உற்சவர் : -
அம்மன்/தாயார் : கமலாம்பிகை, அல்லியங்கோதை, நீலோத்பலாம்பாள்
தல விருட்சம் : பாதிரிமரம்
தீர்த்தம் : கமலாலயம்
ஆகமம்/பூஜை : -
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருவாரூர்
ஊர் : திருவாரூர்
பாடியவர்கள்: சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்
தேவாரப்பதிகம்
துன்பெலாம் அற நீங்கிச் சுபத்தராய் என்பெலாம் நெக்கு இராப்பகல் ஏத்திநின்று இன்பராய் நினைந்து என்றும் இடையறா அன்பர் ஆமவர்க்கு அன்பர் ஆரூரரே. - திருநாவுக்கரசர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 87வது தலம்.
திருவிழா:
மார்கழி மாதம் - மார்கழி திருவாதிரை - தியாகேசர் பெருமானின் பாதம் காட்சியளிக்கிறார் என்பது மிகவும் விசேஷம் பங்குனி மாதம் - பங்குனி உத்திர - மாசி மாத அஸ்தத்தில் கொடி ஏற்றி பங்குனி மாதம் ஆயில்யத்தில் தேரோட்டம் - 10 நாட்கள் திருவிழா- வியாக்ரபாதருக்கு காட்சி தந்த சிறப்பை காட்டும் திருவிழா இது. இதுவும் இத்தலத்தின் சிறப்பான விழா ஆடிப்பூரம் - 10 நாட்கள் திருவிழா - இத்திருவிழா இத்தலத்தில் மிகவும் சிறப்பாக நடைபெறும் விழாக்களில் ஒன்றாகும் மாசி மக நாள் சுந்தரருக்கு பூதகணம் நெல் கட்டி செல்லும் விழா, சித்திரை விழா, ஆடிப்பூரம் விழா, தெப்பதிருவிழா, நிறைபணி விழா ஆகியவை இத்தலத்தின் சிறப்பான விழா நாட்கள் ஆகும் மாதாந்திர பிரதோஷம் இத்தலத்தில் மிகவும் விசேஷமானது. வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல், தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போது கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடக்கும்.
தல சிறப்பு:
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தியாகராஜர் என்றால் கடவுள்களுக்கெல்லாம் ராஜா என்று பொருள். தியாகராஜர் கோயிலும் கோயில்களில் எல்லாம் முதன்மையானதாக விளங்குகிறது. 9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்), 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் என பிரமாண்டமாக விளங்குகிறது. இக்கோயிலை பெரியகோயில் என்றும் சொல்வர்.திருவாரூரில் தியாகராஜரின் முக தரிசனம் காண்பவர்கள், 3 கி.மீ. தொலைவிலுள்ள விளமல் சிவாலயத்தில் பாத தரிசனம் காண்பது சிறப்பு. கிழக்கு கோபுரத்தின் உள்புறம் உள்ள 1000 கல்தூண்கள், முன்காலத்தில், திருவிழாக்காலங்களில் பந்தல் போடுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. மரகதலிங்கம் : தியாகராஜ சுவாமிக்கு தினமும் அபிஷேகம் கிடையாது. இந்திரன் பூஜித்த, சிறிய மரகதலிங்கத்திற்கு (வீதி விடங்க லிங்கம்) தான் காலை 8.30, 11மணி, இரவு 7 மணிக்கு அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு பின் சிறிய வெள்ளிப்பெட்டியில் மலர்களுக்கு நடுவே இந்த லிங்கம் வைக்கப்படும். அதன் மேல் வெள்ளிக்குவளை சாற்றி, அதிகாரிகள் முன்னிலையில் பெட்டி பூட்டப்படும். மற்ற நேரங்களில், பூட்டிய இந்த பெட்டி தியாகராஜரின் வலதுபுறத்தில் இருக்கும்.அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது கமலை சக்தி பீடம் ஆகும் சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 150 வது தேவாரத்தலம் ஆகும்.
