Thursday 26 January 2017

சப்த கரைகண்டீஸ்வரர் ஏழு கோவில்கள்:


1. காஞ்சி

2. கடலாடி

3. மாம்பாக்கம்

4. தெண் மகாதேவமங்கலம்
(வடபாதி மங்கலம், மாதிமங்கலம்)

5. எலத்தூர்

6. பூண்டி

7. குருவிமலை

☘☘☘☘☘☘☘☘☘☘☘

சப்த கரைகண்டீஸ்வரர் ஏழு கோவில்கள்: - ஓர் பார்வை..

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

இவை அனைத்து கோயில்களும் திருவண்ணாமலைக்கு (போளூர் - செங்கம்) அருகிலே அமைந்துள்ளது..

தமிழ்நாட்டின் தென்மேற்குப் பகுதியில் உற்பத்தியாகி, அதிக தூரம் வடக்கு, வடமேற்காக உத்திரவாகினியாகச் செல்லும் சிறப்பைப் பெற்றுள்ளதே தற்போது செய்யாறு என்று அழைக்கப்படும் சேயாறு.

 மகரவாகினியான கங்கைநதிக்கு நிகராக புனிதமானது சேயாறு என்று அருணாசல புராணம் கூறுகிறது.

"கங்கை நிகராம் சேயாற்றில் காலைச் சந்திக் கடன்கழித்து மங்கை கனகச் சிவிகையின் மேல்  மறைஓ லம்இட வழி கொண்டாள்' என்கிறது அந்தச் செய்யுள்.

அன்னை பராசக்தி சேயாற்றில் புனித நீராடியதால், அது கங்கை நதிக்கு சமமான பெருமையைக் கொண்டுவிட்டதாம்.

சேயாறு உருவான கதை:

அண்ணாமலையாரின் இடதுபாகம் இடம்பெற வேண்டும் என்று காஞ்சியில் அவதரித்த காமாட்சியம்மை தவம் மேற்கொண்டாள். கம்பை ஆற்றைவிட்டு விட்டு, அண்ணாமலையை நோக்கித் தனது பயணத்தைத் துவக்கினாள். வாழைப்பந்தல் என்று தற்போது அழைக்கப்படும் இடத்தை அடைந்த அன்னை, கமண்டல நதி சங்கமிக்கும் இடத்தில், மண்ணினால் சிவலிங்கத் திருமேனியை உருவாக்கி வழிபடத் துவங்கினாள்.
பூஜைக்குப் புனிதநீர் வேண்டுமே! அதற்கு எங்கே போவது! என்றெண்ணி மைந்தன் முருகனை அழைத்தாள். அன்னையின் பூஜைக்குப் புனிதநீர் வேண்டி, முருகப்பெருமான், உமாமகேசுவரர்களை நினைத்து, ஜவ்வாது மாமலையை நோக்கி, தனது வேலை வீசினார். அதன் குறி செங்கண் நோக்கிச் சென்று பாய்ந்தது. மலையைத் துளைத்தது வீரவேல்!
முருகப்பெருமான் வீசிய வீரவேலும் விரைந்து சென்று, செல்லும் வழியில் இருந்த ஏழு குன்றுகளைக் கொண்ட தென் கயிலாய பர்வதமலையைத் துளைத்துச் சென்று, செங்கம் மலையின் ஒரு பகுதியில் குத்திச் சொருகிக் கொண்டது. அந்த இடமே மேல்குப்பம் என்று இன்று அழைக்கப்படும் சிற்றூர் ஆகும்.

மலையைத் துளைத்த வேல், புனிதநீரைப் பெருக்கெடுத்திடச் செய்து, நீர்வீழ்ச்சியாக ஓடச் செய்தது. தெய்வத் திருமகன் உருவாக்கிய அந்த ஆறுதான் சேயாறு.

