Thursday, 26 January 2017

மட்டற்ற மகிழ்ச்சி தரும் மாங்குடி மகாகாளநாதர் !!


⛄ எல்லா மனிதருக்குள்ளும் வைராக்கிய மனம் உண்டு. ஆனால் அது நல்லதற்கா, கெட்டதற்கா என்பதில்தான் விஷயம் உள்ளது. இன்பம் என்பது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மொத்தமாக ஒரே காலகட்டத்தில் வருவதல்ல. இந்த பூவுலகில் வாழும் ஒவ்வொரு நொடியையும் பூரணமாக அனுபவிப்பதே இன்பம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

🌹 கடந்த காலத்தை நினைத்து கண்ணீர் சிந்துபவர்களும், எதிர்காலத்தை எண்ணி ஏக்கப்பெருமூச்சு விடுபவர்களும் நிகழ் காலத்தில் எங்கே வாழ்கிறார்கள்? அனைவருக்கும் வாழ்க்கை ஒருமுறைதான். கடந்துபோகும் நிமிடங்கள் கரைந்து போனவைதான்.

🎀  மனிதன் வாழ இறைவன் வழங்கியுள்ளது நேரம் மட்டுமே என்று தெரிந்துகொண்டால், மணித்துளிகள் ஒவ்வொன்றும் நமக்கு மகிழ்ச்சியைத் தரும். எல்லா உயிர்களும் இறுதியாக செல்லுமிடம் ஒன்றே. எல்லாம் மண்ணிலிருந்தே தோன்றின. எல்லாம் மண்ணுக்கே மீளும்.

⛱ துணி வெளுப்பவர் ஒருவர் தன் பணிக்கு உதவியாக ஒரு கழுதையை வளர்த்து வந்தார். துவைக்க வேண்டிய துணிகளை மூட்டை யாகக் கட்டி கழுதைமேல் வைத்து ஆற்றங்கரைக்குச் செல்வார். அவர் துணி துவைத்துக் காயப் போடுவார். கழுதை மேயும்.

🌷 மாலையானதும் துணி களை மூட்டை கட்டி கழுதை மீது வைத்து அதனோடு வீட்டிற்கு வருவார்.

🌵 ஒருநாள் வழக்கம் போல் கழுதை புல்மேயப் போயிற்று. கவனக்குறைவாக ஒரு மேட்டில் ஏறி, கால் இடறி பள்ளத்தில் விழுந்துவிட்டது. அது எவ்வளவோ முயற்சி செய்தும் வெளியே வரமுடியவில்லை. அது கத்தத் தொடங்கியது. கழுதையின் சத்தத்தைக் கேட்டு வந்த அவர் அது பள்ளத்தில் கிடப்பதைப் பார்த்தார். அவருக்கு திடீரென ஒரு எண்ணம். கழுதைக்கு வயதாகிவிட்டது. அதைப் பள்ளத்திலிருந்து வெளியே கொண்டு வரமுடியாது. அங்குதான் நிறைய மண் இருக்கிறதே! மண்ணைப் போட்டு மூடிவிடலாம் என்று மண்ணை வெட்டிக் குழியில் போட்டார்.

👫 தன் உரிமையாளர் என்ன செய்கிறார் என்று கழுதை பார்த்துக் கொண்டிருந்தது. "அடடா! இது என்ன கொடுமை. இந்த ஆள் பள்ளத்திலிருந்து தூக்கிவிடுவார் என்று நினைத்தால் மண்ணை வெட்டி என்னை மூடப்பார்க்கிறாரே' என்று நினைத்தது. அப்போதுதான் அதற்கு புத்தி வந்தது. தன்மீது விழுந்த மண்ணை உதறித்தள்ளியது. மீண்டும் மீண்டும் மண்விழ, அது மீண்டும் மீண்டும் உதறியது. இதென்ன அதிசயம்! பள்ளம் நிரம்பி மேடாகிறதே! இன்னும் கொஞ்சம் மண் விழுந்தால் பள்ளத்திலிருந்து வெளியே வந்துவிட முடியுமே !

🌿 அவர் மண்ணை வெட்டிப்போட்டு, கழுதை மண்ணில் புதைந்து விட்டதா என எட்டிப் பார்த்தார். என்ன அதிசயம். மேடான மணல் பகுதியில் கழுதை ஏறிவந்து வெளியேறிக் கொண்டிருந்தது.

