Thursday 26 January 2017

அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில், சிதலைப்பதி - திருவாரூர்


மூலவர் : முக்தீஸ்வரர்,மந்தாரவனேஸ்வரர்

உற்சவர் : சோமாஸ்கந்தர்

அம்மன்/தாயார் : பொற்கொடியம்மை, சொர்ணவல்லி

தல விருட்சம் : மந்தாரை

தீர்த்தம் : சூரிய புஷ்கரிணி, சந்திர தீர்த்தம், அரிசிலாறு

ஆகமம்/பூஜை : சிவாகமம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திலதைப்பதி

ஊர் : சிதலப்பதி

பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர்

தேவாரப்பதிகம்

பொடிகள் பூசிப் பலதொண்டற் கூடிப் புலர்காலையே அடிகளாரத் தொழுதேத்த நின்ற அவ்வழகன்னிடம் கொடிகளோங்கிக் குலவும் விழவார் திலதைப்பதி அடி கொள்சோலை மலர்மணம் கமழும் மதிமுத்தமே. - திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 58வது தலம்.

திருவிழா:

மாத அமாவாசைகளில் சிறப்பு பூஜை, சிவராத்திரி, திருக்கார்த்திகை.

தல சிறப்பு:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மனித முக விநாயகர்: இத்தலத்தில் அருளும் சிவன், முன்னோர்களுக்கு முக்தி தருபவராக அருளுவதால் இவரை "முக்தீஸ்வரர்' என்றே அழைக்கிறார்கள். முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய காசி, ராமேஸ்வரம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திலதர்ப்பணபுரி (சிதலைப்பதி), கயா, அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமம் ஆகிய 7 தலங்கள் சிறந்த தலங்களாக கருதப்படுகிறது. இதில் ஐந்தாம் இடத்தில் உள்ள தலம் இது. ராமர் திலம் (எள்) வைத்து தர்ப்பணம் செய்த தலம் என்பதால், "திலதர்ப்பணபுரி' என்றழைக்கப்பட்ட ஊர் பிற்காலத்தில், "சிதலைப்பதி' என்று மருவியது. இக்கோயிலில் விநாயகர், மனித முகத்துடன் மேற்கு பார்த்து தனிச்சன்னதியில் இருக்கிறார். இதனை கஜமுகாசுரனை வதம் செய்ததற்கு முன்புள்ள கோலம் என்கிறார்கள். இவரை, "ஆதி விநாயகர்' என்று அழைக்கிறார்கள். இவரது சன்னதியில் மட்டைத்தேங்காய் கட்டி வேண்டினால் நியாயமான கோரிக்கைகள நிறைவேறுவதாக நம்பிக்கை. இக்கோயிலில் மகாவிஷ்ணு தனது மூன்று கோலத்தை காட்டியபடி அருளுகிறார்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.


பொது தகவல்:

சிறிய கோயில் - கிழக்கு நோக்கிய சன்னதி. உள்ளே சென்றால் கொடிமரம், நந்தி, உள் வாயிலைக் கடந்து முன் மண்டபம் அடைந்தால் நேரே மூலவர் தரிசனம்.

மூலவர் துவிதளவிமானத்தின் கீழ் வீற்றிருக்கிறார். வலப்பால் அம்பாள் சந்நிதி, பிராகாரத்தில் விநாயகர், இராமலக்குவர்கள் திருமேனிகள். அவர்கள் பிரதிஷ்டை செய்த சிவலிங்கங்கள், ஆறுமுகர், கஜலட்சுமி நவக்கிரகம், பைரவர், நால்வர், சூரியசந்திரர், தேவியருடன் பெருமாள் ஆகியோர் காட்சி தருகின்றனர். கோஷ்டத்தில் விநாயகர், தக்ஷிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை உள்ளனர். சரஸ்வதிக்கென தனிக்கோயில் அமைந்துள்ள கூத்தனூர் கோயில், இத்தலத்திற்கு சற்று தூரத்தில் அமைந்துள்ளது.

பிரார்த்தனை

ஜாதகத்தில் தோஷம், பித்ருதோஷம் உள்ளவர்கள் இங்கு வேண்டிக்கொள்ள, நிவர்த்தியாவதாக நம்பிக்கை. இங்கு முக்தீஸ்வரரிடம் வேண்டிக்கொள்ள பாவங்கள் நீங்கி, முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.


