உற்சவர் : -
அம்மன்/தாயார் : சுகந்த குந்தளாம்பிகை
தல விருட்சம் : -
தீர்த்தம் : ஐராவத தீர்த்தம்
ஆகமம்/பூஜை : -
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : எதிர்கொள்பாடி, மேலைத்திருமணஞ்சேரி
ஊர் : மேலத்திருமணஞ்சேரி
பாடியவர்கள்: சுந்தரர்
தேவாரப்பதிகம்
இன்பம் உண்டேல் துன்பம் உண்டு ஏழைமனை வாழ்க்கை முன்பு சொன்ன மோழைமையான் முட்டை மனத்தீரே அன்பர் அல்லால் அணிகொள் கொன்றை அடிகள்அடி சேரார் என்பர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே. - சுந்தரர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 24வது தலம்.
திருவிழா:
சித்திரையில் இந்திர விழா, கார்த்திகை சோமவாரம், மார்கழியில் திருவாதிரை
தல சிறப்பு:
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 24 வது தேவாரத்தலம் ஆகும்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல்:
ராஜகோபுரம் பண்டைக் காலத்தில் மல்லப்ப நாயக்கரால் கட்டப்பட்டதென்பர். இன்று ஐந்து நிலைகளுடன் கிழக்கு நோக்கியுள்ளது. உள்புகுந்தால் கொடிமரம் நந்தி பலிபீடங்கள், அடுத்துள்ள முன் மண்டபத்தில் வலப்பால் அம்பாள் சன்னதி உள்ளது. மிகச்சிறிய திருமேனி - சுகாசனத்தில் அமர்ந்த திருக்கோலம். நேரே மூலவர் தரிசனம். உள்பிராகாரத்தில் நால்வர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, காலபைரவர், சனீஸ்வரன் சன்னதிகள். கோஷ்டத்தில் பிட்சாடனர், பாலகணபதி, நடராசர், தக்ஷிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, ராகு, துர்க்கை, கங்காவிசர்ஜனர் மூர்த்தங்கள் உள்ளன.
பிரார்த்தனை
பொருளை பறி கொடுத்தவர்கள், பதவி பறி போனவர்கள் இங்கு வழிபட்டால் மிகவும் சிறப்பு. திருமணம் நடைபெறாமல் தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால், இந்திரன், ஐராவதத்தின் சாபம் நீக்கியது போல் இவர்களையும் காத்து அருள்புரிவான். வயிற்று வலியால் பாதிக்கப்பட்டவர்கள், வியாபாரத்தில் நஷ்டம் அடைந்தவர்கள் இங்கு வந்து வழிபட்டு செல்வது மிகவும் சிறப்பு.
நேர்த்திக்கடன்:
சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் அணிவித்தும் வழிபாடு செய்கின்றனர்.
தலபெருமை:
சிவனுக்கு அணிவிக்கப்பட்ட தாமரை மலரை கைகளில் ஏந்தியபடி தேவலோகத்தில் துர்வாச முனிவர் வந்தார். அசுரர்களை வென்ற இந்திரனுக்கு பரிசாக அளித்தார். இந்திரன் அதை அலட்சியப்படுத்தினான். இதனால் கோபம் கொண்ட முனிவர் பாண்டிய மன்னன் எறியும் கைவளையால் இந்திரனின் முடி சிதறுமாறு சாபமிட்டார். பதறிப்போன இந்திரன் மன்னிப்பு கேட்க, இந்திரனின் தலைக்கு வருவது முடியோடு கழியும் என்று சாபவிமோசனம் தந்தார்.
தாமரை மலரை புறக்கணித்ததில் இந்திரனின் ஐராவத யானைக்கும் பங்குண்டு. துர்வாசரால் சபிக்கப்பட்ட யானை பூமிக்கு வந்து பல இடங்களில் சுற்றி திரிந்தது. பல தலங்களில் பூஜையும் செய்தது. கடைசியாக இத்தலத்திற்கு வந்து இறைவனை பூஜித்து துயரம் நீங்கியது. எனவே இங்குள்ள இறைவன் "ஐராவதேஸ்வரர்' என அழைக்கப்படுகிறார். அம்மனின் திருநாமம் "சுகந்த குந்தளாம்பிகை' என்ற "மலர் குழல் நாயகி'. இந்திரனும் இழந்த பொன், பொருள், பதவியை பெற்றான்.
வைத்த உள்ளம் மாற்ற வேண்டா வம்மின் மனத்தீரே! அத்தர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே' என்று பாடி அனைவரையும் சுந்தரர் இந்த கோயிலுக்கு அழைக்கிறார். அந்த அழைப்பை நாம் ஏற்றால் தோழனின் மகிழ்ச்சியை காணும் சிவன் நமது குறைகளை போக்கி அருள்புரிவார். வயிற்று வலியால் பாதிக்கப்பட்டவர்கள், ஐராவதம் யானை வழிபட்டதால் இங்குள்ள கர்ப்பக்கிரகம் யானை சுற்றும் அளவிற்கு மிகவும் பெரிதாக உள்ளது.
திருமண வரவேற்பை இத்தலத்தில் நடத்தினால், தம்பதியர் நலம் பலபெற்று வாழ்வர் என்பது நம்பிக்கை.
தல வரலாறு:
திருவேள்விக்குடியில் பரத முனிவர் சிவபார்வதி திருமணத்தை நடத்தி வைத்தார். மணம் முடிந்ததும் தான் குடியிருக்கும் மேல திருமணஞ்சேரிக்கு வர இறைவனுக்கு அழைப்பு விடுத்தார். இறைவனும் ஒப்புக் கொண்டார். இறைவனும், அம்மையும் வருகிறார்கள் என்றால் கேட்கவா வேண்டும். பிரமாதமான வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து விட்டார். மணக்கோலத்தில் வந்த தெய்வத்தம்பதியினரை பரதமுனிவர் எதிர்கொண்டு அழைத்தார். இதனால் இத்தலம் "எதிர்கொள்பாடி' என அழைக்கப்பட்டது. தற்போது "மேலக்கோயில்' என்று அழைக்கிறார்கள்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
No comments:
Post a Comment