உற்சவர் : -
அம்மன்/தாயார் : பெரியநாயகி
தல விருட்சம் : எலுமிச்சை
தீர்த்தம் : அக்னி, வருண தீர்த்தம்
ஆகமம்/பூஜை : காமீகம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருஅன்னியூர்
ஊர் : பொன்னூர்
பாடியவர்கள்: திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர்
தேவாரப்பதிகம்
வெந்த நீறுமெய் பூசுநன் மேனியர் கந்த மாமலர் சூடுங் கருத்தினர் சிந்தை யார்சிவ னார்செய்ய தீவண்ணர் அந்த ணாளர்கள் கண்டீர் அன்னியூரரே. -திருநாவுக்கரசர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 22வது தலம்.
திருவிழா:
மகாசிவராத்திரி, வைகாசிவிசாகம், திருக்கார்த்திகை.
தல சிறப்பு:
இங்கு சிவபெருமான் சுயம்புமூர்த்தியாக காட்சி தருகிறார். இவரது மற்றொரு பெயர் அக்னிபுரீஸ்வரர். பங்குனி மாதத்தில் 5 நாட்கள் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது. வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் சுப்பிரமணியர், காதுகளில் வட்ட வடிவமான காதணி அணிந்த கோலத்தில் காட்சி தருவது சிறப்பம்சம்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 22 வது தேவாரத்தலம் ஆகும்.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல்:
இத்தலத்தில் சுவாமியை வருணன், அரிச்சந்திரனும் வழிபட்டுள்ளனர். பிரகாரத்தில் சனீஸ்வரர், சூரியன், பைரவர் மூவரும் அருகருகில் இருக்கின்றனர். தந்தையான சூரியனுக்கு அருகில் இருந்தாலும், இங்கு சனி, சுபசனீஸ்வரராகவே இருக்கிறார். எனவே, சனி தோஷம் உள்ளவர்கள் இவரிடம் வேண்டிக்கொண்டால் தோஷம் நீங்குவதாக நம்பிக்கை. வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் சுப்பிரமணியர், காதுகளில் வட்ட வடிவமான காதணி அணிந்த கோலத்தில் காட்சி தருவது சிறப்பம்சம். ஆதிசங்கரருக்கும் சன்னதி உள்ளது.
பிரார்த்தனை
பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்க, மனக்குறைகள் நீங்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனைகள் நிறைவேறியதும் பக்தர்கள் சுவாமிக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து, தயிர்சாதம் படைத்து வழிபடுகிறார்கள்.
தலபெருமை:
இரட்டை தெட்சிணாமூர்த்தி: இத்தலத்தில் சுவாமி அக்னியின் வடிவில் இருப்பதாக ஐதீகம். எனவே, இவருக்கு அக்னிபுரீஸ்வரர் என்றும் பெயர் உண்டு. முன்னோர்களுக்கு ஆத்மசாந்தி பூஜை செய்பவர்கள் இங்கு சுவாமியிடம் வேண்டிக்கொள்கிறார்கள். பங்குனி மாதத்தில் 5 நாட்கள் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது. கார்த்திகை மாதத்தில் சுவாமியை, ரதி வழிபட்ட வைபவமும், சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. அம்பாள் பெரியநாயகிக்கு தனி சன்னதி இருக்கிறது.
ஆடிப்பூரம், ஆவணி மூலம் நட்சத்திரத்தன்று திருமணத்தடை உள்ள பெண்கள், அம்பாளுக்கு வளையல் கட்டி பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள். இதனால், விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. இங்கு அருகருகே இரண்டு தெட்சிணாமூர்த்தி சன்னதி இருக்கிறது. இதில் மேதா தெட்சிணாமூர்த்திக்கு சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இவரது காலுக்கு கீழே நந்தியும் இருக்கிறது. இவரிடம் வேண்டிக்கொண்டால் கல்வி, கேள்விகளில் சிறக்கலாம் என்பது நம்பிக்கை. புதிதாக பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பவர்கள், இவ்விரு தெட்சிணாமூர்த்திக்கு விசேஷ பூஜைகள் செய்து வழிபட்டால் குழந்தைகளின் கல்வி சிறக்கும் என்கிறார்கள்.
தல வரலாறு:
பிரம்மாவிடம் வரம் பெற்ற தாரகன் எனும் அசுரன், தேவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தான். தேவர்கள், அசுரனிடமிருந்து தங்களை காத்தருளும்படி சிவனை வேண்டச் சென்றனர். அவர் யோகத்தில் இருந்ததால் மன்மதனின் உதவியால் அவரது யோகத்தை களைத்தனர். கோபம் கொண்ட சிவன், மன்மதனை எரித்து விட்டார். மனம் கலங்கிய ரதிதேவி, சிவனிடம் தன் கணவனை மீட்டுத் தரும்படி வேண்டினாள். அவர் தகுந்த காலத்தில் மன்மதன் உயிர்பெற்று அவளுடன் சேர்வான் என்றார். கணவன் விரைவில் உயிர் பெற்று வரவேண்டும் என்பதற்காக இத்தலத்தில் சிவனை எண்ணி தவமிருந்து வழிபட்டாள். மன்மதன் மீண்டும் உயிர்பெற்ற பிறகு, இங்கு ரதியுடன் சேர்ந்து வழிபட்டான். இருவருக்கும் காட்சி தந்த சிவன் சுயம்பு லிங்கமாக எழுந்தருளினார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவபெருமான் சுயம்புமூர்த்தியாக காட்சி தருகிறார். பங்குனி மாதத்தில் 5 நாட்கள் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது.
No comments:
Post a Comment