🌻 வாழ்க்கையில் இன்பதுன்பங்கள் உண்டு. இன்பமும் துன்பமும் மாறி மாறித் தோன்றும். இந்தக் கழுதைக்கு வந்த சோதனையைவிட மனிதர்கள் பல்வேறு கோணங்களில் சோதனைகளை சந்திக்க நேரிடும்.

🌸 அத்தகைய சோதனைகளிலிருந்து விடுதலை பெற நற்சிந்தனையைத் தந்து, சோதனைகளை சாதனைகளாக மாற்றி நல்வாழ்வு வாழ வழிவகை செய்யும் தலம்- நன்மையின்மேல் இருக்கும் வைராக்கியம் தெய்வத்தையே நம்மிடம் வரவழைக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் விளங்குகின்ற தலம்- காவிரி தென்கரைத் தலங்களில் தேவார வைப்புத்தலமாகத் திகழ்கின்ற தலம்- மகாகாள மகரிஷி, காளி வழிபட்ட  தலம்- குரு பகவான் சிவனை வழிபட்ட தலங்களில் மகாகுருத்தலம் என்று போற்றப்படுகின்ற தலம்தான் 🅱 மாங்குடி மகாகாளநாத சுவாமி திருக்கோவில்.🅱

இறைவன்: மகாகாளநாதர்.

இறைவி: சௌந்தரநாயகி.

சிறப்பு மூர்த்தி: தட்சிணாமூர்த்தி (மகாகுரு).

புராணப் பெயர்: மாக்குடி, மாங்குடி கட்டளை.

ஊர்: மாங்குடி.

தீர்த்தம்: ஞான தீர்த்தம்.

தலவிருட்சம்: வில்வ மரம்.

🎀 சுமார் 1,200 ஆண்டு களுக்கு முற்பட்ட பழமை வாய்ந்த இவ்வாலயம்  ஆறாம் திருமுறையில் திருநாவுக்கரசரால் அடைவுத் திருத்தாண்டகத்தில் பாடப் பட்டுள்ளது.

🌵 மூலவர் சுயம்புலிங்கமாகும்.

💦 வாமன அவதாரத்தில் மகாவிஷ்ணுவுக்கு ஏற்பட்ட தோஷத்தை நீக்கியருளிய மகாகாளநாதர், சிவ பரம்பொருளின் வாமதேவமாகிய வடக்கு முகத்தில் தோன்றிய சிவமூர்த்திகளுள் ஒன்றாகும் என சிவாகமத்தில் கூறப்பட்டுள்ளது.

👉🏽 "அணியார் மலைமங்கை யாகம் பாகமாய்
மணியார் புனலம்பர் மாகாளம் மேய
துணியா ஞடையினான் துதை பொற்கழல் நாளும்
பணியாதவர் தம்மேல் பறையா பாவம்மே.'

👫 அம்பன், அம்பாசுரன் என்ற இரு அசுரர்கள் பார்வதியைத் திருமணம் செய்ய விரும்பினர். இதையறிந்த அம்மன் காளி வடிவமெடுத்து அம்பகரத்தூர் என்ற இடத்தில் அவர்களை சம்ஹாரம் செய்தாள்.

⛄ இதனால் அம்பிகைக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அதுவிலக பஞ்ச சிவத் தலங்களில் வழிபாடு செய்ததாக தலபுராணம் சொல்கிறது.

🌻 அவை உஜ்ஜயினி மாகாளம், திருஇரும்பை மாகாளம், அம்பர் மாகாளம், மாங்குடி மாகாளம், கோவில் திருமாளம்.

🍁 மகாகாள மகரிஷி தல யாத்திரையின் போது உஜ்ஜயினியில் ஒரு லிங்கமும், தெற்கே மயிலாடுதுறைக்கு அருகே அம்பர்மாகாளத்தில் ஒரு லிங்கமும், கிழக்கே திருஇரும்பை மாகாளத்தில் ஒரு லிங்கமுமாக பிரதிஷ்டை செய்து வணங்கினார். சுவாமியும் மகாகாளநாதர் எனப்பட்டார். இம்மூன்று சிவத்தலங்களிலும் காளி வழிபட்டபின், நான்காவதாக மாங்குடியில் சுயம்புவாய் எழுந்தருளியுள்ள லிங்கத்தை வழிபட்டாள்.

💧 ஈசன் உத்தரவுப் படி கோவில் திருமாளத்தில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வில்வத்தால் அர்ச்சனை செய்து தோஷம் நீங்கப்பெற்றாள்.

🌿 காளி சிவபூஜை செய்ததால்  சிவன் மகாகாளநாதர் எனப் பெயர் பெற்றார்.

🍄 மாங்குடியில் காளிக்கு ஈசன் உத்தரவிட்டதால் அவ்வூருக்கு மாங்குடி கட்டளை என்ற பெயர் உண்டாயிற்று.

🅱 தலக்குறிப்பு:🅱

♻ கி.பி. 1-ஆம் நூற்றாண்டு முதல் 4-ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் சைவம் மங்கி, சமண பௌத்த மதங்கள் தழைத்தன. சமணர்கள் தங்கள் வழிபாட்டுத் தலங்களில் கல்விக்கூடங்களை நடத்தி வந்ததும் அவர்கள் வளர்ச்சிக்கு ஒரு காரணம். எனவே சைவ சமயக் கல்வியை இளம் தலைமுறைக்கு போதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

🌷 இவ்வூருக்கு அருகிலுள்ள பெருஞ்சேரியில் புத்தமத குருமார்கள் கல்வி பயின்றுவந்தனர்.

🌹 இலங்கையில் உள்ள ஆவணத்தின் படி பெருஞ்சேரியில் தங்கி கல்வி பயின்றதாக புத்தமத நூலின் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். பௌத்தர்கள் வாழ்ந்த ஊர், பெரியோர்கள் வாழ்ந்த சேரியாம் பெருஞ்சேரியில் 6-ஆம் நூற்றாண்டு புத்தர் சிலை இன்றும் உள்ளது.

⛱ முதலில் "ஓம்' என்று உச்சரித்து; உடன்"நமோ' என்பதை சேர்த்து, பிறகு "பகவதே' என்றும்; "தக்ஷிணாமூர்த்தயே' என்றும்;அஸ்மத் சப்தத்தின் நான்காம் வேற்றுமை யான "மஹயம்' என்பதை சேர்த்தும்; "மேதாம்- ப்ரஜ்ஞாம்' என்றும்; பிறகு "ப்ர' என்பதுடன் வாயு பீஜமான "ய' என்றஅக்ஷரத்துடன் "ச்ச' என்ற ஒலியைக் கூட்டியும்; நிறைவில் அக்னி தேவனின் சதிப்பெயரான "ஸ்வாஹா' என்ற பதத்தைச் சேர்த்தும் உச்சரித்தால் தோன்றுவது "ஓம் நமோ பகவதே தக்ஷிணாமுர்த்தயே மஹயம் மேதாம் ப்ரஜ்யாம் ப்ரயச்ச ஸ்வாஹா' என்ற 24 அட்சரங்கள் கொண்ட காயத்ரி மந்திரம்.

🌵 சிவனுக்கு 1008 சிவஸ்தலங்கள் உள்ளதுபோல் விஷ்ணுவுக்கு 108 திவ்ய தேசம் உள்ளது போல், சக்திக்கு 64 சக்தி பீடங்களும் 51 அட்சர பீடங்களும் அமைந்துள்ளதைப் போல, தட்சிணாமூர்த்தி மூலமந்திர அட்சரங்கள் 24-க்கு, எழுத்துக்கு ஒரு தலமாக தமிழகத்தில் 24 இடங்களில் 24 தட்சிணா மூர்த்தி மூர்த்தங்களை ஸ்தாபித்தனர். முதல் அட்சரத்திற்குரிய கோவில் சோழர் தலைநகர் பழையாறைக்கருகில் உள்ள திருஇரும்பூளை என்ற ஆலங்குடி. சிவத்தலங்கள் தோறும் இருக்கும் தட்சிணா மூர்த்தங்களுக்கு ஆலங்குடி தட்சிணாமூர்த்தியே தலைமை தட்சிணா மூர்த்தியுமாவார். அதனால் தான் இந்த தலத்தில் நடைபெறும் அனைத்து வழிபாடுகளிலும், திருவிழாக்களிலும், பிரம்மோற்சவங்களிலும் ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கே    முதலிடம் தருகிறார்கள்.

💐 அது மட்டுமல்ல; ரதோற்சவ தினத்தில் தேரில் ஏறி திருவீதியுலா வரும் மூலமூர்த்தியும் இங்கு தட்சிணாமூர்த்தி தான் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் 8-ஆவது அட்சரத்திற்குரியது மாங்குடி ஸ்ரீமகாகாளர் திருக்கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தியின் மூர்த்தம்.

🅱 சிறப்பம்சங்கள்:🅱

✷ மும்மலங்களால் நமக்கு ஏற்படும் தோஷத்தைப்போக்கி, குரு தோஷத்தையும் போக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது.

✷ இங்குள்ள மகாகுரு தட்சிணாமூர்த்தி திருமேனி வேறெங்கும் காணக்கிடைக்காத வகையில் கையில் நாகமும், அக்கமாலையும் கொண்டு நந்திமீது அமர்ந்து அருள்பாலிப் பது அபூர்வமான அமைப்பு.

✷ விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயர் கால கல்வெட்டுகள், அரசு தொல்லியல் துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. கல்வெட்டு எண் 232/1978 மற்றும் 233/1978.

✷ கி.பி. 1525-ல் கிருஷ்ண தேவராயர் பூஜைக்காக நிவந்தம் அளித்ததும், கி.பி. 1592-ல் மெய்பேர்கார்ய செட்டியார் திருப்பணி, அபிஷேகம் முதலிய வற்றிற்கு தானம் அளித்த தும் கல்வெட்டுச் செய்தி களில் உள்ளன.

✷ குரு, சிவனை வழிபட்ட தலங்களுள் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மாங்குடியில் குரு பகவான் ஈசனை வழிபட்டு நற்பேறுகள் பல பெற்றதாகவும், ஈசன் குருவுக்கு காட்சி தந்த நாள் பங்குனி மாத வியாழக்கிழமையென்றும் தலபுராணம் சொல்கிறது. பங்குனி மாதத்தில் வரும் அனைத்து வியாழக்கிழமைகளிலும் சிறப்பு அபிஷேகம் உண்டு.

✷ நோய்வாய்ப்பட்டவர்கள், மருத்து வக்கல்வி பயில விரும்புபவர்கள், வியாழக்கிழமையில் வேதம் ஓதும் பிராமணர்களுக்கும், ஏழைகளுக்கும் மஞ்சள் பட்டு அல்லது மஞ்சள்நிறப் பருத்தித்துணிகள் வாங்கி வஸ்திர தானம் செய்து வழிபட்டால் உடல் பலம், மனோ பலம், ஆத்ம பலம் மூன்றும் பெறுவதோடு குருதோஷக் கோளாறுகள் யாவும்விலகி சுகம் ஏற்படும் என்பது ஐதீகம்.

✷ தொடர்ந்து ஐந்து பிரதோஷங்கள் வழிபாடு செய்தால் குழப்பம் நீங்கி, எந்தவொரு காரியத்திலும் ஸ்திரமான முடிவெடுத்து செயல்படுத்தலாம்.

✷ மூன்று வியாழக்கிழமைகள் குருஹோரையில் வழிபட்டால் மும்மூர்த்தி களின் அருள்கிட்டும்.

✷ சிவாலய மூர்த்திகள் அனைவரும் இங்கு சிறப்பாகக் கோவில் கொண்டுள்ளனர்.

💦 மகாலட்சுமியும், ஜேஷ்டா தேவியும் உள்ளனர். ஸ்படிக லிங்கம் உள்ளது. தலவிருட்சம் வில்வ மரத்துடன் 27 நட்சத்திர விருட்சங்களை வைக்கவுள்ளனர்.

👉🏽 "மாங்குடிதனில் மாசிலோர்கள் மலர் கொண்டு அணிகின்ற மாகாளமே' --
என்ற பாடல் வரிகளுக்கேற்ற, வாசமுள்ள மலர்களால் ஈசனை வழிபடுவோர்களது வாழ்க்கை பாலைவனமாக இல்லாமல் பூந்தோட்டமாக மாறும். மட்டற்ற மகிழ்ச்சிதரும் மாங்குடி ஈசனாம் ஸ்ரீ மகாகாளநாதர் அடிபணிவோம்.

🅱 அமைவிடம்:🅱

👉🏽 மயிலாடுதுறை- திருவாரூர் சாலையில் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கொல்லுமாங்குடி. இங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் வடகிழக்கே இத்தலம் உள்ளது.

🅱 திறக்கும் நேரம்:🅱

💧 காலை 7.00 மணிமுதல் 11.30 மணிவரையிலும்; மாலை 5.00 மணிமுதல் 7.30 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

No comments:

Post a Comment