தலபெருமை: 

மூன்று பெருமாள்: அரிதாக சில சிவன் கோயில்களில் தனி சன்னதியிலோ, அல்லது கருவறைக்கு பின்புறத்தில் லிங்கோத்பவர் இருக்க வேண்டிய இடத்திலோ பெருமாள் இருப்பார். ஆனால், இக்கோயிலில் மகாவிஷ்ணு தனது மூன்று கோலத்தை காட்டியபடி அருளுகிறார். ராமர் தர்ப்பணம் செய்த போது மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகிய நால்வரையும் வணங்கி நான்கு பிண்டங்கள் பிடித்து வைத்து பூஜித்தார்.

இந்த பிண்டங்கள் லிங்கங்களாக மாறின. மூலஸ்தானத்திற்கு பின்புறத்தில் இந்த லிங்கங்களையும், தர்ப்பணம் செய்த ராமரையும் காணலாம். இவர் வலது காலை மண்டியிட்டு, வடக்கு நோக்கி திரும்பி வணங்கியபடி காட்சி தருகிறார்.

ராமரின் இத்தகைய தரிசனத்தை காண்பது அபூர்வம். இத்தலத்தில் பிதுர்வழிபாட்டுக்கு உகந்த தலமாக திகழ்கிறது. இச்சன்னதி எதிரே சிவனது கருவறை கோஷ்டத்தில் (சுற்றுச்சுவர்) லிங்கோத்பவர் இடத்தில், மகாவிஷ்ணு நின்ற கோலத்தில் இருக்கிறார்.


பிரகாரத்தில் நவக்கிரக சன்னதி அருகில் மற்றொரு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வடக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். இவ்வாறு மகாவிஷ்ணுவின் மூன்று விதமான கோலங்களை இக்கோயிலில் தரிசிக்கலாம்.

நித்ய அமாவாசை: மகாபாரதத்திலே ஒரு காட்சி வரும். குருக்ஷேத்ர யுத்தத்திற்கு முன்பு, தானே வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் துரியோதனன், சகாதேவனிடம் ஜோதிடம் கேட்க செல்கிறான்.""நான் போரில் வெற்றி பெற வேண்டுமானால் எந்த நேரத்தில் களபலி கொடுக்க வேண்டும்'' என தனது எதிரியான சகாதேவனிடமே கேட்கிறான்.

சகாதேவன் உண்மையின் இருப்பிடம். கேட்பது எதிரியாக இருந்தாலும் சரியான தகவலை சொல்லிவிட்டார். பூரண அமாவாசை அன்று போரை தொடங்கினால் வெற்றி உறுதி என துரியோதனனிடம் சொல்கிறார். துரியோதனனும் அதே நாளில் களபலி கொடுக்கத் தயாராகிறான். அப்போது கிருஷ்ணர் ஒரு தந்திரம் செய்கிறார்.


திடீரென ஒரு குளக்கரையில் அமர்ந்து அமாவாசைக்கு முதல் நாளே தர்ப்பணம் செய்கிறார்.இதைப்பார்த்த சூரியனும் சந்திரனும் பூலோகத்திற்கு ஒன்றாக ஓடிவருகின்றனர்.""நாங்கள் இருவரும் ஒன்றாக சேரும் நாள்தான் அமாவாசை. ஆனால் நீங்கள் இன்றே தர்ப்பணம் செய்கிறீர்கள். இது சரியாகுமா?'' என கேட்கிறார்கள்.

மகாகிருஷ்ணன், ""இப்போதுகூட நீங்கள் ஒன்றாகத்தானே வந்திருக்கிறீர்கள். எனவே இன்றுதான் அமாவாசை,'' என சமயோசிதமாக பதில் சொல்லி விடுகிறார். துரியோதனன் சகாதேவன் சொன்னபடி களபலி கொடுக்கிறான். ஆனால், அன்று அமாவாசை இல்லாமல் போய்விடுகிறது. இதனால் வெற்றி நல்லவர்களான பாண்டவர்களுக்கே கிடைக்கிறது.


முக்தீஸ்வரரை சூரியன், சந்திரன் இருவரும் ஒரே நேரத்தில் வணங்கியுள்ளனர். எனவே இவர்கள் இருவரும் அருகருகே இருக்கின்றனர். சூரியன், சந்திரன் இவ்விருவரும் சந்திக்கும் நாளே அமாவாசை. இங்கே தினமும் இருவரும் இணைந்திருப்பதால், இக்கோயிலில் தினமும் அமாவாசையாகும். இதனை "நித்ய அமாவாசை' என்பர். இக்கோயிலில் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்ய அமாவாசை, திதி, நட்சரத்திரம் என பார்க்கத் தேவையில்லை. எந்த நாளில் வேண்டுமானாலும் சிரார்த்தம், தர்ப்பணம் செய்து கொள்ளலாம்.


இக்கோயிலுக்கு வெளியில் அழகநாதர் சன்னதி உள்ளது. இங்குள்ள லிங்கம் ராமரால் பிடித்து வைக்கப்பட்டது என்கிறார்கள். இங்குள்ள முருகனைக் குறித்து அருணகிரியார் பதிகம் பாடியிருக்கிறார்.

பிரகாரத்தில் உள்ள துர்க்கை எட்டு கைகளுடன் இருக்கிறாள். இவள் இடது காலை பின்னோக்கி வைத்திருக்கிறாள். காலுக்கு கீழே மகிஷாசுரனும், பின்புறத்தில் சிம்ம வாகனமும் இருக்கிறது. நவக்கிரக சன்னதியில், சூரிய பகவான் மட்டும் உயர்ந்த பீடத்தில் இருக்கிறார். தெட்சிணாமூர்த்தி, காசி விஸ்வநாதர், நாகர் தனி சன்னதிகளில் இருக்கின்றனர்.

சுவர்ணவல்லி தாயார்: செதலபதி முக்தீஸ்வரர் கோயிலில் சுவர்ணவல்லி தாயார் காட்சி தருகிறார். சுவர்ணம் என்றால் "தங்கம்' என பொருள். தங்கத்தை வாங்கி குவிக்க வேண்டும் என விரும்புவோர் இங்கு வந்து அம்பிகைக்கு சிறப்பு அர்ச்சனை செய்கிறார்கள். தங்கநகை தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் இந்த அம்பிகையை வழிபடலாம். இந்த அம்பிகைக்கு "பொற்கொடி நாயகி' என்ற பெயரும் இருக்கிறது. இது மட்டுமின்றி இவ்வூரில் ஓடும் அரசலாறு, வடக்கிலிருந்து தெற்கு நோக்கி உத்தரவாஹினியாக செல்கிறது.


இதுபோன்ற நதிகள் ஓடும் தலங்களில் உள்ள கோயில்களை வழிபட்டால் செல்வம் செழிக்கும் என்பது நம்பிக்கை.


தல வரலாறு:

ராவணன் சீதையை கடத்திச்சென்றான். அப்போது ஜடாயு எனும் கருடராஜன் ராவணனை தடுக்க முயன்றார். ஜடாயுவை, தன் வாளால் வீழ்த்திச் சென்றான் ராவணன். அப்போது அவ்வழியே வந்த ராமரிடம், சீதையை, ராவணன் கடத்திச் சென்றதை கூறிய ஜடாயு, ராமனின் மடியிலேயே உயிரை விட்டார். அவருக்கு இறுதிச்சடங்கு செய்தார் ராமன். பதினான்கு ஆண்டுகளுக்கு பிறகு வனவாசம் முடிந்து, நாடு திரும்பி அரச பொறுப்பை ஏற்றுக்கொண்டார் ராமர். அவரது வனவாச காலத்தில் தந்தை தசரதர் இறந்திருந்ததால், அதற்காக சிரார்த்தம் செய்ய எண்ணி இத்தலத்திற்கு வந்தார்.

அரசலாற்றில் நீராடி சிவபூஜை செய்து, தசரதருக்கு பிண்டம் வைத்து சிரார்த்தம் செய்தார். அப்போது தனக்கு உதவி செய்வதற்காக போராடி உயிரை விட்ட ஜடாயுவுக்கு மரியாதை தரும்விதமாக, எள் வைத்து பிதுர்தர்ப்பணம் செய்தார். எனவே, சிவன் முக்தீஸ்வரர் என்றும், தலம் "திலதர்ப்பணபுரி' என்றும் பெயர் பெற்றது. "திலம்' என்றால் "எள்' எனப்பொருள்படும்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் விநாயகர், மனித முகத்துடன் மேற்கு பார்த்து தனிச்சன்னதியில் ஆதிவிநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.

No comments:

Post a Comment