Saturday, 3 December 2016

பத்ரினாத் மற்றும் கேதார்நாத் - 1


இமயமலையின் அடிவாரத்தில் உள்ள கர்வால் எனும் மலைப் பிரதேசத்தில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 10,000 அடி உயரத்தில் உள்ளது பத்ரினாத் ஆலயம். மேலே உள்ள  மலை பிரதேசத்தில் உள்ள இரண்டு ஆலயங்களும் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும், பத்ரிநாத் ஆலயத்தில் உள்ள சிலையை நிறுவியவர் ஆதி சங்கரர் என்றும், கேதார்நாத்தில் உள்ள சிவன் சிலை பாண்டவர்களால் ஏற்பட்டது என்றும் கூறப்பட்டாலும்,திருமால் நர-நாராயணராக (அர்ஜுனன் மற்றும் கிருஷ்ணராக) இங்கே தவம் செய்து சிவபெருமானை ஜோதிர் லிங்கமாக இத்தலத்தில் எழுந்தருளச் செய்தார் என்ற புராணகள் கதையும் உள்ளது. இந்த இரண்டு ஆலயங்களில் முதலில் பத்ரிநாத் மான்மியக்  கதையைப் படிக்கலாம்.

பத்ரிநாத் ஆலய மான்மியம்


பத்ரினாத் ஆலயம் குறித்த வரலாற்றுக் கதை ஒன்றின்படி ஒரு கட்டத்தில் புத்தமதம் தழைத்து இருந்தபோது, இங்கு வந்த புத்தர்கள் பத்ரிநாராயணர் சிலையை எடுத்து அருகில் இருந்த நாரதர் குளத்தில் வீசி எறிந்து விட்டார்கள் என்றும் ஆனால் அதற்கும் ஒரு காரணம் இருந்தது என வசிஷ்ட முனிவர் தனது மனைவியான அருந்ததியிடம் கூறியதாக ஒரு கதையும் உள்ளது. அந்தக் கதையின்படி விஷ்ணுவின் சிலையை புத்த மதத்தினர் நாரதர் குளத்தில் வீசி எறிந்ததும், பதைத்துப் போன நாரத முனிவர் விஷ்ணுவிடம் ஓடோடிச் சென்று நடந்ததைக் கூற, விஷ்ணுவும் சிரித்துக் கொண்டே தான் நீரில் மூழ்கி இருந்தாலும் பிரும்மாவினால் படைக்கப்பட்ட தன்னுடைய சிலையை யாராலும் அழிக்க முடியாது என்றும், சில காலம் பொறுத்து ஒரு சிவ பக்தர் அங்கு வந்து தன்னை வெளியில் எடுத்து பிரதிஷ்டை செய்வார் என்றும், அதற்குப் பிறகு அங்கு ஒரு ஆலயம் தமக்கு எழும்பும் என்றும் கூறினார்.

அதற்கு ஏற்றார் போலவே அந்த கட்டத்தில் கேரளா மானிலத்தில் ஆதி சங்கரர் பிறந்து இளமைப் பருவத்திலேயே துறவறம் ஏற்றுக் கொண்டார். அவர் தமது இறுதிக் கட்ட காலத்தில் 
(ஸ்ரீ சங்கரர் மிகக் குறைந்த வயதிலேயே முக்தி அடைந்தார். அவர் கேதார்நாத் ஆலயத்தை நிறுவியப் பின் மலை மீது ஏறி அப்படியே மறைந்து விட்டாராம்) தமது சீடர்கள் சிலருடன் அவர் வடநாட்டு யாத்திரையை மேற் கொண்டார். அந்த யாத்திரையின்போது பத்ரினாத்தில் நீரில் மூழ்கி இருந்த விஷ்ணுவின் சிலைக் குறித்து அவருக்கு தெரிய வந்தது. ஆகவே முதலில் நீரில் மூழ்கி அந்த சிலையை எடுக்க முயன்றவருக்கு வேறு எதோ சிலைக் கிடைத்தது.  அடுத்த முறையும் நீரில் முழுகி சிலையைத் தேட வேறு எதோ சிலையே கிடைக்க இம்முறை சங்கரர் 'பத்ரினாதா, உனக்கு என் மூலமாகவே சிலை அமைக்க வேண்டும் என்ற விதி இருந்தால் நீ எனக்கு கிடைப்பாய்' என வேண்டிக் கொண்டே நீரில் மூழ்கி விஷ்ணுவின் சிலையைக் கண்டெடுத்தார். அதுவே தற்போது ஆலயத்தில் உள்ள பத்ரினாதரின் சிலை என்கிறார்கள்.


அந்த சிலை சாலிக்ராம கல்லினால் ஆன தியான நிலையில் உள்ள சிலை என்பது விஷேஷம். அந்த ஆலயத்தின் அருகில் ஓடுவதே அலக்நந்தா எனும் நதியாகும். அதற்கும் சிறு கதை உள்ளது. பகீரதனின் தவத்தினால் பூமியை நோக்கி ஓடி வந்த கங்கையின் வேகத்தை பூமி தாங்காது என்பதினால் கங்கையை தன் தலையில் முடிந்து வைத்துக் கொண்ட சிவபெருமானோ அதை பன்னிரண்டு கிளைகளாக பிரிந்து பூமியில் ஓடுமாறு செய்தார். அதில் ஒன்றுதான் அலக்நந்தா நதியும் ஆகும். கேதார்நாத்தில் சிறு ஓடையாக உருவாகும் மந்தாகினி என்ற நதியும், பத்ரிநாத்தில் உருவாகும் அலக்நந்தா நதியும், ருத்ர பிரயாக் என்ற இடத்தில் வந்து கலந்து பல்வேறு நதிகளை தம்முடன்  இணைத்துக் கொண்டு  ஹரித்துவாரில் கங்கையாக ஓடுகின்றது.
 
முதலில் நதியில் கண்டெடுத்த விஷ்ணுவின் சாலிக்கிராமத்தினால் ஆன சிலையை ஆதி சங்கரர் தான் தவம் இருந்த இடத்தின் அருகில் இருந்த குகை ஒன்றில் பிரதிஷ்டை செய்து வைத்து இருந்தார். ஆனால் பின்னர் பல வருடங்களுக்குப் பிறகு அந்த பிரதேசத்தை ஆண்ட கர்வாலை சேர்ந்த மன்னர் ஒருவர் அந்த சிலையைக் கண்டு பிடித்து எடுத்து வந்து தற்போது ஆலயம் உள்ள இடத்தில் அதை வைத்து ஆலயத்தை அமைத்தார். ஆலயம் எழுந்த காலக் கட்டம் சரிவரத் தெரியவில்லை. அதைக் கட்டியவரும் யார் என்று சரிவரத் தெரியவில்லை. ஆனால் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது, அதன் மகிமையும் மிகப் பெரியது என்பது வசிஷ்ட முனிவர் தனது மனைவிக்கு கூறிய ஆலய மான்மியக் கதை மூலம் தெரிந்தது. அந்த ஆலய மான்மியம் என்ன?
.......தொடரும் 

  நன்றி : Mr. N.R.Jayaraman


No comments:

Post a Comment