 தென் கயிலாயமான பர்வதமலையையொட்டிப் பெருகி வடக்கு, வடகிழக்கு நோக்கிப் பாய்ந்து, காஞ்சிபுரத்திற்குத் தெற்கே பாலாற்றுடன் சங்கமித்து, சதுரங்கப்பட்டினத்தில் கடலோடு சேருகிறது.

பிரம்ம குமாரர்கள் ஏழுபேர்!

முருகப்பெருமான் அறிந்திருக்கவில்லை, அந்த மலையடிவாரத்தில், பாவவிமோசனம் வேண்டி ஏழு அந்தண குமாரர்கள் தவம் செய்து கொண்டிருந்தனர் என்று!

 அனந்தமாபுரத்தைச் சேர்ந்த அந்த எழுவர், முறையே போதவன், புத்திராண்டன், புருகூதன், போதன், பாண்டுரங்கன், சோமன், வாமன் என்பவராவர்.

 முருகப்பெருமானின் வீரவேல், மலையைத் துளைத்துச் சென்றபோது, இவ்வேழு அந்தண குமாரர்களின் சிரங்களையும் கொய்து எறிந்துவிட்டது. சேய் உருவாக்கிய ஆறு, "செங்குருதியாறு' ஆகியது.

வீரவேலினால் அந்தணகுமாரர்களுக்கு முக்தியும், பாவ விமோசனமும் கிட்டியது. ஆனால் முருகப்பெருமானை பிரம்மஹத்திதோஷம் பற்றிக் கொண்டது.

 காமாட்சியம்மை, ஆற்றுநீர் செங்குருதியாகப் பாய்வதைக் கண்ணுற்று திடுக்கிட்டாள். ஞான திருஷ்டியால் நிகழ்வுகளை அறிந்தாள்.

பிரம்மஹத்தி தோஷம் நீங்கிட, உடனே சேயாற்றின் கரையிலேயே ஏழு சிவலிங்கத் திருமேனிகளை அமைத்து, பூஜித்திடுமாறு முருகப் பெருமானுக்கு உணர்த்தினாள் அன்னை.

எழுந்தன ஏழு ஆலயங்கள்
அப்படி முருகப்பெருமான் சேயாற்றின் கரையில் வழிபட்ட திருத்தலங்கள் இன்று "சப்த கரைகண்டம்' என்றழைக்கப்படுகின்றன.

 காஞ்சி, கடலாடி, மாம்பாக்கம், மகாதேவமங்கலம், எலத்தூர், பூண்டி மற்றும் குருவிமலை ஆகியவையே அவை.

காரி உண்டவர் கறை கண்டவராக!

ஆலகால விஷத்தை உண்ட எம்பெருமான் "நீலகண்டன்' என்று திருநாமங் கொண்டார். "காரி' என்ற சொல் கருமையைக் குறிப்பதாகும். கருமையானது, நீலநிற நஞ்சையும் குறிக்கும். நீலகண்டனையே "காரி உண்டிக் கடவுள்' என்று பழங்காலத்தில் வழிபட்டுள்ளனர். சங்க காலத்தில் பெருவள்ளலாக விளங்கிய சிற்றரசன் நன்னன்வேண்மான். இவனது மலைநாட்டை "ஏழிற்குன்றம்' என்று அழைத்தனர். இவன் ஆண்ட பல்குன்றக் கோட்டத்தில், மலையொன்றின் மீது "காரியுண்டிக் கடவுள்' எனும் சிவாலயமும் இருந்ததாம். ( "பத்துப்பாட்டில்' இதுபற்றி குறிப்பு உள்ளது.)

"காரி' உண்ட கடவுளே பிற்காலத்தில் காரி கண்ட ஈசுவரனாகி காரகண்டம், கரைகண்டம் என்று மருவி கரைகண்டேசுவராகி, ஏழு திருத்தலங்களும் "சப்த கரைகண்டம்' என்றே அழைக்கப்படுகின்றன.