திறக்கும் நேரம்:
காலை 5 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல்:
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் தமிழகத்தின் புகழ்பெற்ற தலம். இந்தக் கோயிலை சுற்றிப் பார்க்க வேண்டுமானால், முழுமையாக ஒருநாள் ஆகும். பெரும்பாலான கோயில்களின் சுற்றுப்பிரகாரத்தில் சிறிய சன்னதிகள்தான் இருக்கும். ஆனால், திருவாரூர் கோயிலின் உள்ளே இருக்கும் சன்னதிகள், கிட்டத்தட்ட தெருவோர கோயில்களின் அளவுக்கு பெரிய அளவில் இருக்கிறது. வீதிவிடங்க விநாயகர், அசலேஸ்வரர் (இது தனியாக பாடல் பெற்றது), கமலாம்பாள், நீலோத்பலாம்பாள், ரவுத்ர துர்க்கை, ருண விமோசனர், தெட்சிணாமூர்த்தி, ஆனந்தீஸ்வரர், சித்தீஸ்வரர், ஹயக்கிரீஸ்வரர், தட்சணேஸ்வரர், அண்ணாமலேஸ்வரர், வருணேஸ்வரர், ஓட்டு தியாகேசர், துளசிராஜா பூஜித்த கோயில், தெய்வேந்திரன் பூஜித்த லிங்கம், சேரநாதர், பாண்டியநாதர், ஆடகேஸ்வரர், புலஸ்திய ரட்சேஸ்வரர், புலஸ்திய பிரம்மேஸ்வரர், பக்தேஸ்வரர், வில்வாதீஸ்வரர் மற்றும் பாதாளேஸ்வரர் ஆகியோர் இந்த சன்னதிகளில் அருள் செய்கின்றனர். கோயிலின் மேற்கு கோபுர நுழைவாயிலில் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. இவரை வழிபட்டால் தொலைந்த பொருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.அம்மன் சன்னதியின் உள்பிரகார விநாயகர் சன்னதியில், ஐயப்பனும் அருள்பாலிக்கிறார். மாற்றுரைத்த விநாயகர் சந்நிதி மேலைக்கோபுரத்தின் எதிரில் குளக்கரையில் உள்ளது. "செங்கழுநீர் ஓடை' எனப்படும் ஓரோடை கோயிலுக்கு அப்பால் 1 கி.மீ., தொலைவில் உள்ளது.
பிரார்த்தனை
இத்தலத்தில் உள்ள பக்தர்கள் ராகு கால துர்க்கையை வழிபட்டு பதவி உயர்வு பணிமாற்றம் உள்ளிட்ட பல காரியங்கள் வெற்றியடையப் பெறுகிறார்கள். இத்தலத்து சண்முகரை வழிபட்டால் பகை விலகும் நீலோத்பலாம்பாளை வழிபட்டால் அர்த்தஜாமத்தில் நைவேத்தியம் செய்து பால் சாப்பிட்டால் குழந்தை வரம் கிடைக்கிறது. பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவதும் நிகழ்கிறது. ருணவிமோசனப் பெருமானை வழிபட்டால் கடன் தொல்லை, உடற்பிணிகள் ஆகியன விட்டு விலகும். மேலும் பிரதான மூர்த்தியான தியாகேசரை வணங்கினால் திருமண வரம், குழந்தை வரம், கல்வி மேன்மை, வேலை வாய்பபு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு ஆகியவை நிறைவேறுகிறது. மூலவர் வன்மீகி நாதரை வழிபட்டால் எண்ணற்ற வரங்களும், செல்வ செழிப்பும் கிடைக்கும், பாவங்கள் நீங்கும், ஆணவம் மறையும். அம்மன் சன்னதியில் உள்ள அட்சர பீடத்தை வணங்கினால் கல்வியறிவு பெருகும்.
நேர்த்திக்கடன்:
வீதிவிடங்க விநாயகருக்கு பின் உள்ள பிரம்மநந்தியை மழைவேண்டி பிரார்த்தித்து இவர் மீது நீர் நிரப்பினால் மழை கொட்டும். பசுக்கள் கறவாது இருந்தால் இவருக்கு அருகு சாற்றி அதனை பசுவுக்குக் கொடுத்தால் நன்றாகப் பால் கறக்கும் கமலாம்பாளை வணங்கினால் ஞானம் கிட்டும். ஊமைகள் கூட வியாழனுக்கு குருவாவார்கள். புரட்டாசி மகர நவமியில் பால் அன்னம் நிவேதிப்பவர்கள் முக்தியடைவர். ஜூரம் நீங்க, ஆயுள் அதிகரிக்க இங்குள்ள ஜூர தேவரை மிளகுரசம் படைத்து வழிபடுகிறார்கள் மேலும்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகியவற்றை செய்யலாம். சுவாமிக்கு வைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம் தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம். வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம். நினைத்த காரியம் நிறைவேற கடவுள்களுக்கெல்லாம் ராஜாவான தியாகராஜருக்கு விஷ்ணு பகவான் செய்த "முகுந்தார்ச்சனை செய்யலாம். முசுகுந்த சக்கரவர்த்தி தியாகராஜருக்கு செய்த "முசுகுந்தார்ச்சனை' செய்யலாம்.
தலபெருமை:
திருநள்ளாறு சென்றாலும் திருவாரூர் செல்ல வேண்டும் : சதயகுப்தன் என்ற அசுரன், தேவர்களுக்கு தொந்தரவு கொடுத்தான். இவனை சனிதோஷம் பிடித்தது. எனவே நவக்கிரகங்களை எதிர்த்து போரிட்டான். பயந்து போன கிரகங்கள் திருவாரூர் சிவனிடம் முறையிட்டனர். சிவன், "என்னை நாடி வரும் பக்தர்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்கக்கூடாது' என்ற நிபந்தனையின்படி நவக்கிரகங்களை காப்பாற்றினார். எனவே, நவக்கிரகங்கள் இங்கு நேர்கோட்டில் சிவனை நோக்கியபடி அமைந்துள்ளன. கிரகங்கள் பக்தர் களுக்கு தொல்லை கொடுக்கிறதா என்பதை கண்காணிக்க விநாயகர் சிலை கிரகங்களின் சன்னதியில் உள்ளது. எனவே தான் "திருநள்ளாறு சென்றாலும் திருவாரூர் செல்ல வேண்டும்' என்பார்கள். நாற்பெரும் விநாயகர் : தியாகராஜர் கோயிலில் 84 விநாயகர்கள் உள்ளனர். இவர்களில் நால்வருக்கு தனி சிறப்பு உண்டு. அம்மன் சன்னதி பிரகாரத்திலுள்ள, நடுக்கம் தீர்த்த விநாயகரை, நரம்புத்தளர்ச்சி உள்ளவர்கள், டென்ஷனாக இருப்பவர்கள் வழிபடுகிறார்கள். மேற்கு கோபுரத்தின் அருகில் சுந்தரருக்கு சிவனால் தரப்பட்ட பொன், நிஜத்தங்கம் தானா என்பதை சோதித்துப் பார்த்து தந்த, "மாற்றுரைத்த விநாயகர்' அருள்பாலிக்கிறார். நகை வாங்கும்முன் பெண்கள் இவரை வழிபடுகின்றனர். சிவன் சன்னதியின் முதல் பிரகாரத்திலுள்ள மூலாதார கணபதி, சுருண்டு படுத்த ஐந்து தலை நாகத்தின் நடுவில் விரிந்த தாமரைப்பூ மீது நர்த்தனம் ஆடும் நிலையில் உள்ளார். யோகா பழகுபவர்கள் இவரை வணங்குவது சிறப்பு. சுவாமி சன்னதியின் முதல் பிரகாரத்தில் அருள்பாலிக்கிறார் வாதாபி கணபதி. இந்த விநாயகர் முன்பு நின்று தான், திருவாரூர் முத்துசுவாமி தீட்சிதர் "வாதாபி கணபதிம்' எனத் தொடங்கும் பாடலை பாடினார். சந்திரனை தலையில் சூடிய அம்பிகை : திருவாரூரில் மூலவரை வன்மீகநாதர் என்ற திருப்பெயரிட்டு அழைக்கின்றனர். இவர் தலையில் பிறைச்சந்திரனை சூடியுள்ளதைப் போல, இத்தலத்து நாயகி கமலாம்பிகையும் சந்திரனை நெற்றியில் சூடி யிருக்கிறாள். க-கலைமகள், ம-மலைமகள், ல-அலைமகள் ஆகிய முப்பெரும் தேவியரின் அம்சமாக விளங்குகிறாள். வலக்கரத்தில் மலர் ஏந்தியும், இடது கரத்தை இடையில் வைத்தும், கால்களை யோகாசன நிலையில் அமைத்தும் ராணி போல் காட்சி தருகிறாள்.
உதிரிப்பூக்கள் : சிவன் கோயில்களில் தேவாரம் பாடியதும், "திருச்சிற்றம்பலம்' எனக் கூறி முடிப்பார்கள். சிதம்பரம் நடராஜர் கோயிலே முதல் கோயில் என்ற அடிப்படையில், அங்கு நடராஜர் நடனமாடும் சிற்றம்பலத்தை இப்படி சொல்வதுண்டு. ஆனால், சிதம்பரம் கோயிலுக்கும் முந்தைய கோயில் திருவாரூர் எனக் கருதப்படுவதால், இந்தக்கோயிலில் மட்டும் தேவாரம் பாடி முடித்ததும், "திருச்சிற்றம்பலம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில்லை.
தமிழகத்திலுள்ள தேர்களிலேயே திருவாரூர் தேர் தான் மிகவும் பெரியதாகவும், அழகாகவும் இருக்கும். இதனால் தான் "திருவாரூர் தேரழகு' என்பார்கள்.
சிவபெருமான் இத்தலத்தில் மட்டும் 364 திருவிளையாடல்கள் நிகழ்த்தியுள்ளார்.
திருவாரூரில் பிறந்தால் முக்தி என்பதால், எமனுக்கு வேலை இல்லாமல் போனது. எனவே இங்கு எமனே, சண்டிகேஸ்வரராக இருந்து இறைவனை வேண்டிதன் வேலையை காப்பாற்றிக் கொண்டார். எமபயம் உள்ளவர்கள் இங்கு வழிபடுவது சிறப்பு.
திருவாரூரில் தியாகராஜரின் முக தரிசனம் காண்பவர்கள், 3 கி.மீ. தொலைவிலுள்ள விளமல் சிவாலயத்தில் பாத தரிசனம் காண்பது சிறப்பு.
சிதம்பர ரகசியம் போல, தியாகராஜ ரகசியம் இந்த கோயிலின் ஸ்பெஷாலிட்டி. தியாகராஜருக்கு பின்னுள்ள மூலஸ்தானத்தில் அந்த ரகசியம் உள்ளதாக கூறப்படுகிறது.
இங்குள்ள உற்சவ அம்மன் "மனோன்மணி'க்கு ஆடிப்பூரத்தில் விழா நடக்கிறது.
கமலாம்பிகை கோபுரத்தின் உச்சியில் "ஆகாச பைரவர்' காவல் காத்து வருகிறார்.
இங்குள்ள பைரவர் "சித்தி பைரவர்' எனப்படுகிறார்.
அம்மன் மூலஸ்தானம் அருகே வலதுபுறம் கமலமுனி சித்தர் பீடம் உள்ளது.
சிவன் சன்னதியின் பிரகாரத்தில் மிகப்பெரிய "சிவசூரியன்' அருள்பாலிக்கிறார்.
கடன் தொல்லை உள்ளவர்கள், இங்குள்ள ருண விமோசன ஈஸ்வரனை வழிபடுவது சிறப்பு.
வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ள ராஜநாராயண மண்டபத்தில் தான், தியாகராஜர் திருவாதிரை தினத்தில் பக்தர் களுக்கு அருள்பாலிப்பார்.
இங்கு அஷ்ட துர்க்கை சன்னதிகள் உள்ளன. இந்த துர்க்கைகளையும்,மகாலட்சுமியையும் முத்துசுவாமி தீட்சிதர் பாடியுள்ளார். அட்சய திரிதியை, தீபாவளி நாட்களில் இங்குள்ள மகாலட்சுமிக்கு நாணயங்களால் சொர்ண அபிஷேகம் செய்வது சிறப்பு.
அம்மன் சன்னதி வெளிப்பிரகார சுவரில் 6 சீடர்களுடன் தெட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். வழக்கமாக நான்கு சீடர்களே இருப்பர்.
மகனை தடவி கொடுக்கும் தாய்:தியாகராஜர் கோயிலில், அம்பிகையான நீலோத்பலாம்பாள் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறாள். அம்மனுக்கு அருகில் ஒரு தோழி நிற்கிறாள். அவள் தோளில் முருகன் இருக்கிறார். முருகனின் தலையை அம்மன் தடவிக்கொடுக்கும் விதத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
வீணையில்லாத சரஸ்வதி :சரஸ்வதி வீணை வைத்திருப்பது வழக்கம். ஆனால், திருவாரூர் சிவன் சன்னதி பிரகாரத்தில் வீணை இல்லாத சரஸ்வதியை தவக்கோலத்தில் காணலாம். இவள் சிவனை நோக்கி தவமிருக்கிறாள். ஹயக்கிரீவரும் தனி சன்னதியில் லிங்க பூஜை செய்யும் காட்சியைக் காணலாம். இவரை "ஹயக்கிரீஸ்வரர்' என்கின்றனர். இந்த இருபெரும் கல்வி தெய்வங்களையும் மாணவர்கள் பூஜித்தால், படிப்பில் கவனம் அதிகரிக்கும் என நம்புகின்றனர்.
மனுநீதிச்சோழன்:தேவலோகத்தில் யார் நேர்மையானவர் என்ற போட்டி ஏற்பட்டது. எமதர்மராஜன் "நானே நேர்மையாளன்' என்றார். நாரதரோ, பூமியில் மனுநீதிச்சோழனே நேர்மையானவன் என்றார். இதனால் எமன் பசுவாக வடிவெடுத்து, ஒரு கன்றுடன் திருவாரூர் ராஜவீதிக்கு வந்தார். அப்போது மனுநீதிச்சோழனின் மகன் வீதிவிடங்கன் தேரில் வந்தான். வேகமாக வந்த தேரில் சிக்கி, கன்று இறந்தது. இதையறிந்த பசு மன்னனின் அரண்மனைக்கு சென்று நீதி கேட்டது. கன்றை இழந்த பசு எவ்வளவு வேதனைப்படுமோ, அதே வேதனையை தானும் பட வேண்டும் என்பதற்காக தன் மகனை தேர்ச்சக்கரத்தில் ஏற்றி கொன்றான் சோழன். பசு வடிவில் இருந்த எமதர்மராஜா மனுநீதிச்சோழனுக்கு காட்சி கொடுத்து "நீயே நேர்மையானவன்' எனக் கூறி மறைந்தார். இந்த காட்சியை விளக்கும் கல்தேர் கோயிலின் வடகிழக்கு மூலையில் உள்ளது.
நிற்கும் நந்தி : சிவாலயங்களில், பொதுவாக நந்தி சிலை களை படுத்த கோலத்திலேயே காண முடியும். ஆனால், திருவாரூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள சப்தவிடங்கத்தலங்களில் மட்டும் நந்தியை நின்ற கோலத்தில் காணலாம். மேலும், இவையனைத்தும் உலோகச் சிலைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
வாசல் பிரச்னையில் தியாகராஜர் : கிழக்கு பார்த்து அமைந்த கோயில்களில், சுவாமி வீதிஉலாவிற்கு கிழக்கு கோபுரம் வழியாகத்தான் வெளியே செல்வார். ஆனால், இங்கு ஈசான்ய திசையிலுள்ள விட்டவாசல் வழியாக வெளியே செல்கிறார். இந்திரனிடம் பெற்ற லிங்கத்தை முசுகுந்த சக்கரவர்த்தி இங்கு பிரதிஷ்டை செய்தார். அதை முசுகுந்தனுக்கு கொடுத்த இந்திரன், மீண்டும் அதை தேவலோகம் கொண்டு சொல்ல விரும்பினான். எனவே, தியாகராஜர் கிழக்கு வாசல் வழியாக உலா வரும் போது, அவரை மீண்டும் கொண்டு சென்று விடலாம் என நினைத்து, அங்கேயே அவன் காத்திருப்பதாக ஐதீகம். இந்திரனிடமிருந்து தப்புவதற்காக, தியாக ராஜரை பக்தர்கள் ஈசான்யத்தில் உள்ள விட்டவாசல் வழியாக உலா கொண்டு செல்கின்றனர். பெரும்பாலான பக்தர்கள் கோயிலுக்குள் நுழையக் கூட கிழக்கு வாசலை தவிர்த்து விட்டு, வடக்கு மற்றும் மேற்கு வாசல் வழியாகத்தான் கோயிலுக்கு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதிக பாடல் பெற்ற தலம் : தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் இத்தலம் தான் மிக அதிகமாக 353 பாடல்களைப் பெற்றுள்ளது. சம்பந்தர் 55 பாடல், அப்பர் 208 பாடல், சுந்தரர் 87 பாடல், மாணிக்கவாசகர் 3 பாடல்கள் பாடியுள்ளனர்.
லலிதாம்பிகை தோன்றிய தீர்த்தம் : லலிதா சகஸ்ரநாமத்தின் மொத்த வடிவமாக, இத்தலத்து நாயகி கமலாம்பிகை விளங்குகிறாள். எனவே இங்குள்ள தீர்த்தம் "கமலாலயம்' எனப்படுகிறது. பங்குனி உத்திரத்தில் இங்கு நீராடினால், கும்பகோணத்தில் 12 மகாமகம் நீராடிய பலன் உண்டு என்பது ஐதீகம். குளத்தின் நடுவே நாகநாதர் சன்னதி உள்ளது. நாகதோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபடுகின்றனர்.
தினம்தோறும் பிரதோஷம் : பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை தான் சிவாலயங்களில் பிரதோஷ பூஜை நடத்தப்படும். ஆனால், திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தினமும் மாலை 4.30 முதல் 6 மணி வரை பிரதோஷ பூஜை நடத்தப்படுகிறது. இதை "நித்திய பிரதோஷம்' என்பார்கள். இந்த நேரத்தில் தியாகராஜரை முப்பத்து முக்கோடி தேவர் களும் தரிசிப்பதாக ஐதீகம். எனவே, இந்தக் கோயிலுக்கு மாலை வேளையில் சென்றால், எல்லா தேவர்களின் அருளையும் பெற்ற புண்ணியம் கிடைக்கும்.
தல வரலாறு:
ஒருமுறை இந்திரனுக்கு அசுரர்களால் ஆபத்து ஏற்பட்டது. அதை முசுகுந்த சக்கரவர்த்தி என்பவரின் உதவியுடன் இந்திரன் சமாளித்தான். அதற்கு கைமாறாக முசுகுந்த சக்கரவர்த்தியிடம் "என்ன வேண்டும்?' என கேட்க, திருமால் தன் நெஞ்சில் வைத்து பூஜித்த விடங்க லிங்கத்தைக் கேட்டார். தேவர்கள் மட்டுமே பூஜிக்கத்தக்க அந்த லிங்கத்தை ஒரு மானிடனுக்குத் தர இந்திரனுக்கு மனம் வரவில்லை. தேவசிற்பியான மயனை வரவழைத்து, தான் வைத்திருப்பதைப்போலவே 6 லிங்கங்களை செய்து அவற்றைக் கொடுத்தான். முசுகுந்தன் அவை போலியானவை என்பதைக் கண்டு பிடித்து விட்டார். வேறு வழியின்றி, இந்திரன் நிஜ லிங்கத்துடன், மயன் செய்த லிங்கங்களையும் முசுகுந்தனிடம் கொடுத்து விட்டான். அவற்றில், நிஜ லிங்கமே திருவாரூரில் உள்ளது. மற்ற லிங்கங்கள் சுற்றியுள்ள கோயில்களில் உள்ளன. இவை "சப்தவிடங்கத்தலங்கள்' எனப்படுகின்றன. "சப்தம்' என்றால் ஏழு. திருவாரூரில் "வீதி விடங்கர்', திருநள்ளாறில் "நகர விடங்கர்', நாகப்பட்டினத்தில் "சுந்தர விடங்கர்', திருக்குவளையில் "அவனி விடங்கர்', திருவாய்மூரில் "நீலவிடங்கர்', வேதாரண்யத்தில் "புவனி விடங்கர்', திருக்காரவாசலில் "ஆதி விடங்கர்' என்ற பெயர்களில் விடங்க லிங்கங்கள் அழைக்கப்படுகின்றன. இந்த லிங்கங்கள் கையடக்க அளவே இருக்கும். சப்தவிடங்கத்தலங்கள் உள்ள கோயில்களில் சுவாமியை "தியாகராஜர்' என்பர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மூர்த்தி, தீர்த்தம், தலம் என்று அனைத்துமே இக்கோயிலில் பிரம்மாண்டமாய் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment