Thursday 26 January 2017

அருள்மிகு சாட்சிநாதர் திருக்கோயில், அவளிவணல்லூர் - வலங்கைமான் ( திருவாரூர் )


மூலவர் : சாட்சிநாதர்

உற்சவர் : -

அம்மன்/தாயார் : சவுந்தர நாயகி

தல விருட்சம் : பாதிரி

தீர்த்தம் : சந்திர புஷ்கரிணி

ஆகமம்/பூஜை : -

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : சாட்சிநாதபுரம், திருஅவளிவள்நல்லூர்

ஊர் : அவளிவணல்லூர்

பாடியவர்கள்: அப்பர், சம்பந்தர்

தேவாரப்பதிகம்

நீறுடைய மார்பில் இமவான் மகளொர் பாகம்நிலை செய்து கூறுடைய வேடமொடு கூடியழ காயதொரு கோலம் ஏறுடைய ரேனுமிடு காடிரவில் நின்றுநட மாடும் ஆறுடைய வார்சடையினான் உறைவது அவளிவணல்லூரே. - திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 100வது தலம்.


திருவிழா:

மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை

தல சிறப்பு:

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 163 வது தேவாரத்தலம் ஆகும்.


திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.


பொது தகவல்:

காசிய முனிவர், திருமால், முருகன், சூரியன், அகத்தியர், கன்வமகரிஷி ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர்.

பிரார்த்தனை

கண்பார்வையில் குறைபாடு உள்ளவர்கள், தோல் நோய் சம்பந்தப்பட்டவர்கள் இத்தலத்தில் நீராடினால் சிறந்த பலன் கிடைக்கும்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கின்றனர்.

தலபெருமை:

மூலஸ்தானத்தில் சிவன் ரிஷபாரூடராய் காட்சி தருவது சிறப்பு. அரித்துவாரமங்கலத்தில் பன்றி வடிவம் எடுத்து செருக்குடன் நிலத்தை தோண்டிய பெருமாள், இத்தலத்தில் தன் பிழை தீர்க்கும் படி வழிபாடு செய்தார்.

சிவனின் "பஞ்ச ஆரண்யம் (காடு)' தலங்களில் இதுவும் ஒன்று. திருக்கருகாவூர் உஷகாலம், அவளிவணல்லூர் காலசந்தி, அரித்துவாரமங்கலம் உச்சிகாலம், ஆலங்குடி சாயரட்சை, திருக்கொள்ளம்புதூர் அர்த்தஜாம பூஜை இந்த 5 தலங்களையும் ஒன்றாக தரிசிப்பது சிறப்பு.


தை அமாவாசையில் இங்கு சிறப்பு உற்சவம் நடைபெறுகிறது.

தல வரலாறு:

இத்தல இறைவனை பூஜித்து வந்த சிவாச்சாரியாருக்கு இரண்டு பெண்கள். இதில் மூத்த பெண் சுசீலையை அரசவைப்புலவரின் மகன் மணந்தான். இவன் தலயாத்திரை மேற்கொண்டு பல தலங்களை தரிசித்து பல ஆண்டுகள் கழித்து திரும்பி வந்தபோது சுசீலை அம்மை நோயால் பாதிக்கப்பட்டு கண்பார்வை இல்லாமல் அழகிழந்து காணப்பட்டாள். இவளது தங்கை அழகுடன் இருந்ததால் அவளை தன் மனைவியாக நினைத்து அழைத்தார்.


அருகிலிருந்த சுசீலையை தன் மனைவியாக ஏற்க மறுத்தார். இதனால் மனம் வருந்திய சிவாச்சாரியார் இத்தல இறைவனிடம் அழுது முறையிட்டார். இறைவன் சுசீலையை கோயில் எதிரிலுள்ள தீர்த்தத்தில் தை அமாவாசை தினத்தில் நீராடும்படி கூறினார். நீராடி வெளியே வந்தவுடன், சுசீலை முன்பை விட மிக அழகாக விளங்கினாள். சிவன், பார்வதி சமேதராக காட்சி தந்து "அவள் தான் இவள்' என சுட்டிக்காட்டி மறைந்தார். அன்றிலிருந்து இத்தலம் அவளிவணல்லூர் எனவும், இறைவன் சாட்சிநாதர் எனவும் ஆனார்கள்.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்

No comments:

Post a Comment