 "காரி' என்ற பெயர் நிலவியதை உறுதிப்படுத்திட, அருகிலே காரியாறு என்ற சிற்றாறு ஓடுகிறது. காரியந்தல், காரிப்பட்டு, காரிமங்கலம் என்று பெயர் கொண்ட சிற்றூர்களும் அதன் தொடர்பை உறுதிப்படுத்துகின்றன.

தனயனைப் பணிந்து சேயாறு உருவானபோது, ஏழு அந்தணகுமாரர்கள் பலியான தோஷம், தாயை மட்டும் விட்டுவிடுமா?

 முருகப் பெருமானை ஏவிய செயல், அன்னையைச் சேர்ந்ததால், அன்னையும் அந்த தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டிவந்தது.

ஏழுகைலாயங்கள்
எனவே, அந்ததோஷம் நீங்கிட, காமாட்சியம்மை, சேயாற்றின் தென்கரையில் ஏழு சிவாலயங்களை உருவாக்கினாள். அவை சப்தகைலாயங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

 அவை முறையே மண்டைகளத்தூர், கரைபூண்டி, தென் பள்ளிப்பட்டு, பழங்கோயில், நார்த்தாம்பூண்டி, தாமரைப்பாக்கம் மற்றும் வாசுதேவம்பட்டி ஆகும்.

1. காஞ்சி

"காஞ்சி' என்று அழைக்கப்படும் திருத்தலமே நாம் தரிசிக்கும் முதல் தலம் ஆகும். போளூரிலிருந்து 26 கி.மீ. செங்கம் நகருக்கு வடமேற்கில் உள்ளது. சப்த கரை கண்டேசுவரர் திருத்தலங்களில் முதலிடம் பெறுவது காஞ்சி. 10ம் நூற்றாண்டில், விஜயநகரப் பேரரசால் விரிவாக்கம் பெற்று, நாயக்க மன்னர்களாலும், நகரத்தார்களாலும் பல முறை திருப்பணிகள் செய்விக்கப்பட்ட நகரம்.

2. கடலாடி

அன்னையின் ஆணையை ஏற்று, முருகப்பெருமான் மலைமீது வேலை வீசிய இடம்தான் கடலாடி. போளூரிலிருந்து 25 கி.மீ. சேயாற்றின் வடகரையில் அமைந்த தலம். இங்குள்ள வன்னீசுவரரை வணங்கியபின் தான் வேலை குறிவைத்தாராம் வேலவன். சப்த கரைகண்டத் தலங்களில் இரண்டாவது இது.
இங்குள்ள அண்ணாமலையார் பாதத்தை வணங்கிய பின்னரே பக்தர்கள் "பர்வதமலை' ஏறத்துவங்குவர்.

 "கடவுளின் பாதம் பட்ட மலையடியே கடவுளடியாகி' இன்று கடலாடி என்று மருவியுள்ளது என்றும் கூறுவர். 10ம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட கம்பண்ண உடையார் கல்வெட்டுகள் உள்ளன.

3. மாம்பாக்கம்

சப்த கரைகண்டேசுவரர் திருத்தலங்களில் மூன்றாவது திருத்தலம் மாம்பாக்கம் ஆகும். போளூரிலிருந்து 19 கி.மீ. சேயாற்றில் வெள்ளப் பெருக்கெடுக்கும் போதெல்லாம் பெரிதும் பாதிக்கப்படுவது மாம்பாக்கம்தான். வடகிழக்காய் சேயாறு திரும்பும்போது, கலசபாக்கம் வரை வேகம் குறைகிறது. ஆனால், மாம்பாக்கம் அடிக்கடி வெள்ளத்தின் பாதிப்புக்குள்ளாவதால், மக்கள் வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து, திருக்கோயிலும் கவனிப்பாரற்று கிடக்கும் நிலை. ஏகநாயகராக தனியே காத்திருக்கிறார் கரைகண்டேசுவரர், திருப்பணி செய்வோரை எதிர்நோக்கியபடி! ஈசனின் திருவிளையாடலில் இதுவும் ஒன்று என்று எண்ணினாலும், பழமையும், புராணமும் கொண்ட தலம் இது.
மாவிலைகள் ஒதுங்கிய திருத்தலமே மாம்பாக்கம்
திருமால் தேவருலகிலிருந்து ஒரு அமுத கலசத்தைக் கொண்டு வந்து, அதனையே சிவலிங்கத் திருமேனியாக பாவித்து பூஜை செய்தாராம்.
அப்போது அந்தக் கலசம் நிலைப்பெற்ற இடமே கலசப்பாக்கம் என்றும்; கலசத்தில் அணிவித்த நூல் தங்கிய இடம் பூண்டி எனவும்; கலசத்தில் வைத்த மாவிலைகள் ஒதுங்கிய இடம் மாம்பாக்கம் என்றும்; கலசத்தின் மீது வைக்கப்படும் கூர்ச்சம் என்ற தருப்பைப்புல் தங்கிய ஊரே பில்லூர் எனவும் பெயர் பெற்றதாக தலவரலாறு கூறுகிறது.

4. தென் மகாதேவ மங்கலம்

மாதிமங்கலம் என்று அழைக்கப்படும் தென்மகாதேவ மங்கலம். போளூருக்கும், செங்கம் நகருக்கும் நடுவே உள்ளது. போளூரிலிருந்து 16 கி.மீ. இவர்தான் மத்திய கரைகண்டேசுவரர். விஜயநகரமன்னர்கள், சம்புவராயர், சோழமன்னர்கள் மற்றும் பல குறுநில மன்னர்களால் திருப்பணி செய்விக்கப்பட்ட திருக்கோயில். பர்வதமலைக்குச் செல்வோர், மாதிமங்கலத்து மகாதேவரை தரிசித்துவிட்டுத்தான் புனித யாத்திரை மேற்கொள்வர்.
கிராமத் தீர்ப்பாயம், தேர்த்திருவிழா என்றெல்லாம் பெருமை பெற்ற பகுதி இது. தேர்த்திருவிழாவின்போது, தேர்க்காலில் அடிபட்டு மரணமுற்ற ஒருவனுக்கு "தேரடிவீரன்' என்று நினைவுச்சின்னம் எழுப்பப்பட்டுள்ள பெருமை உண்டு.

5. எலத்தூர்

சப்த கரைகண்டேசுவரர் திருத்தலங்களில் நாம் அடுத்து தரிசிக்கப்போவது எலத்தூர் ஆகும். போளூரிலிருந்து 13 கி.மீ. சேயாற்றின் வடகரையில் உள்ள ஐந்தாவது திருத்தலம் இது. சோழ மன்னர்கள் காலத்தில் உருவாகி, விஜயநகர மன்னர்கள் காலத்தில் உருவாகி, விஜயநகர மன்னர்கள் காலத்தில் விரிவடைந்த வரலாறு கொண்ட திருக்கோயில்.

 "பிரதாப தேவராயபுரம்' என்றும் இத்திருத்தலம் அழைக்கப்பட்டதாம்.

 விஜயநகர மன்னர்கள் காலத்தில் கன்னடமொழி பேசும் அந்தணர்கள் பலர் இங்கு குடியேறியதாக வரலாறு கூறுகிறது.
தெற்கு நோக்கிய நுழைவாயிலின் வழியே உள்ளே சென்று, 4 கால் மண்டபத்தில் கனகசபையை தரிசித்தவாறு, மூலவரைக் காணலாம். அமைதியான சூழலில், சிறிய பாணமாக கரைகண்டேசுவரர் எழுந்தருளியுள்ளார். வடக்கே தனிச் சன்னதி கொண்டு நின்ற கோலத்தில் பெரிய நாயகி அம்மன் அருள்பாலிக்கிறாள்.

6. பூண்டி

 பூண்டி, சேயாற்றின் வடகரையில் உள்ள ஆறாவது "கரை கண்டேசுவரர்' திருத்தலம். போளூருக்குத் தெற்கே 9 கி.மீ. தொலைவில் உள்ள கலசப்பாக்கத்திலிருந்து ஒரு கி.மீ.தூரம். கலசத்தின் நூல் ஒதுங்கிய தலம்.
இரண்டு மதிற்சுவர்களை உடைய பெரிய கோயிலாக உள்ளது.. ராஜகோபுரம் இல்லை. "அதிகார நந்தி' பெரிய வடிவில் காணப்படுவதால், சோழர் காலத்துத் திருப்பணி எனக் கருதப்படுகிறது. "நரி பூசித்த தலம்' என்பர். அதற்கு சான்றுரைக்க, கோயிலுக்கு வரும் பாதையில் இருபுறமும், இரண்டு கல்நரி சிலை உள்ளன. இரண்டு சிவனடியார்கள், அகத்தியரின் கோபத்திற்கு ஆளாகி, நரி வடிவம் பெற்றபின், கரைகண்டேசுவரரின் அருளால் விமோசனம் பெற்றதாக தலபுராணம் கூறுகிறது.

மகாமண்டபம், பிரதோஷ நந்தி, அர்த்தமண்டபம் ஆகியவற்றைத் தாண்டி, கருவறை செல்ல வேண்டும். பதினாறு பட்டைகள் கொண்ட பாணத்துடன் "÷ஷாடச லிங்கத்' திருமேனியராக கரை கண்டேசுவரர் அருள்பாலிக்கிறார். கிழக்கு நோக்கிய சன்னதி. உள் சுற்றில் பெரிய நாயகி அம்மன் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். சித்தி புத்தி விநாயகர், ராதா - ருக்மிணியுடன் வேணு கோபாலசுவாமியும், நடராஜர் சபையில் "ஆடவல்லான் சன்னதி' யும் தனிச் சிறப்பு பெற்றவை.
கரைகண்டேசுவரர் கோயிலுக்குத் தென்கிழக்கில் அகத்தியர் ஆலயமும், சற்று மேற்கில் அரசு கொண்டப்பெருமாள் திருக்கோயிலும் உள்ளன. அண்மைக் காலம் வரை இங்கு வாழ்ந்து வந்த "பூண்டி மகான்' என்றழைக்கப்படும் சுவாமிகளின் மடமும் உள்ளது.

7. குருவிமலை

காஞ்சிபுரத்திற்கு ஈசானிய பாகத்தில் மாந்தோப்பில் அமைந்து, குரு மூலை என்று அழைக்கப்பட்ட திருத்தலமே தற்போது "குருவிமலை' ஆகியுள்ளது. போளூருக்குத் தெற்கே 3 கி.மீ. சேயாற்றின் வடகரையில் அமைந்த ஏழாவது கரைகண்டேசுவரர் திருத்தலம் இது.
10-ம் நூற்றாண்டில் சோழமன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட திருக்கோயில். முழுவதும் உருக்குலைந்துவிட்ட ஆலயத்தில் நல்ல முறையில் திருப்பணி செய்த அன்பர்கள் பாராட்டுக்குரியவர்களே. மகாமண்டபம், அர்த்தமண்டபம் ஆகியவற்றைக் கடந்து, கருவறையில் கரைகண்டேசுவரரை தரிசிக்கலாம்..
மூலவருக்கு இடதுபுறம் தெற்கு நோக்கியபடி பெரியநாயகி எழுந்தருளியுள்ளாள். சிவசுப்பிரமணியசாமி, திருவிழாவின்போது இந்தத் திருத்தலத்திற்கும் எழுந்தருளுவார்.

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment