Thursday, 26 January 2017

அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பாம்புரம் - திருவாரூர்


மூலவர் : சேஷபுரீஸ்வரர், பாம்புரேஸ்வரர்

உற்சவர் : ஆதிசேஷன்

அம்மன்/தாயார் : பிரமராம்பிகை, வண்டுசேர் குழலி

தல விருட்சம் : வன்னி

தீர்த்தம் : ஆதிசேஷ தீர்த்தம்

ஆகமம்/பூஜை : -

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : சேஷபுரி, திருப்பாம்புரம்

ஊர் : திருப்பாம்புரம்

பாடியவர்கள்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்

தேவாரப்பதிகம்

துஞ்சு நாள் துறந்து தோற்றமும் இல்லாச் சுடர்விடு சோதி எம்பெருமான் நஞ்சுசேர் கண்டம் உடைய என்நாதர் நள்ளிருள் நடம்செயும் நம்பர் மஞ்சுதோய் சோலை மாமயில் ஆட மாட மாளிகை தன்மேல் ஏறிப் பஞ்சுசேர் மெல்லடிப் பாவையர் பயிலும் பாம்புர நன்னகராரே. - திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 59வது தலம்.

திருவிழா:

 சிவாலய விழாக்கள் அனைத்தும் நடைபெற்றாலும், மகாசிவராத்திரி மிகவும் சிறப்போடு கொண்டாடப்படுகிறது. அதிலும் ஆதிசேஷன் வணங்கிய மூன்றாம் காலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆதிசேஷன் உற்சவராக புறப்பட்டு இறைவன் திருமுன் வந்தபின்பு, அபிஷேக ஆராதனைகள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். மாசி மாதத்தில்,பஞ்சமூர்த்தி அபிஷேகம் சிறப்புடன் நடத்தப்படுகிறது.

தல சிறப்பு:

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். பிற கோயில்களில் இருப்பதைப்போல் ராகுவும் கேதுவும் தனியாக இல்லாமல் ஒரே சரீரமாகி ஈசனை நெஞ்சில் இருத்தி அருள்பெற்ற தலம்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 122 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 ஞாயிறு மற்றும் செவ்வாய் மாலை 2.45 மணி முதல் இரவு 8.00 மணி வரை,

புதன்கிழமை ராகு, கேது பூஜை பகல் 6.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை,

 வியாழகிழமை ராகு, கேது பூஜை பகல் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை. 

 பூஜை விவரம் :

4 கால பூஜைகள்.

காலசந்தி காலை 9.00 மணி,

உச்சிகாலம் பகல் 12.15 மணி ,

சாயரட்சை மாலை 5.15 மணி ,

அர்த்தசாமம் இரவு 8.00 மணி.


பொது தகவல்:

வழிபட்டோர்: பிரம்மா, இந்திரன், பார்வதி, அகத்தியர், அக்னி, தட்சன், கங்காதேவி, சூரியன், சந்திரன், சுனிதன், கோச்செங்கண்ணன் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர். 

🍁 இந்நாள் வரை இவ்வூரில் அகத்திப் பூப்பதில்லை.

🍁 ஆலம் விழுதுகள் தரை தொடுவதுமில்லை.

🐍 இந்த ஊரில் பாம்பு தீண்டி இதுவரை யாரும் இறந்ததில்லை. 

🌷 சோழர் காலத்தில் கட்டப்பட்ட இத்திருக்கோவில் ஒரு பஞ்சலிங்க தலமாகும்.

🌷 சுவாமி சந்நதியை சுற்றி கல் அகழி உள்ளது.

பிரார்த்தனை

போதை பழக்கம் உள்ளவர்கள் ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 - 6 ராகு காலத்தில் இத்தல இறைவனுக்கு அர்ச்சனை செய்து வழிப்பட்டால் தீய பழக்கங்களில் இருந்து விடுபடலாம். இவ்வாறு செய்து வந்தால் 264 வகையான பாவங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.


ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருந்தால், 18 வருட ராகு தசா நடந்தால், 7 வருட கேது தசா நடந்தால், லக்னத்திற்கு 2ல் ராகுவோ, கேதுவோ இருந்து, லக்னத்திற்கு 8ல் கேதுவோ, ராகுவோ இருந்தால், ராகு புத்தி, கேது புத்தி நடந்தால், களத்திர தோஷம், புத்திர தோஷம், இருபாலருக்கும் திருமணத்தடை இருந்தால், கனவில் அடிக்கடி பாம்பு வந்தால், தெரிந்தோ, தெரியாமலோ பாம்பைக் கொன்றிருந்தால், கடன் தொல்லைகள் இருந்தால் இத்தலத்திற்கு வந்து பரிகாரம் செய்தல் அவசியம்.


நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

தலபெருமை:

சிவனின் சாபத்தால் விஷத்தை இழந்த ஆதிசேஷன் இத்தலத்தில் வழிபட்டு மீண்டும் பெற்றதால், இங்கு வந்து வழிபடுவோருக்கு தாங்கள் இழந்ததை மீண்டும் பெறும் பாக்கியம் கிடைக்கும். ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் கோயிலில் பாம்பு நடமாட்டம் இருக்கும் என்றும் கூறுவர். இவைகள் அந்த நேரத்தில் இறைவனை வழிபடுவதாக ஐதீகம்.

இந்த கோயில் திருநாகேஸ்வரம், நாகூர், கீழப்பெரும்பள்ளம், காளஹஸ்தி, மற்றும் கும்பகோணம் நாகநாதர் கோயில் ஆகிய ஐந்து தலங்களின் பெருமையை ஒருங்கே அமையப்பெற்ற தலம். எனவே இத்தலம் சர்வ தோஷ பரிகார தலம் என புராணங்கள் கூறுகின்றன. ஆதிசேஷனுக்கு இங்கு உற்சவர் விக்ரகம் உள்ளது.

ராகு, கேது சன்னதி: பிற கோயில்களில் இருப்பதைப் போல் ராகுவும் கேதுவும் தனியாக இல்லாமல் ஒரே சரீரமாகி ஈசனை நெஞ்சில் இருத்தி அருள்பெற்றார்கள். எனவே இத்தலத்து சிவனையும் அம்மனையும் நினைத்து வழிபாடு செய்பவர்களுக்கு சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.

தல வரலாறு:

ஒரு முறை விநாயகர், திருக்கயிலாயத்தில் வீற்றிருக்கும் சர்வேஸ்வரை தரிசனம் செய்வதற்காகச் சென்றார். அங்கு தியான நிலையில் இருந்த, தன் தந்தையான ஈசனை வணங்கினார். அப்போது சிவபெருமானின் கழுத்தில் இருந்த பாம்பானது, விநாயகப்பெருமான் தன்னையும் வழிபட்டதாக நினைத்து கர்வம் கொண்டது.

உலகின் இயக்கங்களை தன்னுள் அடக்கிக் கொண்டு, ஒவ்வொரு உயிரின் செயல்களையும் கண்காணித்து வரும் சிவபெருமானுக்கு, தன் கழுத்தில் இருக்கும் நாகத்தின் எண்ணத்தை கணிக்க முடியாமல் போய்விடுமா என்ன?.

 நாகத்தின் எண்ணத்தை அறிந்த ஈசன், நாக இனம் முழுவதும் தன் சக்தியை இழக்கும்படி சாபமிட்டார்.
இதனால் உலகில் உள்ள அனைத்து நாகங்களும் தங்கள் வலிமையை இழந்தன.

 அதன் காரணமாக உலக உயிர்கள் பலவற்றாலும், நாகங்களுக்கு துன்பங்கள் நேர்ந்தன. இதையடுத்து அஷ்ட மகா நாகங்களும், ராகு, கேதுவும் தங்கள் இனத்தில் ஒருவர் செய்த தவறுக்காக, மற்றவர்களையும் தண்டிக்க வேண்டாம் என்றும், தவறு செய்த பாம்பையும் மன்னிக்கும் படியும் அனைவரும் ஈசனை வேண்டி நின்றனர்.
‘மகா சிவராத்திரி அன்று நாகங்களின் தலைவன் ஆதிசேஷன் தலைமையில் அனந்தன், வாசுகி, தட்சகன், கார்கோடகன், சங்கபாலன், குலிகன், பத்மன், மகாபத்மன் ஆகிய நாகங்கள் திருப்பாம்புரம் சென்று என்னை தரிசித்து வேண்டினால் சாபவிமோசனம் பெறலாம்’ என்று சிவபெருமான் வழிகாட்டி அருளினார்.

அதன்படியே ஆதிசேஷன் தலைமையில் அஷ்டநாகங்களும் திருப்பாம்புரம் சென்று ஈசனை வழிபட்டு தங்கள் சாபம் நீங்கப்பெற்றனர் என்று தல வரலாறு கூறுகிறது.

இத்தலத்திற்கு மற்றொரு தல வரலாறும் கூறப்படுகிறது.
(அதனையும் இங்கே பார்க்கலாம்.)

முன்னொரு காலத்தில் வாயு பகவானுக்கும், ஆதிசேஷனுக்கும் தங்களில் யார் பெரியவர்? என்ற போட்டி ஏற்பட்டது.

 இதனால் வாயு பகவான் தன் வலிமையால், பெரிய பெரிய மலைகளை எல்லாம் புரட்டிப் போட்டது. ஆதிசேஷனோ அந்த மலைகளை தன் வலிமையால் தடுத்து நிறுத்தியது.
இருவரும் சமபலத்துடன் இருந்த காரணத்தால், வெற்றித் தோல்வி யாருக்கு என்பதை கணிக்க முடியவில்லை. இதனால் கோபம் கொண்ட வாயு பகவான், ஏனைய உயிர்களுக்கு வழங்கும் பிராணவாயுவை நிறுத்தினார். இதனால் உயிரினங்கள் சோர்ந்து, மடியும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து தேவர்களின் வேண்டுகோள் படி, ஆதிசேஷன் போரில் இருந்து ஒதுங்கிக் கொண்டது. மேலும் உலக உயிர்கள் துன்பப்பட தானும் ஒரு காரணமாக இருந்ததால், திருப்பாம்புரம் சென்ற ஆதிசேஷன், அங்குள்ள சிவலிங்கத்திற்கு பூஜை செய்து தன்னுடைய தவறை பொருத்தருளும் படி இறைவனை வேண்டியது.

இவ்வாறு மற்றொரு தலவரலாறு கதை கூறுகிறது. 

இத்தலத்தில் வீற்றிருக்கும் இறைவன் சேஷபுரீஸ்வரர் என்றும் பாம்புரேஸ்வரர் என்றும் அழைக்க படுகிறார். அம்பாள் பிரமராம்பிகை என்ற திருநாமத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். பிற கோயில்களில் இருப்பதைப்போல் ராகுவும் கேதுவும் தனியாக இல்லாமல் ஒரே சரீரமாகி ஈசனை நெஞ்சில் இருத்தி அருள்பெற்ற தலம்.

No comments:

Post a Comment