Tuesday, 3 January 2017

சிந்தையை மகிழ்விக்கும் சிதம்பர சித்திரங்கள் !


தில்லை வனம் சுற்றியிருக்க, தில்லை மரத்தை ஸ்தல விருட்ச மாகக் கொண்ட தில்லையம்பலத்தில் திரும்பிய இடமெல்லாம் ஆன்மிகப் புதையல்தான். சிற்றம்பலம் என்ற சிதம்பரத்தில்தான் எத்தனை எத்தனை அதிசயங்கள்!  சுமார் 43 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் பிரமாண்டமான ஸ்ரீஆனந்த நடராஜர் ஆலயத்தினுள் புகுந்துவிட்டால், நாம் சிந்தை மகிழ தரிசிப்பதற்கு அங்கே கொட்டிக்கிடக்கும் புராண, கலைப் பொக்கிஷங்கள் அளவற்றவை.

அவற்றுள் ஒன்று, கோயிலுக்குள் இருக்கும் பல நூற்றாண்டுகள் பழைமையான சரித்திரப் புகழ்மிக்க ஓவியங்கள். கோயிலுக்குள் இருக்கும் நூற்றுக்கால் மண்டபம், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்மன் சந்நிதி மற்றும் ஸ்ரீநடராஜர் சந்நிதி அமைந்துள்ள சித்சபைக்குப் பின்புறத்தில் இருக்கும் நந்தி மண்டபம் ஆகிய இடங்களில் தீட்டப் பட்டிருக்கும் ஓவியங்கள் காலத்தால் அழியாத கலைச்சின்னங்கள். 


இவற்றுள் ஸ்ரீஆனந்த நடராஜர் சந்நிதிக்குப் பின்புற மண்டபத் தின் விதான ஓவியங்கள், கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நிகழ்வதற்கு முன் நடந்த திருப்பணிகளின்போது, புதுப்பொலிவு பெற்றிருப்பது சிறப்புக்கு உரியது. அந்த மண்டபத்தில் சுமார் 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த - சிதம்பரத்தின் சரித்திரத்தைச் சொல்லும் 16 ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன. மூலிகை வர்ணங்களால் வரையப்பட்ட பழங்கால ஓவியங்களான அவை மிகவும் பழுதடைந்திருந்தன. இந்நிலையில் கோயில் பொது தீட்சிதர்கள் ஏற்பாட்டின்பேரில், உலகப் புகழ்பெற்ற புராதன ஓவியர் சில்பியின் சிஷ்யரான ஓவியர் பத்மவாசன் மூலம், புதுப்பொலிவுடன் ஓவியங்கள் வரையப் பட்டன. ஓவியர் பத்மவாசன் சிதம்பரம் கோயிலில் பல மாதங்கள் முகாமிட்டு, லட்சக் கணக்கான ரூபாய் செலவில், கேரள மூலிகை வர்ணங்களைக் கொண்டு, சிங்கப்பூர் ரெஸ்கின் கேன்வாஸ் துணியில், மிகவும் புராதனமான 16 ஓவியங்களை மிக தத்ரூபமாக வரைந்துள்ளார்.
இந்த ஓவியங்கள், தீப்பிடிக்காத பலகையில் வைத்து ஃபிரேம் செய்யப்பட்டு, சித்சபை மண்டபத்தில் ஏற்கெனவே இருந்த ஓவியங் களுக்கு மேலே பொருத்தப்பட்டுள்ளன. ஓவியர் பத்மவாசன், பண்டைய ஓவியங்களை அதன் தொன்மையும் சிறப்பும் மாறாமல், இயற்கை வண்ணங்களைக் கொண்டு அதிஅற்புதமாக வரைந்திருக்கிறார். கோயிலின் பொது தீட்சிதரும் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியருமான முனைவர் ராஜாசோமசேகர தீட்சிதர் நம்மிடம் இதுகுறித்து விரிவாகப் பேசினார்:

‘‘ஸ்ரீநடராஜர் ஆலயத்தில் காணப்படும் ஓவியங்கள் அனைத்தும் பண்டைய காலத்து ‘ஃப்ரெஸ்கோ ஆர்ட்’ என்ற வகையைச் சேர்ந்தவை. அதாவது, செயற்கை வண்ணங் களோ, பொருட்களோ சேர்க்காமல் முழுக்க முழுக்க இயற்கையில் கிடைக்கும் சாயங்கள் மற்றும் வண்ணங்களை வைத்துத் தீட்டப்படும் ஓவியங்களே ‘ஃப்ரெஸ்கோ ஆர்ட்’ எனப்படும். உதாரணத்துக்குப் பச்சை நிறம் என்றால், தாவரங்களில் கிடைக்கும் பச்சையத்தை எடுத்து அரைத்து உபயோகிப்பது. சிவப்புக்கு காவி... இப்படி இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களிலிருந்தே சாயங்களைத் தயாரித்துக் கொள்வார்கள்.
இந்த ஓவியங்களின் காலம், கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று சொல்லலாம். ஏனெனில், 3-ம் நூற்றாண்டு முதல் 8-ம் நூற்றாண்டு வரைதான் இந்த வகை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. எனவே, சிதம்பரம் கோயில் ஓவியங்கள், 12 நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவை என்பதைத் திட்டவட்டமாகச் சொல்லலாம். 

ஓவியக்கலைக்குச் சான்றாக மட்டுமின்றி, ‘ஃப்ரெஸ்கோ’ வகை ஓவியங்களை வைத்து, கோயில் நிர்மாணிக்கப்பட்ட காலத்தையும் வரையறுத்துச் சொல்லலாம்.

இந்த ஆலயத்தில், ஸ்ரீக்நடராஜர் சந்நிதியைச் சுற்றிலும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஓவியங்கள் உள்ளன. அவை எல்லாமே ஏதேனும் ஒரு கருத்தை அல்லது கதையை அடிப்படையாகக் கொண்ட, ‘தீமாட்டிக்’ ஓவியங்கள். பல கோயில்களில் ராமாயணம் முதலான புராணச் சம்பவங்களை இயற்கை வண்ணங்களில் தீட்டியுள்ளனர். சித்தன்ன வாசலில் இருப்பவை சமண மத கருத்துகள் வெளிப்படும் ஓவியங்கள். அதேபோல, இங்கும் தில்லை உருவான கதை, மாணிக்கவாசகர் கதை, சைவ சமயக் குரவர்கள், சைவ வழிபாடு குறித்த விஷயங்கள் ஓவியங்களாகச் சித்திரிக்கப் பட்டுள்ளன.

இங்கே ஸ்ரீநடராஜர் சந்நிதிக்குப் பின்புறம் உள்ள நந்தி மண்டபத்தில், ஓவியங்கள் சிதிலமடைந்து அழியும் நிலையில் இருந்தன. சென்ற ஆண்டு குடமுழுக்கு விழா நடைபெறுவதற்கு முன்னர், அதற்கான பலவிதமான திருப்பணிகள் நடைபெற்றன. அவற்றுள், இந்த ஓவியங்களைச் சீரமைக்கும் பணியும் ஒன்று. 2015-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற குடமுழுக்கு விழாவுக்காக, இந்த ஓவியங்கள் 15 லட்சம் ரூபாய் செலவில், கோயில் சார்பில் புதுப்பிக்கப்பட்டன.
கடவுள் திருவுருவங்களையும் கோயில் சிற்பங்களையும் தத்ரூபமாக வரையும் பிரபல ஆன்மிக ஓவியர் பத்மவாசனிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைத்தோம். கிட்டத்தட்ட ஒரு வருட காலம் இங்கேயே தங்கி, அந்தப் பணியை மிகச் சிறப்பாக நிறைவு செய்து கொடுத்தார்.   அவற்றின் தனித்தன்மையும் மூல அழகும் கெடாத வகையில், இயற்கை வண்ணங்களைக் கொண்டே உயிர்ப்பித்திருக்கிறார் பத்மவாசன். எனவே, ஓவியங்கள் அனைத்தும் பழைமை மாறாமல் மீண்டும் பக்தர்களின் பார்வைக்குக் கிடைத்துள்ளன.

