற மாணிக்கவாசப் பெருமான் தமது திருப்பள்ளியெழுச்சியிலே பாடியபடி நடந்தே மலையேறி ஐயனைக்காண செல்லலாம் வாங்க...
(ஃபாடா, குப்த காசி, டேராடூன் ஆகிய இடங்களில் இருந்து ஹெலிகாப்டர்கள் இயக்கப்படுகின்றன.)
வாழ்வாவது மாயம்மிது மண்ணாவது திண்ணம்
பாழ்போவது பிறவிக்கடல் பசிநோய்செய்த பறிதான்
தாழாதறஞ் செய்ம்மிந்தடங் கண்ணான் மலரோனும்
கீழ்மேலுற நின்றான் திருக் கேதாரமெனீரே!
என்று எம்பிரான் தோழர் சுந்தரர் மிஞ்சு தமிழில் பாடியுள்ள கேதாரீஸ்வரரின் சன்னதி முன் நிற்கும் போது மனது நிறைய ஆனந்தம் பொங்கும்.
காலையில் இருந்து மதியம் மூன்று மணி வரை ஐயன் நிர்வாண தரிசனம் என்னும் எந்த அலங்காரமும் இல்லாமல் மலை உச்சியாகவே தரிசனம் அளிக்கின்றார். நாமே நமது கையால் அபிஷேகம் செய்து கொள்ளலாம். கட்டி அனைத்துக்கொள்ளலாம். அவர் மேலேயே தலைவைத்து வணங்கலாம்.
யமுனோத்ரியில் சேகரித்த யமுனை தீர்த்தம், கங்கோத்ரியில் சேகரித்த கங்கை தீர்த்தம் ஆகியவற்றால் ஆண்டளக்கும் ஐயனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக அபிஷேகம் செய்யலாம்..
திருக்கேதார நாதருக்கு நெய்யபிஷேகம் மிகவும் பிரியம் என்பதால் நெய் கொண்டு ஐயனின் மனம் குளிர அபிஷேகம் செய்யலாம்.. பின்னர் வி்ல்வம் மற்றும் பிரம்மகமல் சார்த்தி கற்ப்பூர தீபம் காட்டி மனதார வணங்கலாம்..
திருக்கேதார ஜோதிர் லிங்கத்தின் மேற்குப்பகுதி சிவபெருமான், வடக்கு நோக்கி தும்பிக்கையுடன் கணேசர், மற்றும் ஸ்ரீசக்ர வடிவில் கௌரியன்னை பார்வதி ஆகிய மூவரும் ஒன்றாக காட்சி தருகின்றனர். ஸ்ரீ சக்கரத்தின் மேல் தலை வைத்து வணங்கலாம்...
கோவிலின் தெற்குப் பக்கம் இருக்கும் அகண்ட தீபத்தில் நெய் இடவேண்டும். இந்த தீபம்தான் திருக்கோவில் பனிக்காலத்திற்காக மூடப்பட்டு ஆலயம் பின் அக்ஷய த்ரிதியையன்று திறக்கப்படும் போது எரிந்து கொண்டு இருக்குமாம்.
இனி திருக்கோவில் அமைப்பைப் பார்ப்போம்..
வெள்ளிப்பனிமலையாம் திருக்கயிலையில் விளங்கும் நாதரின் இன்னொரு வெள்ளிப்பனிமலை ஆலயம் இந்த திருக்கேதாரம். கேதார மலைத்தொடர்களின் அடிவாரத்தில் அமைந்துள்ளது இப்புனிதமான ஆலயம். மூன்று பக்கமும் பனி மூடிய மலைகள், நர நாராயண சிகரங்கள் பின் புறம் எழிலாக விளங்க 8ம் நூற்றாண்டில் ஆதி சங்கர பகவத் பாதாள் கட்டிய கோவில் இமய மலைப்பகுதியில் ஓங்கி உயர்ந்த ஒரு விமானத்துடன் கற்றளியாக இக்கோவில் கட்டப்பட்டுள்ளது இமயமலைக் கோவில்களின் கலை அம்சத்துடன் கட்டப்பட்டுள்ளது. ஓங்கி உயர்ந்து எழிலாக காடசி தருகின்றது திருக்கோவில். எல்லோரையும் வரவேற்கின்றது. தோரண வாயில் அதையடுத்து எண்ணற்ற விதவிதமான மணிகள் சாயங்கால ஆரத்தியின் போது அந்த மணிகளை அடிக்கும் போது மணியொளியும் சங்க நாதமும் மலை முகட்டில் முட்டி எதிரொலிக்கும் அந்த அற்புதத்தை என்ன என்று சொல்ல. அங்கிருந்தால் தான் அந்த தெய்வீக உணர்வை தாங்கள் உணர முடியும். முன் மண்டபத்தின் உட்பகுதியில் அழகிய சிற்பங்கள். சிங்கி, பிங்கி என்று இரண்டு துவார பாலகர்கள், அருகில் கணேசர், அற்புத சிற்பங்கள் ஒவ்வொரு கதவிலும் மற்றும் சுவற்றிலும். மேலே மரசட்டங்கள் கொண்ட சாளரம் அதற்கு மேல் கலசம். ஐயனை எப்போதும் சுமக்கும் நந்தியெம்பெருமான் பெரிய வடிவில் கோவிலுக்கு எதிரே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார் நந்தி தலையைத் தூக்கி எம்பெருமானை தனது மூச்சுக் காற்றால் குளிர்விக்கும் கோலம்.
கதவில் தசாவதார கோலங்கள், மஹா மண்டபத்தில் உள் கோஷ்டத்தில் லக்ஷ்மி நாராயணர் மற்றும் பஞ்ச பாண்டவர்களுக்கும், திரௌபதி தேவிக்கும், குந்தி அன்னைக்கும் சிலை, இம்மண்டபத்தில் நடுநாயகமாக சிறிய வெள்ளிக்கவசம் பூண்ட நந்தி. இதை அடுத்து முன் மண்டபம் இம்மண்டபத்தில் எதிரெதிரே விநாயகர் மற்றும் கௌரி அன்னை. வெள்ளி கவசத்தில் அன்னை எழிலாக அருட்காட்சி தருகின்றாள். மனமார ஐயனையும் அம்மையையும் வணங்கி விட்டு வெளியே வந்து பிரகார வலம் வர வேண்டும்.. பிரகாரம் பின் பகுதியில் தமிழில் ஞானசம்பந்தர் மற்றும் சுந்தரர் திருவுருவப்படங்கள் மற்றும் பாசுரங்கள் கண்டு அப்பாசுரங்களை பாடிப்பரவசம் அடையலாம். பின்னர் விஸ்வரூப நந்தியெம் பெருமானை வணங்கிட வேண்டும்.
கோவிலுக்குப் பின்னே ஆதி சங்கரரின் சமாதி உள்ளது. விஜய கொடியுடன் அவருடைய தண்டத்தை இங்கு அமைத்துள்ளனர்.அதற்கு பின் லங்கார் எனப்படும் அன்னம் பாலிக்கும் இடம். பின்னர் ஆதி சங்கரர் திருக்கயிலையில் கொண்டு வந்து ஸ்தாபிதம் செய்த ஸ்படிக லிங்கம் தரிசனம் செய்யவேண்டும். இவ்வாலயத்தில் ஆதி சங்கரர், சுக்ராச்சாரியார் மற்றும் அனுமன் சிலைகளும் உள்ளன.
(இரவில் திருக்கேதார கோவில் சோடியம் விளக்கு வெளிச்சத்தில் மிகவும் அருமையாக காட்சியளிக்கும்.)
திருக்கேதாரம் முக்தி ஸ்தலமாகவும் கருதப்படுகின்றது. இங்கு இறந்தால் புனர் ஜன்மம் கிடையாது. திருக்கோவிலின் பின்புறம் ஈசானேஸ்வரர் சன்னதி உள்ளது. இங்கு பூஜை முறையை ஆதி சங்கரர் வகுத்தார் எனவே மலபாரை சார்ந்த லிங்காயத் பிராம்மணர்களே பூஜை செய்கின்றனர். அவர் ராவல் எனப்படுகின்றார். அவருடைய சிஷ்யர்கள் பூஜை செய்கின்றனர்.
பைரவர் காவல் தெய்வம் என்பதால் அவருக்கு கோவில் எதுவும் கிடையாது வெட்ட வெளியில் இருந்து கேதார்நாத் கோவிலைக் காத்துக்கொண்டிருக்கிறார். ஒரு சமயம் கோவில் மூடப்படும் போது கோவிலை பூட்ட மறந்த போது பைரவர் வந்து பூசாரிகளை நடக்க விடாமல் செய்து பின்னர் கோவிலை பூட்டிவிட்டு சென்றார்களாம்.
திருக்கேதாரத்தை சுற்றிலும் எட்டு திசைகளிலும் எட்டு ஆலயங்கள் உள்ளன. ரேதஸ் குண்டத்தின் தீர்த்தம் பருகினால் இந்த புனித யாத்திரை பூர்த்தி அடைவதாக ஐதீகம். இந்த தீர்த்தத்தை உட்கொள்பவர்களின் இருதயத்தில் நான் அமிர்தமாக அமர்வேன் என்று பார்வதி தேவியிடம் சிவபெருமான் இந்த தீர்த்தத்தின் மஹிமையை விளக்கியதாகவும், இங்கிருந்து தான் ஐயன் ஜோதிர்லிங்கமாக எழுந்தருளியதாகவும் ஐதீகம்.
திருக்கேதாரத்தில் தினமும் அதிகாலை 4மணிக்கு நடை திறக்கின்றது. அது முதல் நிர்வாண தரிசனம் நாமே அபிஷேகம் செய்து கொள்ளலாம். அப்போது பால் போக், மஹா அபிஷேகம், ருத்ராபிஷேகம் நடைபெறுகின்றது. மாலை சிவ அஷ்டோத்திரம், அஷ்டோத்திரம், சிவ நாமாவளி, சிவ மஹிமா ஸ்தோத்திரம். மாலை நான்கு மணியளவில் முழு அலங்காரத்துடன் தரிசனம் வெள்ளிக்கிரீடத்துடன்ம் பட்டாடையுடன், மலர் மாலைகளுடன் அற்புத தரிசனம். ஏகாந்த தரிசனம் கண்டு களிக்கலாம்..
இரவி 8 மணியளவில் ஆரத்தி. ஐயனின் ஆரத்தி தரிசனம் முதலில் கேதாரீஸ்வர்ரருக்கு ஆரத்தி பின்னர் பரிவார தேவதைகளுக்கு ஆரத்தி ஆகி பின்னர் சன்னதி தெரு வழியாக ஆரத்தி மந்தாங்கினி மாதா சனன்தி வரை செல்லும்.(பின்னர் திரும்பி வரும் போது ஆரத்தியை தொட்டு நாம் வணங்கலாம்.)
திருக்கேதாரத்தின் எதிரே சுமார் 1.5 கி.மீ ஏறிச்சென்றால் பைரவர் ஆலயம் உள்ளது.
அதற்கு சிறிது மேலே பீமன் பாதம் உள்ளது. இங்குதான் பீமன் காளை வடிவில் இருந்த சிவபெருமானை பிடித்ததாக ஐதீகம் . மேலும் காந்தி சரோவரும் கேதாரில் பார்க்க வேண்டிய ஒரு இடம்.
ஆழ்ந்து காணார் உயர்ந்து எய்தகில்லார் அலமந்தவர்
தாழ்ந்த தம்தம் முடி சாய நின்றார்க்கு இடம் என்பது
வீழ்ந்து செற்று நிழற்கு இறங்கும் வேழத்தின் வெண் மருப்பினன்று
கீழந்து சிங்கம் குருகு உண்ண முத்து உதிரும் கேதாரமே
என்று ஆளுடையப்பிள்ளை அவர்கள் பாடிய திருக்கேதாரத்தில் ஜோதிர் லிங்கமாக எழுந்தருளி அருள் பாலிக்கும் எம்பெருமானை, தேவ தேவனை, மஹா தேவனை, அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனை, சகல புவன ஸ்ருஷ்டி, ஸ்திதி, சம்ஹார காரணனை தியாகராஜனை உள்ளன்போடு வழிபட திருமணம் கூடுகிறது. ஒழுக்கமான வாழ்வு கிடைக்கின்றது மனக்கவலை நீங்குகின்றது, ஐயனை தரிசித்தவர்களுக்கு கனவில் கூட துன்பம் வாராது என்பது ஐதீகம். பத்ரியிலும் கேதாரத்திலும் இறைவனை வழிபடுபவர்களுக்கு சம்சார பந்தம் விலகும், கேதாரத்தில் தானம் செய்பவர்கள் சிவரூபம் பெறுவர் என்பது திண்ணம்.
திருக்கேதாரத்தில் மஹா சங்கராந்தி, வசந்த பஞ்சமி, சிவராத்திரி,. நந்த அஷ்டமி, ஹோலி, பைசாகி, ரக்ஷ‘பந்தன், தீபாவளி போன்ற பண்டிகைகளின் போது சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றது.
இமய மலையின் உயரத்தில் கோவில் கொண்ட, யோகிகளும், முனிவர்களும், சித்தர்களும், அசுரர்களும், தேவர்களும் மஹா நாகமும் வழிபடுகின்ற என் ஐயனே உனக்கு ஆயிரம் நமஸ்காரம் என்று ஆதி சங்கர பகவத் பாதாள் போற்றிய திருக்கேதார நாதனையும், கௌரியம்மையும் தரிசனம் செய்த மன மகிழ்ச்சியில் மலை இறங்கி செல்லலாம்...
(களைப்பு தீர கௌரி குண்டத்தில் (வெந்நீர்) நீராடலாம்..)
அடுத்த பதிவில் கேதாரநாத் பற்றி பார்ப்போம்...
திருச்சிற்றம்பலம்
கங்கை கரையில் தொடர் இன்னும் வ(ள)ரும்...
No comments:
Post a Comment