ஸ்ரீசிவகாம சுந்தரி அம்மன் சந்நிதியிலும் அழகிய ஓவியங்கள் சிதிலமடைந்து உள்ளன. அந்தக் கோயிலுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. அந்த விழாவுக்குள், ஓவியங்களைப் புதுப்பிக்கும் பணியினைச் செய்வதற்காக, கமிட்டி போட்டு பேசிக் கொண்டிருக்கிறோம். ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. விரைவில் அம்மன் சந்நிதி ஓவியங்களும் புத்துயிர் பெறும்!’’ என்றார் ராஜா சோமசேகர தீட்சிதர். அவரே தொடர்ந்து அந்த ஓவியங்களில் சிலவற்றில் இடம்பெற்றிருக்கும் புராணச் சம்பவங்களைக் குறித்தும் விவரித்தார்.
மாத்தியந்தினர் வியாக்கிரபாதம் பெற்றது...

சிதம்பரம் கோயிலில் அருள்புரியும் ஆதிமூல நாதர் என்னும் சிவலிங்கத் திருமேனிதான், ஆனந்த நடராஜருக்கு முன் அந்தத் தலத்தில் குடிகொண்டிருந்த இறைவன் என்று சிதம்பர புராணம் கூறுகிறது. மாத்தியந்தினர் என்ற சிவபக்தர், தினப்படி பூஜைக்கு நந்தவனத்தில் உள்ள மலர்களைக் கொய்து எடுத்துவரும் ‘புஷ்ப கைங்கர்யம்’ செய்து வந்தார். பொதுவாக ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு தொழில் தர்மம் இருக்கிறதல்லவா? அதேபோல, பகவானுக்குச் செய்யும் ‘புஷ்ப கைங்கர்ய’த்துக்கும் ஒரு தர்மம் உள்ளது. 

நாமே சென்று நம் கையால் மலர்களைப் பறிக்க வேண்டும். அதுவும், பகவானை நினைத்துக் கொண்டே பறிக்க வேண்டும். எந்தவித அசுத்தமும்படாமல், பரிசுத்தமாக அவற்றைப் பறித்து இறைவனுக்குச் சார்த்த வேண்டும் என்பது நியதி. ஆனால், மாத்தியந்தினர் இவற்றுக்கும் ஒருபடி மேலே போய், ‘பூவில் உள்ள மதுரத்தை (தேனை) தேனீக்கள் வந்து எடுப்பதற்கு முன்னரே பூக்களைப் பறித்துவிட வேண்டும்’ என்று விரும்பினார். தேனீ உட்கார்ந்து தேனை உறிஞ்சிவிட்டால், அந்தப் பூ எச்சில் பட்டதாகி விடுமாம்; பரிசுத்தம் போய்விடுமாம். அப்படி தேனீக்கள் வருவதற்கு முன் எடுக்க வேண்டும் என்றால், அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் எடுக்க வேண்டும். அந்த நேரத்தில், இருட்டுக்குள் மரங்களில் ஏறி, பூக்களைக் கொய்வதற்கு ஏதுவான உடல் அமைப்பைக் கொடுக்குமாறு சிவனிடம் வேண்டினார். அவருடைய பக்தியில் திளைத்த பெருமானும் அவருக்கு அருள்புரிய திருவுளம் கொண்டார்.

மாத்தியந்தினருக்கு மரங்களைப் பற்றி ஏறுவதற்கு வசதியாக புலிக் கால்களையும், இருட்டில் தொலைவில் உள்ள பூக்களையும் பார்ப்பதற்கு வசதியாக புலிகளுக்கு இருப்பது போன்ற கூர்மையான பார்வையையும் பூக்கள் இருக்கும் இடத்தை அவற்றின் நறுமணத்தின் மூலமே கண்டறியக்கூடிய வகையில் புலியின் மோப்பச் சக்தியையும் அருளினார். அதனால்தான் மாத்தியந்தினர் ‘வியாக்கிர பாதர்’ (‘வியாக்கிரம்’ என்றால் புலி) என்று அழைக்கப்பட்டார்.
பதஞ்சலி - வியாக்கிரபாதருக்காக ஆனந்தத் தாண்டவம்!

சிவபெருமானின் ஆனந்த நடனக் காட்சியை, கயிலாயத்தில் உள்ள தேவர்களும் முனிவர்களும் கண்டு இன்புற்றது போல, தாங்களும் கண்டு வணங்க வேண்டும் என்று, வியாக்கிரபாதரும் பாற்கடலில் பள்ளிகொண்ட பெருமாளைத் தாங்கும் ஆதிசேஷனின் அவதாரமான பதஞ்சலியும் தில்லைவனத்தில் கடும் தவம் புரிந்தனர். அவர்களின் தவத்தால் மகிழ்ந்த எம்பெருமான், தைப்பூச குருவார பௌர்ணமி தினத்தில், அமிர்த சித்தியோக விருஷப லக்னத்தில்,  அவர்களுக்காக இறங்கி வந்து தில்லையில் ஆனந்தக் கூத்தாடினார் என்கிறது தல புராணம். 

மேலும், ‘அற்புதமான ஆனந்தக் கூத்தினை நாங்கள் மட்டும் கண்டு உய்தால் போதாது; பூலோக மக்கள் யாவரும் கண்டு பயனுற வேண்டும். அதனால், ஆனந்த திருநடனக் கோலத்திலேயே எப்போதும் இங்கே எழுந்தருளி இருக்க வேண்டும்’ என்ற அவர்களின் பிரார்த்தனைக்கு இசைந்து, தை மாதம் பூச நட்சத்திர தினத்தில், ஸ்ரீநடராஜப் பெருமான் தன்னுடைய 3000 பூதகணங்களுடன் சிதம்பரத்தில் இறங்கியதாக ஐதீகம்.
அதையே  ஆனந்தத் தாண்டவ ஓவியம் விவரிக்கிறது.

மேலும், தேவதாருகாவனத்தில் ரிஷிகளின் அகந்தையையும் மமதையையும் அடக்கி, ஆத்மார்த்தமான அன்பும் உள்ளார்ந்த பக்தியும் இருந்தால் மட்டுமே பகவானை அடைய முடியும் என்பதை அவர்களுக்கு உணர்த்த, பிட்சாடனர் கோலத்தில் இறைவன் வந்த காட்சியும் இங்கே ஓவியமாக இருக்கிறது. இந்த மார்கழி மாதத்தில் நடைபெறும் திருவாதிரை தரிசன திருவிழாவில், 8-ம் நாள் (ஜனவரி - 9) நடராஜர் பிட்சாடனராக வலம் வருவதை பக்தர்கள் தரிசிக்கலாம்.

இப்படி தெய்வ ஓவியங்களுடன் கலைப் பொக்கிஷமாகத் திகழும் சிதம்பரம் கோயி லுக்குச் சென்று  ஆனந்தத் தாண்டவ மூர்த்தி யைத் தரிசித்து நாமும் பேரின்பம் அடை வோம், இந்தப் புண்ணிய மாதத்தில்!


தில்லையின் அற்புதங்கள்!
சிவபக்தர்களைப் பொறுத்தவரை கோயில் என்றாலே அது சிதம்பரத்தைத்தான் குறிக்கும். 

சிவாலயங்களில் சிவலிங்கம்தான் பிரதான மூர்த்தி. ஆனால், சிதம்பரத்தில் மட்டும் நடராஜர் தான் மூலவர். ஆண்டுக்கு இருமுறை மூலவரே, உத்ஸவராகவும் பவனி வரும் ஒரே தலம் சிதம்பரம் மட்டுமே. 
பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலம் சிதம்பரம். அதேபோல, தரிசித்தால் முக்தி தரும் ஸ்தலமும்கூட! 

ரே சந்நிதியில் நின்றபடி சிவனையும் பெருமாளையும் தரிசிக்கக்கூடிய ஒரே கோயில் சிதம்பரம். நடராஜர் சந்நிதிக்கு எதிரே இருக்கும் இதயக் கமலத்தில் நின்றால், நமது இடக் கண்ணால் பெருமாளையும், வலக் கண்ணால் சிவனாரையும் ஒரே நேரத்தில் தரிசிக்கும் அமைப்பு வேறெங்கும் இல்லை. 

டராஜரின் வலப்புறம் திரை ஒன்று இருக்கும். அதன் பின்னே உள்ள கற்சுவரில், தங்கத்தாலான வில்வ மாலை சாத்தப்பட்டிருக்கும். ஸ்ரீ, சிவா என்கிற இரண்டு சம்மேளனச் சக்கரங்கள் அங்கே அமைந்திருப்பதைத் தரிசிக்கலாம் (ஸ்ரீ - அம்பாள்; அதாவது சக்தி. சிவா என்பது இறைவன்). அதன் மேலே புனுகு, ஜவ்வாது ஆகியன எப்போதோ சாத்தப்பட்ட நிலையில், இன்றைக்கும் அப்படியே இருப்பதைப் பார்க்கலாம்.

ந்தத் தலத்தில் பஞ்ச சபைகள் உள்ளன. அவை: மூலவர் அருளும் சித்சபை. அபிஷேகம் நடைபெறும் கனகசபை, பரிவார மூர்த்திகள் அருளும் தேவ சபை, 1000 கால் மண்டபம் அமைந்துள்ள ராஜ சபை, நடராஜரும் காளியும் போட்டி போட்டு நடனம் ஆடிய நிருத்ய சபை. 

பைகள் மட்டுமின்றி, ஐந்தின் அடிப்படையில் இன்னும் பல சிறப்புகள் உள்ளன. பஞ்ச மூர்த்திகள், பஞ்சாட்சரப் படிகள், பஞ்சப் பிரகாரம் ஆகிய விசேஷங்களுக்கு உரியது சிதம்பரம் கோயில்.
பூமியை விராட புருஷன் எனும் மனிதனாக உருவகம் செய்தால், அவருடைய ஒவ்வொரு உறுப்பிலும் ஒரு ஸ்தலம் அமைந்துள்ளது. அப்படி அவரின் இதயப் பகுதியில் அமைந்திருக்கிறது சிதம்பரம். எனவேதான், பொன்னம்பலத்தில் நடராஜர் இடது பக்கமாக இருக்கிறார்.

ண்டியல் இல்லாத ஒரே கோயில் சிதம்பரம். அதேபோல, எதற்குமே ‘கியூ’ இல்லாத கோயில். காலையும் மாலையும் 1000 பேருக்கு அன்னதானம் இடும், ‘சகஸ்ரபோஜன்’ இங்கே சிறப்புமிக்கது.

பொன்னம்பலத்தில் தினமும் ஆறு காலம் நடைபெறும் சந்திரமௌலீசுவரர் (ஸ்படிக லிங்கம்) அபிஷேகத்தை, தினம் ஒரு தீட்சிதர் முறை வைத்து செய்கிறார். உடல் மற்றும் உள்ளத் தூய்மையுடன் அதிகாலையில் அம்பலத்தில் ஏறும் அந்த தீட்சிதர், காலை மூன்று கால அபிஷேகம் முடியும் வரை அன்ன, ஆகாரம் எதுவும் எடுக்கக்கூடாது. அதேபோல, கீழேயும் எக்காரணம் கொண்டும் இறங்கக்கூடாது. மதிய உணவுக்குப் பின், மீண்டும் மாலை மூன்று கால அபிஷேகத்துக்கும் இதே நியதிதான். இதை தீட்சிதர்கள் தங்கள் வாழ்நாள் பாக்கியமாக எண்ணிச் செய்கிறார்கள். 

ந்த ஆலயத்துக்கு திப்பு சுல்தான், ராமநாதபுரம் ராஜா ஆகியோர் அளித்த நகைகள் இன்னும் பாது காப்பாக வைக்கப்பட்டு, விசேஷ தினங்களில் அணிவிக்கப்பட்டு, பாதுகாக்கப்படுகின்றன.

 Thanks... பிரேமா நாராயணன்

No comments:

Post a Comment